காற்றுக்கு வந்த சோகம் --சு.வில்வரெட்னம்.

.

முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.
வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.




திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனென
சுதந்திரமாய் நுழைகிற காற்று
இப்போ தயங்கியது.
தயங்கித் தயங்கி மெல்ல
ஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.
ஆளரவமே இல்லை.

இன்னுமொரு வாசல்; இல்லை.
இன்னும் ஒன்று; இல்லை.
இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்
இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.
சற்றே கிட்டப் போனது.
வாசற் படியிலே

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

பதற்றத்தோடே
படலையைத் தாண்டிப் பார்த்தது
தூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.
ஆருமே இல்லை.

காற்றென்ன செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதிலே போடும்.
ஒரு குரலின் உரைசலும் இல்லையே.
உண்மையிலேயே
காற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க
,தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.
காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்
?"ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடி
மீண்டும் உள்ளே நுழைந்தது.
முதுமையினருகில் குந்தியிருக்கும்
இன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து
பிறகெழுந்து
சேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடி
வந்தது வெளியே.

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல.

28.07.1993

சு.வில்வரெட்னம்.

2 comments:

Anonymous said...

test

Anonymous said...

Very nice