கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-

கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:-

Bookmark and Share

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் ராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது:- வரமுடியவில்லை அம்மா - கவிதை இணைப்பு:-

நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது.

வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...

சிங்கமும் நரிகளும் பதுங்கும் 
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி


இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்ல.

கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதகளைக்
காலத்தில் எழுகிறேன்...
-வ.ஐ.ச.ஜெயபாலன்-
நன்றி  Watch Human முகநூல்
9ஆம் இணைப்பு - கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:-
 வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பு-8 கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்:-
23-11-2013 - 12:10


கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து இலங்கை நேரம் மாலை கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு பிரஜைகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்றும் பொறளையில்  உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா? அல்லது  பொறளை பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா என்பதனை அவர்  தெளிவாக கூறவில்லை.

இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டால் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீதி மன்ற நடவடிக்கைகள் அலுவலக நடவடிக்கைகள் நடைபெறாது என்பதனால் திங்கட் கிழமையே நீதிமன்றில் ஆஜர்பபடுத்தி அவரை விடுதலை செய்ய முடியும். இது சதாரண நடைமுறை ஆகும்.

இந்த நடைமுறையை மீறி விசேடமாக கவனம் செலுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது ஜனாதிபதியின் விசேட பணிப்பில் நீதவான் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதித் துறையின் அனுமதியுடன் விடுவிக்க முடியும். எனினும்  சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை யாவுமே மகிந்த சகோதரர்களின் பிடியில் இருப்பதனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் கரிசனை எடுத்தாலும் உடனடி விடுதலை சாத்தியமற்றது.

அந்த வகையில் நாளை மறுதினம் திங்கட் கிழமையே இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறையினரின் தீர்மானத்திற்கு அமைவாக நீதித் துறை ஊடாக விடுவிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

அவ்வாறு இல்லாமல் உல்லாசப் பிரயானத்திற்கான விசாவில் சென்று விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலம் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தமது நாட்டுப் பிரஜை தடுத்து வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணத்தை வினவி ராஜதந்திர மட்டத்தில் விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கலாம் எனவும் தெரியவருகிறது.
7ஆம் இணைப்பு:-  இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்களை வா.ஐ.ச ஜெயபாலன் வெளியிடவில்லை - ரவூப் ஹக்கீம்
08:10am
இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்களை வா.ஐ.ச ஜெயபாலன் வெளியிடவில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் நேற்று (22.11.13) மாலை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம், வா.ஐ.ச ஜெயபாலனின் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் ஜெயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலைக் கடந்து இலக்கியவாதி என்ற அடிப்படையில் ஜெயபாலனின் அறிமுகம் தனக்கு உள்ளதாகவும் அவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை எனவும் தெரிவித்த ரவூப் ஹக்கீம,; தமிழ் முஸ்ஸிம் உறவு குறித்தும் நல்லிணக்கம் குறித்தும் கரிசணையுடன் ஜெயபாலன் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பட்ட ஜெயபாலனை வெளிநாட்டவர் என கருதிவிட முடியாது  எனவும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் ஜெயபாலன் செயற்பட்டதாக கூறிய கருத்தை ஏற்க முடியாது எனவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
7ஆம் இணைப்பு:- ஜெயபாலனை பசீர் மற்றும் ஹக்கீம் தொலைபேசியில் பேசினர் - ஜெயபாலன் -குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
23 நவ. 13 03:10 (GMT)

6ஆம் இணைப்பு:- ஜெயபாலன் இராணுவப் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு - மாங்குளத்தில் கடத்தப்பட்டார் - பின் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்:-
22-11-2013 - 14:10pm
நீண்ட இடைவெளியின் பின்னர் யாழ்.குடாநாட்டிற்கு சென்றிருந்த  ஜெயபாலன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் அவரது நடமாட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டிருந்த நிலையில் அவர் யாழை விட்டு வெளியேறியிருந்தார். எனினும்; அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் அவரை மாங்குளத்தில் வைத்து கடத்தியதாக தெரியவருகிறது. இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவரை தாம் கைது செய்திருப்பதாகவும் விசா விதிகளை மீறி ஜெயபாலன் செயற்பட்டார் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:-


விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறிய காவற்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும்; அவர் தெரிவித்துள்ளனர்.
  
2ஆம் இணைப்பு:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-
11:10am
கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.  

நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் கழித்து வந்தார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
இவரது கைது குறித்து நோர்வே தூதுவராலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

நன்றி :globaltamilnews

No comments: