கண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில் - கானா பிரபா

.
இசைஞானி இளையராஜாவின் சமீபகால உலக இசைச்சுற்றுலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே 2009 ஆம் ஆண்டில் இதே எடுப்பிலான ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவிலும் நிகழ ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வழியாகவே இசை வழங்கிச் சிறப்பிப்பதாகப் புதுமையானதொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத தடங்கல்களால் அது நிறைவேறாது போகவே, இந்த ஆண்டு மே மாதம் சிட்னி, மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இசைஞானி இளையராஜாவுடன் அவர் குழுவில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அமைக்க இருந்த திட்டமும் கடைசியில் ரத்துச் செய்யப்பட்டு இந்தத் தடவை மூன்றாவது முயற்சியில் பலித்திருக்கிறது. ஆனால் சிட்னியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாத சூழலில், மெல்பர்னில் மட்டும் நிகழ்ந்தேறியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சிட்னி, மெல்பர்ன் ஆகிய இரு இடங்களிலுமே நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். ஈற்றில் மெல்பர்ன் நிகழ்ச்சியாவது சாத்தியமாயிற்றே என்று பயண ஏற்பாடுகளைச் செய்தேன். வார இறுதி கூடவே AFL எனப்படும் உதைபந்தாட்டப்போட்டியும் இதே நாளில் மெல்பர்னில் நடப்பதால் சிட்னியில் இருந்து பெருங்கூட்டம் மெல்பர்ன் நோக்கிப் படையெடுத்தது.


மெல்பர்னுக்கு வந்து சேர்ந்ததோடு ஹோட்டலுக்குப் போய் உடைகளை மாற்றி மாலை நான்கு மணிக்கெல்லாம் Melbourne convention Centre போய்விட்டேன். அப்போதே அரங்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசிகர்கள் கூடத்தொடங்கினர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் உதவியுடன் மெல்ல அரங்கத்துக்குள் சென்றேன். ஒரு பெரிய பலாப்பழத்தை அறுத்துப் பிரித்து வைத்ததுபோல நீண்ட அரைவட்ட அரங்கம் அது. ஐயாயிரத்து ஐநூறு பேர் கொள்ளக்கூடிய விசாலமான நவீன வசதிகளுடன் அமைந்து அட்டகாசமான தோற்றத்துடன் இருந்தது. அங்கே நான் உள்ளே நுழைந்ததும் என் கண்கள் நேரே அரங்கத்தை நோக்கித் தான் ஊடுருவின. மேடையிலே ஆர்மோனியப்பெட்டியை ஒருபக்கம் அணைத்துக்கொண்டே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் இசைஞானி நிற்கிறார். ஒரு கணம் இது கனவுலகமா என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்களிலும், ஒளிப்படங்களிலும் பார்த்துப் பழகிய ராஜா அதைவிட நிதமும் ஏதாவது ஒரு அவர் இசையமைத்த பாடலைக் கேட்டுக்கொண்டே வாழ்வதால் அந்தச் சந்திப்பு அந்நியப்படவில்லை. மேடைக்கு நெருக்கமான என் இருக்கையில் பசை ஆனேன். ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கண்காணித்துச் சீர் செய்துகொண்டிருந்தார் ராஜா. அந்தச் சூழல் எனக்கு பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இருக்குமாற் போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது. ஐந்து மணிக்கெல்லாம் இசை ஒத்திகை ஓய்ந்தது, மீண்டும் ஐந்தரை மணிக்குக் கூடுவோம் என்று தமக்குள் ஒரு அறிவிப்பை ஏற்படுத்திவிட்டுக் கலைந்தனர்.


ஐந்தரை மணிக்குப் பின்னர் அரங்கம் மெல்ல மெல்ல நிரம்பத்தொடங்கியது. சிட்னியிலிருந்து ஏகப்பட்ட தெரிந்த முகங்களைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஆளையாள் குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, அரங்கம் மெல்ல இருளைப்ன்போர்த்தது மேடை பளிச்சென்று மின்னியது கலைஞர்களால்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் திரு.நவநீதராஜா அவர்கள் "எத்தனையோ இன்னல்களுக்கும் மத்தியில் இந்த நிகழ்வை ரசிகர்களாகிய உங்களுக்காகத் தான் நாம் வழங்குகிறோம், உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று கூறிச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகை சுஹாசினி முதலில் மேடையில் ஏறித் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "எங்கள் இளையராஜா, 975 படங்கள் வரை இசைமைத்தவர், பெரும் நடிகர்களுக்கு இணையாகப் படத்தின் டைட்டில் கார்டில் ராஜா பெயர் வரும் போதே ரசிகர்களின் கைதட்டலை வாங்குபவர் அத்தோடு எத்தனையோ படங்களில் ராஜாவின் பாடலைப் பாடச் செய்து ஆரம்பப் பாடலாக்கித் தான் வெளியாகணும் என்றெல்லாம் அமைஞ்சிருக்கு" என்று சொல்லி இசைஞானியை வரவேற்றார்.

இளையராஜாவின் ஆஸ்தான இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர் கையசைவில் வாத்தியங்களின் ஆலாபனை மெல்ல மெல்ல ஒன்று இரண்டாக ஒன்று கூடி ஆர்ப்பரித்தது இருட்டைக் கிழித்து கடக்கும் கார்களின் சீரான ஒளிவெள்ளம் போலப் பாய்ந்து தணிய, குரு ப்ரம்மா என்ற ஆலாபனையை சேர்ந்திசைப்பாடகிகள் ப்ரியா ஹிம்மேஷ், அனிதா, சுர்முகி, ஶ்ரீவர்த்தினி கூட்டமும் மறுபுறம் சத்யன், வாசு, செந்தில், பெள்ளிராஜ் என்று ஆண்குரல்களுமாக சேர்ந்து பாடி ஓய்ய்ம் நேரம் கனத்த கரகோசங்கள் காதைக்கிழிக்க, இசைஞானி வந்தார் ஜனனி ஜனனி பாடலுடன்.


இளையராஜாவின் குரலில் ஜனனி ஜனனி பாடலோடு, நான் தேடும் செவ்வந்திப்பூ இது, இதயம் ஒரு கோவில், சொர்க்கமே என்றாலும், மற்றும் நிறைவுப்பாடலாக தென்பாண்டிச் சீமையிலே ஆகிய பாடல்களைச் சேர்ந்தும் தனித்தும் பாடினார். சொர்க்கமே என்றாலும் பாடலின் சரணத்தில் வெளிநாட்டில் வாழ்க்கையைப் பற்றிப் புதிதாக இட்டுக்கட்டிய வரிகளை சித்ராவுடன் சேர்ந்து பாடும் போது இருவருக்கும் சந்தம் கட்டுக்குள் வராமல் திமிறியது, மூல வரிகளோடே பாடியிருக்கலாமே என்று நினைக்க வைத்தது. ஆனால் தென்பாண்டிச் சீமையிலே பாடலில் வெளிநாட்டு வாழ் இசை ரசிகர்களையும் தொடர்புபடுத்திப் புதிதாக இணைத்த வரிகளோடு பாடிய பாங்கு நிறைவுக்கு நிறைவாக அமைந்திருந்தது.



"இவர்தான் பிரபாகர், நாம இப்படி இசை நிகழ்ச்சி நடத்தும் போது என்னோட பழைய படங்களுக்குப் போட்ட பாடல்களோட நோட்ஸ் எல்லாம் தொலைஞ்சிடுச்சு ஆனா ஒவ்வொரு பாட்டையும் சீடி தேயத் தேயக் கேட்டு நோட்ஸ் எழுதினார் இவர்" என்று ராஜா பிரபாகரை அறிமுகப்படுத்தியதோடு சதா, நெப்போலியன், குன்னக்குடி வைத்தியநாதன் மகன் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களையும் பொருத்தமான பாடல்களில் அந்தப் பாடல்களில் அவர்களின் மூல வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டபோது ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒரு முதற்தர இராணுவ அணிவகுப்புப் போல இருந்தது இவர்கள் நிகழ்ச்சி பூராவும் கொடுத்த வாத்திய ஆலாபனை. இந்த நேரடி இசையனுபவத்தை ஒரு சேர அனுபவிப்பது கைலாயத்தைக் கண்ட திருப்தியை இசை ரசிகனுக்குக் கொடுக்கும்.



இந்த நிகழ்ச்சிக்கு ஆனைப்பலம், குதிரைப்பலம் மற்ற எல்லாப்பலங்களையும் சேர்த்தது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வருகை. இசைஞானி இளையராஜாவும் எஸ்.பி.பியின் கலாய்ப்புக்களிலும், வேடிக்கைப் பேச்சுக்களிலும் தன் கண்டிப்பை நழுவ விட்டார்.

"மடை திறந்து தாவும் நதியலை நான்" பாடலை எஸ்.பி.பி பாடிவிட்டு அந்தப் பாடலில் இரண்டாவது சரணத்திற்கு முதலில் வரும் கோரஸ் ஐத் தொடர்ந்து வரும் ஆர்மோனிய இசை அது அப்படியே மெல்ல மெல்ல கிட்டார், வயலின் என்று வாத்திய ஆர்ப்பரிப்புக்குப் போகும் விதத்தை அணு அணுவாக ரசித்து ராஜாவின் இசையமைப்புத் திறமையைச் சிலாகித்தார், கூடவே அந்தப் பகுதியை மீள இசையமைக்கச் செய்து மீண்டும் அந்த அற்புத தருணத்தை உணரவைத்தார். மடை திறந்து பதிவை நான் போட்டு இரண்டாவது நாளே டெலிபதி வேலை செஞ்சிருக்கு ;-)


"வனிதாமணி வனமோகினி" பாடலில் ஒரு கட்டத்தில் ரயில் போகும் இசை வரும் ஆனா படத்தில் ரயிலே இல்லாம கமலும் அம்பிகாவும் ஒரே இடத்தில் இருந்து பாடியிருப்பாங்க ஏன் ராஜா" என்று எஸ்பிபி மீண்டும் சீண்ட "அவங்க ஷுட்டிங் ஷெட்யூல்ல ஏதும் சிக்கலா இருக்கும்" என்று ராஜா சிரித்துக் கொண்டே சமாளித்தார். அதையும் விடவில்லை மீண்டும் அந்தப் பகுதியை வாசித்துக் காட்டச் சொல்லி வேண்டித்தான் விட்டார் எஸ்.பி.பி. இங்கே தான் எனக்கு இன்னொரு வியப்பு, அத்துணை இசைக் கலைஞர்களும் கேட்ட பகுதியை அட்சரம் பிசகாமல் அப்படியே நேரடி வாசிப்பாகக் கொடுத்தது அட்டகாசம். 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே", "அடி ராக்கமா கையத் தட்டு", 'ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்றெல்லாம் பாடிய அத்தனையும் மேடையிலும் பட்டை தீட்டி ஒளிர்ந்தன.

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ்த்திரையிசை மீதும் குறிப்பாக ராஜா மீதும் பேரபிமானம் மிக்கவர். முதல்தடவையாக லண்டனைத் தொடர்ந்து மெல்பர்ன் மேடைக்கு வந்திருக்கிறார். "மாஞ்சோலைக் கிளி தானோ மான் தானோ" பாடலோடு அவரின் அறிமுகம் அமைந்தது. "தேன் தானோ" போன்ற ஓகாரத்தில் ஒரு எல்லையில் பாதி மலையில் இருந்து இறங்குமாற்போல அவர் வெட்டிக் கொண்டே போக ஒரு நிலையில் ராஜாவே தன் கையை நிமிர்த்தி உயர்த்துமாறு வலியுறுத்த வேடிக்கையாக நகர்ந்தாலும், ஜெயச்சந்திரனை மேடையில் அந்தப் பாடலோடு பார்க்கையில் மனம் பரவசமானது. உடுமலைப்பேட்டையில் இருந்த ஒரு தியேட்டரில் "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடல் ஒலிக்கும் போது, யானைக்கூட்டம் வந்து அந்தப் பாடலைக் கேட்ட புதுமையான செய்தியை ராஜா சொன்னார். ஜெயன் ஜெயன் என்று அன்போடு மிகவும் அந்நியோன்யமாக அவரை விளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், "ஜெயச்சந்திரன் பாடிய எல்லாப் பாடல்களுமே ஹிட்டு, அதுதான் இவருக்குக் கிடைத்த பெரிய வரம்" என்று வாயாரப் புகழ்ந்தார். கூடவே "ரசிகர்களைப் பார்த்து நீங்க பாடணும், எதுக்கு ராஜாவையே பார்த்துண்டு பாடுறீங்க" என்று காலை வாரினார், அரங்கமே கலகலப்பானது. "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் வரும் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே", "காத்திருந்து காத்திருந்து" இந்த மூன்று ஹிட் பாடல்களுமே ஒரே நாளில் ஒலிப்பதிவு செய்தவை என்ற புதுமையான தகவலைச் சொல்லிய ஜெயச்சந்திரன் எந்தவித வாத்தியப் பின்னணியும் இல்லாமல், ஏன் கையில் பாடல் குறிப்புக்கள் கூட இல்லாமல் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சமானது என்று முழுதாகவே பாடிவிட்டார். உண்மையில் அந்த நேரம் கிட்டிய அனுபவத்தை எழுத்தில் சொல்லி மாளாது, நெஞ்சை நிறைத்தது. "கொடியிலே மல்லியப்பூ" பாடலையும் பாடியவர் "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்" பாடலையும் பாடியிருக்கலாமோ என்று மனசு நினைத்தது, அளவுகடந்த ஆசையப்பா.


நின்னுக்கோரி வர்ணம் பாடலோடு வந்த சித்ரா, பல பேட்டிகளில் சொன்னது போல ராஜா சார் என்றாலே பயபக்தியுடன் இருப்பது தெரிந்தது. இளையராஜாவே மனம் விட்டு ஜாலியாக "வந்திருக்கிற மலையாளரசிகர்களுக்கு கொஞ்சம் மலையாளத்துல பேசுங்க சித்ரா சேச்சி" என்ற போது, வெட்கப்பட்டுக் கொண்டே மலையாள ரசிகர்களுக்குத் தன் வாழ்த்தை ஒற்றைவரியில் பகிர்ந்தார். மதுபாலகிருஷ்ணன், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து பாடிய பாடல்களோடு தனித்துப் பாடிய ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலில் ஒரு இடத்தில் கொஞ்சம் புதுச்சங்கதி போடவும், " நீ பாலு கூடச் சேர்ந்து பாடி, அவன் மாதிரி கெட்டுப் போயிட்டே"என்று கிண்டலடிக்க தனது அக்மார்க் கன்னக்குழிச் சிரிப்பை உதிர்த்தார். "தும்பி வா தும்பக் குளத்தே" பாடலைச் சித்ரா அனுபவித்துப் பாடினார், கண்ணை மூடிக் கொண்டே கேட்டேன் ஜானகியின் நினைப்பே வராத அளவுக்கு மது உண்டு களித்த தும்பி ஆனது மனது.


தனது அண்ணன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ஶ்ரீராம ராஜ்யம் படத்தின் "ஜகதானந்த காரக" பாடலோடு ஆரம்பித்த எஸ்.பி.சைலஜா அவரின் தனிக்காட்டில் கொடிகட்டிய "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாடலையும் தனித்துப் பாடினார். ஒலிவாங்கி இவரைக் குறிவைத்துத்தான் வஞ்சம் தீர்த்தது. எஸ்.பி.சைலஜாவின் மென்மையான குரலை மேலும் அமுக்கிவைத்தது.

பாடகர் கார்த்திக் ராஜாவின் சமீபத்திய தேர்வுகளில் முதல் மாணவனாகக் கலக்குகிறார். அதிலும் "கோடை காலக்காற்றே" (பன்னீர்ப்புஷ்பங்கள்) பாடலைப் பாடிவிட்டு, "இந்தப் பாட்டின் சரணத்தைக் கேட்கும் போதெல்லாம் அழுது விடுவேன் ராஜா சார் முன்னாடி இந்தப் பாடலைப் பாடுவது எனக்கு மிகப்பெரிய வரம்" என்று உருகினார், அவர் அந்தப் பாடலை நேசித்துப் பாடிய விதமே அதை நிரூபித்தது. ஓம் சிவோஹம் பாடலை விஜய் பிரகாஷ் குரலில் கேட்டுப் பழகிய காது கார்த்திக்கையும் அன்போடு வரவேற்றது.

"ஒளியிலே தெரிவது தேவதையா" பாடலின் மூலப்பாடகரே இவர் என்பதால் அதிலும் நின்று ஆடினார். பவதாரணி, மற்றும் சின்மயி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்து கடைசி நேர மாறுதலில் வரவில்லை.


கே.ஜே.ஜேசுதாஸ் இல்லாத மேடையில் ஓரளவு நியாயம் கற்பிக்க மது பாலகிருஷ்ணன் வந்திருந்தார். கல்யாணத் தேனிலா பாடலை விட பழஸிராஜா படத்தில் வந்த ஆதியுத்ய ஸந்த்ய என்ற பாடலைப் பாடும் போது உச்சமாக ரசிக்க முடிந்தது.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அரங்கம் கொடுத்த வரவேற்பைப் பார்த்தபோது மனுஷர் தனி ஆவர்த்தனம் பண்ணலாம் போல என்னுமளவுக்கு இருந்தது. "சாய்ந்து சாய்ந்து" (நீதானே என் பொன் வசந்தம்), "நினைவோ ஒரு பறவை" பாடல்களைப் பாடியதே போதும் என்று இருந்துவிட்டார் போலும், எல்லாம் நன்மைக்கே. "நினைவோ ஒரு பறவை" பாடலை உண்மையில் கமல்ஹாசனை வைத்துப் பாட வைக்கும் திட்டம் இருக்கவில்லையாம். வேறொரு பாடகரை வைத்துப் பாடல் ஒலிப்பதிவு செய்ய ஆயத்தமாகும் நேரம் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்த கமல் ஏதோவொரு பாடலை முணுமுணுக்கவே, திடீரென்று இவரையே பாடவைத்து விடலாம் என்று ராஜா முடிவெடுத்தாராம். அந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஜானகி கொடுக்கும் ஹம்மிங் கூட, கமல் இந்தப் பாடலைப் பாடுவதற்காக ஒத்திகை செய்யும் நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிடலாம் என்ற திடீர் ஐடியாவாகச் சேர்க்கப்பட்டதாக ராஜா சொன்னார்.

கார்த்திக் ராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து ஒரு வேடிக்கைப் பாட்டுப் போட்டி நிகழ்த்தினார்கள். இருவரும் மாறி மாறி "என்னைப் பாடச் சொல்லாதே" "என்ன பாடுவது", "ஏ உன்னைத் தானே" போன்ற பாடல்களைப் பாடிப் போட்டி போட்டுகொண்டிருந்தார்கள். ஆனால் பாடல்களின் வரிகளில் கவனம் வைக்காமல் ரொம்பவே இம்ஹும் இம்ஹும் என்றெல்லாம் முணுமுணுத்தது "ரொம்பவே வெளையாட்டுப் பசங்களா இருக்காங்களேப்பா" என வாய்விட்டுச் சொல்ல வைக்குமளவுக்கு இருக்கவே, இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் கார்த்திக் வந்து காப்பாற்றினார். "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்" பாடி கார்த்திக் காதில் தேன் வார்த்தார்.



கார்த்திக் ராஜா இளையராஜாவுடன் நிகழ்த்திய கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கவிஞர் வாலி பற்றி கார்த்திக்ராஜா கேட்க, "வாலி அண்ணன் எனக்கு முதலில் எழுதிய பாட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை". ஆனால் நான் இசையமைப்பாளரா வர்ரதுக்கு முன்னாடியே எனக்காக என் அண்ணன் பாஸ்கர் ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி இறங்கினார். அப்போ ஒரு தயாரிப்பு நிறுவனம் தாங்கள் தயாரிச்சிட்டிருக்கிற ஒரு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்காக வாலி எழுதிய பாடலைக் கொடுத்து அந்தப் பாடலை இசையமைக்கச் சொன்னார்கள், நானும் "வட்ட நிலா வானத்திலே" என்ற அந்தப் பாட்டை இசையமைத்துக் காட்டினேன்" என்று அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார். இந்தச் செய்தியை இந்த மேடையில் தான் நான் முதன் முதலில் சொல்றேன்" என்றார்.

அந்தப் பாடலின் மெட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று என் வலது புற மூளை இயங்கத் தொடங்கியது. சட்டென்று கண்டுபிடித்து விட்டேன். அந்த மெட்டில் "என்றும் அன்புடன்" படத்தில் வரும் "சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது" https://www.youtube.com/watch?v=8M9YZmRX9mg என்ற பாடல், அதுவும் வாலி தான் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தட்சணாமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய கேள்வி, "ஐய்யயோ தட்சணாமூர்த்தி சுவாமிகளா, அவர் எவ்வளவு பெரிய மேதை, என் சங்கீத குருவாக ஏற்றுக்கொண்டு ஆறுமாதம் வரை படிச்சேன் அதுக்கு மேல் என்னால தாக்குப்பிடிக்க முடியல, அவர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தா என்னால அதுமாதிரிப் பாடவே வரல. அவருடை படங்களுக்கெல்லாம் நான் வாத்தியம் வாசிச்சிருக்கேன். பாட்டு ஒலிப்பதிவாகும் நேரமே அவருக்கு சாமி வந்து பயங்கரமா உருக்கொண்டுடுவார், எங்க வீட்டில் நடக்கும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சிகளில் முதல் நாள் பவதாரணி பாடுவா, அடுத்த நாள் தட்சணாமூர்த்தி சுவாமிகள் தான் பாடுவார், மீதி நாட்களில் எல்லாம் வெவ்வேறு பாடகர்கள் பாடுவாங்க ஆனா எனக்கு தட்சணாமூர்த்தி சுவாமிகள் பாடிய பாட்டைத் தாண்டி மனசு போகாது" என்றார் ராஜா.

நிறைவாக "உங்க இசையில் வந்த பாட்டுக்களில் எங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு எது?" இதுக்கு நீங்க பதில் சொல்ல முடியாது ஏன்னா உங்களுக்கு எங்க வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியாது" என்று கார்த்திக்ராஜா சிரித்துக் கொண்டே கலாய்க்க, ராஜாவும் "உங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு "புது நாள் இன்று தான்" என்று பாட்டைப் பாட ஆரம்பிக்கிறார். "தப்பு தப்பு" அந்தப் பாட்டு படத்தில் வரவே இல்லை எங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு இதயம் ஒரு கோயில்" என்று கார்த்திக் முரண்டு பிடிக்க, "நீங்கல்லாம் பிறக்கிறதுக்கு முந்தியே உங்கம்மாவுக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு எனக்குத் தெரியும் "புதுநாள் இன்றுதான்" என்ற பாட்டை அவளுக்காகவே இசையமைச்சேன்" என்று ராஜா சொல்ல "ஆமா எனக்கும் அந்தப் பாட்டு நல்ல ஞாபகம் அப்பல்லாம் ட்ராமாவில எல்லாம் பாடுவோம்" என்று திடீரென்று ஆஜரான எஸ்.பி.பியும் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கிக் கலகலப்பாக்கி விட்டு "சாரி ராஜா அந்தப் பாட்டுல ஒரு சங்கதியை என்னோட ஒரு தெலுங்குப்படத்தை இசையமைச்சப்போ பயன்படுத்திட்டேன்" என்று சரண்டரானார் எஸ்பிபி.

"லதாஜி பாடிய எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் உங்கம்மா அழுவா" என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் ராஜா.


சேர்ந்திசைப்பாடகர்களில் சத்யன், செந்தில், வாசு மூவரும் பெரும் பலம். இந்த வாசு என்பவர்தான் இளையராஜாவின் பாடல்களில் கோரஸ் குரல்களின் ஒருங்கமைப்பாளராக இருக்கிறார் என்று ராஜா அந்த மேடையில் அறிமுகப்படுத்தினார். நான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இளையராஜாவின் இசைக்குழுவினர் தங்கியிருந்ததால் அவர்களில் ஒரு சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது அவர்களில் வாசுவும் ஒருவர். தான் ராஜாவிடம் 18 வருடங்களாகப் பணிபுரிவதாகச் சொன்னார். அன்னக்கிளி காலத்தில் இருந்து ராஜாவோடு பயணிக்கும் இன்னொரு இசைக்கலைஞர் அவர் நாட்டுப்புற வாத்தியங்கள், சதங்கை சத்த ஸ்பெஷலிஸ்ட் ஆவார். மற்றும் ராஜாவின் இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர், ஆஸ்தான ஒலிப்பதிவாளர் சுந்தர், ராஜாவின் மேடைகளில் சதா சிரித்த முகத்துடன் தபேலா வாசிக்கும் சுந்தர் போன்றோரையும் சந்தித்துப் பேச வாய்ப்புக்கிட்டியது.



எனக்கு வலதுபுறம் தாள வாத்தியக்கலைஞர் சுந்தர்

கோரஸ் குரல்களின் ஒருங்கமைப்பாளர் வாசு, மற்றும் இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர்


இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர் மற்றும் ஒலிப்பதிவாளர் சுதாகர்

கண்கள் இரண்டால் புகழ் பெள்ளிராஜ் அதிகம் கவனிக்கப்படவில்லை ஆனால் சத்யன் காட்டில் மழை. இது ஒரு நிலாக்காலம் பாடலில் " நாதர்தின்னனா" என்ற ஆலாபனையைக் கொடுத்த விதத்திலேயே "இவர்தான் சத்யன், என் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனை படத்தில் பாட வச்சேன்" என்றார் ராஜா.

ஸ்ருதியே முகமாகக் கொண்டவள் என்று ராஜா கலாய்த்த சுர்முகி, கண்ணாலே மெய்யா மெய்யா புகழ் ஶ்ரீவர்த்தினிக்கும் ஜோடிப்பாடல்கள் கிட்டின. இந்த மேடையில் உச்சமாக அமைந்த பாடல் என்றால் "ஏரியிலே எலந்தமரம்" (கரையெல்லாம் செண்பகப்பூ) என்பேன். ராஜா "டேய் பசங்களா" என்று கோரஸ் பாடகிகளைக் கூப்பிட, அதற்கு முதல் பாடலைப் பாடிய எஸ்.பி.பி உள்ளே போய்க்கொண்டிருந்தவர் "கூப்பிட்டியாடா" எனவும் " உன்னை யாரும் பையன் என்பாங்களா" என்று சிரித்துக் கொண்டே பாடகி அனிதாவுக்கு சங்கீதப் பாடம் எடுத்துக் காட்ட, அனிதாவும் மெல்ல மெல்ல சுருதி பேதம் கலைந்து பாடலுக்குள் முழுமையாக மூழ்கி முத்துக்குளித்துவிட்டார். மிக அரிதாக மேடையில் பாடிய பாட்டு என்றதால் கேட்கவும் புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது.

N.S.K ரம்யா தன்னுடைய புகழ்பூத்த சற்று முன்பு" ( நீதானே என் பொன் வசந்தம்) பாடலைப் பல மேடைகளில் பாடிக் களைத்திருப்பார் போலும், இங்கே பாடாதது குறையே தான். யுவனுடன் சாய்ந்து சாய்ந்து (பாடலை) பாடினார். அது ஒரு நிலாக்காலம் பாடலைப் பாடிய போது எஸ்.ஜானகி இல்லாத மேடைகளை உய்விக்க வந்திருக்கிறார் என்று அந்தக் கவர்ச்சிகரமான குரல் சாட்சியம் பகிர்ந்தது.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஆஸ்தான பாடலி ப்ரியா ஹிம்மேஷ் பல வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் பாடல்களைப் பாடமுன்பே கார்த்திக், மதுமிதாவுடன் சிட்னி மேடையில் பாடியவர். அவர் இப்போது முன்னணிப்பாடகியானாலும் ராஜ சபையிலே இருப்பதே பெருமை என்று எனக்குக் கொடுத்த வானொலிப்பேட்டியில் சொல்லியிருந்தார். ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ப்ரியா ஹிம்மேஷ் சிக்ஸர் அடித்தார்.

