வட, கிழக்கில் 90,000 விதவைகள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த விதவைகள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு௨013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது விதவைகள் செயலணியின் தலைவிகள் பங்குகொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு விதவைகள் அமைப்புடன் விழுது அமைப்பு தொடர்பு வைத்துள்ளதினால் விதவைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இலவச சட்ட உதவி, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.

சர்வதேச விதவைகள் தினம் ஜூன் 23ம் திகதி என பிரகடனப்படுத்திய நிலையில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் அரச புள்ளி விபரம் இதுவரையில் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.

விதவைகளின் செயலணிகள் பற்றிய விழுதின் செயல்திட்ட அறிக்கை, மாவட்ட தலைவியர்களின் அனுபவப் பகிர்வுகள், 'அமரா' குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சளியன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அருள்மொழி, விழுதுகள் அமைப்பின் ஆலோசகர் காசுபதி நடராசா, திட்டமிடல் உத்தியோகத்தர் ஹரி இந்துமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடும்பத் தலைமைப் பெண்களின் பிரச்சினைகளும் கோரிக்கைகளும்

பெண்களுக்கெதிரான சகல விதமான பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் கீழ் அதனை அங்கீகரித்து அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா அரசு கைச்சாத்திட்டிருக்கின்றது என்பதை அவதானித்து,

வன்முறையான முரண்பாடுகளைத் தடுப்பதிலும், சமாதானத்தை காப்பதிலும் வளர்ப்பதிலும், மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுதலிலும், புனர்வாழ்வு புனர்நிர்மாணம் செயற்படுத்துவதிலும், இவற்றின் ஊடாக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பராமரிப்பதிலும் பெண்களின் சமத்துவமான பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் பாதுகாப்புச் சபைப் பிரேரணை 1325 வலியுறுத்துவதை நினைவு கூர்ந்து,

ஸ்ரீலங்கா அரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் பால்நிலை சமத்துவத்தினை அங்கீகரித்து பாகுபாடுகளைத் தடுத்து பால்நிலை அசமத்துவங்களை விசேட ஏற்பாடுகள் மூலம் இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவதை இங்கு குறிப்பிட்டு,
இலங்கையின் பெண்கள் பட்டயமானது பெண்களின் முழு அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும், அவர்கள் ஆண்களுடன் சமத்துவமான அடிப்படையில் சகல உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும், சகல பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஸ்ரீலங்கா அரசினைக் கோருவதை அவதானித்து,

குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களான நாம் எமது பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தரும் கோரிக்கைகளையும் இங்கு முன்வைக்கின்றோம்.

1.  பாதுகாப்பு

எமது பிரதேசங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டதனாலும், அங்கு இராணுவப் படைகளின் அதிகரித்த நடமாட்டத்தினாலும், நாம் எமது பாதுகாப்பு குறித்து அஞ்சுகிறோம்.

பேளதிக ரீதியான பாதுகாப்பின்மையால் எமது சுதந்திர நடமாட்டம் தடைப்படுகின்றதுளூ இதனால் கல்வி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் சுகாதார சேவைகள் போன்ற சேவைகளைப் பெற்றக்கொள்வதிலும் நாம் தடைகளை எதிர்நோக்குகின்றோம்.

எமக்கு பாதுகாப்பான நிரந்தர வீட்டு வசதிகள் அளிக்கப்படாமை எமது பாதுகாப்பின்மையை இன்னும் அதிகரிக்கின்றது. இராணுவத்தினரின் பிரசன்னமானது விசேடமாக பொதுவிடங்களில் பாலியல் வன்முறைகளுக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றது. எம்மைப் பாதுகாக்க வேண்டிய கடமைகள் கொண்ட காவல் துறையினரும் எமக்கெதிரான வன்முறை அதிகரிப்பதற்கான காரணிகளாக இருக்கின்றனர்.

நாம் கோருவதாவது:

எமது பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், எம்மைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள், உதாரணமாககாவல் துறையினர், தமது கடமைகளைச் சரிவர மேற்கொள்ள வேண்டும்.

2. வாழ்வாதாரமும் சமூகப் பாதுகாப்பும்

தற்போது எமது வாழ்வாதார முயற்சிகள் மிகக் குறுகியவட்டத்திற்குள் உள்ளவையாகவும், பருவகாலத்திற்கேற்ப இருப்பவையாகவும் இருக்கின்றன. அதிலும் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றோம். கூலி வேலைகளுக்கு நாம் போனால் எங்களுக்கு சில சமயங்களில் நாளொன்றுக்குரூ 300தான் வழங்கப்படும் அதேநேரத்தில் ஆண்களுக்கு நாளொன்றுக்குரூ 500 - 1000 வரை வழங்கப்படுகின்றது.

எமக்கு இருக்கும் வினைத்திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதும் எமது பிரச்சினையை இன்னும் அதிகரிக்கின்றது. புதிய பயிற்சி முறைகள் எமக்குக் கிட்டாத காரணத்தினால் எங்கள் உழைக்கும் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகின்றது.

குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களாக இருந்து, நிரந்தர வருமானமின்றி வறுமையில் வாழும் எங்களுக்கு சாதாரண நிதிநிறுவனங்களிலிருந்து கடன் வசதிகளைப் பெறுவதும் கடினமாக இருக்கின்றது.

வாழ்வாதார முயற்சிகளுக்கான வாய்ப்புக்கள் குறைந்த நிலையில், கசிப்பு வடித்தல் போன்ற சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்வது போன்ற பாதுகாப்பற்ற எமது குடும்பங்களைப் பாதிக்கின்ற தொழில்களிலும் நாம் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். பாதை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் எங்கள் தொழில் வாய்ப்புக்களைப் பாதிக்கின்றன. 

நாம் கோருவதாவது:

அரச நிறுவனங்களின் மூலமும் அரசு சாராத நிறுவனங்களின் மூலமும் தரப்படுகின்ற உதவித் திட்டங்கள் உள்ளுர் நிலைமைகளையும் பின்னணிகளையும் கருத்திற்கொள்வதாக பெண்களின் திறன்கள் தேவைகள் போன்றவற்றை கவனத்தில் கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

எமது சமூகத்தினை வலுப்படுத்துவதாக உள்ளுர் வளங்களையும் வினைத் திறன்களையும் பயன்படுத்தும் வகையில் எமது கிராமங்களில் முதலீடுகள் நடைபெற வேண்டும்.

சந்தைப்படுத்தக்கூடிய திறன்களை நாம் பெறும் வகையில் பயிற்சிகளும் அவற்றைச் செம்மையாக செயற்படுத்தக் கூடியவளங்கள் ஒதுக்கப்படுதலும் செயற்படுத்தப்பட வேண்டும்.பிரதான வழிகளில் மட்டுமல்லாது உள்ளிடங்களிலும் பாதை அபிவிருத்தி, வீதிவிளக்குகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும்.

3. சலுகைகளும் உதவித்திட்டங்களும்

நிலவுரிமையானது எமது வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் வருமானம் ஈட்டுதலுக்கும் அடிப்படையானது. காணி உறுதிகள் தொலைந்த காரணத்தினால் விட்டுத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளவோ மலசலகூடங்கள் நீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளவோ இயலாதவர்களாக இருக்கின்றோம்.

வீடு போன்ற உதவித் திட்டங்கள் பெரிய குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தி வழங்கப்படுவதால் தனித்து வாழும் பெண்களும் தங்கிவாழும் ஓரிரண்டு குடும்ப உறுப்பினருடன் வாழும் பெண்களும் இங்கு ஒதுக்கப்படுகின்றனர். வீட்டுத் திட்டங்கள் போன்ற சமூக உட்கட்டுமானத் திட்டங்கள் பயனாளிகளின் உழைப்பு ரீதியான பங்களிப்பினை வேண்டுவதனால் பெண்களாகிய நாங்கள் கூலிவைத்தே அவற்றைச் செய்து முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். இது எங்களது கடன் சுமையை அதிகரிக்கின்றது.

மின்சார இணைப்பு போன்ற வசதிகள் அரசினால் செய்து கொடுக்கப்பட வேண்டியதாகும்.அதற்கு தூண் போடவும் வயர் இழுக்கவும் பயனாளிகளை செய்வதற்கு நிர்ப்பந்திப்பதனால் அவற்றைச் செய்ய இயலாத தன்மையினால் நாம் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டியதாக இருக்கின்றது.

உதவித் திட்டங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என அரச நிறுவனங்களினால் எடுக்கப்படும். தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையற்றவையாக இருப்பதால் எம்மைப் போல சமூகத்தின் பலவீனமான குழுக்கள் மேலும் ஒதுக்கப்படுகின்றன. அரசினால் வழங்கப்படும் மாதாந்த உதவித் திட்டங்கள் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு கொஞ்சம் கூட ஏற்றதாக இல்லை.

நாம் கோருவதாவது:

நாம் காணி உறுதிகள் போன்ற தொலைந்து போன ஆவணங்களைப் பெறுவதற்குரிய குறித்த அரச உதவிகள் வழங்கப்பட வேண்டும். குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும் வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் பெறவுமான உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.

சமுர்த்தி, வறுமை முத்திரை போன்ற திட்டங்கள் வழங்கப்படும் போது அத்தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையுடனும் பயனாளிகளுக்கு அதனை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது பற்றிய முழு விபரமும் தெரியப்படுத்தும் விதத்திலும் செயற்படுத்தப்பட வேண்டும். தனித்து வாழும் பெண்களுக்கு வாழ்க்கைக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையிலான ஓய்வூதியத் திட்டம் வழங்கப்பட வேண்டும்.

4. கல்வி  

மேலதிகமான உதவிகள் வழங்குவதற்கு இயலாமையாலும், யுத்தத்தினால் கல்வி பாதிக்கப்பட்டமையாலும் எமது பிள்ளைகள் பாடசாலை விட்டு இடைவிலகுகின்றமை அதிகரித்துள்ளது. பாடசாலைக்குச் சென்றாலும் அவர்கள் அடைவுகள் குறைவாகக் காணப்படுகின்றன. எமது வறுமையும் பிள்ளைகள் பாடசாலை இடைவிலகுவதற்கான காரணமாகின்றது.

பாடசாலைகள் கிரமமாக கட்டிட நிதிக்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் பிள்ளைகளிடமிருந்து நிதி அறவிடுகின்றன. இந்த அறவீடு பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களிலிருந்தும் அறவிடப்படுகின்றன. இவற்றைக் கட்டமுடியாதவிடத்தில் எமது பிள்ளைகள் சோர்வுற்று பாடசாலை செல்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.

நாம் கோருவதாவது:

பெண் தலைமைக் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். யுத்தத்தினால் கல்வி இடைநிறுத்தப்பட்ட பிள்ளைகளுக்கான விசேடவகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். எமது பிள்ளைகளுக்கான உளவியற் தேவைகள் குறித்து ஆற்றுப்பத்தல் திட்டங்கள் நடக்க வேண்டும்.

5. சுகாதாரமும் சத்துணவும்

யுத்தத்தினால் ஏற்பட்ட உளப்பாதிப்பும் வறுமையினால் பொருத்தமான சுகாதார சேவைகளை அணுக முடியாத தன்மையினாலும், யுத்தகாலத்தில் தோன்றிய பல நோய்கள் இன்றும் தொடரும் தன்மையினாலும் எங்களது முழு ஆற்றலையும் உபயோகித்து உழைக்க முடியாமல் இருக்கின்றோம்.

எங்கள் பிள்ளைகள் குறைவளர்ச்சியுடன் இருப்பதாக பாடசாலையில் அறிவிக்கின்றார்கள்.எங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் நாம் வைத்திய வசதிகளை நாடவதில்லை ஏனெனில் வைத்தியசாலைக்குச் செல்வதாலும் அங்கு பல மணிநேரம் செலவிடுவதாலும் எங்களது ஒருநாள் கூலியினை இழக்கின்றோம். எமக்கு வறுமை முத்திரை மாதமொன்றுக்கு ரூ.250 தரப்படுகின்றது. இதைவைத்துக்கொண்டு மூன்று வேளை சாப்பிட முடியாமல் இருக்கின்றோம்.

நாம் கோருவதாவது:

சுகாதார சேவைகள் எங்களை வந்தடைய வேண்டும். குறிப்பாக, மீளுற்பத்திக்கான சுகாதார சேவைகள் நாம் பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளும் வகையில் தகுந்த தகவல்களுடன் வெளிப்படையான முறையில் வழங்கப்பட வேண்டும்.

6. சமூக கலாசார விடயங்கள்


தமது கணவரை இழந்த பெண்களும் கணவரிடமிருந்த பிரிந்து வாழும் பெண்களும் சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சில சமயங்களில் எமது ஆடைகளும் நடத்தைகளும் கூட விமர்சிக்கப்படுகின்றன.

மீண்டும் குடும்ப பந்தத்தில் இணைய விரும்பும் பெண்கள் சமூகத்தின் அவச்சொல் குறித்துப் பயப்படும் நிலை இருக்கின்றது. மீண்டும் திருமணம் முடிக்கும் பெண்களும் தமது பிள்ளைகளைத் தமது வயோதிப பெற்றோர்களின் கவனிப்பில் விட்டுச் செல்ல நேருவதால் அப்பிள்ளைகளுக்கான கவனிப்பும் குறைகின்றது.          
                
நாம் கோருவதாவது:

சமூகத்தில் தனியாக வாழும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும் அவர்களின் சமத்தவம் சுய கௌரவம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஆண்கள் மத்தியில் பால்நிலை உறவுகளைப் பற்றிய மனப்பாங்கு மாற்றங்கள் எற்படுத்தப்பட வேண்டும்.

7. காணாமற் போனோர், தடுப்பில் வைக்கப்பட்டுள்ளோர்

காணாமற் போனோர் பற்றியும் கடத்தப்பட்டவர் பற்றியும் நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் பற்றியும் கவலைகொள்கின்றோம். காணாமற்போன எமது மகன்மார், சகோதரர்கள், கணவன்மார்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை.

தடுப்பில் இருப்பவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனை பெறுவதற்கோ அவர்களின் வழக்கைத் தொடரவோ எமக்கு வசதிகள் இல்லை. கணவரின் இறப்புக்கு வழங்கப்படும் நட்டஈடு ஒழுங்காக வழங்கப்படுதல் இல்லை என்பதுடன் அது போதுமானதாக இல்லை.

நாம் கோருவதாவது:

எமது குடும்பத்தைச் சேர்ந்த காணாமற்போனோரைப் பற்றிய தகவல்களை அரசு எமக்குத் தர வேண்டும். தடுப்புக் காவலில் இருப்போர் விடுதலையாக வேண்டும். அதற்கான சட்ட உதவியை வழங்குவதோடு வழக்குகளின் முன்னேற்ற விபரங்கள் குடும்பங்களுக்குத் தெரியப்பபடுத்தப்பட வேண்டும்.

காணாமற் போனோர் தொடர்பாக புலன் விசாரணை செய்வதற்கு ஆண் அலுவலர்கள் எமது வீடு தேடி வருவது பாலியல் தொந்தரவுகளுக்கு இட்டுச்செல்லுகின்றது. இது சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் எம்மை ஆளாக்குகின்றது. தனியே வாழும் பெண்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு பெண் காவல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

எமக்கு வழங்கப்பட வேண்டிய நட்ட ஈடுகளின் தன்மையும் அவற்றைப் பெற்றக்கொள்ளும் முறையும் எமக்குத் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இழந்த உயிரை ஈடு செய்யமுடியாவிடினும், வழங்கப்படும் நட்டஈடு ஓரளவாவது உயிரிழப்பினால் குடும்பம் இழந்தவற்றின் பெறுமதியாக இருக்க வேண்டும்.காணாமற் போனோரின் குடும்பத்தவர்களுக்கும் அவர்களுக்கு மரண சான்றிதழ் பத்திரம் இல்லாதபோதும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

No comments: