சிறுகதை - சாப்பாடு - எஸ்.கிருஷ்ணமூர்த்தி


       
ஐம்பது வருட நண்பன் அவன், முப்பது வருடங்களாக அவனைச் நேரில் சந்திக்கவில்லை. பெயர் குமரன். நான் விடுமுறையில் சுவிஸ்சில் இருந்து மெல்பேண் வந்து எனது உறவினரது வீட்டில் தங்கியிருக்கிறேன். அவுஸ்திரேலியா வந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. இந்த நான்கு நாட்களில் பத்துத்தடவை போனில் என்னைக் கூப்பிட்டு வீட்டுக்கு வா என அழைத்தான். அவன் இப்போது பலநாட்டுச் சாப்பாடு நன்றாகச் சமைப்பதாக சொன்னான்.  தான் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டபின் வாழ்கையில் இப்பிடி ஒரு சாப்பாட்டைச் சாப்பிடவில்லைஎனச் சொல்வாய் என்றான்.

‘ஏன் அவ்வளவு மோசமா?’ கேட்டேன் கேலியாக.

‘நீ இன்னும்மாறவில்லை, கிண்டல் உனது இரத்தத்துடன் ஒட்டியுள்ளது.’ அவனது பதில்,

‘நீ மட்டும் மாறிட்டியா? சாப்பாடு ஆசை இன்னும் தீரவில்லை.’ நான் திருப்பிப்போட்டேன்.


‘சாப்பாட்டை பற்றியோ ருசியைப்பற்றியோ எங்கடை சனத்துக்கு என்ன தெரியும். கோப்பை முட்ட சோத்தை குவித்துப்போட்டு நடுவிலை குழம்பை ஊத்துவினம், அதில் ஒரு மீன் துண்டோ, உருளைக் கிழங்குத்துண்டோ இருக்கும். பிறகு என்ன குழைத்து அடிக்க வேண்டியதுதானே. இதுதானே, உங்கடை சாப்பாட்டுக் கலாச்சாரம். சமைப்பதே ஒரு கலை, அதை கோப்பையில் நேர்த்தியாக போடுவதும் ஒரு கலை, அதை பரிமாறுவதும் கலை, ஏன் சாப்பிடுவதிலேயே ஒரு ரசனையுடனும் அழகுடனும் இருக்கவேண்டும்.’ ஓரு செக்கன் மூச்சுவிட்டுவிட்டு தொடர்ந்தான்.

‘மெல்பேண் சனம் விளையாட்டுக்கு  அடுத்ததாக விரும்புவது என்னதெரியுமா? உணவு. அவர்கள் உணவுப்பிரியர்கள். மெல்பேணை பூட்சிற்றி என அழைப்பார்கள். நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். உலகின் எந்தநாட்டு உணவு உங்களுக்கு வேண்டுமானாலும்  எங்கும் போகவேண்டாம் மெல்பேண் வாருங்கள்.அது கிடைக்கும். ஏசியன், ஐரோப்பியன், அமரிக்கன், மிடிலிஸ் என வௌ;வேறு பிரதேச உணவுவகைகள் கிடைக்கும். யாப்பான் சுசி, சிங்கப்பூர் நூடிஸ், சைனீஸ் பிறைட்றைஸ், தாய்லாண்ட் கோழிகறி, இத்தாலியன் பீட்சா, மெக்சிக்கன் ராக்கோ, என்பவற்றுடன்  அமரிக்கனின் குப்பைகளான,மக்டோனால், கேஎப்சீ என  சாப்பாட்டுக்கடைகள் நகரவீதி எல்லாம் பரவிக்கிடைக்கும். ஏன் இந்தியன் உணவுகளான தண்டுரிச் சிக்கினும், எங்கடை இட்லி தோசை,வடை என்பனவும் தாராளமா கிடைக்கும்.’ ஒரேமூச்சில் எல்லாத்தையும் ஒப்புவித்தான்.

‘எல்லாம் சரி, அவுஸ்திரேயாவுக்கு என தனியான கலாச்சாரம்தான் இல்லை. உனது லிஸ்ரில் அவுஸ்திரேலியாவிற்கு என தனியான உணவொண்டும்இல்லையோ?’ என நானும் கேள்வியால் மடக்கினேன். 

‘அவுஸ்திரேலியா பல்கலாச்சாரநாடு. அது போல உணவிலும் பல்தேசிய உணவுதான்.’ அவனோ விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. 

நான,; அவனது கை வண்ண உணவு உண்பதற்கு வருவதாக உறுதி அளித்துவிட்டு தொலைபேசியை வைத்தேன். 

அன்று சனிக்கிழமை, அவனுக்கு உறுதியளித்தபடி மதியபோசனத்துpற்காக அவனது வீட்டுக்குப் போனேன். கதவருகே இருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். சில நொடியில் கதவு திறக்கப்பட்டது. அரைச் சென்சரி தாண்டிய மெலிந்த உருவம் ஒன்று கதவை திறந்தது.

ஒரு செக்கன், எனது மூளை யார் இது எனக் கேட்டது. அடுத்த செக்கன் மூளை சொன்னது, இது உனது நண்பன் என்று. எனது கற்பனைத் தோற்றத்தில் பாதியாக இருந்தான். தலைமுடியின் நரையை மறைக்க கடும் முயற்சி எடுத்தது தெரிந்தது. அதையும் மீறி சில நரை மயிர்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன ஐரோப்பிய நாட்டு குளிரும் சீசும் போதாக் குறைக்கு பியரும் சேர்ந்து எனது உடலையும், முகத்;தையும் சற்று ஊதவைத்தது. ஆனால் அவனோ எதிர் மாறாக இருந்தான. 

‘என்ன யோசிக்கிறாய்? வா உள்ளே.’ பழைய அதட்டலுடன் சொன்னான்.
‘நீயோ என்ட சந்தேகம்..’ நான் இழுத்தேன். 
‘ஏன் கண்ணாடியில் உன்னை நீ பார்பதில்லையா?  வயது எனக்கு மட்டுமல்ல உனக்கும் ஏறிவிட்டது’ எமக்கிருந்த சிறு இடை வெளியை அகற்றியது அவனது உரை.

வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான். சமயல் அறைக்கு அருகே ஒரு மினிபார் ஒன்று இருந்தது. அதில் அழகாக போத்தல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதில் எனக்குத் தெரிந்த சிவப்பு,கறுப்பு, பச்சை நீல லேபல் கொண்ட ஜேனிவோக்கர்,சிவாஸ்றீகல்,டிம்பிள்,என விஸ்கி பிரண்டி வகைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அருகில் பல வித சிவப்பு, வெள்ளை வைன் போத்தல்கள் எல்லாம் இருந்தன. குளிர்சாதனப் பெட்டிக்குள் பல வகை பியர்கள் சில் என்ற குளிருடன் இருந்தன. 
 ‘என்ன சாப்பிடப்போகிறாய்’ அவன் கேட்டான்.
‘சோறு’ சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
‘என்ன குடிக்கப் போகிறாய் என்று கேட்டேன்’ என்றான்.
‘ஏதாவது விஸ்கி’ என்றேன்.
அருகிலிருந்த அலுமாரியில் வைன்க்கு,விஸ்கிக்கு, பியருக்கு என வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட பல வித கிளாஸ்களில் விஸ்கி கிளாஸ் ஒன்றை எடுத்து டிம்பிள் விஸ்கியை எடுத்து அளவாகவிட்டுவிட்டு, 
‘மிக்ஸ் பண்ண கோலா, லெமன், சோடா வாட்டர்’ என கேட்டான்.
‘லேமன்’ என்றேன்.
‘விஸ்கி குடிக்கும் போது எதுவும் கலக்காமல் குடிக்க வேணும். அல்லது வெறும் தண்ணீர் மட்டும் கலக்க வேண்டும். அப்போதுதான் அதன் ருசி தெரியும்.’ எனக் கூறியபடி லேமனை ஊற்றி விட்டு, இரண்டு துண்டு ஐஸ்சைப் போட்டான். பின்னர் கிளாசை என்னிடம் நீட்டினான்.
‘உனக்கு’ நான் கேட்டேன்.
‘நான் மருந்து எடுத்திட்டேன். இதுகள் பாவிக்க ஏலாது.’  என்றபடி ஒரு கிளாசை எடுத்து பைப்பைத் திறந்து தண்ணீரை ஏந்தினான். மற்றக் கையில் கோழிப் பொரியல் உருளைக் கிழங்கு பிரட்டல், கடலுணவு சலாட், முந்திரிகை வறுவல், என பல வகை கொறிப்புத் தீன் அடங்கிய தட்டு கையிலிருந்தது. 

பின்னர் நாங்கள் இருவரும் அவனது விருந்தினர் அறையில் உரையாடிக் கொண்டிருந்தோம். இளமையினல் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இரவு இரவாக கடலேரியில் தீப்பந்தங்கள் கொண்டு நண்டு,இறால் மீன்கள் பிடித்து  அதை நெருப்பில் போட்டு வாட்டியும், சமைத்ததும், அதன் சுவையையும் அதனால் ஏனையோர் எங்களை நண்டுகள் என்று அழைத்ததையும் நினைவு கூர்ந்தான். இளமையில் அவனது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் சோழம் பொரி, பொரிவிழாங்காய் என்பவற்றை நிறைந்திருக்கும். அதை எந்த நேரமும் கொறித்துக் கொண்டிருப்பான். அதனால் நாங்கள் அவனுககு சாப்பாட்டு ராமன் என்று வைத்த பட்டப் பெயரை நைசாக மறைத்து விட்டான். 

இடைக்கிடை எனது கிளாசை விஸ்கியாலும் லெமன் யூசாலும் நிரப்பிக் கொண்டிருந்தான். தனக்கு மட்டும் மெல்பேண் குழாய் நீரை ஊற்pக் கொண்டிருந்தான். கடந்த காலத்திலிருந்து உரையாடலைத் தொடர்ந்து  நிகழ் காலத்திற்கு வந்தது.
அவுஸ்ரேலியா நிலவரம் பேச்சில் அடிபட்டது.  எங்கை சுற்றினாலும் இறுதியில் சாப்பாட்டில் வந்து நிற்கும்.  தொலைக்காட்சி  நிகழ்சிபற்றிய உரையாடல் வந்தது. சனல் பத்தில் நடை பெறும் மாஸ்ரர் செவ்  நிகழ்சி சமயல் போட்டி எவ்வளவு அழகாக  செய்கிறார்கள். அதே சனலில் நடை பெறும் லண்டனைச் சேர்ந்த  ஜேம்மி ஒலிபரின் சமையல் நிகழ்ச்சி  சுப்பர். சனல் ஏழு கிச்சின் றூஸ் என்ற போட்டி நிகழ்ச்சியுடன் பேற்ற கோம்அன் காடின் போன்றவை . அத்துடன் எல்லாத் தொலைகாட்சி  நிறுவனங்களும் இரண்டு மூன்று சமையல் நிகழ்ச்சிகளைக் காண்பிக்கின்றன. அவனது உரையாடலுக்கு இடையூறாக அவனது மனைவியின் குரல் ஒலித்தது. 

‘நேரம் சென்று கொண்டிருக்கிறது. சாப்பிடுகிற எண்ணமில்லையா?’அவனது மனைவி சாப்பிட அழைத்தாள்.

இருவரும் சாப்பிட எழுந்தோம். சாப்பாட்டு மேசையில் அழகாக பலவித உணவுகள் ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளது. சிக்கின் கால், ஆட்டு இறைச்சிக் கறி,  சீன சமையலும் எங்களது சமையல் முறையையும் கலந்து இறாலில் வரட்டல், மீன் வறுவல் அத்துடன் அந்த ஊர் சந்தையில் இருக்கும் எல்லா மரக்கறிகளும் ஒவ்வொரு விதமாக  மேசையை அலங்கரித்தது.
‘வேறை விசிற்றேசும் வருவினமோ?’ சந்தேகத்துடன் கேட்டேன்.
‘இல்லை நாங்கள் மட்டும் தான்.’ சொன்னபடி கிச்சினில் ஏதோ மரக்கறியை  வெட்டிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி. 
‘இவ்வளவு நிறைய சமைத்துட்டு வேறை என்ன செய்கிறீர்கள்.’ நான்கேட்டேன். 
‘மற்றவர்களுக்கெல்லாம் அவர் சமைப்பார் அவருக்கு மட்டும் நான் சமைக்க வேணும்.’ அவனது மனைவி சலிப்புடன் கூறியபடி அவனுக்கு முன்னால் கோப்பையை வைத்தாள். நான் எட்டிப்பர்த்தேன். கரட், பீன்ஸ்;, பூக்கோவாவில் ஒரு அரை அவியல். சில சலாட் இலைகள் அருகில் இரண்டு துண்டு தவிட்டுப் பாண்.

‘வாய்கு ருசியா சமைக்கிறவருக்கு அதை சாப்பிடத்தான் கொடுத்து வைக்கவில்லை. சலரோகம், கொலஸ்ரோல், பிறசர் எண்டு உலகத்திலை இருக்கிற எல்லா வருத்தமும் இருக்கு. உப்பு புளி கூட இல்லாமல்  பதினைந்து வருசமாக உதையே சாப்பிடுது இந்த மனிசன்.’ ஏன நா தளர சொன்னார் அவனது மனைவி.


நன்றி
ஞானம்- ஏப்ரல் 2013

No comments: