யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்
நிந்தவூர் அசாதாராண சூழ்நிலை: கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை சமர்ப்பிப்பு
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா
ஜனாதிபதியின் பதாதை யாழில் தீக்கிரை
தமிழர் என்ற அடையாளத்துடன் முரளிக்கு கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்
நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்
பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
======================================================================
யாழில் அருட்தந்தை, மக்கள் தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்
19/11/2013 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட
மக்கள்
மீதும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மீதும் படைத்தரப்பினர் மேற்கொண்ட
கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தாம் வண்மையாக கண்டிப்பதாக தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ
இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காணாமல் போனவர்களது உறவுகள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கடந்த
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை
முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரிட்டிஸ் பிரதமரிடம் தமது கோரிக்கைகளை முன் வைக்கும் முகமாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
அந்த மக்களுக்கு ஆதரவாக கத்தோலிக்க அருட்தந்தையர்களும் கலந்து
கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் மீதும்
அருட்தந்தையர்கள் மீதும் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்;களை
மேற்கொண்டுள்ளனர். இதனை தமிழ் தேசியக்கூட்;டமைப்பு வண்மையாக
கண்டிக்கின்றது.
உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைவாகவே கத்தோலிக்க அருட்தந்தையர்கள்
மீதும், மக்கள் மீதும் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிய
வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் எமது மக்களுக்கு ஒரு பக்க பலமாக கத்தோலிக்க
அருட்தந்தையர்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்கள்
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம்.
எனவே மதத்தலைவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
நிந்தவூர் அசாதாராண சூழ்நிலை: கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை சமர்ப்பிப்பு
19/11/2013 நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள
அசாதாராண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின்
முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை
அமர்வில் அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி
தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையின்
மாதாந்த சபை அமர்விலேயே அவர் இந்த அவசர பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு வார காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த
கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மர்ம நபர்களை
ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுமக்கள் மடக்கிப் பிடித்த போதிலும் அவர்களை விசேட
அதிரடிப் படையினர் காப்பாற்றிக் கொண்டு சென்ற சம்பவத்தைக் கண்டித்துள்ள
மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், இது தொடர்பில் பக்க சார்பற்ற முறையில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் விடயத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு
ஏற்படும் வகையில் விசேட அதிரடிப் படையினர் ஒருதலைப் பட்சமாக மேற்கொண்ட
மிகவும் மூர்க்கத்தனமான நடவடிக்கை காரணமாகவே நிந்தவூரில் குழப்பகரமான நிலை
தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல்,
இந்நிலை ஏனைய ஊர்களுக்கு பரவக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும்
எச்சரித்துள்ளார்.
இது விடயத்தில் அரசாங்கமும் பாதுகாப்புத் துறையும் நீதியாக செயற்பட்டு
சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க
அவசர நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக விரோத
செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட
வேண்டும் என்றும் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கேட்டுக் கொண்டார்.நன்றி வீரகேசரி
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா
இலங்கையில் மனித உரிமைகளை
மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென
சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளில் பல்வேறு பட்ட நாடுகளில்
வித்தியாசங்கள் காணப்படுவதால் மனித உரிமைகள் பாதுகாப்பிலும்
வித்தியாசங்கள் இருக்கலாம் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சின்
பேச்சாளர் கிங் கேங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றிலேயே சீனாவின்
வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனித உரிமையை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும்
சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கைகள் எடுப்பதே முக்கியமாகும்.
உலகின் ஏனைய நாடுகள் அவற்றுக்கு பயன்மிக்க உதவிகளை மட்டுமே
வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் கேள்வி
எழுப்பப்பட்டமை மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் கூற்று
ஆகியவை தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்தியாளர் மாநாட்டில் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
மேலும், இது பொதுநலவாய அமைப்புக்குரிய விடய மாகும். எனினும், மனித
உரிமை விவகாரத்தில் நாடுகளுக் கிடையிலான கலந்துரையாடல்களும்
தொடர்புகளும் அதிகரிக்கப்படவேண்டுமென்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இவ்வரு டத்திற்கான
உறுப்புரிமையை சீனா பெற்றுள்ள நிலையில் இவ்வாறான கருத்து
வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.நன்றி வீரகேசரி
ஜனாதிபதியின் பதாதை யாழில் தீக்கிரை
20/11/2013 யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படம் அச்சிடப்பட்ட பதாதையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
யாழ். சென். பற்றிக்ஸ் வீதிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த பதாதையே விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் யாழுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்ற
செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவரின் வருகையைச் சிறப்பிக்கும் நோக்குடன்
வீதிகளில் ஜனாதிபதியின் படத்துடன் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தொங்கவிடப்பட்டிருந்த பதாதை ஒன்றினையே விஷமிகள்
தீக்கிரையாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப் பதாதை எரிக்கப்பட்ட இடத்தில்
பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி
தமிழர் என்ற அடையாளத்துடன் முரளிக்கு கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்
20/11/2013 தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் து. ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில்
ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச் சந்திரனின் கதியோ
நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின்
அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும்
பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து
வெளியிடுகின்ற தகுதி இல்லை.
காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நாம் பல போராட்ட வடிவங்களை
முகம்கொடுத்து வந்துள்ளோம். இறுதிப்போரில் எங்கள் மக்கள் சந்தித்த இன
அழிப்புப்போரின் சாட்சியங்கள் இன்று உலக ஊடகங்களில் வெளிவந்து ,
சர்வதேசத்தையே உலுப்பிவருகின்றது.
இசைப்பிரியாவும் பாலச்சந்திரனும் எங்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநீதியின்
அடையாளங்களாக மாறி உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி வருகின்றனர். கணவனை
இழந்த பெண்கள் வடகிழக்கிலே 90 ஆயிரத்துக்கு மேல் உள்ளனர். பெற்றோரை இழந்த
பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்மாரின் சோகங்கள் கண்ணீரால் எழுதப்படுகின்ற
வரலாறாகியுள்ளது.
ஏராளமான இழப்புக்களையும் எண்ணற்ற உயிர்த் தியாகங்களையும் சந்தித்த
எங்களின் உரிமைப்போராட்டமானது இன்று என்றுமில்லாதளவிற்கு
சர்வதேசமயப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமரின் வரலாற்றுச்
சிறப்புமிக்க யாழ் வருகையின்போது பிள்ளைகளைத் தொலைத்த தாய் மார், ஆற்றாது
அழுது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது இன்று உலகின் உணர்வுகளை தட்டி
எழுப்பியுள்ளது.
இவ்வாறான நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அத்தாய்மார்களின்
உணர்வுகளை கேலிப்படுத்தும் விதத்திலும், வடகிழக்கில் தமிழர்கள்
எதிர்கொள்ளும் அநியாயங்களை மூடி மறைக்கும் விதத்திலும் தமிழரின் நியாயமான
உரிமைப்போராட்டத்தை மோசமாக விமர்சித்தும் வெளியிட்டுள்ள கருத்துக்கள்
உலகத்தமிழரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
எங்கள் சார்பான சர்வதேச போக்கைத் திசை திருப்பும் நோக்கில் தனது
விளையாட்டு பிரபல்யத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ள கருத்துக்கள் மக்களிடம்
கடும் கோபத்தைக் கிளறியுள்ளன. இலங்கையில் துடுப்பாட்டமானது அரசியல்
நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற வலுவான ஆயுதம் என்பது இதன் மூலம்
பலராலும் உணரப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாறு அவருக்குத் தெரியுமா? எங்கள் மண்
கண்ட உயர் அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் தெரியுமா? உறவுகளைத்
தொலைத்தோரின் அழுகுரல்கள் கேட்டிருக்கிறாரா? இன்றும் தொடரும் எங்கள் நில,
வள அபகரிப்புக்கள் தெரியுமா? இசைப்பிரியாக்களின் கதறல்களும், பாலச்
சந்திரன்களின் ஏக்கங்களும் அவருக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாது.
இன்னமும் குண்டுகளின் சிதறல்களை உடலில் தாங்கி நடமாடுகின்ற எங்கள்
மக்களைப்பற்றித் தெரியுமா? தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின்
கதியோ பாலச் சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான்
பேசுவாரா?
இந்நிலையில் எங்கள் நிலை பற்றி எங்களின் அடையாளத்துடன் கருத்து
வெளியிடுகின்ற உரிமையை யார் கொடுத்தது? கடந்த காலத்தில் தமிழக மக்களின்
போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டவர் அல்லவா இவர்.
முத்தையா முரளிதரனின் இது போன்ற நடவடிக்கைகளால் உலகத்தமிழர் மத்தியில்
பெற்றிருந்த நன்மதிப்பை இழந்து இன்று கடும் கோபத்தையும் வெறுப்பையும்
சம்பாதித்துள்ளார். தமிழர்களின் சாதனைச் சின்னமாக தன்னை நிலை நிறுத்த
வேண்டியவர் , தன்னை ஒரு துரோக அடையாளமாக வெளிப்படுத்தியுள்ளார்.
வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின்
உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற
அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை என அவர் மேலும்
தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்
20/11/2013 நிந்தவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட
21 சந்தேக நபர்களில் 07 பேரை இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி
ரீ.கருணாகரன் தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுவித்தார்.
இந்த 07 பேரில் 06 பேர் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 21 ஆவது சந்தேக நபர் 18 வயதிற்கு மேற்பட்டவராக
இருந்தபோதிலும் அவர் ஒரு மனநோயாளி என அவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள்
குறிப்பிட்டதனைத் தொடர்ந்து அவருக்கும் சரீர பிணை வழங்கப்பட்டது.
இதேவேளை ஏனைய 14 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நிந்தவூரில் தற்போது அமைதி நிலவுவதுடன் போக்குவரத்தும் சீரடைந்து
காணப்படுகிறது. வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் துறை காரியாலயங்கள்
பாடசாலை என்பன இன்று வழமை போன்று இயங்கின.
இதே வேளை நிந்தவூர் பிரதேசத்தில் இரவு வேளைகளில் மர்ம நபர்களின் நடமாட்டம்
தொடர்ந்தும் இருப்பதாகவும் வீடுகளுக்கு கற்களை வீசி மக்களை
அச்சத்திற்குள்ளாக்கியும் மக்கள் தங்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக
நிந்தவூர் ஜும்ஆ பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர்
எம்.ஏ.எம்.றஸீன் தெரிவித்தார்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இம்முறைபாடு தொடர்பாக தாம் சம்மாந்துறை பொலிஸிற்கு அறிவித்திருப்பதாகவும் கூறினார்.
இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழமைக்கு மாறாக அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.
நிந்தவூர் மர்ம நபரின் நடமாட்டம் இரவுவேளைகளில் தொடர்ந்தும் இருப்பதனால்
இரவு வேளைகளில் நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகிறது. நன்றி வீரகேசரி
பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
21/11/2013 பிரித்தானிய பிரதமரின் இலங்கை தொடர்பான கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா சக்தி அமைப்பினர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
இவார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
(pics by : Joy Jeyakumar)
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment