மாநாடும் மாணவர்களும் -- அன்பு ஜெயா

.
                                                                                                                        


ஆஸ்திரேலியாவின் அழகுமிகு நகரமான சிட்னியில் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6, 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் முக்கியக் நோக்கங்களில் ஒன்று தமிழின் தொன்மையையும் அதன் சிறப்பினையும் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதாகும். இதற்கான முதல் முயற்சியாக மாணவர்களிடமிருந்து சங்க இலக்கியங்கள் பற்றி சிறிய அளவிலான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்று உற்சாகப்படுத்த வேண்டுமென்று முடிவு செய்யப் பட்டது.  அதற்காக சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் ஒவ்வொன்றின் மூலமும், மற்ற இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு  இணையத்தின் மூலமும், வானொலி மூலமும் அழைப்புகள் விடப்பட்டன.
குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டிருந்தாலும் பதின்மூன்று ஆய்வுக்கட்டுரைகள் மாணவர்களிடமிருந்துக் கிடைக்கப்பெற்றன. அவற்றில் மாநாட்டு மலரில் வெளியிடுவதற்கு எட்டு கட்டுரைகள் மலர்க் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டன. முத்தமிழின் சிறப்பு பற்றியும், முச்சங்கங்களின் வரலாறு பற்றியும், எட்டுத்தொகை நூல்கள் பற்றியும், ஆஸ்திரேலிய ஆங்கிலக் கவிஞரான தோரத்தி மெக்கெல்லர் – பாரதியார் இவர்களை ஒப்பிட்டும் மாணவர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், பெரும்பாலான மாணவர்கள் ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள். புலம் பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கச் செய்தது மாநாட்டின் வெற்றியாகக் கருதப்படவேண்டிய நிகழ்வாகும்.


இம்மாநாட்டின் மற்ற நிகழ்வுகளாக இளஞ்சிறார்க்குத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும், தமிழ் கலந்த பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. தமிழின் பெருமை பற்றியும் தமிழரின் பெருமை பற்றியும் விளக்குவற்கான கண்காட்சி ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. கண்காட்சியில் ஏறத்தாழ 25 தலைப்புகளில் தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியம், தமிழரின் வரலாறு, நாகரிகம், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட கோப்புகள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. அவை மட்டுமின்றி, தமிழ் வளர்த்த சான்றோர்களின் படங்களும், தமிழரின் சிறப்பை விளக்கும் 50-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளும் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சி, இளைஞர்கள், முதியவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிக்கும் வகையிலான பட்டி மன்றங்களும், சொல்லரங்கங்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மூத்த தமிழரிஞர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, எமது இளைய தலைமுறையினர் பலர் தன்னார்வலர்களாக மாநாட்டின் பல துறைகளில் தொண்டர்களாகப் பணிபுரிந்தது பாராட்டப்படவேண்டிய செயலாகும்.மொத்தத்தில், இம்மாநாடு தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் நமது இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றுள்ளது என்பதில் மாநாட்டிற்காக உழைத்த அனைவரும் மனமகிழ்வு கொள்ளலாம்.

No comments: