.
இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!
என்று அருணகிரி நாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்ட தலமாக விளங்குகின்றது கதிர்காமம்.
என் நினைவு தெரிய நான் போனதில்லை. என் சின்ன வயசியில் எப்போதாவது கூட்டி வந்திருக்கலாம் என்று அப்பா சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் மலையகத்தில் ஹட்டன் என்ற இடத்தில் ஆசிரியர்களாக இருந்ததால் அங்கிருந்து பஸ் மூலம் கதிர்காமத்துக்கு வந்திருக்கிறார்களாம்.
கடந்த வருடம் கதிர்காமத்துக்குப் போயிருக்க வேண்டியது, கொழும்பிலிருந்து ஆறு மணி நேரம் வரை பயண நேரம் பிடிக்கும் இந்தப் பயணத்துக்குத் தனியே செல்லவேண்டாம் என்று வீட்டாரின் எச்சரிக்கை, அதையும் மீறி ஏதாவது பொது பஸ் சேவையில் கூட்டத்தோடு கூட்டமாகப் போகலாம் என்று நினைத்து பொதுப் பேரூந்து நிலையம் சென்று விசாரித்தால் கதிர்காமம் போகும் பாதையில் கடும் மழை காரணமாக மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஆதலால் பஸ் ஓட்டம் இல்லை என்றார்கள். எனவே கடந்த ஆண்டு கதிர்காமம் போகும் கொடுப்பினை இல்லை அடுத்த முறையாவது கண்டிப்பாக முருகனிடம் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன்.
ஈழத்தில் பிராமணர் அல்லாத மரபில் வந்தோர் பூசை செய்யும் ஆலயங்களில் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள செல்லச்சந்நிதி முருகன் ஆலயமும் தெற்கே கதிர்காமமும் விளங்குகின்றது. மீன்பிடித் தொழிலைச் செய்த மருதர் கதிர்காமர் எனும் முருக பக்தரின் வழியில் வாயில் வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டே பூசை செய்யும் பூசகரை அங்கே "கப்பூகர்" என அழைப்பர். இதே போல வேடுவ மரபில் வந்தோர் பூசை செய்யும் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திலும் தம் வாயைத் துணியால் கட்டிய பின்னர் பூசை செய்யும் பூசகரை கப்புறாளை என அழைப்பர். செல்லச்சந்நிதி முருகனைச் சந்தித்த பதிவு இங்கே.
இந்த ஆண்டு இலங்கைப் பயணத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் வருடாந்தத் திருவிழா எல்லாம் கண்டு முடித்து அடுத்து கதிர்காமம் தான் என்று நினைத்தபோது ஊரை விட்டுக் கிளம்ப விருப்பமில்லாத அப்பாவிடம் மெல்லக் கதையை விட்டேன். "அப்பா கதிர்காமம் போகப்போறன் வாறீங்களா" என் அப்பாவோ கடும் முருக பக்தர் இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல "ஓமோம் வாறன்" என்று சொல்ல அம்மாவும் கூட வர, லண்டனில் இருந்து வந்த அண்ணரும், சொந்தக்காரருமாக ஆறு பேரைச் சேர்த்தாகிவிட்டது. எங்களூரவர் ஒருவர் கொழும்பில் பிரயாணச் சேவை செய்பவர். அவரிடமேயே இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்து புது வாகனத்தில் கதிர்காமம் நோக்கி அதிகாலை ஐந்தரை மணிக்குப் பறக்க ஆரம்பித்தோம்.
கொழும்பிலிருந்து வெளியூருக்கோ அல்லது வெளியூரில் இருந்து கொழும்புக்கு வருவதாயின் நடுச்சாமம் அல்லது அதிகாலைப் பயணமே உகந்தது. காலை ஆறரை மணி தாண்டினால் காலி வீதியில் வாகனப் பொருட்காட்சி தான். எனவே எங்கள் பயணத்தில் சிரமமில்லாமல் புதிதாக அமைக்கப்பட்ட அதிவேகப் பாதையில் வாகனம் டயர் பதித்து ஓடத்தொடங்கியது. இந்த அதிவேகப் பாதை இலங்கை மக்களுக்குப் புதுசு என்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்குமாம், திரும்பி வரும்போது எதிர்த்திசையில் ஒரு வாகனத்தின் சக்கரம் உருண்டோடி உலாவியதையும் கண்டேன்.
அதிவேகப்பாதை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கதிர்காமத்துக்கான பயண நேரமும் கொஞ்சம் சேமிக்கப்பட்டுவிட்டது என்றாலும் மாத்தறை என்ற பெரு நகரத்தைத் தொட்டபோது மட்டுப்படுத்தப்பட்ட வேகமும், காலை நேர வாகன நெரிசலும் சேர்ந்து கொண்டது. இரண்டரை மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு எங்காவது இளைப்பாறிச் செல்லலாம் என்றெண்ணி கண்ணில்பட்ட ஒரு விசாலமான தேநீர்ச்சாலைக்குள் போனோம். ஒரு வெறுந்தேத்தண்ணி சீனி போட்டது குடித்துக் களையாறிவிட்டுத் தொடர்ந்தோம். சாலையின் இருமருங்கும் கைத்தொழில் உற்பத்திகளைக் கடை விரித்திருந்தார்கள். மலைத்தேனில் இருந்து, தயிர்ச்சட்டி, பனையோலை, தென்னோலையால் செய்த கைவினைப் பொருட்களை மேசையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை அன்னையின் கருணையெல்லாம் கொட்டித் தீர்த்துப் பாயும் ஆறுகளும், சோலைகளுமாக எழில் மிகுந்த கிராமிய வனப்பைக் கண்டுகளித்துக் கொண்டே பயணப்படலாம். கதிர்காமத்துக்கு வந்து சேர்ந்ததை அண்மித்த தங்குமிடங்களின் பதாதைகள் விளம்பரப்படுத்தின. மணி காலை ஒன்பதே கால் ஆகியிருந்தது.
"முதலில பிள்ளையாரைக் கண்டுவிட்டுத்தான் முருகனிட்டைப் போகோணும்" அதுதான் முறை என்று பின் இருக்கையில் இருந்த அப்பா குரல் கொடுத்தார். வாகனம் செல்லக்கதிர்காமம் நோக்கியப் பயணித்தது. செல்லக்கதிர்காமத்தில் தான் முருகனின் சகோதரம் பிள்ளையார் வீற்றிருக்கிறார். நாங்கள் சென்றபோது குடமுழுக்குப் பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வழியெங்கும் கற்பூரச் சரை, பழம், தேங்காய் கொண்ட பனையோலைப் பெட்டிகளை விற்றுத் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கிப் போனோம்.
சிற்றோடையில் அமைந்திருந்த குன்றிலே கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. மிக எளிமையாகவும், கூட்டமில்லாது அமைதியாகவும் பிள்ளையார் அமைந்திருக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த படிக்காட்டால் ஏறி மேலே சென்றால் அங்கே சிறு முருகன் ஆலயம் இருந்தது.
"இதெல்லாம் ஒருகாலத்தில் எந்த விதப் பகட்டும் இல்லாமல் எளிமையா, எங்கடை கோயிலா இருந்தது, எல்லாத்தையும் எடுத்துப் போட்டாங்கள்" என்று அப்பா ஆற்றாமையால் முணுமுணுத்தார்.
அங்கிருந்து மெல்ல நகர்ந்து, கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கி விரைந்தோம். காலை பத்துமணிக்குப் பூசை என்று சொல்லியிருந்தார்கள். கதிர்காமம் ஆலயத்தில் மாலைப்பூசை தான் விசேஷமாக இருக்குமாம். பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாள் தங்கியிருந்து கதிர்காம ஆலயத்தின் மாலைப்பூசை கண்டு மறுநாள் காலை வெய்யில் அடிக்கமுன்பே கதிரைமலைக்குப் படியேறிச் சென்று அங்கும் வழிபட்டுத் திரும்புவர். கதிரைமலைக்குப் படியேறிப் போவதே நல்ல அனுபவம், மலைக்குத் துரித கதியில் போகும் வாகனத்தின் ஓட்டம் மரண ஓட்டமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார்கள். இம்முஐ எனக்குக் கதிரைமலைக்கு ஏறிப் போக வாய்ப்பில்லை என்று அங்கே போய் மலையடிவாரத்திலேயே கற்பூரம் எரித்து, தேங்காய் உடைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். இன்னொரு முறை கதிர்காமத்துக்கு வந்தால் இரண்டு நாள் பயணமாக அமைக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். முன்னேற்பாடாக அங்கே உள்ள Mandararosen http://www.mandararosen.com/ என்ற தங்குமிடத்தை கூட வந்த உறவினர் சிபாரிசு செய்ததால், கோயில் தரிசனம் முடிந்து அங்கு மதிய உணவை எடுத்தோம். தங்குமிடத்தைச் சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பாக இருந்தது. இது நல்ல தேர்வு அடுத்த முறை கண்டிப்பாக இங்குதான் தங்க வேண்டு.
கதிர்காமம் கோயிலை நினைக்கும் போது மனக்கண்ணில் முதலில் வருவது அந்தக் கோயிலைச் சுற்றிப் பாயும் தீர்த்தம் மாணிக்க கங்கை. மாணிக்க கங்கை எப்படியிருக்கும், இந்தியாவில் இருக்கும் கங்கை அளவுக்குப் பெரிசாக இருக்குமோ என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்" நாவலின் இறுதியில் நாட்டியமாது மோகனாம்பாள், அவளின் கணவர் நாதஸ்வரக்கலைஞர் சண்முகசுந்தரமும் திருமணம் முடித்து இலங்கை வந்து கதிர்காமத்தின் மாணிக்ககங்கையில் நீராடுவதாகத் தான் கதை முடிகின்றதாம். செங்கை ஆழியான் எழுதிய ஆச்சி பயணம் போகிறாள் நாவலிலும் யாழ்ப்பாணத்தின் நாகரிகச் சுவடுபடாத கிராமத்து ஆச்சி முதன்முதலாக கோச்சி ரயிலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த தன் பேரன், பேத்தியுடன் கதிர்காமம் காணப் போன நகைச்சுவையைப் படித்துப் படித்துச் சிரித்ததுண்டு. வாகனத்தை வாகாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலை நோக்கி நடந்தோம். தூரத்தில் கோயில் தெரிந்தது, அதனை நோக்கிப் போடப்பட்ட ஒரு சீமெந்துப்பாலத்தில் நடந்து போகும் போது கீழே காட்டி "இதுதான் மாணிக்க கங்கை" என்று கூடவந்த உறவினர் கையைக் காட்டினார். மிகவும் ஏழ்மை படிந்து அழுக்கு ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். "இந்த ஆறு அந்த நாளையிலை இப்பிடி எல்லாம் இல்லை, வாற சனம் எல்லாம் மாணிக்க கங்கையில் குளித்து அந்த ஈரத்தோட கதிர்காமக் கந்தனிட்ட்டைப் போவினம்" என்று அப்பா தொடங்கினார்.
ஆலயத்தின் முன் வளைவில் ஓம் சரவண பவ என்ற பதாதகை இருந்ததாம். அதையும் தூக்கிவிட்டார்களாம். கோயிலை அண்மிக்கவும் ஆலயத்தின் பூசைக்கான மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது. சின்னஞ்சிறிய கோயில் தான். பரிவார மூர்த்திகளுக்கான பூசைகள் நடக்கும் போது கயிற்றால் கட்டி பக்தர்களை கடவுளுக்கு அண்மையில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரும் புள்ளிகள் விதிவிலக்கு.
கதிர்காம ஆலயத்தின் மூல விக்கிரகம் யார் கண்ணிலும் படாமல் பெட்டியில் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு பூசகருக்கு மட்டுமே வாய்ப்பு. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்து கேட்கும் கேள்விக்கெல்லாம் சிங்களமே பதிலாக வந்தது. தமிழ்க்கடவுள் முருகனையும் சிங்களவன் ஆக்கிவிட்டார்களே என்று அந்தச் சூழலில் இருக்கும் போது மனதுக்குள் வேதனை வருவது தவிர்க்க முடியாது. பின்னால் இருக்கும் அரசமரமும், புனித கம்பிவேலிகளுமாக அவர் முழுபெளத்தராக மாறி முழுசாக மாறிவிட்டிருந்தார்.
யுத்த காலத்துக்கு முந்தி எல்லாம் இலங்கையின் தலைப்பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து கீழ்ப்பகுதியில் இருக்கும் கதிர்காமக் கந்தனைத் தரிசிக்க, காடு, மலை, கல்லு, முள்ளு எல்லாம் பட்டு நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலுமாகப் பக்தர்கள் படையெடுப்பதுண்டாம். குறிப்பாக கதிர்காமக் கந்தன் உற்சவ காலத்தில் பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடிக்கொண்டே செல்லும் முருகபக்தர்களை வரவேற்று தண்ணீர்ப்பந்தல்களும். அன்னதானச் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்குமாம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கலாசாரம் மீண்டும் சமீப வருடமாக நிகழ்வதாக அறிந்தோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்ததால் அப்பாவின் முகத்தில் பேயறைந்தது போல இருந்தது. கதிர்காமக் கோயிலின் தமிழ்ச்சூழலை ஒருவழி பண்ணிவிட்டதை செய்தி ஊடகங்களில் கேட்டு வந்திருந்தாலும், முன்னர் பார்த்த ஆலயச்சூழலை அவர் மனது ஒப்பிட்டுப்பார்த்து நொந்துகொண்டதை உணர்ந்து கொண்டேன். பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியைப் புனிதப் பிரதேசமாக்கி, ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றாடலில் இருந்த தமிழ்க்கடைகளை எல்லாம் அகற்றிவிட்டார்களாம். "அந்த நாளையில கோயிலுக்கு கிட்ட வரும்போதே வல்வெட்டித்துறையாரின் கடை வரவேற்கும்" என்று அப்பா மீண்டும் அசைபோட்டார்.
பூசை முடிந்ததும் ஆலயத்தினுள் போக நம் போன்ற சாதாரணர்களுக்கும் வழி விடப்படுகிறது. அந்தக் கூட்ட நெரிசலில் ஒரு இரண்டு நிமிடம் அங்கே நின்றாலே பெருமை தான். கிடைத்த அவகாசத்தில் நான் கொண்டு சென்ற பிரார்த்தனைகளை கதிர்காமக் கந்தனிடம் ஒப்புவித்தேன். கூட்டமே என்னை நகர்த்தி வெளித்தள்ள, வாசலில் பிரசாதமாக கறிச்சோறு ஒரு கவளம் கிட்டியது. அதை வாங்கி ருசி பார்த்துக் கொண்டே ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றினோம். சுற்றுப்பிரகாரத்தில் இருந்த மதுரை வீரன், வீரபத்திரன் கோயில் போன்றவை கதிர்காமம் போன்ற ஆலயத்திலேயே காணக்கிடைப்பவை. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவில் இருந்து வந்த உறவுகளால் இந்தத் தனித்துவமான தெய்வ வழிபாடும் கூட வந்திருக்கலாம்.
கோயிலுக்குப் பக்கமாக அன்னதான மடமும் இன்னொரு சிறு கோயிலும் இருக்கின்றது. அது முழுமையான தமிழ்க்கோயிலாக இருந்தது. அங்குள்ள மடமும் தமிழரால் நிர்வகிக்கப்படுபவை. அந்தச் சூழல் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. ஆலய தரிசனம் முடிந்து சுள்ளென்ற வெயில் பாதங்களைப் பதம் பார்க்க, மீண்டும் கதிர்காமக் கந்தனின் மூலஸ்தானம் நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டு சுற்றவுள்ள தனித்தனிச் சிறு ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் போனோம்.
அங்கே பூசகர்களாக நம்மவர்களே இருப்பது தெரிந்தது.
கதிர்காமக் கோயிலை அண்டி உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கும் போனோம். அங்கே இருந்த குரு நம்மைப் பணிய இருக்க வைத்து விசேட பிரார்த்தனை ஒன்றை குர் ஆன் வாசகங்களில் இருந்து பகிர்ந்தார்.
பள்ளிவாசலில் அதிசயமாக வளரும் இரட்டைக்கிளைத் தென்னைமரம்.
கதிர்காம ஆலயத்தைச் சூழவுள்ள கடைகளில் மஸ்கெட் போன்ற தின்பண்டங்களைச் சுடச்சுட விற்கும் கடை ஒன்றிலிருந்து இருந்து பொட்டலங்களைக் கட்டிக் கொண்டோம்.
கதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் "இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே" என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.
No comments:
Post a Comment