இலங்கைச் செய்திகள்


மலையகத்தில் அடைமழை; பொகவந்தலாவையில் வெள்ளம் , பண்டாரவளையில் மின் உபகரணங்கள் சேதம்

பொத்துஹர ரயில் விபத்தால்10 கோடி ரூபா நஷ்டம்

வாழைச்சேனையில் வெடிபொருள் மீட்பு

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல்

குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறி மீண்டும் கொழும்பில் மோசடிக் கும்பல் --தமிழ் மக்களே குறி

யாழில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் வெட்டிக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

அனர்த்த மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை
=======================================================================

மலையகத்தில் அடைமழை; பொகவந்தலாவையில் வெள்ளம் , பண்டாரவளையில் மின் உபகரணங்கள் சேதம்


30/04/2014 மலையகத்தில் இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்வதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மலையகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெட்டவெளிகளிலும் மலை உச்சிகளிலும் மரங்களின் கீழும் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை, உலோகம், மின்சார உபகரணங்களை பாவிப்பதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் பண்டாரவளை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ததால் பல மின்சார உபகரணங்கள் சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 
பண்டாவளை, கஹகொல்ல மற்றும் அம்பதண்டேகம, ஆகிய இடங்களிலும் நயபெத்த, லியங்கஹாவெல மற்றும் கிரேக் ஆகிய தோட்டப் பிரதேசங்களிலும் சிலரது வீட்டு மின்சார உபகரணங்களும், கையடக்கத்தொலைபேசிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவும் தொலைக்காட்சிப் பெட்டியும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பொகவந்தலாவையில் வெள்ளம்
பொகவந்தலாவை பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2மணியளவில் பெய்ய ஆரம்பித்த மலை தொடர்ந்தும் பெய்து கொண்டு இருக்கிறது. இனதால் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 6ஆம் இலக்க லயன் குடியிருப்பில் சுமார் 20வீடுகள் நீரில் முழ்கி உள்ளன. நன்றி வீரகேசரி 









பொத்துஹர ரயில் விபத்தால்10 கோடி ரூபா நஷ்டம்

30/04/2014   குருணாகல்- பொத்துஹர ரயில் நிலையத்தில்இன்று காலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியமைக்கு காரணம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி சமிக்ஞையை கவனிக்காமையே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
இதே வேளை இந்த விபத்தே இலங்கையில் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய ரயில் விபத்து எனவும் இந்த விபத்தினால் 10 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரி பி.எல்.பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 








வாழைச்சேனையில் வெடிபொருள் மீட்பு

30/04/2014  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த பகுதியிலிருந்து  ஜொனி வகை வெடி பொருள் ஒன்றை இன்று காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மர்மப் பொருள் ஒன்று தென்படுவதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு  வழங்கிய தகவலை அடுத்து வாழைச்சேனை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று அதனை மீட்டுள்ளனர்.
இதனை மீட்பதற்கு குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 











பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது

29/04/2014   பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம் மாதம் முதலாம் திகதி அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை காவலர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
வவுனியா குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயபாலன் ஸ்டேன்லி ரமேஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து தொப்பியணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்   நன்றி வீரகேசரி








பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

28/04/2014   பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆளும்கட்சியின் ஏகமனதாக ஆதரவுடனும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் தனிநபர் அவசர பிரேரணை இன்று இடம்பெற்ற மாகாணசபையின் 8 ஆவது அமர்வில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 3 வருடங்களுக்கு என்று மாத்திரம் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக ஏற்பாட்டுச்சட்டம் அதனை தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் 1982 ஆம் 1988 ஆம் ஆண்டுகளில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.
தமிழ் மக்களை மாத்திரம் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட குறித்த சட்டம், முன்னறிவித்தல் இன்றி எவரையும் எவ்விடத்திலும், தம் விருப்புக்கு ஏற்ப பொய் குற்றம் சுமத்தி கைதுசெய்யலாம் எனும் அவசர கைதுகளுக்கும், பிணையில் எடுக்க முடியாத தடுப்பு காவலுக்கும், நீண்ட நேர சித்திரவதைகளுடன் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கும், பொதுவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத அந்த குற்ற ஒப்புதல் பத்திரத்தை கொண்டு வழக்குத்தாக்கல் செய்வதற்கும், தாம் விரும்பாத ஊடகத்தை தடை செய்வதற்கும் வழி வகை செய்கின்றது.
1966ம் ஆண்டு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டு ஒப்பந்தம், சட்ட விரோத கைதுகள், பாரபட்சமான இன மத பாகுபாடுகளுடனான விசாரணைகள், மனித சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ஐநா சபையின் சரத்துகளுக்கு முரணான குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரையும் வடமாகாணசபை ஊடாக கோரும் குறித்த பிரேரணையை, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பியினர் மிகப்பலமாக எதிர்த்த போதிலும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினரின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி








ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல்

04/05/2014   அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்துவிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலையும் அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தி பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன் ஏப்ரல் இரண்டாம் திகதி நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது.
 
அதனடிப்படையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. எனவே இம்மாதம் செப்டெம்பர் மாதம் ஊவா மாகாண சபைத் தேர்தலை நடத்திவிட்டு, அடுத்த படியாக ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி வீரகேசரி









குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறி மீண்டும் கொழும்பில் மோசடிக் கும்பல் --தமிழ் மக்களே குறி


04/05/2014  கொழும்பு நகரில் அண்மைய காலமாக தமிழ் மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வழிப்பறி நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறித்த சில இனம்தெரியாத நபர்களால் தாம் குற்றப்புலனாய்வு பிரிவினர் எனக் கூறியும் அடையாள அட்டையை காட்டுமாறு மிரட்டியும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸை பகுதியில் இரு தமிழ் ஆசிரியைகள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
 
இச்சம்பவம் குறித்து ஆசிரியை ஒருவர் தகவல் வழங்குகையில்,
 
"நான் கல்கிஸைப் பகுதி தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகின்றேன். காலை வேளையில் பிரதான பாதையை கடக்க முற்பட்ட சமயத்தில் நெடிய தோற்றத்துடன் பின்னால் ஒருவர் அழைத்தார். தான் குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என்றும், விசாரணையின் பொருட்டு எனது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அதிகாரத் தொனியில் கேட்டார். உடனே நானும் அடையாள அட்டையை காட்டினேன். இமைக்கும் நொடியில் அவருடன் இணைந்துக் கொண்ட இன்னொருவர் எனது கையிலிருந்த மோதிரத்தை கழட்டுமாறும் மிரட்டினார். அதிர்ஷ்ட வசமாக பின்னால் வந்த பொலிஸ் வண்டியை கண்டதும் இருவரும் விரைந்து சென்று விட்டார்கள். இவ்வாறானதொரு சம்பவம் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கும் இடம்பெற்றுள்ளது" எனக் கூறினார்.
 
மேற்படி சம்பவம் குறித்து இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு ஆசிரியை கருத்து தெரிவிக்கையில்,
 
“நான் சந்தைக்கு சென்றிருந்தேன். அறிமுகமற்ற நபரொருவர் என்னருகில் வந்து எனது அடையாள அட்டையை காட்டுமாறு கூறினார். அவருடன் இன்னுமொருவரும் இருந்தார். தங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு எனக் கூறினார்கள். உடனே நானும் எனது அடையாள அட்டையை காட்டினேன். மேலும் இப்பகுதியிலுள்ள பாடசாலையில் பத்து வருடங்களாக கடமையாற்றுகின்றேன் எனவும் கூறினேன். சிறிது நேரம் பார்த்துவிட்டு யோசித்தவர்கள் கண்களால் ஏதோ சைகை செய்துவிட்டு என்னை போக அனுமதித்தார்கள். அப்போழுது நான் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனினும் மேற்படி சம்பவம் என்னுடன் கடமையாற்றும் சக ஆசிரியைக்கும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி





யாழில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் வெட்டிக்கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது

04/05/2014   யாழில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் யாழ்.அச்சுவேலி வளலாய் கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவருமே இனந்தெரியாத நபர்களினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
 மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்சம்பவத்தில்;  நிற்குணானந்தன் அருள்நாயகி (வயது-50), இளம் குடும்ப பெண்ணான யசோதரன் மதுசா (வயது-27), நிற்குணானந்தன சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிற்குணானந்தன் தர்மிகா (25), க. யசோதரன் (வயது-30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
 
இதேவேளை இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களுடன் கைக்குழந்தையும் மீட்கப்பட்டு யாழ்.போதானவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸாரும் மற்றுமொரு நபரை அச்சுவேலிப் பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.
 
அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நபர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள தனஞ்சயன் என்ற ஆட்டோசாரதியின் ஆட்டோவில் நேற்று இரவு பயணம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.  
நன்றி வீரகேசரி







அனர்த்த மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை


04/05/2014   மலையகத்தின் நான்கு மாவட்டங்கள் மண் மற்றும் கற்பாறை சரிவு அனர்த்தங்கள் நிகழக்கூடிய மாவட்டங்களாக தேசிய கட்டிட ஆய்வுத்திணைக்களத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
 
பதுளை, நுவரெலியா, கண்டி,  கேகாலை ஆகிய மாவட்டங்களே மண் மற்றும் கற்பாறை சரியும் பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பவைகளாகும். 
 
தேசிய கட்டிட ஆய்வுத்திணைக்கள மண் பரிசீலனைப் பிரிவின் பணிப்பாளர்  ஆர்.எம்.எஸ். பண்டார மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார். 
 
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் பெருமழையினையடுத்து ஆங்காங்கே மண் மற்றும் கற்பாறை சரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலை மேலும் நீடிக்கலாமென்றும் மக்கள் இது விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார். 
 
அத்துடன் நாட்டின்  சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
நன்றி வீரகேசரி

No comments: