இலங்கைச் செய்திகள்சிராணி வெளிநாட்டுக்கு செல்ல நீதிமன்றம் தடை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்

ஜனாதிபதி – கே.பி சந்திப்பு

களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி: போக்குவரத்து பாதிப்பு

உயரம் குறைந்த முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பதுமன் விடுதலை

தொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

 கிளிநொச்சியில் பூசாரி கொலை
----------------------------------------------------------------------------------------------------------


சிராணி வெளிநாட்டுக்கு செல்ல நீதிமன்றம் தடை

16/09/2013  முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜராகியுள்ள நிலையிலேயே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் பதவிவகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி  

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்

16/09/2013   நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் பிரதிநிதியாக இலங்கை வரும் சார்ள்ஸ், மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைவாக பிரித்தானிய இளவரசரின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் ஆராயும் விசேட மாநாடொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் தலைமையிலான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த குழுவினர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கல்லடி திருச்செந்தூர் இந்து ஆலயம் மற்றும் நாவற்குடா விசேட தேவையுடையோர் பாடசாலை ஆகியவற்றுக்கு சென்று நிருவாகிகளுடன் கலந்துரையாடினர்.
இதன்போது பிரித்தானிய இளவரசரின் விஜயம் குறித்தும் கலந்துரையாடினர்.
அத்துடன் மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காந்தியின் உருவச் சிலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றம்,மட்டு நகரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் என்பவற்றையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர்.
இதில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் செயலாளர் சரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்.
     நன்றி வீரகேசரி

ஜனாதிபதி – கே.பி சந்திப்புchensolai
16/09/2013  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திலலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார். இதன்பின்னர் இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு   கே.பியை சந்தித்து கலந்துரையாடியதுடன்  செஞ்சோலை சிறுவர் இலத்திலுள்ள சிறுவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். நன்றி தேனீ 
களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி: போக்குவரத்து பாதிப்பு

17/09/2013 களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர மாணவர் விடுதியின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது களனி பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழகத்திலிருந்து  உயர் கல்வி அமைச்சு வரை பேரணியொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இப்பேரணி காரணமாக கொழும்பு -கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி

 

 

 

 

 

உயரம் குறைந்த முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

18/09/2013   புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று  கிளிநொச்சியில் நடைபெற்றது. 
கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது.
விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு  சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். 
இதேபோல் சகோதர இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான் தனது காதலியான சுகந்தினியை சிங்கள முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 
எனினும் இங்கு நடைபெற்ற மற்றுமொரு திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த மிகவும் உயரம் குறைந்த முன்னாள் உறுப்பினரான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.


நன்றி வீரகேசரி


விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பதுமன் விடுதலை

18/09/2013 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  ஆஜர்படுத்தியபோதே,  அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது.     நன்றி வீரகேசரிதொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

18/09/2013   தொண்டமானாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டது போன்று மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாறு பாலத்தை இன்றைய தினம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த தொண்டமானாறு பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தின் போது சேதமடைந்த இப்பாலத்தின் ஊடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் படைத்தரப்பினரால் தற்காலிகமாக பாலமொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இன்று எமது கோரிக்கைக்கு அமைவாக அரசு மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இப்பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாறு பாலத்தை போன்று மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்ற நிலையில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வதனூடாக மேலும் பல்வேறு பயன்களை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

120 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இப்பாலம் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

கிளிநொச்சியில் பூசாரி கொலை

19/09/2013  கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி  பூசாரியொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூசாரி 65 வயதானவரென தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.நன்றி வீரகேசரி

No comments: