உலகச் செய்திகள்

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

இந்தோனேசியாவை உளவுபார்த்த அவுஸ்திரேலியா?

பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல்

19/11/2013   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில்  குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமையே வெடிப்புக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தூதுவராலயத்தை இலக்குவைத்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் தூதுவராலய அதிகாரிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.நன்றி வீரகேசரி

இந்தோனேசியாவை உளவுபார்த்த அவுஸ்திரேலியா?


19/11/2013   இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவிற்கான தனது தூதுவரை திரும்பி அழைத்துள்ளமையானது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய உளவு நிறுவனங்கள் இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ அவரது மனைவி உள்ளிட்ட அமைச்சர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக தகவல் வெளியாகியதையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளவு தகவல்களை வெளியிட்டு வரும் எட்வார்ட் ஸ்னோடெனிடமிருந்து பெற்றுக்கொண்ட இவ் ஒட்டுகேட்பு விடயம் தொடர்பான ஆவணங்களை இரு ஊடகங்கள்  வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய இலத்திரனியல் உளவுப் பிரிவானது கடந்த 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுசிலோ பாம்பாங்கின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை 15 நாட்கள் வரை கண்காணித்ததாக  குறித்த ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இத்தகவலால் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே உளவு பார்த்தல் விவகாரம், படகில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு பயணிக்கின்றமை உட்பட சில விவகாரங்களால் இருநாட்டுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய குற்றச்சாட்டும் வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போதிலும் இந்தோனேசிய இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்விடயத்தை அவுஸ்திரேலியா மிக இலகுவாக எடுத்துக்கொண்டதாக இந்தோனேசிய ஜனாதிபதி  சுசிலோ பாம்பாங் யுதோயோனோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட்டையும் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ கடுமையாக சாடியுள்ளார்.நன்றி வீரகேசரிNo comments: