உலகச் செய்திகள்


செவ்வாய்க்கான இந்தியாவின் முதல் விண்கலம் இன்று ஏவப்பட்டது

வீசா 'பிணைத் தொகை' திட்டத்தை பிரிட்டன் கைவிடுகிறது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பழ. நெடுமாறனால் திறக்கப்பட்டது

பங்களாதேஷில் இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் 150 படைவீரர்களுக்கு மரணதண்டனை

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 'மங்கள்யான்'


பிலிப்பைன்ஸில் புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்

===================================================================

செவ்வாய்க்கான இந்தியாவின் முதல் விண்கலம் இன்று ஏவப்பட்டது


05/11/2013  செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா மங்கள்யான் விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி-25 ரொக்கெட் மூலம் இன்று பகல் 2.30 மணியளவில் ஏவியது.

இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.

மொத்தம் ரூ.450 கோடி (இந்திய ரூபா) செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ரொக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட நேரத்தில் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராடார்கள் மூலம் பார்க்க முடியவில்லை. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நன்றி வீரகேசரி 


வீசா 'பிணைத் தொகை' திட்டத்தை பிரிட்டன் கைவிடுகிறது

பி.பி.சி

go_home_home_office_van04/11/2013  3000 பிரிட்டிஷ் பவுண்டுகளை பிணைத் தொகையாகக் கோரும் திட்டத்தை பிரிட்டன் அரசு கைவிடுகிறது வீசா விதிமுறைகளை அதிகளவில் மீறும் அபாயத்திற்குரிய நாட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வருவதாக இருந்தால் அவர்களிடமிருந்து பிணைத் தொகை ஒன்றை செலுத்துமாறு கோருவதற்கு பிரிட்டன் குடிவரவுத்துறை அதிகாரிகள் போட்டிருந்தத் திட்டத்தை கைவிடவுள்ளாக பிரிட்டனின் அரச தலைமைச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மூவாயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள், அதாவது இன்றைய பெறுமதியில் இந்திய ரூபாயில் சுமார் மூன்று லட்சத்தையும் இலங்கை ரூபாயில் சுமார் 6 லட்சத்தையும் பிணைத் தொகையாக அறிவிடுவது தான் பிரிட்டன் அரசின் திட்டமாக இருந்தது. பிரிட்டனுக்குள் வருபவர்கள் உரிய காலத்திற்குள் திரும்பாவிட்டால் அந்த மூவாயிரம் பவுண்டுகள் பணத்தையும் இந்தத் திட்டத்தின் கீழ் பறிகொடுக்க நேரிடும்.

இந்தக் கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதனைத் தடுக்கப் போவதாக துணைப் பிரதமர் நிக் கிளெக் அச்சுறுத்தி இருந்த நிலையிலேயே அரசாங்கத்தின் இந்த முடிவு வந்திருக்கிறது. வீசா அனுமதி காலத்தைக் கடந்தும் பிரிட்டனில் வசிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.

குறிப்பாக, அதிகளவான சுற்றுலா வீசா விண்ணப்பங்கள் அதிகளவில் வருகின்ற மற்றும் வீசா விதிமுறைகள் பெருமளவில் மீறப்படுகின்ற நாடுகள் என்று அடையாளம் காணப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், இலங்கை, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளில் தான் முதற்கட்டதாக இந்தத் திட்டம் இந்த நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வர இருந்தது.

ஆளும் கூட்டணிக்குள் முரண்பாடு

வழமையான நடைமுறையில் வீசா மறுக்கப்பட்டவர்களிடம் மட்டும் பிணைத் தொகை கோரலாம் என்பதுதான் நிக் கிளெக்கின் திட்டமாக இருந்தது இந்த பணையத் தொகை திட்டத்தை துணைப் பிரதமர் நிக் கிளெக் தான் முதலில் பிரேரித்தார். ஆனால், இந்திய துணைக்கண்டத்திலிருந்து வழமையான நடைமுறையில் வீசா அனுமதி கிடைக்காத குறித்த அபாயகரமான நாட்டவர்களிடமிருந்து மட்டுமே பணையத் தொகை வாங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது திட்டம்.

இதற்கிடையில், பிரிட்டனுக்குள் வரும் எல்லோரிடமிருந்தும் பணையத் தொகையை அறிவிட வேண்டும் என்பதாகவும் அரசாங்கத்துக்குள் கருத்துக்கள் வந்தன. அந்த திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஆளும் பழமைவாதக் கட்சி தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த தாராளவாத- ஜனநாயகக் கட்சியின் தலைவரான துணைப் பிரதமர் நிக் கிளக், அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக பின்னர் அறிவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குள் முதலீடு செய்ய விரும்புவோர் இந்த புதிய கொள்கையால் இங்கு வர தயக்கம் காட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் விமர்சிக்கத் தொடங்கியது.

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியிருப்போரை எச்சரிக்கும் விதமாக, "go home or face arrest" அதாவது பிரிட்டனை விட்டு வெளியேறுங்கள் அல்லது கைதுசெய்யப்படுவீர்கள் என்ற போஸ்டர்களைத் தாங்கிய வேன்களை தொடர்ந்தும் வீதிகளில் உலாவச் செய்யும் திட்டமும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

இந்தச் சூழ்நிலையிலேயே இந்த பணையத் தொகை திட்டமும் பிரிட்டன் அரசால் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பழ. நெடுமாறனால் திறக்கப்பட்டது

06/11/2013                                                       உலகத் தமிழர் பேரமைப்பு அறக்க
ட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை  மொழிப் போர் மறவர் ம. நடராசன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனால் திறந்து வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நி
னை
வு முற்றம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து ஊடகவியலாளர்களைச் 
சந்தித்த பழ. நெடுமாறன், 
முற்றத்தின் திறப்புக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகள் போட முயன்ற மத்திய அரசையும் அதற்கு துணை நின்ற மாநில அர
சையும் கடுமையாக கண்டித்தார்.
அத்துடன் முன்னதாக அறிவித்தபடி திறப்பு நிகழ்ச்சியை ஒட்டிய நிகழ்வுகள் எதிர்வரும் 8, 9, 10 திகதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
(பட உதவி : சென்னை அலுவலகம்)
நன்றி வீரகேசரி


பங்களாதேஷில் இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் 150 படைவீரர்களுக்கு மரணதண்டனை

06/11/2013  பங்­க­ளாதேஷ் நீதி­மன்­ற­மொன்று 2009ஆம் ஆண்டு இரா­ணு­வத்­துக்குள் இடம்­பெற்ற சதிப்­பு­ரட்­சியில் பங்­கேற்ற 150 படைவீரர்­க­ளுக்கு மரணதண்­டனை விதித்து செவ்­வாய்க்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் 57 உயர் மட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் உட்­பட 74 பேர் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக இருந்த அந்­தப்­பு­ரட்­சியில் பங்­கேற்ற நூற்­றுக்­க­ணக்­கான படை­யி­ன­ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த 30 மணி நேர புரட்­சியின் போது சித்­தி­ர­வதை படு­கொலை உள்­ள­டங்­க­லான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தாக 823 படை வீரர்கள் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யி­ருந்­தனர்.

இது தொடர்பில் இந்த வழக்குத் தொடர்­பான தலைமை விசா­ர­ணை­யாளர் பஹருல் இஸ்லாம் டாக்­கா­வி­லுள்ள நீதி­மன்­றத்­திற்கு வெளி­யி­லி­ருந்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டியில், குறைந்­தது 150 படைவீரர்­க­ளுக்கு மரணதண்­ட­னையும் மேலும் 400 படைவீரர்­க­ளுக்கு சிறைத்­தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய 270 படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நன்றி வீரகேசரி

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 'மங்கள்யான்'

mangal06/11/2013   இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலம் சரியாக 2.38 மணிக்கு ஏவப்பட்டாலும், விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 45 நிமிடங்களுக்குப் பின்னரே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக அறிவிக்க முடியும் என மங்கள்யான் ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி கூறியிருந்தார்.

விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்பட அரை மணி நேரம் இருந்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் மங்கள்யான் பயணத்தை உற்று கவனித்து வந்தனர்.

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நான்காவது படிநிலையை அடைந்ததுமே இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மிகவும் கடினமான, சிக்கலான சவாலை இஸ்ரோ சாதித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மங்கள்யான் விண்கலம் புவி வட்டப்பாதையை அடைந்ததாக இஸ்ரோ தலைவர் அறிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, "மங்கள்யான் முயற்சியின் முதல்படி வெற்றிகரமாக அமைந்ததற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மன்மோகன் சிங், மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மங்கள்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'மங்கல்யான் பயணம்':

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் அங்கு மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். அதோடு அங்குள்ள தாதுவளங்களையும் கண்டறியும். 1,350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலத்தில் அதற்கான அதிநவீன கருவிகளும், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மங்கள்யான் விண்கலம் புவிவட்டப் பாதையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும். அதன்பிறகு புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரக பாதைக்கு செலுத்தப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் அதைச் சுற்றிவந்து ஆய்வுசெய்யும்.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள 'மங்கள்யான்' விண்கலத்துடன் பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட்டை ஏவுவதற்கான 56 மணி நேரம் 30 நிமிடம் கவுன்டவுன் கடந்த 3-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குத் தன் சொந்த முயற்சியில் மங்கள்யான் செயற்கைக் கோளை ஏவியுள்ளது இந்தியா. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் தனது சொந்த முயற்சியில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை அனுப்பிய 2 ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். இது இந்தியாவின் நீண்டகாலக் கனவு.

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் கடந்து வந்த பாதை:

2012 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங், செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை ஏவும் இந்தியாவின் முயற்சி 2013-இல் நனவாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். "அறிவியல் தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்றார் அவர்.

இந்தத் திட்டத்தை மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் என இஸ்ரோ குறிப்பிடுகிறது. ரூ.450 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 1,350 கிலோ எடையுடைய மங்கள்யான், ஏவப்பட்ட பின் 25 நாள்கள் புவிசுற்றுப்பாதையில் இருந்தபடி, செவ்வாய் நோக்கிய பயணத்துக்கான எரிசக்தியைச் சேமித்த பிறகு, நவம்பர் 30 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கி, 9 மாதங்களுக்குப் பின் செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும்.

மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை. அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிரகத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்களைக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்டறியும். மற்றொன்று ஹைட்ரஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத்தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கான ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி தேனீ பிலிப்பைன்ஸில் புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் சக்தி வாய்ந்த ஹையான் புயல் கடுமையாகத் தாக்கியதில் சுமார் 10,000 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. வீடுகள், பள்ளிகள், விமான நிலைய கட்டடங்கள் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் வீசிய ஹையான் புயலால் லெய்டே மற்றும் சமர் ஆகிய தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 36 மாகாணங்களைச் சேர்ந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெய்டே தீவின் பாலோ நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று மின் துறை செயலாளர் ஜெரிகோ பெடில்லா பார்வையிட்டார். அதிபர் பெனிக்னோ அக்வினோ உத்தரவின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், மரங்கள் ஆங்காங்கே வேருடன் சாய்ந்துள்ளதாகவும், வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து விட்டதாகவும் மின்சார மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புயலின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளிக்கு (4-ம் வகை) இணையானதாக ஹையான் புயல் கருதப்படுகிறது. தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் புயலுக்கு எத்தனைப் பேர் பலியானார்கள், எந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டிவிட்டதாக அங்குள்ள அமைப்புகளின் தகவல்கள் உறுதிபட கூறுகின்றன. மேலும், இந்தப் புயலில் சிக்கிய 2,000-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இதுவரைத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். நன்றி தேனீ

No comments: