35,000 புத்தகங்களைக் காப்பாற்றிய பெண்மணி

.
    இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரின்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த 35,000 புத்தகங்களைக் காப்பாற்றிய பெண்மணி.
துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
   

யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண்ணான ரோகிணி பரராஜசிங்கத்தை பலருக்குத் தெரியாது. அவர் மென்மையாகப் பேசும் உயர் குணங்களைக் கொண்டவர்,குடாநாட்டில் மோதல்கள் நடைபெற்ற சமயம் மதிப்புமிக்க 35,000 தொகுதி நூல்களை காப்பாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவர் ஒரு உதவி நூலகராகப் பணியாற்றி தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் காரணமாக ஏணிப்படிகளின் உச்சிக்கு சென்று கௌரவம் வாய்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பதவி உயர்த்தப்பட்டவர். யாழ்ப்பாண குடாநாட்டில் யுத்தம் நடைபெற்ற காலமான, மோசமான 35 வருட காலம் சேவையாற்றி அதற்கு சாட்சியாக இருந்துள்ளார். அவர் 1994ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பதவி உயர்த்தப்பட்டு 2005ல் ஓய்வு பெற்றார்.
அவர் ஒரு அன்னைக்குரிய அரவணைப்புடன் என்னை அன்பாக முத்தமிட்டு பளிச்சென்ற புன்னகையுடன் என்னை வரவேற்றார். யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான உரும்பிராயில் உள்ள அவரது வீட்டுக்குச் செல்லும் ஒரு ஒடுக்கமான பாதையில் நாங்கள் இருவரும் நடந்து செல்லுகையில், அவர் எனது வலக்கரத்தினை மிருதுவாகவும் மற்றும் மெதுவாகவும் பற்றிப்பிடித்தபடி இருந்தார்.




ரோகிணி பரராஜசிங்கம் ஒரு தீவிர வாசகி, பெங்குயின் பதிப்பக நூல்களை அவர் மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் படிப்பவர். அவர் இந்தியாவில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டப்படிப்பை முடித்து இளநிலைப் பட்டம் பெற்றபின் அதே பல்கலைக்கழகத்தில் அவரது பிரியத்துக்குரிய பாடமான நூலக விஞ்ஞ}னத்தில் பட்டயப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு என்பனவற்றை முடித்துவிட்டு தனது புத்தகங்கள் மீதான பிரியத்தை ஒரு தொழிலாக மாற்றுவதற்காக சொந்த நாட்டுக்கு திரும்பிவந்தார். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஒரு உதவி நூலகராகத் தெரிவாவதற்கு முன்னர் அவர் கார்கில்ஸ் புத்தக நிலையத்தில் ஒரு குறுகிய காலம் கடமையாற்றினார். “ஒரு உதவி நூலகர் தேவை என்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டிருந்த ஒரு பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அதற்கான விண்ணபங்களுக்கான முடிவு தினத்திற்கு முந்தைய தினம் நான் அதற்காக விண்ணப்பித்தேன் மற்றும் அங்கு சேவையாற்ற நான் தெரிவு செய்யப்பட்டேன்”’ ஒரு புன்சிரிப்புடன் ரோகிணி அதை நினைவு கூருகிறார்.
1987 ஒக்ரோபரில் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும்(ஐ.பி.கே.எப்) மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்(எல்.ரீ.ரீ.ஈ) இடையிலான போர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவிரமடைந்தது, மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் தொடர்ச்சியான தாக்ககுதலுக்கு உள்ளாகி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் என்பனவும் விரிவான சேதத்துக்கு உள்ளாயின. அந்தக் காலப்பகுதியில் கொக்குவில் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் மறக்கமுடியாத பல சம்பவங்கள் இடம்பெற்றன.
பருத்தித்துறையை சேர்ந்த ரோகிணி பரராஜசிங்கம் அப்போது திருநெல்வேலியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசித்துவந்தார்.தனது சக ஊழியரிடம் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பிரதம நூலகர் ஒய்வு விடுமுறையில் இருந்ததால் குடாநாட்டில் வன்முறைகள் இடம்பெற்ற சமயம் ரோகிணி பரராஜசிங்கம் பதில் கடமையாற்றும் பிரதம நூலகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
“’புத்தகங்கள் யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவேண்டிய ஒரு அவசர முடிவை நான் எடுக்கவேண்டியிருந்தது. அது மையிருட்டு நேரம் மழைவேறு கொட்டோ கொட்டெனக் கொட்டிக் கொண்டிருந்தது, அந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பதற்காக உடனடியாக ஏதாவது செய்யவேண்டியிருந்தது. பெறுமதிவாய்ந்த பல புத்தகங்கள் அயலவர்களால் சூறையாடப்பட்டும் மற்றும் இந்திய இராணுவ வீரர்கள் மலம் கழித்து துடைப்பதற்கும் அந்த புத்தகங்களை பயன்படுத்தி வந்தார்கள்.
நான் சில அலுவலக அங்கத்தவர்கள்,மற்றும் சில மாணவத் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பல்கலைக்கழக நூலகத்தில் மழையில் நனைந்து போயிருந்த புத்தகங்களை கவனமாகச் சேகரிக்கத் தொடங்கினேன். அவைகளை என்னுடைய விலையுயர்ந்த பட்டுச்சேலைகளால் மென்மையாக மூடி,அவைகளை லாரிகளில் ஏற்றி சாவகச்சேரியில் உள்ள பாடசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தேன். அந்த நேரத்தில் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர்களும்,மழையில் நனைந்த புத்தகங்களைக் கண்டதும் எங்களுக்கு உதவி செய்வதற்காக வெளியே வந்தார்கள். அதற்கான போக்குவரத்துக்கூலியை நானே கொடுத்தேன்,அது பின்னர் எனக்கு திரும்ப வழங்கப்பட்டது.
நான் நினைக்கிறேன்,நூலகங்கள் இலக்கு வைக்கப்படுவதன் நோக்கம் என்னவென்றால் முழு கலாச்சாரத்தையும் அழித்து கற்றலை மறுப்பதுக்குத்தான் என்று. ஒருவரது வாசிப்பை பார்த்தே அவரது கலாச்சாரத்தையும் எண்ணங்களையும் புரிந்து கொள்ளலாம் என்று பிரபலமான ஒரு தமிழ் பழமொழி உண்டு. அது எங்களை மிகவும் பாதிக்கிறது. நாங்கள் எங்கள் புத்தகங்களை மிகவும் நேசிக்கிறோம்,மற்றும் மிகவும் விலையுயர்ந்த பழைய புத்தகங்களை நாம் இழந்துவிட்டோம். அவைகளை திரும்ப பெறும் சாத்தியமில்லை. யாழ்ப்பாண மக்கள் வாசிப்பதையும் அறிவை பெறுவதையும் நேசிப்பவர்கள். அது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. என்ன இழக்கப்பட்டதோ அது யாழ்ப்பாண மக்கள் இழந்ததாகவே இருக்கும். எங்களால் புதிய புத்தகங்களை சேர்க்க முடியும் ஆனால் பழைய புத்தகங்களின் இழப்பை எதனாலும் ஈடு செய்யமுடியாது. நாங்கள் எதை இழந்தோமோ அது நிரந்தரமாக இழக்கப்பட்டதாகவே இருக்கும்: கண்ணீருடனும் வேதனையுடனும் நினைவுகூர்ந்தார் ரோகிணி பரராஜசிங்கம்.
எஞ்சியிருந்த புத்தகங்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கு அவர் எடுத்த உடனடி நடவடிக்கை உடனடியாக கசப்பான விமர்சனங்களுக்கு உள்ளானாலும்,பின்னர் அவரது துணிச்சலான நடவடிக்கையை யாழ்ப்பாண பல்கலைக்கழக அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி அவரைக் கௌரவித்தார்கள். ‘’ அந்த நேரத்தில் எஞ்சியிருந்த புத்தகங்கள் சூறையாடப்படாமல் தடுப்பதற்கு என்ன தேவையாக இருந்ததோ அதையே நான் செய்தேன். நான் ஒன்றில் சிந்திப்பதை நிறுத்தவோ அல்லது எனக்காக முடிவெடுக்கும்படி எனது கணவரை கேட்கவோ இல்லை. நான் முடிவு செய்து புத்தகங்களை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்துவதை முன்னின்று நடத்தினேன். விலைமதிப்பற்ற புத்தகத் தொகுதிகளை பாதுகாக்கும் ஒரு தனியான தீர்மானத்தை நான் மேற்கொள்ளும்போது எனக்கு 44 வயதுதான் ஆகியிருந்தது என்று பெருமையுடன் மேலும் சொன்னார் ரோகிணி பரராஜசிங்கம்.
நூலகத்திலிருந்து புத்தகங்களை இந்திய இராணுவத்தினர் தரக்குறைவாக பயன்படுத்துவதைப் பற்றி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடமும் கூட அவர் புகார் தெரிவித்திருந்தார்.     “அந்த புததகங்கள் எங்கள் உயிர் மூச்சு,அறிவுக்கான எங்கள் மூலவளம். சமாதானத்தை நிலைநாட்ட அனுப்பப்பட்ட வெளிநாட்டு இராணுவம் வெறுமே எங்கள் கலாச்சாரத்தை பற்றி அறிந்திருக்க முடியாது. புள்ளிவிபரப் பகுதியில் இருந்த புத்தகங்களை எங்களால் பாதுகாக்க முடியவில்லை. ஆனால் மேற்கோள் பகுதியில் இருந்த புத்தகங்களை மாத்திரம் ஒருவாறு சமாளித்து பாதுக்க முடிந்தது” என்று கூறும்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களில் உருண்டோடியது. ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் மற்றும் நூலகம் எனும் வார்த்தைகளை உச்சரிக்கும்போதும் அவரது கண்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுதார். பயங்கரமான நினைவுகளைக் கொண்ட அவரது வேதனையான கடந்தகால பயணத்தை அவர் மீள நினைவு படுத்தினார். “ வன்முறை நிகழ்ந்தபோது அங்கிருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்த 64,000 வரையான எல்லா புத்தகங்களையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னால் 35,000 வரையான தொகுதி புத்தகங்களை மட்டுமே ஒருவாறு காப்பாற்ற முடிந்தது. மீதி எல்லாமே போய்விட்டன. அவற்றை ஒருபோதும் எங்களால் திரும்பப் பெறமுடியாது,தனது கண்ணீரைத் துடைத்தபடி துயரத்துடன் அதை நினைவுகூர்ந்தார் ரோகிணி.
தனது எழுபதாவது வயதில் உள்ள ரோகிணி பரராஜசிங்கம், இழந்துபோன பெறுமதி வாய்ந்த அந்த புத்தகப் புதையலை எண்ணி இன்னமும் துக்கம் அனுட்டிக்கிறார். குடாநாட்டில் மோதல் தீவிரமடைந்த வேளையில் அவரும் தனது எண்ணற்ற சொந்த உடமைகளை இழந்திருக்கிறார். பல தடவைகள் அவர் பல்வேறு இடங்களுக்கு தனது கணவருடனும் மற்றும் இளவயது மகள்மார் இருவருடனும் இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார். “ சமையறையில் பயன்படுத்தும் கத்தி முதல் சாப்பாட்டு மேசை வரையான சகலதையும் நான் திரும்ப வாங்க வேண்டியிருந்தது. எளிமையும் அமைதியும் உள்ள எங்கள் வாழ்க்கைப்பாணி பலமுறை திடீர் திடீர் என மாற்றப்பட்டிருக்கிறது. வன்முறை சம்பவங்கள் மட்டுமே எங்கள் சொந்தமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது “ என்று யாழ்ப்பாணத்தில் உள்ள ரோகிணி கண்ணீருடன் சொன்னார்.
முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பவற்றில் தலைமை நூலகராக இருந்த எஸ்.முருகவேல் அவர்களை நூலக விஞ்ஞானத்தில் தனது குரு என்று சொல்லி ரோகிணி ,அவரை நன்றியுடன் நினைவுகூருகிறார். அவரது விசேட வழிகாட்டலின் கீழ்தான் ரோகிணி நூலக விஞ்ஞ}னம் எனும் கலையை கற்றுத் தேறினாராம்
ரோகிணி பரராஜசிங்கம் யாழ்ப்பாணத்தில் தனது ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், ஆனால் பயங்கரமான நினைவுகள் அவரது கடந்த காலத்தை மறக்க அனுமதிக்கவில்லை.

Nantri :தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments: