என்னடா செய்யும் விதி? - கவியரசு கண்ணதாசன்

.


ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
ஆனந்தக்கூத்துமாய் வாழும்
ஆறிரண்டானபின் பள்ளியும் பாடமும்
ஆரவாரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
தன்நினை வெண்ணியே வாடும்!
காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றங்களும் குணத்தில் மாற்றம்வரும்
கொள்கை மாற்றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
நல்லதாய் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநான் வாழ்ந்தபின்
வாழ்ந்ததை எண்ணியே வாடும்!
விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
விண்ணுயர் மரங்களைக் கண்டேன்!
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
கவலைகள் உண்டெனக் கண்டோம்!


முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
தேவனின் லீலைகள் அலவோ!
எண்ணுவோம் தேடுவோம் எண்ணதல் தேடுதல்
என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
நாயகன் செய்கைவே றிலையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
     உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
     வேறென்ன செய்வதே இதிலே!
தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
     தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விடும் பள்ளமே
     உயர்ந்ததோர் நாயகன் கதையே
சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
     சாவினை வென்றவர் இலையே
ஈன்றவள் ஒருத்திபோல எடுப்பவன் ஒருவனாம்
     இதன்பெயர் ஆண்டவன் விதியே!!

No comments: