சமகால உலகத்தமிழ்க்கவிதை- “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” -தமிழாக்கம்: தேவஅபிரா

.

சமகால உலகத்தமிழ்க்கவிதை- “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” தமிழாக்கம்: தேவஅபிரா
கனடா ரொரொன்ரோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலக்கற்கை நெறிப்பீடத்தின் பேராசிரியரான திரு செல்வா கனகநாயகம் அவர்களின் வழிப்படுத்தலில்,  கடந்த பல தசாப்தங்களில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பரவிச் சென்று வசிக்கும் தமிழ்க்கவிஞர்களால்  பல்வேறு காலங்களிலும் எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் முதன் முறையாக  ஒரே அணியாகத்(தமிழ்+ஆங்கிலம்) தொகுக்கப்பட்டு “ எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்”  என்னும் பெயரில் வெளி வந்துள்ளன.
நவீனத்துவம் நிகழ்காலத்தின் பரிமாணங்களை பல்வேறு வழிகளிலும் வடிவமைத்துக்கொண்டிருக்கும் இக்கணத்தில் கடந்த மூன்று தசாப்தங்களில் எழுதப்பட்ட தமிழ்க்கவிதைகளில் மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான போராட்டம் நெய்யப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.



பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை முறைக்கென சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளுக்குக் குடிபெயர்க்கப்பட்ட அல்லது குடிபெயர்ந்த தமிழ்ச் சமூகம் அந்நாடுகளில் அதனால் எதிர் கொண்ட ஒடுக்குமுறைகளும் பின்னர் கால ஓட்டத்தில் இச்சமூகம் நகரங்களை நோக்கி நகரும் போது ஏற்படும் வினைகளும் விளைவுகளும் கவலைகளும் அங்கிருந்து வரும் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை அது எதிர் கொள்ளும் முக்கியமான மாற்றமான கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிய மக்களின் பெயர்வானது ஒரு காயமாக உணரப்படவில்லை. அது இயல்பாக நிகழ்கிறது ஆனால் தமிழ்நாட்டுச் சமூகத்தின் வலிமையான மரபுகள் காலமாற்றத்துடன் தன்மைப் புதுப்பித்துக்கொள்ள மறுப்பதுதான் பிரச்சனையாக உணரப்படுகிறது.
இலங்கையர்களைப் பொறுத்த வரை அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியும் அதானாற்றோன்றிய சமூக மற்றும் கலாசாரச்சிதைவுகளும் அவர்களின் படைப்புலகத்தின் சட்டகமாகின்றன. இலங்கையில் எந்தச் சூழ்நிலைகளுக்குள்ளும் வாழ்வதென்று முடிவெடுத்துக்கொண்டவர்களும் இலங்கையை விட்டு வெளியேறுவதென்று முடிவெடுத்து மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்களும் வேறுபட்ட கோணங்களிலும் பரிமாணங்களிலும் தமது படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தாலும் இரு சாராரினதும் கவலைகள் அவர்களது சமூக கலாசார உலகம் பற்றியதாகவே இருக்கின்றன.
ஒட்டு மொத்தமாகப்பார்க்கும் போது இந்தக்கவிதைகள் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் உலக அனுபவத்தின்,  ஆர்வமூட்டும் உள்ளார்ந்த வெளிப்பாடாகவே அமைகின்றன.
இத்தொகுப்புப்பற்றி சிக்காகோ பல்கலைக்கழகத்தின்  தமிழ் மற்றும் தென்னிந்தியக்கற்றகைநெறிகள் பிரிவின் இணைப்பேராசிரியர் சாஷா எபெலிங்  பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
 “ இதற்கு முன்பு வந்த எந்த மொழிபெயர்ப்புத்தொகுப்பும் இத்தகைய பரந்து விரிந்த பரிமாணத்தைத் தரவில்லை. கடந்த இரண்டு தசாப்த காலத்தமிழ் இலக்கியம் என்பது உண்மையிலும் ஒரு உலக விவகாரம் ஆகிவிட்டது அல்லது உலகப்பரிமாணத்தைப் பெற்று விட்டதென்பதை  இத்திகதி வரை இப்புத்தகமன்றி வேறெதுவும் விபரிக்கவில்லை.
பெண்கள்-ஆண்கள், இளையவர்-முதியவர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள்  எனப்பலவகைப்பட்டவர்களின் குரல்கள் இத் தொகுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவர்களின் குரல்கள் இங்கு வேறுபட்டு ஒலிக்கவில்லை  இவர்கள் தங்களுக்கிடையிலான இணைப்பிலும் தமிழுக்கும் கவிதைக்குமான தமது அர்ப்பணிப்பிலும் தம்மையும் தமது ஒற்றுமையையும் அடையாளம் கண்டுள்ளார்கள். . மிகவும் கவனமுடன் சிந்தித்து மொழிபெயர்க்கப்பட இந்தத் தொகுப்பில்  மொழிபெயர்ப்புலகத்தில் வாழ்தல் என்றால்  என்ன வென்பதையும் அது இனிமேலும் சாத்தியமென்பதையும் கற்றுகொள்வதற்காக உலகம் அமைதியடைவதை இதனுள் நிகழும் இலக்கிய உரையாடலைக் கரந்து கேட்பதன் மூலம் உணரமுடியும்.”
மொழிபெயர்ப்பு: தேவஅபிரா

No comments: