குழந்தையுள்ளம் படைத்த அகஸ்தியரின் தர்மாவேசம்
'அன்புள்ள முருகபூபதிக்கு..… கடந்தவாரம் லண்டனிலிருக்கும் மகனிடம் வந்திருக்கிறோம். பேரக்குழந்தையின் பிரசவம் முடிந்தது. ஆவன செய்தபின் பிரான்ஸ் திரும்புவோம். பெண் குழந்தை கிடைத்திருக்கிறது. வந்த இடத்தில் உடல்நலம் பாதிக்காதவகையில் இலக்கியக்கூட்டங்களுக்கும் பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள். பின் விபரம் அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன். நன்றி.’ - இது நண்பர் அகஸ்தியர் 22-08-1995 இல் எனக்கு எழுதிய கடிதம்.
அகஸ்தியர் எனக்கு எழுதிய இறுதிக்கடிதம் இதுதான் என்பதை 09-12-1995 ஆம் திகதி இரவு நண்பர் பாரிஸ் ஈழநாடு குகநாதன் தொலைபேசியில் அகஸ்தியரின் மறைவுச்செய்தி சொல்லும் வரையில் நான் தீர்மானிக்கவில்லை. அகஸ்தியர் முதல்நாள் பாரிஸ் நகரத்தையே ஸ்தம்பிக்கவைத்த வேலைநிறுத்த காலப்பகுதியில் டிசம்பர் 8 ஆம் திகதி மறைந்தார்.
அகஸ்தியரின் புதல்வி ஜெகனியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல்கூறி நானும் ஆறுதல்பெற்றேன்.
நீண்ட காலமாக நாம் புலம்பெயர்ந்திருந்தாலும் பேசிக்கொண்டது கடிதங்கள் வாயிலாகத்தான். அதற்கும் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு விடைபெற்றார்.
ஈழத்து இலக்கிய உலகில் மூத்ததலைமுறையைச்சேர்ந்தவராயினும் இளம்தலைமுறையினருடன் ஒரு குழந்தையைப்போன்று வெள்ளைச்சிரிப்புடன் (சிரிப்பிலும் பலவகையுண்டு) மனந்திறந்து பேசும் இயல்புள்ளவர்.
தர்மாவேசம் அவரது மற்றுமொரு முகம். தனது கருத்தை நிலைநாட்ட உரத்தகுரலில் போராடுவார். தனது படைப்புகளை பத்திரிகை இதழ்களுக்கு அனுப்பும்போது அதில் கைவைக்கவேண்டாம் என்ற நிபந்தனையையும் குறிப்பிடுவார். தப்பித்தவறி அதில் வெட்டுக்கொத்து தணிக்கை நடந்துவிட்டால் நேரடியாகவந்து சத்தம்போடுவார். ஒருநாள் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் வாரவெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபாலுடன் அவர் கடுமையாக தர்க்கம்புரிந்ததை பார்த்தேன். இறுதியில் அவரை நானே சமாதானம் செய்து வாயில்வரையில் வந்து வழி அனுப்பினேன். வாயிலில் கடமையிலிருந்த அலுவலக பாதுகாப்பு ஊழியர்களின் செவிகளுக்கும் அவரது உரத்த குரல் கேட்டது. என்ன? என்று விசாரிக்க வந்துவிட்டார்கள்.
' இது எங்கள் பிரச்சினை" என்று அவர்களிடம் அவரே ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு விடைபெற்றார்.
அகஸ்தியருக்கு கோபம் வந்தால்ää ‘இந்தக்குழந்தைக்கா இப்படி ஒரு கோபம்’ என்று எங்களை வியக்கவைப்பார். பாரதியார் சொன்ன 'ரௌத்ரம் பழகு’ பண்பை இவரிடமும் கண்டிருக்கிறேன்.
சிறுகதை நாவல் விமர்சனம் கட்டுரை ஆய்வு வரலாறு பத்தி எழுத்துக்கள் என ஏராளமாக எழுதிக்குவித்தவர். அவற்றில் நூலுருப்பெற்றவைக்கு ஒரு பட்டியல் இருப்பதுபோன்று நூலுருப்பெறாதவையும் பட்டியலாக நீளும். நீண்ட காலம் அவர் பிரான்ஸில் புகலிடம் பெற்று வாழ்ந்தபோதிலும் புகலிடத்தை சித்திரிக்கும் ஆக்க இலக்கியப்படைப்புகளை வரவாக்கவில்லை. தாயகம் விட்டகன்ற சோகத்தை அவர் எனக்கு எழுதிய ஒவ்வொருகடிதத்திலும் இழையோடவிட்டிருப்பார்.
அவரது கடிதங்கள் அனைத்தையும் இன்றுவரையில் பொக்கிஷமாகவே காத்துவருகின்றேன்.
ஒருசமயம் அவருக்கு எழுதிய கடிதத்தில்ää புலம்பெயர் வாழ்வில் இலக்கியப்பணியும் சுற்றுச்சூழலும் எப்படி இருக்கிறது? என்று கேட்டிருந்தேன்.
அவரது பதில்:-
பெற்றதாயும் பிறந்த நாடும் துறந்த எவரும் இயல்பான சுதந்திரஜீவியல்ல. ஆனால்ää சுதந்திரஜீவி அனுபவிப்பதைவிட பலர் சுகபோகவாதிகளாகியுள்ளதால் கலை இலக்கியங்களும் வியாபாரப்பண்டங்களாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஏதோ ஓர் போர்வை. ஓவ்வொருவரும் எதேச்சமாகத் தத்தமக்குத்தானே தோதாக வரித்துக்கொள்ளும் போர்வை. கற்பனாவாத கோட்பாடுகளை நச்சுப்படுத்தப்பட்ட ‘அடிமைச்சுதந்திரத்தை’ முழங்காற் படியிட்டுச் சுவாசிக்க ஆவேகிப்போர் ஆயுதப்பாசறைக்குத் தீந்தை பூசி வெண்கல மணியோசைக்காக ஆசைப்படும் போர்வை. இப்போர்வையாளர் ஜனநாயகப் போர்வையில் பணநாயகத்தில் மூழ்கியதால் இயல்பான கலை இலக்கியக்கருவூலம் என்பதும் போர்வையாகிவிட்டது.
சத்தியக்கலை இலக்கியங்கள் பலிபீடங்களில் குற்றுயிராக மாய்கின்றன. ஒவ்வோர் போர்வையும் தன்னளவில் தன்னிச்சாபூர்வமாகப் பணப்புழக்கத்தோடு கலை இலக்கியத்தை இணைத்து அந்தகாரத்துள் ஆக்கிவிட்டதால் யதார்த்தப்படைப்புகளுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வறுமையின் தத்துவமல்ல. தத்துவத்தின் வறுமை கோலோச்சுகிறது. கலை இலக்கியம் கிலோ என்ன விலை? என்று கேட்குமளவுக்கு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் மயப்படும் கலை இலக்கியத்தை வளரவிடாமல் புகழேந்திப்புளுகுக்கலைஞர்கள் நந்திபோல் வழிமறைத்து நிற்கின்றனர்.
இந்த இடைஞ்சல்களுக்கு மத்தியில்தான் நீறுபூத்த நெருப்பினின்றும் அனல்கக்குவதுபோல் எனது இலக்கியப்பணி தொடர்கிறது.
அகஸ்தியர் 1944 இல் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அயராமல் எழுதிக்கொண்டே இருந்தார். பல புனைபெயர்களில் எழுதினார். இலங்கை தமிழக இதழ்களில் (சுமார் நாற்பது இதழ்களில்) எழுதியிருப்பார்.
மிருதங்கமும் இசைக்கவல்ல ஒரு படைப்பிலக்கியவாதி எம்மிடையே வாழ்ந்தாரென்றால் அவர் அகஸ்தியர்தான். பிரான்ஸ_க்குச்சென்றபின்பும் தனது பணிதொடர்ந்தார். ஒருசமயம் இலங்கையில் தனக்கு கிடைக்கவிருந்த சாகித்திய விருதையும் நிராகரித்தார். அவருக்கு 60 வயது பூர்த்தியானவேளையிலும் எழுத்துலகில் அவர் பிரவேசித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவான தருணத்திலும் அவர்பற்றி இதழ்களிலும் எழுதி வானொலிகளிலும் அவரது ஆளுமையை விதந்து உரைநிகழ்த்தியிருக்கிறேன். அவரது விரிவான நேர்காணலை எனது சந்திப்பு நூலில் பதிவுசெய்துள்ளேன்.
குறிப்பிட்ட நூல் வெளியான காலப்பகுதியில் அகஸ்தியர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அந்த நூலை காணும் சந்தர்ப்பமும் அவருக்குகிட்டவில்லை என்பது எனது துயரம். அதனால் சந்திப்பு வெளியீட்டு நிகழ்வு மெல்பனில் நடந்தபோது அவரது பெரிய உருவப்படத்தை அவரது மகளிடமிருந்து தருவித்து திறந்துவைத்தேன். எனது மெல்பன் நண்பரும் அகஸ்தியருடன் கண்டியில் நன்கு பழகியவருமான எஸ். கோர்ணேலியஸ் அகஸ்தியர் பற்றிய விசேட உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வுக்கு நண்பர் கலாநிதி த. கலாமணி தலைமை தாங்கினார்.
1983 தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு நிகழ்வுகளுக்காக தமிழகத்திலிருந்து சங்கம் அழைத்திருந்த படைப்பாளிகள் ராஜம் கிருஷ்ணன் சிதம்பர ரகுநாதன் பேராசிரியர் இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் கொட்டடியில் அமைந்த பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் நடத்திய பிரியாவிடை தேநீர் விருந்துபசாரத்தை அகஸ்தியரின் தலைமையிலேயே நடத்தினோம்.
அதன்பிறகு அகஸ்தியரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1983 இறுதியில்தான் சந்தித்தேன். அந்தச்சந்திப்பும் சுவாரஸ்யமானது. மறக்க முடியாதது.
1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரவைத்தது என்று ஏற்கனவே பல பத்திகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது மூத்தகுழந்தைக்கு சுகவீனம். அப்போது அவளுக்கு மூன்றுவயது. மருத்துவமனை வாங்கில் அவளை அமரவைத்துவிட்டு துண்டு எடுப்பதற்காக வந்துவிட்டேன். அங்கு நீண்ட கியூ. அதனால் சற்று தாமதமாகிவிட்டது. குழந்தை என்னைக்காணாமல் அழத்தொடங்கிவிட்டாள். கியூவில் நிற்கும் எனக்கும் அழுகுரல் கேட்கிறது. கியூவை விட்டு நகரவும் முடியவில்லை. நகர்ந்தால் மேலும் தாமதமாகும். கேட்கும் அழுகுரலை சகித்துக்கொண்டு நிற்கிறேன். திடீரென்று அழுகுரல் நின்றுவிடுகிறது. நான் பயந்துவிட்டேன். நல்லவேளையாக கியூ நகர்ந்து எனக்கும் இலக்கத்துண்டு கிடைத்துவிட்டது. எடுத்துக்கொண்டு விரைந்துவருகிறேன்.
யாரோ ஒரு பெரியவர் எனது மகளை தனது மடியில்வைத்து தேற்றிக்கொண்டிருக்கிறார். யாரென்று பார்த்தால்ää அவர் எங்கள் அகஸ்தியர். அவர் கொடுத்த பிஸ்கட்டை கையில் வைத்துக்கொண்டு மகள் என்னிடம் ஓடிவருகிறாள்.
“ அட… எங்கட முருகபூபதியின் மகளா? பெயர் என்ன?” என்று கேட்கிறார்.
“ பாரதி” என்றேன்.
“ அட நல்ல பெயர். பழமைக்கும் புதுமைக்கும் ஏற்றபெயர். மகளை முத்தமிட்டு வாழ்த்தினார்.
அன்று அவரும் மருந்து எடுக்க அங்கு வந்திருந்தார். பரஸ்பரம் சுகநலன் விசாரித்துக்கொண்டோம்.
“ கலவரத்தில் நீர்கொழும்பும் பாதிக்கப்பட்டதா?” என்று கேட்டார்.
“ உயிர் ஆபத்துக்கள் இல்லை. ஆனால் பல வர்த்தக நிலையங்கள் கடைகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாகிவிட்டன. மக்கள் விடுதலை முன்னணி உட்பட அனைத்து இடதுசாரிக்கட்சிகளையும் ஜே. ஆரின். அரசு தடைசெய்துவிட்டது. பலர் தலைமறைவாகிவிட்டார்கள். எங்கள் உறவினர்கள் என்னையும் குடும்பத்தையும் எங்காவது ஓடித்தப்புங்கள் என்று களைத்துவிட்டார்கள். வந்துவிட்டோம் தற்காலிகமாக அரியாலையில் குடியிருக்கிறோம்.” என்று அந்த இடப்பெயர்வின் அவலத்தை சொன்னேன்.
அகஸ்தியர் இலங்கை கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) கட்சியின் தீவிர ஆதரவாளர். இடதுசாரிக்கட்சிகள் ஜே. ஆரின் அரசினால் தடைசெய்யப்பட்டதில் ஆத்திரத்துடன் இருந்தார்.
மிஸ்டர் தர்மிஸ்டர் எவ்வளவுகாலம்தான் எங்களை அடக்கப்போகிறார் பார்ப்போம்? என்றார் அகஸ்தியர் தர்மிஸ்டர் என வருணித்தது ஜே.ஆரைத்தான்.
ஆனால் தர்மிஸ்டர் தொடர்ந்தும் இலங்கையிலிருந்து மறைந்தார். நானும் அகஸ்தியரும் இலட்சக்கணக்கான தமிழரும் நாட்டைவிட்டே வெளியேறினோம்.