செந்தில் என்ற பாடகர் அட்டகாசமான கலைஞர், ஓரம்போ பாட்டில் வரும் கிழவிக் குரலில் இருந்து ஆயிரம் மலர்களே பாடலும், ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே பாடலும் அவரின் குரலில் கேட்கும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தனித்துச் சிறப்பித்தன. நல்ல வாய்ப்புகள் கிட்டவேண்டும் இவருக்கு.
சேர்ந்திசைப்பாடகர்கள் இணைந்து பாடிய "நான் பொறந்து வளந்தது" (மாயாபஜார் 1995) இன்னொரு இரத்தினம், வாத்திய வாசிப்புகளின்றி வாய்ஜாலங்களாக வந்து விழுந்த இசையைத் தான் கொடுக்கக் காரணம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் என்பதால் இந்த மாதிரி சுதந்தரம் கிடைத்தது என்றார் ராஜா.
நிகழ்ச்சி என்னமோ "ராஜா ராஜாதான்" என்ற தமிழ்ப்பெயர்ச்சூட்டலுடன் தான் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அரங்கத்தில் பாதிக்கு மேல் தென் பாரத விலாஸ் எனலாம். தெலுங்கு, கன்னட, மலையாள ரசிகர்கள் அந்தந்த மொழிகளில் மேடையில் பேசும் போது ஆனந்தக் கூத்தைக் கைகளில் ஆடினார்கள். "ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி" என்ற படத்தில் வரும் "அப்பனி தீயனி டெப்பா" https://www.youtube.com/watch?v=gRj6zUwmrOQ பாடலை எஸ்.பி.பி மற்றும் சித்ராவே மேடையில் பாடினார்கள். பாடிவிட்டு "பொதுவா சிரஞ்சீவி படங்களுக்கு வித்தியாசமான டப்பாங்குத்துப் பாட்டுக்கள் இருக்கும்" என்று சொல்லிவிட்டுப் பாடிக்காட்டிவிட்டு "ஆனா இந்தப் பாட்டு சிவரஞ்சனி ராகத்துல அமைஞ்சது அந்த ராகம் பொதுவா ஏக்கம் போன்ற வெளிப்பாடுகளுக்குத் தான் பயன்படுத்தப்படும் அதையும் ராஜா ஜிம்தக்கு ஜிம்தக்கு என்று ரதம் வருமாறு சிரஞ்சீவிக்குப் போட்டுக்கொடுத்திருக்கிறார், அந்தப் படத்தில் வரும் எல்லாப்பாட்டுமே சூப்பர் ஹிட், இந்தப் பாட்டை ஹிந்திக்கெல்லாம் கொண்டு போயிருக்காங்க ராஜா பேருக்காச்சும் நன்றி ராஜான்னு போட்டிருக்கலாம்ல" என்று எஸ்.பி.பி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த ராஜா இரண்டு கைகளையும் திருப்பித் திருப்பிக் காட்டிச் சிரித்தார். "இந்தப் படத்தோட எல்லாப் பாட்டையும் ஹிட் ஆக்கலைன்னா நான் ஆர்மோனியப்பெட்டியையே தொடமாட்டேன் என்று சிரஞ்சீவிக்குச் சொல்லிட்டுத்தான் இசைமைச்சேன் இந்தப் படத்தோட பாட்டுக்கள் மாதிரி சிரஞ்சிவிக்கு இந்தப் படம் வர்ரதுக்கு முதல் 15 வருஷமும் அமையல அடுத்த 15 வருஷமும் அமையல" என்றார் ராஜா.

கன்னட ரசிகர்களுக்குத் தனிப்பாடல் என்று எதுவும் இசையோடு கிட்டவில்லை. கன்னடத்திரையுலகின் 75 ஆவது ஆண்டு விழாவில் கொண்டாடிய ஒரே பாட்டு "ஜெதயலி" https://www.youtube.com/watch?v=CCmpAZC9bk4 என்று சுஹாசினி ஆரம்பிக்கவும் அந்தப் பாடலை எஸ்.பி.பி ஒரு சில வரிகள் பாடிவிட்டு அதே கீதா படத்தில் வந்த "கேலதி நிமகீக" https://www.youtube.com/watch?v=zFo6cmU8W2c பாடல் குறித்துச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் ராஜாவும் எஸ்.பி.பியும் கன்னடத்திலேயே மாட்லாடியதால் அந்தப் பாடல் பிறந்த கதை குறித்து அறியமுடியவில்லை. பாடலாசிரியர் உதயசங்கர் பெயர் மட்டும் தான் புரிந்தது, கண்டிப்பாக அந்தப் பாட்டுக்குப் பின்னால் ஏதோ சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது ஒலியமைப்பு. மைனஸ் 1 உலகத்திலெஎ எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்களை மேடையில் ஏற்றி அட்சர சுத்தமாக இசையைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் போது அந்த எண்ண ஓட்டத்துக்குப் பெரும் தடையாக இருப்பது, ஒரு சில ஒத்திகைகளோடு மேடையில் ஒலியமைப்பைக் கொடுப்பது மகா சவால். அந்தச் சோதனை நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்தது மிகவும் உறுத்தலாக இருந்தது. இளையராஜாவே ஒரு சில பாடல்களைப் பாதியில் நிறுத்தி அந்த வாத்தியக் கோர்வையை மீண்டும் துல்லியமாக ஒலிவாங்கிகளில் விழ வைக்கச் சொன்னபோதுதான் அவற்றின் வீரியத்தை உரக்கச் சொன்னது. மிகவும் திறமையான ஒலியமைப்பாளர்கள் இருந்தாலும் இம்மாதிரியான சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

இது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சியை வீடியோ படம்பிடித்த வெள்ளைக்காரன் செய்த வேடிக்கை இன்னொரு பக்கம். தபேலா வாத்தியம் வாசிக்கப்படும் போது புல்லாங்குழல் பக்கமும், வயலின் இசை வரும் போது தபேலா பக்கமுமாக அவரது கமரா அலைபாய்ந்தது. ஒரு கட்டத்தில் எஸ்.பி.பியே வாய்விட்டுச் சொல்லும் அளவுக்கு நிலமை இருந்தது. உண்மையில் இம்மாதிரிப் பெரும் எடுப்பிலான தமிழ்த்திரை இசை நிகழ்ச்சியில் வீடியோ படம் எடுப்பவர், ஒரு பாடலின் இசை அடுத்து எந்த வாத்தியத்துக்குத் தாவப்போகிறது என்ற ஏழாம் அறிவைக் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் சீராகவும் சிறப்பாகவும் தனது காமெராக் கண்ணை மெல்ல மெல்ல நிதானமாக நகர்த்தித் தகுந்த வாத்திய இசைப்பக்கம் மையப்படுத்துவார். அதை வெள்ளைக்காரனிடம் எதிர்பார்க்கவே முடியாதே. அதனால் தான் பிரபல ட்விட்டர் திருவள்ளுவர் சொன்னார் "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுஹாசினியின் அலைவரிசையும், ராஜாவின் அலைவரிசையும் சேர்ந்து இயங்கவில்லை. பழைய வானொலிப்பெட்டியில் ஒரு ஸ்டேஷனைக் கேட்கும் போது இடைமறிக்கும் இன்னொரு ஸ்டேஷன் மாதிரி. இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று ஏழுகடல் தாண்டிய நானே குறிப்பால் உணர்ந்தேன் என்னும் போது இருதரப்பும் தமக்குள் ஒரு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கவேண்டும். ராஜாவுக்கு fact இல்லாத புகழ்ச்சியை மேடையில் கேட்க ஒத்துவரவில்லை என்பதைத் தான் காட்டியது. ஏனென்றால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ராஜாவோடு பழைய நிகழ்வுகளையெல்லாம் ஆதாரபூர்வமாகச் சொல்லிக் கொள்ளும்போதெல்லாம் ராஜா சமரசமாகவே இயங்கினார்.

இதுவரை இசைஞானி நிகழ்த்திய உள்ளூர், வெளியூர் இசை நிகழ்ச்சிகளில் சென்னையில் "என்றென்றும் ராஜா" என்ற நிகழ்ச்சியே உச்சம் என்பேன். பிரகாஷ்ராஜின் இயல்பான தொகுத்து வழங்கலும், அளவான பேச்சும் கொண்டதோடு எல்லாமே அந்தந்த அளவில் இயங்கின. இதுபோல இன்னொரு நிகழ்ச்சி வரும் போது அதையும் கண்டு களிக்காமல் ஓயப்போவதில்லை மனது.

உண்மையிலேயே ஆஸ்திரேலிய வரலாற்றில் இம்மாதிரி பிரமாண்டமான இசை மேடையை இது நாளில் கண்டதில்லை, எஞ்சிய வாழ்நாளிலும் காண்போமா என்ற சந்தேகம் வலுக்குமளவுக்கு மனித உழைப்புப் போய் எல்லாம் ஒரு இசைவட்டுக்குள் சுருங்கிவிட்டது. எனவே "வாழ்நாளில் மறக்கமுடியாதது" என்று என்று ஒரு பட்டியல் போட்டால் இந்த நிகழ்ச்சியைப் பாரபட்சமின்றிச் சேர்க்கும் அளவுக்கு அமைந்து விட்டது பெரும் எடுப்பிலான இன்னிசை நிகழ்வு. எழுபது வயதுக்கார இசைஞானி, நிகழ்ச்சி ஒத்திகையின் போதும், நான்கரை மணி நேரம் கடந்த இசை நிகழ்ச்சியிலும் வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் தானும் அருந்தாமல் ஆர்மோனியப் பெட்டியை ஒரு கையால் அணைத்தபடி நின்று கொண்டே இயங்கியது இன்னும் இன்னும் என்னை ஆச்சரியத்தை விதைக்கிறது, இந்த அசுர உழைப்புக்காரர் மேல்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜாவுடன் தகுந்த கூட்டணியும் சேர்த்து நம்மிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடைக்கோடி ரசிகனின் சார்பில் வாழ்த்துகள்.
 
Nantri :கானா பிரபா www.radiospathy.com

12 comments:

S.Srikantharajah said...

தம்பி பிரபா. அருமையான விமர்சனக்கட்டுரை! சிட்னியியிருந்து ஓடோடி வந்து பார்த்துவிட்டு, நேற்று முழுவதும் இந்தே வேலையாக இருந்து எழுதியிருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. சிறிய சிறிய விடயங்களைக்கூட உன்னிப்பாகக் கவனித்து மிகவும் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறீர்கள். திரை இசைசம்பந்தமான உங்களது அறிவும், பரிச்சியமும் நன்கு புலப்படுகின்றது. நிகழ்ச்சிக்குப் போகக்கிடைக்காதவர்களுக்கும் நேரில் பார்த்த உணர்வை இந்தக் கட்டுரை தருகின்றது. உங்கள் பணிக்கும், எழுத்துக்கும் எனது பாராட்டுக்கள். - சு.ஸ்ரீகந்தராசா

Anonymous said...

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதில் மகிழ்ச்சி, ஆனால் மனதிற்குள் நெருடலும் உள்ளது.அறிந்த விடயங்களை வைத்து பார்க்கும்பொழுது இளையராஜா என்ற இசைஞானிக்கு திறமை அபாரமாக உண்டு என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை, ஆனால் இசைதான் எனது மூச்சு என்று கூறும் அவர் அந்த இசை ரசிகர்களை திருப்திப்படுத்த ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு தொகையை வாங்க காரணமென்ன. அவரிடம் இல்லாத பணமா? சற்று நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் இந்த இசையால்தான் இந்த உச்சத்தில் தான் இருப்பதை அறியலாம்.நிகழ்சியை ஒழுங்கு செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள், அவர்களிற்கு நிகழ்சியால் லாபம் வராவிட்டாலும் நஷ்டம் வராமலாவது இசைஞானி பார்க்கலாம் அல்லவா ?

Anonymous said...

organisers knew Illayaraja's fee. If they couldn't afford they should not be greedy and sttart on this project and then complain of their inability to perform. Everyone has a price for their time, profile, effort and so on. Will you work for cheap money because you love your work. Try doing that first before pointing your finger at others. Musicians are entitled to earn their money like anyone else. Many musicians have given up there skills and art because of people like you and your attitudes.
The fee is not only for Illayaraja. He has to pay more that 70 musicnas who's bread and butter is playing. Also, paying famous singers who accompanied him. Think before you write.

Anonymous said...

அய்யா, நான் மலிவு விலையில் வேலை செய்ய மாட்டேன், அதே வேலை கூடிய சம்பளம் கேட்டு எனது நிறுவனத்தை வங்குறோத்து ஆக்கவும் மாட்டேன். உங்களிற்கு தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள் வாங்கிய $ 300,000 எவ்வளவு அந்த இசை கலைஜர்களிட்கு கொடுபட்டதென்று ? யாராவது இசை கலைஜன் வெளிநாட்டு நிகழ்ச்சி கிடைக்கவில்லை என்று தனது தொழிலை விட்டதாக நான் கேள்விப்படவில்லை, உங்களிற்கு தெரிந்தால் அவர்களின் பெயர்களை தந்தால் நல்லது.

Anonymous said...

Everyone wants to get better salary and prosperity to support them and their families. This is not wrong and you are lying when you say that you will never ask for more salary if the opportunity arose. That is a big con Mr.Kathir.
What Illayaraja pays his musicians is his business. How much do you give your wife, son, daughter, your grocery man is your business?
Illayaraja is not crying for foreign shows. It is very hard to convince him to perform.
At the end of the email you said give names.....first be a man and give your name.

Regards,
Prabhakaran

Anonymous said...

Whatever the reason was, his cancellation of the Sydney concert is an insult to the fans. Instead of spending so much money on such people we should encourage our local Tamil artistes to showcase their talent.

Anonymous said...

Yes. Investing in local tamil talents is good. This has been happening every year. Actually there are many shows with local talents but we have never had an opportunity to see Illayaraja. Tell me one person who can do show/music to the Illayaraja show’s level in Australia? I am talking about Tamil people in Australia. Once in a while we have to bring big talents and celebrate our language and music in a big way. Does not matter if it was a loss. The organisers are not babies to only find out at the last moment or after the show that this venture is not viable.

Anonymous said...

The sydney organiser is a coward. Hats off to the Melbourne organiser. Even though it is a loss for them, they decided to go ahead with the show without cheating the public. We paid the money to watch the Sydney show in April or so. We tried to get our refund. But until this minute we have not got our refund. We do not know how this man is able to cheat people like this. In the future we have to be watchful of this man. We hear he has played out money in the past with his other partners who have done shows with him. What a big con story he had come out with when he cancelled the show for the second time in a row. He is thinking that people of Sydney are real fools and that he can go on cheating like this endlessly the way he had cheated his friends in the past. You can allow the mistake to happen only once, if it is done for the second time it is not a mistake. Symphony Entertainers please return our money back immediately.

Anonymous said...

கருத்து சொல்வதற்கு பெயர் அவசியமில்லை,யாரோ கருத்தெழுத ஏன் கதிரை இதற்குள் இழுக்கிறீர்கள். ஐயா நீங்களும் அனாமதேயமாக தான் முதலில் கருத்தை எழுதினீர்கள் என்பதையும் மறக்கக்கூடாது.நான் சம்பளம் கேட்குள் பொழுது எனக்கு இத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் அதனால் இவ்வளவு சம்பளம் தாங்கோ என்று கேட்கமுடியாது.நான் கூறிய விடயம் இதுதான் வாங்கிய பணத்தில் சரியான பங்கு கலைஜர்களிட்கு போனதா? அப்படி போனால் சந்தோசம். அல்லது இசை அமைப்பாளரின் பைக்குள் போனால் அது அநாகரீகம்..... இது ஆஸ்திரேலியாவில் மட்டும் நடக்கவில்லை லண்டன், கனடா, அமெரிக்க இதே நிலைமைதான்.

Anonymous said...

I will give you a good example for you to understand how unfocused you are:
You as an audience member pay for your seat. That is like buying milk from Woolworth.
The organiser pays Illayaraja. That is like Woolworth paying the milk wholesale vendor who employs many people to get what you actually wanted.
How much the Milk vendor pays his staff is an agreement between them. That is none of your business.
If the milk is not worth the money don’t buy it. It’s simple as that.
The milk vendor has a reason for his price. Just like Woolworth the show organiser also puts a mark up on the ticket. This is how things have been happening. Nothing new here.
What Illayaraja pays his staff and pays himself is his business and not yours. No musician will ever have to do their business (which is music) for free or for a value below market price. Understand that.

Anonymous said...

Thank you very much for choosing Woolworth as an example, that’s precisely my point. Woolworth is making huge profits by squeezing the poor farmer by paying peanuts. Because of this, poor farmer is out of business, that’s why farmers are fighting all along with supermarkets to give a fairer share to them. So my friend Woolworth = Ilayarajah….. farmers = musicians….If ilayarajah give a fairer share to musicians, then that’s fine, but ilayarajah is pocketing like Woolworth, then we have a problem…..I hope you can understand my point…

ramesh said...

ஒரு அருமையான இசை நிகழ்சியை பார்க்க முடியாமல் போனது கவலையாக இருந்தது. பேராசை பெரும் தரித்திரம் என்று சொல்லுவார்கள். அதுபோல் பெரிதாக ஆசைப்பட்டு விட்டார்கள் நடாத்த வெளிக்கிட்டவர்கள். கனடாவில் நடத்தினார்கள் அங்கு அவ்வளவு மக்கள் இருக்கிறார்கள். இங்கு அந்தளவு மக்கள் இல்லை 75 பேரை இந்தியாவில் இருந்து கொண்டுவாறதெண்டால் லேசான விடயமா. இதை ஏன் யோசிக்காமல் விட்டவர்கள். இவ்வழவு நாளும் நட்டப்பட்டரோ இல்லயோ தெரியாது ஆனால் நல்ல நிகழ்சிகளை தந்தவர் இம்முறை இரண்டு தரம் சறுக்கிவிட்டார். இவரைப்போல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த சிட்னியில் யாருமே இல்லை. இனி இவர் நிகழ்ச்சி நடத்த வெளிக்கிட்டாலும் யாரும் டிக்கெட் வாங்குவார்களா என்பது கேள்விக்குறிதான். ஒரு காரியத்தில் இறங்கும்போது நன்றாக சிந்தித்து இறங்கவேண்டும் இது அவருக்கு மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் தான். நல்ல நிகழ்ச்சி நடத்துபவரை சிட்னி மக்கள் இழந்து விட்டார்கள். நல்ல மக்கள் ஆதரவை இவர் இழந்துவிட்டார்.

ரமேஷ்