திரும்பிப்பார்க்கின்றேன் - 22 - முருகபூபதி

.

தேசபிதாவுக்கு      அஞ்சலி       செலுத்திய      மேத்தா
நாம்      அஞ்சலி     செலுத்திய     மேத்தா  தாசன்


 இலங்கையிலும்     தமிழ்நாட்டிலும்    1970 -1980       காலப்பகுதியில் புதுக்கவிதை      எழுச்சிமிக்க    இலக்கியமாக      பேசப்பட்டது.  தமிழ்நாட்டில்     வானம்பாடி    கவிஞர்களாக     வீச்சுடன்       எழுதவந்த   வைரமுத்து,       மேத்தா,    அப்துல்ரஹ்மான்,     அக்கினிபுத்திரன்,      மீரா,     சிற்பி, தமிழ்நாடன்,     தமிழவன்,     தமிழன்பன்,      கோவை    ஞானி,     பரிணாமன், புவியரசு,     இன்குலாப்,     கங்கைகொண்டான்,     உட்பட     பலரின்  புதுக்கவிதைகளின்    தாக்கம்     இலங்கையிலும்     நீடித்தது.
அதேவேளை      சிதம்பர ரகுநாதன்,      கலைமகள்  கி.வா. ஜகந்நாதன் முதலானோர்      புதுக்கவிதையை       ஏற்காமல்     எதிர்வினையாற்றினார்கள்.     வானம்பாடிகள்     இதழ்     சில  வருடங்கள் அழகான    வடிவமைப்புடன்    வெளிவந்தது.     இலங்கையில்     ஏராளமான  இளம்தலைமுறை    படைப்பாளிகள்     முதலில்    புதுக்கவிதை கவிஞர்களாகவே    அறிமுகமானார்கள்.

தமிழ்நாட்டில்    கோவையில்     உருவான     வானம்பாடிகள்     இயக்கத்தில்    பல    கவிஞர்கள்      இணைந்தும் -   பிரிந்தும்-     கவிதைகளினால்      மோதியும்  பிளவுண்டனர்.
புதுக்கவிதைகள்      வாசகர்கள்     படைப்பாளிகள்     சிற்றிதழ்களின்    வரவேற்பை      பெற்றதுடன்      அன்றைய      திரையுலக     பிரபலங்களையும் பெரிதும்     கவர்ந்தன.
ஜெயலலிதா,     கமல்ஹாஸன்.       இயக்குநர்    பாலச்சந்தர்      முதலானோரும்    வானம்பாடிகளின்     புதுக்கவிதைகளை       விரும்பி      வாசித்தார்கள்.
தமிழ்நாட்டில்     தி.மு.க.     அரசின்      கண்காணிப்புகளுக்கும்     வானம்பாடி கவிஞர்கள்      இலக்கான      தகவல்      உண்டு.      மார்க்சீய     கண்ணோட்டத்துடன்     தீவிரமான     சிந்தனைகளுடன்       அக்காலப்பகுதி கவிதைகள்      வெளிவந்தமையும்      அதற்குக்காரணம்.     சில     கவிஞர்கள் நக்சலைட்     தீவிரவாதிகளுடனும்     நெருங்கியிருந்ததாக      தி.மு.க.  அரசு      சந்தேகித்தது.      சிலர்    தலைமறைவு      வாழ்க்கையையும் தொடர்ந்தனர்.


தமிழ்நாடன்      ஒரு    வானம்பாடியின்      இலக்கிய     வனம்    என்ற நூலையும்      கோவை     ஞானி      வானம்பாடிகளின்     கவிதை    இயக்கம்: வரலாறும்    படிப்பினைகளும்      பற்றிய      நூலையும் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு   காலத்தில்     புதுக்கவிதை         வீச்சில்     வெளியான      இந்த      இலக்கிய வடிவம்      காலப்போக்கில்      கவிதை      என்ற       பெயரையே தக்கவைத்துக்கொண்டது.
கவிஞர்      மேத்தா      தமது     கண்ணீர்பூக்கள்         கவிதைத்தொகுப்பின்  முன்னுரையின்      இறுதியில்     இப்படி        எழுதியிருந்தார்:
கண்ணகி     காற்      சிலம்பைக்      கழற்றினாள்       நாம்    சிலப்பதிகாரம் படித்தோம்
என்     மனைவி    கைவளையல்களை     கழற்றினாள்     நீங்கள் கண்ணீர்ப்பூக்கள்      படிக்கிறீர்கள்.
கண்ணீர்ப்பூக்கள்       வெளியாகி       சில    வருடங்களில்     மேத்தா ஆனந்தவிகடன்          பொன்விழா      சரித்திர     நாவல்     போட்டியில்      தமது சோழநிலா     நாவலுக்கு      முதல்   பரிசாக      இருபதினாயிரம்    ரூபா பெற்றார்.      உடனே     இலங்கையில்     ஒரு     கவிஞர் -      சோழா    நிலா தந்தீர்கள்       மனைவியின்        கைவளையல்களை      மீட்டீர்களா ?      என்று    ஒரு      புதுக்கவிதை      எழுதினார்.      இவ்வாறெல்லாம்       புதுக்கவிதை உலகில்      பல     சுவாரஸ்யங்கள்    நிகழ்ந்திருக்கின்றன.
மேத்தாவின்     மற்றுமொரு    கவிதை     வரி:
நான்        வெட்டவெட்டத்தழைப்பேன்
இறப்பினில்     கண்     விழிப்பேன்
மரங்களில்      நான்     ஏழை
எனக்கு      வைத்த      பெயர்    வாழை

அவரது     மற்றுமொரு    கவிதை
மாதவி     மகர     யாழாகக்கிடந்தாள்
கோவலனின்     துருதுருத்த     கரங்கள்    அதில்    ஒரு   ராகம்   மீட்டியது
அதில்     பிறந்தது      அபூர்வராகம்
அதன்    பெயர்    மணிமேகலை.
1970 களில்      எனக்கும்    மேத்தாவின்     கவிதைகளில்      ஈர்ப்பிருந்தது. நா. பார்த்தசாரதியின்      தீபம்    இதழில்      மேத்தாவின்        தேசபிதாவுக்கு     தெருப்பாடகனின்     அஞ்சலி     என்ற     கவிதை அக்காலப்பகுதியில்      இலக்கிய    வட்டாரத்தில்    பெரிதும்   பேசப்பட்டது.
சென்னையில் 1990   இல்    சிவகாமியின்     பழையன   கழிதல்   நாவல் வெளியீட்டில்தான்     மேத்தாவை      முதலில்     சந்தித்தேன்.     அன்றைய   தினம்      திலகவதி,     இன்குலப்,      ராஜம்    கிருஷ்ணன்    ஆகியோரும்     அந்த நிகழ்வில்    கலந்துகொண்டு      உரையாற்றினார்கள்      பின்னர்     அடையாறில்      இலக்கிய     அன்பர்      ரங்கநாதன்      இல்லத்தில்     நடந்த மல்லிகை    25   ஆவது     ஆண்டு    மலர்     அறிமுகநிகழ்விலும்     மேத்தாவை       சந்தித்தேன்.     மேத்தா     சென்னை     பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில்      விரிவுரையாளராக    அப்பொழுது     பணியிலிருந்தார்.
தென்றல்வரும்   தெரு   என்ற    திரைப்படத்தையும்     எடுத்து    நட்டப்பட்டு     கையை     சுட்டுக்கொண்டார்.
மேத்தாவுக்கும்       ஒரு    தாசன்    இருந்தார்.       மேத்தாதாசன்.     எனது இனிய     நண்பர்.       இளம்கவிஞர்.     இவரை  1990  இல்      மேத்தாவை  சந்திப்பதற்கு     முன்பே      இலங்கைக்கு ( 1984)     வந்திருந்த      வேளையில்  சந்தித்து       அன்று     முதல்      நண்பரானேன்.      மேத்தா      இஸ்லாமியர். மேத்தாதாசன்      இந்து     பிராமணர்.
இந்தியாவில்      இந்துக்கள்  -    இஸ்லாமியர்      முரண்பாடுகள்     இந்திய சுதந்திரப்போராட்ட     காலத்திற்கு    முன்பிருந்தே    தொடங்கி பாக்கிஸ்தான்     பிரிவினையின்போது      உக்கிரமடைந்து ஆயிரக்கணக்கானோர்      பலியான     இரத்த     வரலாறை    படித்திருக்கின்றோம்.
இந்த     வரலாற்றுப்பின்னணியுடன்      கவிஞர்கள்      முகம்மது  மேத்தா     என்ற       இஸ்லாமியரதும்  -     விஜயராகவன்      என்ற       இயற்பெயர்கொண்ட  இந்து     பிராமணரான      மேத்தாதாசனதுk;      இலக்கிய       புரிந்துணர்வை  -நட்புறவை     நாம்      புரிந்துகொள்ளவேண்டும்.
மேத்தாவிடம்       மிகுந்த       பிரியமாகவிருந்த       விஜயராகவனை  (மேத்தா தாசனை) ப்பார்த்த -     மேத்தாவின்      துணைவி     ஒரு     சந்தர்ப்பத்தில்  நல்லவேளை       அவன்       பெண்ணாகப்பிறக்கவில்லை.      பிறந்திருந்தால்  என்பாடு      திண்டாட்டம்தான்      என்று      வேடிக்கையாகச்சொன்னார்.
அந்தளவுக்கு       மேத்தாவை     உளமாற     நேசித்த    கவிஞன்தான்     மேத்தா தாசன்.     அவரை      இலங்கைக்கு    அழைத்து     வந்து    எமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியவர்     எழுத்தாளர்      காவலூர்    ஜெகநாதன்.   கொழும்பில் வலம்புரி   கவிதா    வட்டம்    நடத்திய    கவியரங்கு    நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.     தெல்லிப்பழை     மகாஜனா    கல்லூரியில்      நடந்த கோகிலா    மகேந்திரனின்      முரண்பாடுகளின்      அறுவடை சிறுகதைத்தொகுப்பின்      வெளியீட்டு    விழாவிலும்     கலந்துகொண்டார்.  அந்த     நிகழ்ச்சி     முடிந்து     மறுநாள்      என்னுடனேயே     கொழும்புக்கு     இரவு பஸ்ஸில்        பயணம்  செய்தார்.
எனதும்    மல்லிகை   ஜீவா,    கவிஞர்   மேமன்  கவி    ஆகியோரினதும்   உற்ற   நண்பராகவும்    திகழ்ந்தார்.
1984   இலும்   1990    இலும்     நான்    சென்னைக்குச்சென்றபொழுது     பல எழுத்தாளர்களிடம்     அறிமுகப்படுத்தினார்.     கவிஞர்    மேத்தாவின் வீட்டுக்கும்   தமது     பெற்றோரிடமும்      அழைத்துச்சென்றார்.     சென்னை சோவியத்   கலாசார     இல்லத்தில்      நடந்த      தமிழ்நாடு     கலை இலக்கியப்பெருமன்றத்தின்       விருது     வழங்கும்     விழாவுக்குச்சென்ற சமயம்      கவிஞர்     வைரமுத்துவையும்      அறிமுகப்படுத்தினார்.
மேத்தா    தாசனின்     கவிதைத்    தொகுதி     காகிதக்கனவுகள்.     நர்மதா பதிப்பகம்      வெளியிட்டது.
1990   ஏப்ரிலில்    இறுதியாகச்சந்தித்தேன்.    1991  அக்டோபரில்  மேத்தாதாசன்     ஒரு    நாள்    சாலைவிபத்தில்     அகால    மரணமடைந்தார்.
அவரது   திடீர் மரணம்     என்னை     மிகவும்    பாதித்தது.      எனது    கண்ணீர் அஞ்சலியை     பின்வரும்     கட்டுரையின்     வாயிலாக     இலங்கையில் தினகரன்    வாரமஞ்சரியில்     பதிவுசெய்தேன்.      இந்த     அஞ்சலிக்கு 22 வயதாகிறது.     அதனை       இங்கு      மீள் பதிவு   செய்கின்றேன்.
தூரத்துத்    தண்ணீர்    ஆபத்துக்கு     உதவாது- என்பார்கள்    எங்கள்     பாட்டி.
       பாட்டி      இன்றில்லை.     அவர்கள்     அன்று    சொன்னது      இன்றும் வாழ்கிறது.
 இந்த     முதுமொழிகளுக்கு    ஈடாக     புது மொழிகள்      பிறக்கவில்லைத்தான்.
      “ எனதருமை   நண்பா,     மேத்தாதாசா,    என்     நெஞ்சத்துக்கு     நெருக்கமாக இருந்தவனே,     தூரத்தில்    நீ    வாழ்ந்தமையால்    உன்   மறைவும்   எனக்கு தாமதமாகத்தான்     தெரிந்ததோ?
       சரியாக   ஓராண்டு    கழிந்த  பின்பல்லவா    நான்  அறிந்தேன்.
       ஏன்?
       வருடாந்த    அஞ்சலி     செலுத்தவா?
       1991 அக்டோபரில்   விபத்தில்    மறைந்தாயாம்.
       1992   அக்டோபரில்     அல்லவா    நான்    அறிந்தேன்.
       உலகம்    சுருங்கிவிட்டதாக    சொல்கிறார்கள்.     ஆனால்   உன் விடயத்தில்     இந்த     வாக்கு  எனக்கு     பொய்யாகிப்போனதோ?
       இலங்கையிலிருக்கும்      நண்பர்கள்    எழுதவில்லை. தமிழகத்திலிருந்தும்     தகவல்     கிடைக்கவில்லை.
       எமது     உறவுக்குப்     பாலமாக   திகழ்ந்த   ‘மல்லிகை தானடா இந்தத்துயரத்தை     எனக்குச்சொன்னது.
 அதுவும்     ஓராண்டுகள்    கழித்தே.      உன் மறைவுச்செய்தியை    நண்பர் டொமினிக்    ஜீவா     உருக்கமாக    எழுதியிருக்கிறாரடா.
       அழுதேவிட்டேன்.
       நீ    இப்போது    இல்லை    என்பதை     எனது    நெஞ்சம்    நம்ப மறுக்கிறதடா.
       ‘ஆவியுலகம்   பற்றி    அண்மையில்    படித்தேன்.    அவ்வுலகில் நீயிருப்பாய்.     என்    தவிப்பை   அறிவாய்.
      நல்ல    எழுத்தோவியம்   படைத்தோர்க்கெல்லாம்      அற்பாயுள்தானோ?
      மனம்    பலரை    பட்டியலிட்டுப்பார்க்கின்றது.
      நீயும்   அதில்    இணைந்துவிட்டாய்.
      அந்த    வாகனk;?    அது     என்ன    மோட்டார்    சைக்கிளா?
      எனக்குப்பிடிக்காத    அந்த     வாகனத்தில்     வெகு    ஒய்யாரமாக   உலாவி     வருவாயே?
      நீ     விளையாட்டுப்பிள்ளை.
      அதனுடன்     விளையாடினாயா?
      விதி    விளையாடிவிட்டதா?
      எத்தனையோ    செய்திகள்    போன்று    உன்   மரணச்செய்தி    எனக்கு வெறும்     செய்தியல்ல.
      அர்த்தம்    பொதிந்த    கவிதைகள்     பல   தந்தவனே
      இந்த    வாழ்வே   அர்த்தமற்றது   என    அற்பாயுளில்    மறைந்தனையோ?
      மரணம்   -    மரணிப்போர்க்கு    நிம்மதி.     மரணித்தோரை   நினைப்போர்க்கு    மரணம்    வரையில்    வேதனைதான்.
      பாரதிக்கு     ஒரு    பாரதி தாசன்
      கம்பனுக்கு   ஒரு   கம்பதாசன்.
      கண்ணனுக்கு    ஒரு     கண்ணதாசன்
      மேத்தாவுக்கு     ஒரு     மேத்தா தாசன்
      பிறப்பால்      மேத்தா       இஸ்லாமியர்.    நீயோ     இந்து     பிராமணன்.
      இலக்கியம்    உங்களை    இணைத்த     விந்தையை   எழுத    வார்த்தைகள் இல்லை.
      ‘நாடே வேண்டாம்- என்று     காட்டுக்குச்   சென்ற     ராமனுக்கு கோயிலாம்.     அதனைத்தடுக்க     மற்றுமொரு     கூட்டமாம்.     மோதலாம். உயிர்     துறந்தோர்     எத்தனை?     இராமயண      காலத்தில்    காட்டுக்குப்போன      இராமன்      இந்த    நூற்றாண்டில் கோர்டுக்குப்போகின்றான்.      கடல்மூடிய    இராமர்    அணையும் அரசியலாகிவிட்டது.
தொடர்ந்த    அழிவுகள்தான்      எத்தனை?
     மதத்தால்   -    மொழியால்  -     இனத்தால்      பிளவுண்டு   போயுள்ள   எங்கள்     தேசங்களில்    அவற்றை    நியாயப்படுத்தும்     வாதங்கள்     புதிய கலாசாரமாகவும்      மாறிக்கொண்டிருக்கும்    காலத்தில்     உன்னைப்போன்ற  கவிஞர்கள்      விடிவெள்ளிகள்.
     அசைவம்     ருசிக்காத    நீ  -    நண்பர்களுக்காக    உடன்    வந்து    ஓரமாய்    ஒதுங்கி    நின்று    உபசரித்த    கதைகள்    பல   அறிவேன்.
     இராமனுக்கும்    கோயில்    கட்டுவார்கள்     என்று   முன்பே தீர்க்கதரிசனமாக     தெரிந்துவைத்திருந்த     படைப்பாளி     ஒருவர்    எம் தேசத்தில்      இருந்தாரடா.
     அவரும்    உன்னைப்போன்று     அற்பாயுளில்தான்    மறைந்தார்.
     கட்டினார்     கட்டினார்
     கோயில்கள்    கட்டினார்
     கட்டிய       கோயில்களில்
     என்னதான்    கண்டார்.
இவ்வாறு     சொன்ன     எங்கள்    மு.தளையசிங்கத்தை    தமிழகமும் கனம்பண்ணியது.
     நீ    இராமனைப்பற்றி      எழுதிய      கவிதை     அர்த்தமுள்ளதாய் கண்முன்னே     விரிந்து    கிடக்கிறது.  
     தொடரும்    இராமாயணங்கள்  -     எனத்தலைப்பிட்டு      எழுதியிருந்தாய்.    என்னை    இறுதியாக     சந்தித்தபோது      தந்துவிட்டாய்.
     அந்தக்கவிதையை      மற்றவர்களும்      அறியவேண்டாமா?
     தொடரும்     இராமாயணங்கள்
      விதவையின்     நெற்றியாய்        வீணாகிப்      போயிருந்த
      அயோத்திய     தேசம்       கன்னிப்பெண்ணின்
      பளிங்கு   முகத்தில்   வந்த      படுத்துக்கிடக்கும்
      வெட்கத்தின்    விளக்கமாய்      விழாக்கோலம்    பூண்டிருந்தது
      மாடங்களில்   எல்லாம     புடவையணிந்த     நிலவுகள்
      காந்தக்கண்களை        வீதியில்      விரையும்     ஊர்வலத்தின்   மீது
      உலாவிட்டிருந்தன
      தங்களின்   மீது    வந்து     தங்கிப்போகும்     விழிகளின்      உலாக்களை
      விழுங்கியபடி         மூலைமுடுக்கெங்கும்
      மினுமினுத்த      விளக்குகளிd;      வெளிச்சங்களிலிருந்து
      சூரியனே   தனக்குச்       சுடரேற்றிக்கொண்டிருந்தது.
      வெள்ளை    நிலாவை     விலைக்கு   வாங்கிய
      தேகங்களின்    களியாட்டம்     கண்களுக்குக்    கொண்டாட்டம்
      ஓரிடத்திலும்      ஒழுங்கா  உட்கார   முடியாமல்
      விழிகளுக்கு   விடைபெற  முடியா       வேலை
      ஆமாம்
      மாவிலை   தோரணk;    பூக்களின்   ஆரணம்
      விடாத     வான      வேடிக்கையின்       விளையாட்டிற்கு
      என்னதான்      காரணம்?
      வனவாசம்     முடித்த     தசரத   மைந்தனுக்குக்
      கானகத்தின்     கரடு   முரடுகளில்
      வாலிப  வைபவங்களைத்       தெரிந்தே      தவறவிட்டவனுக்கு
      மாட    மாளிகைக்குள்ளே     பட்டமேற்பு       பரபரப்பாம்
      பூமியின்   பரப்பே     புரளும்படி   ஜயபேரிகை    கொட்டப்பட
      காவல்    தலைவனின்    காவியத்     தலைவி     மீது
      கிரீடம்     ஏறும்போது
      வாயிற்   காப்போனின்      மிரட்டலையும்   மீறி
      சபைக்குள்ளே    சடுதியில்    வந்த     ஒருவன்
      சப்தித்தான்
      மனைவியின்  கற்பின்  மீதே    களங்கம்    கற்பித்து
       அக்னிப்பிரவேசத்தில்     ஆட்படுத்தியவனுக்கு
       அரியாசனம்    ஒரு   கேடா
       அசோகவனத்தில்     ரணங்களோடு
       ராத்திரியை      கொண்டாடியவளுக்கு
       பகலிலும்    கூட      பரிசாகக்      கிடைத்தது
       அக்னியின்      ஆராதனைதானே
       வந்தவனின்    வார்த்தைகs;     முடிவை    நோக்கி
       முற்றுகையிடும்        முன்னரே
       சிறையின்     கதவுகள்  -    அவனைச்     சுவீகரித்துக்கொண்டன.
       இரண்டு    மாதம்       இறந்தபிறகு     ஆரோ   சொன்ன
       அழுக்கு    வார்த்தையின்    நெடி   தாங்காது
       அயோத்திய    ராமன்     ஆணையிட்டான்
       சீதையைக்     காட்டின்     கரடு  முரடிற்குக்
       காணிக்கையாக்கும்படி
        இப்போதும்  -      இராமாயணங்கள்
       தொடர்கதையாக     தொடர்ந்து      கொண்டிருக்கின்றன.
       உரிமைகள்       உண்டு     உதட்டின்    உள்ளேயே
       வார்த்தைகளை      உச்சரித்துக்கொள்வதாகயிருந்தால்
       தனக்குள்ளேயே       சப்தமடக்கிக்கொண்டு
       தானேயொரு   ரகசியமாf   ரசம்   மாறிக்கொள்வதாயிருந்தால்
       இங்கேயும்   உரத்த
       உரிமைகள்   உண்டு
       எடுத்துக்காட்டு   வேண்டுமா
       இந்தியாவைப்   பாருங்கள்.

என்று     முடித்திருந்தாய்    அந்தக்கவிதையை.     இலங்கையையும்  பாருங்கள்    என்றும்   வேண்டுமானால்   சேர்த்துக்கொள்ளலாம்  கவிஞனே.
   நண்பனே,   மேத்தாவின்     கவிதைகளினால்       கவரப்பட்டு     உந்தன்    பெயரை      மேத்தா தாசனாக      மாற்றிக்கொண்டாய்.
   பெற்றோர்      இட்ட பெயர்    பெற்றோர்க்கும்     சுற்றோர்க்கும்     மட்டும் தெரிந்திருக்க   -   எமக்கோ     நீ  -   மேத்தா தாசனாக     அல்லவா     காட்சி அளித்தாய்.
   இலங்கைக்கு     நீ    வந்திருந்த    சமயம்    ஒரு   நண்பர்    உன்னிடம் கேட்டார்-
   “ மேத்தாவின்     கவிதைகளினால்    ஆகர்ஷிக்கப்பட்டு      பெயரை மாற்றிக்கொண்டீர்கள்.        நாளை     ஒரு     நாள்     மேத்தாவின் கருத்துக்களில்    முரண்பட்டு    இந்தப்பெயரையும்     மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்     என்பது      என்ன     நிச்சயம்?”
    நீயோ      மிகமிக     நிதானமாக    “பாரதியிடத்தே   பாரதிதாசன் முரண்பட்டார்.      அதற்காக     அவர்      பெயரை    மாற்றிக்கொண்டாரா?”     
     உன்     வாயில்     இனிப்புப்    போடவேண்டும்.
     பேச்சில்  -    எழுத்தில்     உனக்கிருந்த      நிதானம்     அந்த     வாகனம் செலுத்தும்போது    எங்கேயடா      தொலைந்து    போனது.
     இன்று    உன்னை      தொலைத்துவிட்டு      பரிதவிக்கின்றோமே.
     சுப்பிரமணிய ராஜூ வும்     இப்படித்தான்     ஒருநாள்    ஸ்கூட்டரில் சென்றபோது      மோதுண்டு      இறந்த      இடத்தை     நீ    ஜீவாவுக்கு காட்டினாயாமே?
     நீ     மோதுண்ட      இடத்தை    யார்    எமக்குக்காட்டுவார்?
     நீ    நல்ல    அழகன்.     உன்    கவிதைகள்     மட்டுமல்ல.      உன்   குணமும் அழகுதான்.
     உன்னுடன்      இணைந்து     எடுத்த     படத்தின்      பிரதியை   அனுப்பும்போது,      ‘இந்த      கட்டழகனுக்கு      கவியுள்ளம்      படைத்த     ஒரு கட்டழகி    கிடைக்கவேண்டும்.      அடுத்தமுறை    உன்னை  சம்சாரியாகத்தான்      பார்க்க      விரும்புகிறேன்என்று     என் விருப்பங்களையெல்லாம்      எழுத்தாக      கொட்டியிருந்தேனே.
    எம்மீது      நெருப்பைக்     கொட்டிவிட்டு       நெருப்பில்     சங்கமித்துவிட்டாயே.
    உன்     பதிலுக்காக    தினமும்      காத்திருந்த     எனக்கு     உனது மரணச்செய்திதானா       வரவேண்டும்?
    உன்னதமான     கவிஞனுக்கு    மரணம்      இல்லை.     உன்     கவிதைகள் என்றும்      எம்முடன்     வாழ்ந்து     உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும்.
    அது     மட்டுமா    நீ    எனக்கு     உன்    நினைவாக     அளித்த     அந்தப்பரிசு-
அதனைச்சொன்னால்       மற்றவர்களுக்கு    அது    அற்பமாக     இருக்கும்.
    எனக்கோ      அது      ஆத்மார்த்தமல்லவா?
    உன்      மறைவின்    பின்புதானே     அந்த    ஆத்மார்த்தம்     புரிகிறது.
    கைக்கு     அடக்கமான     கடும் நீல    வெளியுறையும்       மேக வர்ண பக்கங்களும்     அமைந்த     ‘தொலைபேசி -  முகவரி    ‘இன்டெக்ஸ் புத்தகம்.
    தினமும்    இங்கு    எனக்குப்     பயன்படும்.
    திருவல்லிக்கேணியில்     என்னையும்   மகளையும்     பஸ் ஏற்றிவிடும்போது-
பஸ்     சாரதியிடம்     ஓடிச்சென்று   ‘ ஒரு செக்கண்ட் சார்   என்றாய். எங்கே     போகிறாய்?     எட்டிப்பார்த்தேன்.
    பிஸ்கட்    பக்கட்டுடன்      ஓடிவந்து     என்     குழந்தையிடம்     தந்து    அவள் தலைதடவி      வாழ்த்தினாயே
   அந்தக்காட்சி     இன்றும்      எனது      நீந்தும்     கண்களுக்குள்.
(அந்தக்குழந்தை    இன்று     இரண்டு    குழந்தைகளுக்கும்     தாயாகிவிட்டாள்.)
   புறப்படும்     வேளையில்     உன்    வேலை     முடிந்து    அந்த வாகனத்தில்தான்      ஓடிவந்தாய்.     தமிழகத்தில்    நான்    வாங்கிய புத்தகங்களை    எனது     சூட்கேஸில்     அடுக்குவதற்கு      முடியாமல் தவித்தபோது     நண்பர்       கவிஞர்     முத்துதாசனையும்    அழைத்துக்கொண்டு      பாண்டி     பஜாருக்கு     ஓடினாயே.
   விமானம்     புறப்பட    இரண்டு    மணி     நேரம்     இருக்கும்போது,      கருப்பு நிற   பேக்குடன்      வந்தாயே.     அந்த     பேக்கில்    புத்தகங்களை      பக்குவமாக அடுக்கி     என்னை    கட்டி அணைத்து     கைகுழுக்கி      விடைகொடுத்தாயே.
  இனி    நாம்     சந்திக்கமாட்டோம்      என்பதற்கு     அடையாளமாகவா     அந்த கறுப்பு நிற    பேக்கை    வாங்கி     வந்தாய்.
  தமிழகத்தில்    எழுத்தாளர்களை     எனக்கு     அறிமுகப்படுத்த     நீ எடுத்துக்கொண்ட     பிரயாசைகள்     இந்தக்குணம்  -     நல்ல    இலக்கிய நெஞ்சுக்குத்தானடா     இருக்கும்.
  அது      உன்னிடமும்     இருந்தது.
  அதனால்தான்      எம்     எல்லோராலும்      நேசிக்கப்படுகிறாய்.

(முக்கிய குறிப்பு:     இந்தப்பதிவுக்காக     அமரர்    மேத்தாதாசனின் ஒளிப்படத்தை      தேடினேன்.      கிடைக்கவில்லை.    ஆனால்      என்னிடம் எஞ்சியிருப்பது     அற்பாயுளில்     மறைந்த      அந்தக்கவிஞனின் நினைவுகள்தான்.      அதனால்      அவன்     நேசித்த       கவிஞர் மேத்தாவின்     படத்தை       இங்கு     பதிவுசெய்துள்ளேன்.    எனக்கு     மேத்தாதாசனின்    படத்தை      எடுத்துத்தருவதற்கு     தொடர்ந்தும்      முயற்சிக்கும்    நண்பர்    மேமன்கவிக்கும்     இச்சந்தர்ப்பத்தில்      எனது     நன்றி)

                    ---0---
நண்பர்களே!     ஒரு     உதவி    80    களில்    தமிழகத்தில்   நண்பரும் புதுக்கவிதையாளருமான     மு.மேத்தா     அவர்கள்     மீதான    அபிமானத்தின் காரணமாக     மேத்தாதாசன்      என்ற   பேரில்    ஒரு    இளைஞர்   புதுக்கவிதை      எழுதி    வந்தார்.   அவரது     தொகுதி    ஒன்றினை    நர்மதா பதிப்பகம்    காகித கனவுகள்    என்ற    தலைப்பில்    வெளியிட்டது.   ஆனால்     அந்த     இளைஞர்    ஒரு   சாலை    விபத்தில்    இறந்து விட்டார். இலங்கைக்கும்     வந்தார்  80 களில் .   அவரது    புகைப்படம்     எனக்கு தேவைப்படுகிறது.      நண்பர்கள்     யாராவது      வைத்திருந்தால்     எனக்கு அனுப்பி வைத்து      உதவுங்கள்.     நண்பர்    முருகபூபதிக்கு      அப்படம் தேவைப்படுகிறது.
இப்படியான   ஒரு    அறிவித்தலை   முக நூலில்    போட்டு     இருக்கிறேன்
மேமன்


                               ----00---

2 comments:

Unknown said...

விஜயராகவன் எனது வகுப்பு தோழன்... அவனின் மறைவு இன்று தாம் அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்கள்
நாங்கள் கலந்து கொண்ட கவியரங்கம் ஒன்றில் என்னுடன் உள்ளார்..

அவரின் படம் என்னிடம் உண்டு

Unknown said...

மேத்தா தாசன் இந்த இணைப்பில் உள்ளது. அவர் எனது பள்ளி வகுப்பு தோழன்

https://m.facebook.com/story.php?story_fbid=1870667589744492&id=100004038065297