இலங்கையில் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சந்தர்ப்பத்தில் பிளவுபட்டபொழுது அகஸ்தியர் பீட்டர்கெனமன் அணியையே ஆதரித்தார். டொமினிக் ஜீவா எஸ். ஏ. விக்கிரமசிங்காவின் அணியிலிருந்தார்.
அரசியல் கருத்துமுரண்பாடுகளினால் அவர்களிடையே நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்தாலும் இலக்கிய ரீதியில் இணங்கியிருந்து தமது பண்பை வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு மூத்ததலைமுறை படைப்பாளிகளிடமிருந்து பல நல்ல பண்புகளை நான் கற்றுக்கொண்டேன்.
இளம்வயதிலிருந்தே இடதுசாரிச்சிந்தனைகளில் தன்னை வளர்த்துக்கொண்ட அகஸ்தியர் மேதைகள் கார்ல் மார்க்ஸ் லெனின் மீது அளவுகடந்த பற்றுதல் கொண்டிருந்தவர்.
' சோவியத்நாட்டில் லெனின் முன்னெடுத்த கோட்பாடும் அவரது சாதனைகளும் யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையைச்சேர்ந்த அகஸ்தியர் என்ற இளைஞரின் கவனத்தை ஈர்த்தனவென்றால் அதற்குக் காரணம் அகஸ்தியரது சமுதாயப்பிரக்ஞையும் மானிட நேயமும் என்றே கூறவேண்டும்" என்று அகஸ்தியர் எழுதிய லெனின் பாதச்சுவடுகள் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தகைமைசார் பேராசிரியர் சி. தில்லைநாதன் குறிப்பிட்டுள்ளார்.
லெனின் வாழ்வில் நிகழ்ந்த பல உண்மைச்சம்பவங்களை கதைபோன்று கூறும் இந்நூல் வெளியானவேளையில் அகஸ்தியர் இல்லை. 2008 ஆம் ஆண்டு நான் லண்டனுக்குச்சென்றிருந்தபொழுது எனது அன்புத்தந்தையின் நினைவாக என கையெழுத்திட்டு குறிப்பிட்ட நூலை அகஸ்தியரின் புதல்வி நவஜோதி ஜோகரட்ணம் தந்தார்.
இந்நூலில் அகஸ்தியரின் பன்முக ஆளுமைபற்றி வீரகேசரி தேவராஜ் பதிவுசெய்துள்ளார். அகஸ்தியரின் மேய்ப்பர்கள் கதைத்தொகுதிக்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்துள்ளது. அவரது படைப்புகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலேயே நூலுருவாக வெளிவந்திருக்கின்றன.
அகஸ்தியர் ஆய்வு மேற்கொள்ளுவோம் என்ற தலைப்பில் அவர் வாழும் காலத்திலேயே காசிலிங்கம் ஆசிரியராக பணியிலிருந்த பிரான்சிலிருந்து வெளியான தமிழன் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன்.
1987 காலப்பகுதி அகஸ்தியர் மல்லிகை ஜீவா இளங்கீரன் டானியல் ஆகிய மூத்ததலைமுறை படைப்பாளிகளின் மணிவிழாக்காலம். அவர்கள் நால்வரையும் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிவைத்திருந்தேன். ஒருநாள் பேராசிரியர் இலியேசர் என்னுடன் தொடர்புகொண்டு தாம் நடத்தும் 3நுயு வானொலியில் உரையாற்றவருமாறு அழைத்தார். குறிப்பிட்ட கட்டுரைபற்றி அவரிடம் சொன்னேன்.
அதனையே எடுத்துவந்து வானொலி கலையகத்தில் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
குறிப்பிட்ட தமிழ்நிகழ்ச்சி வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் மதியம் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை ஒலிப்பதிவு நடைபெறும்.
அந்தக்கட்டுரையை 11-10-1987 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சவுத்மெல்பனிலிருந்த வானொலி கலையகத்தில் சமர்ப்பித்தேன். நான் அவுஸ்திரேலியாவில் பங்கேற்ற முதலாவது வானொலி நிகழ்ச்சி அதுவாகும்.
பேராசிரியர் இலியேசர் எனது உரை பதிவான ஒலிப்பதிவு கஸட்டை எனக்குத்தந்து அதனை பிரதியெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு பிரதியை அகஸ்தியருக்கும் அனுப்பினேன்.
எனது இந்தச்செயலை அகஸ்தியர் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில் அவரது திடீர் மறைவை நானும் எதிர்பார்க்கவில்லை.
இலக்கியம் உறவுகளை இணைக்கும் என்பதுதான் இந்தப்பத்தியின் ஊடாக சொல்லவிரும்பும் செய்தி.
----0----
No comments:
Post a Comment