தமிழ் சினிமா



தங்கமீன்கள்

தன் தங்க மகளின் ஆசைகளை நிறைவேற்ற அவமானப்பட்டு போராடும் ஒரு தந்தையின் கதை.
கற்றது தமிழ் படத்திற்குப் பிறகு ராம் இயக்கியிருக்கும் படம் தங்க மீன்கள்.
ராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை.
மனிதர்கள் இறந்த பின்பு தங்க மீன்கள் ஆகிவிடுவார்கள் என்ற கதையைக்கூட அப்படியே நம்புபவள்.
செல்லம்மாவோடு எந்நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த ஊரில் வருமானமே வராத பாத்திரம் செய்யும் பட்டறையில் வேலை செய்கிறார் ராம்.
சம்பாதிக்காமல் தனக்கு பாரமாக இருக்கும் ராமை அவமானபடுத்தி உதாசினப்படுத்தி கொண்டே இருக்கிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ராமின் தந்தை ‘பூ’ ராம்.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் ராமின் சகோதரியின் சிபாரிசால் அந்த ஊரின் மிகப்பெரிய தனியார் பள்ளியில் செல்லம்மாவை படிக்க வைக்கிறார் ராம்.
அவளின் மந்தமான படிப்பாலும், பீஸ் கட்ட முடியாமல் போனதாலும் செல்லம்மாள் ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.
இதனால் ஆசிரியைக்கும் ராமிற்கும் வாக்குவாதம் வர, பள்ளி நிர்வாகத்தால் கடுமையாக அவமானபடுத்தபடுகிறார் ராம்.
பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக ராமின் தந்தை ராமை அடித்து விடுகிறார். இதனால் தனிக்குடித்தனம் போக மனைவியை அழைக்க அவரது மனைவி தயங்குகிறார்.
இதனால் கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் கேரளா போய் விடுகிறார்.
மகளுக்கு இருக்கும் ஒரே ஆசையான ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாய் குட்டியை வாங்கி பிறந்த நாள் பரிசாக கொண்டு போக நினைக்கிறார்.
ஆனால் தகுதிக்கு மீறி அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாததால் கஷ்டப்படுகிறார்.
கேரளாவின் ஒரு பழமையான பாரம்பரிய இசை கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 பணம் கிடைக்கும் என்று தெரியவர அதை தேட தொடங்குகிறார்.
இன்னொரு பக்கம் பிறந்த நாள் பரிசாக அப்பா நாய் குட்டி வாங்கி வரவில்லை என்றால் தங்கமீன்கள் ஆகிவிடவேண்டும் என்று செல்லம்மா முடிவெடுக்கிறாள்.
கேரளாவின் மலையுச்சியில் பழங்குடி மனிதரிடம் இருக்கும் இசை கருவியை வாங்க போகும் ராமின் பயணமும் தங்க மீன்களாக மாற தற்கொலையின் விளிம்பில் நிற்கும் செல்லம்மாவின் பயணமும் ஓரிடத்தில் இணைகிறது.
அதன் பின்பான முடிவை அழகான கவிதையாக சொல்லியிருக்கிறார்.
தனது முதல் படத்தைப்போலவே காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.
இயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு ராமைத்தவிர வேறு யாரும் ஒத்துவந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார்.
ஆசிரியர்களுடன் தனது மகளுக்காக பரிந்து பேசுவது, தனது மகள் விலை உயர்ந்த நாய்க்குட்டியை கேட்டாலும், தனது மகள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்வது என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ராமின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனா, ராமிற்கு இணையான கதாபாத்திரம் மட்டும் அல்ல, நடிப்பிலும் ராமிற்கு இணையாகவே நடித்துள்ளார்.
சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்திருந்தாலும், அது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே உள்ளது.
எந்த விடயமாக இருந்தாலும், வெகுளியாக கேள்வி கேட்பது என்று சின்ன சின்ன எக்ஷ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் சிக்சர் அடித்துள்ளார்.
ராமின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ஷெல்லி கிஷோர், மகேந்திரன், பாலுமகேந்திரன் படங்களில் வரும் நாயகியைப் போல இருக்கிறார்.
நடிப்பிலும் மிளிர்கிறார். நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராமின் அப்பாவாக வரும் பூ ராம், நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் கதாபாத்திரம் இவருடையது.
கோபத்தில் பளார் பளார் என ராமின் கன்னத்தில் அறைந்துவிட்டு ‘சீ போடா’ என்று சொல்லுமிடத்திலும் சரி, தனது மகன் ரொம்ப நல்லவன், அவன் கொஞ்சம் கெட்டுப்போய் தான் வரட்டுமே என்று தனது மகனின் நிலையை நினைத்து வருந்தும் இடத்திலும் சரி, ராமின் வேதனைகளை தன்னில் பிரதிபலித்திருக்கிறார் பூ ராம்.
இசை யுவன் ஷங்கர் ராஜா, பெரிய இடைவெளிக்கு அப்புறம் அவருடைய பாடல் கேட்க பிடிக்கிறது.
பின்னணி இசையில் நிறைய இடங்களில் அப்பாவின் ஞானம். சில இசை கண்ணில் பொங்கி நிற்கும் கண்ணீரை கிழே விழ வைத்து விடுகிறது.
அர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிப்பதிவாளர்.
சில காட்சிகள் உலக சினிமா அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக மனைவியோடு இரவில் சைக்கிளில் பயணம் செய்து ரயில்வே பாலத்தில் இருந்து பேசும் காட்சி.
செல்லம்மா இரவில் ஊஞ்சல் ஆடும் காட்சி கேரளாவின் பசுமை மலை. இரவில் தெரியும் கொச்சி ஹார்பர், ராம் தங்கியிருக்கும் அறையை படம் பிடித்த விதம் கதையோடு சேர்ந்து பயணப்பட்டிருக்கிறார்.
தனது மகளிடம் இருக்கும் குறைகளை கூட நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் போராடும் ராம், ஒட்டு மொத்த அப்பாக்களுக்கும் இந்த படத்தை பாடமாக்கியிருக்கிறார்.
ஆண்டுகள் பல ஆனாலும், தரமான திரைப்படத்தையே இயக்குவேன் என்ற ராமின் பிடிவாதத்திற்கும், சினிமா மீது உள்ள பார்வைக்காகாகவும் அவரை முதலில் பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் தங்கமீன்கள் ஜொலிக்கும் வைரமீன்கள்.
நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி
ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: போட்டான் கதாஸ்
எழுத்து - இயக்கம்: ராம்
நன்றி விடுப்பு

No comments: