நந்திக்கடல் – 2012 ஆவணி -நிலாந்தன்

.
                                            
மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே,
மாமிசத்தாலானதும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தையும் சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காததுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகாததும்
துருப்பிடிக்கக் கூடியதுமாகிய
இரும்பையெல்லாம் சேகரித்து
உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள்.
உப்புக்களியில்
இருபோக மழையில்
துருவேறிக் கிடக்கிறது
கனவு.
காடுகளின் சூரியன்
நந்திக் கடலில்
உருகி வீழ்கிறான்.
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.

உப்புக்களி – கடைசி யுத்தம் நிகழ்ந்த மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிராமங்களிற்கும், கடலேரிக்கும் இடைப்பட்ட உப்புச்செறிவானகளி மண் தரை.
கானாங்கோழி – நீர்க்கரைகளில் வளரும் சிறு பற்றைக்; காடுகளில் வசிக்கும் ஒரு வகைச் சிறு பறவை


No comments: