இலங்கைச் செய்திகள்

இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

கிளிநொச்சி தமிழ்க் கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்

நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்


இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை

03/04/2013   இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

அண்மையில் புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்திய பிரித்தானிய பிரஜையொருவர் நாடு கடத்தப்பட்டார். விருந்தோம்பல் பண்பில் பிரபல்யம் பெற்ற இலங்கையில் தற்போது மத முரண்பாட்டு நிலைமைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபீ புலொச் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியர்கள் குறித்த நாடுகள் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நாடுகள் தொடர்பில் பயண விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி வீரகேசரி





அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

03/04/2013 அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு பிரசாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் புலனாய்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


பொதுபல சேனா அமைப்பு அனுராதபுரத்திற்கு வந்து, குறித்த இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை அகற்றினால், நகரத்தில் உள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் பதற்றமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த முஸ்லிம் அறநெறி பாடசாலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது

நன்றி வீரகேசரி







கிளிநொச்சி தமிழ்க் கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்
பி.பி.சி
31/03/2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் கோஸ்டி ஒன்றினால் கல்லெறி தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் காயமடைந்துள்னனர்.
TNA OFFICE attackஇன்று சனிக்கிழமை முற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் அலுவலக முன்றலில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சிங்கக் கொடிகளை ஏந்திய வண்ணம் கூச்சலிட்டவாறு திரண்டு வந்தவர்களே கற்களை சரமாரியாக எறிந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஏ9 வீதிவழியாக குழுவாக வந்து கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் எதிரில் ஒழுங்கையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தை நோக்கிவந்து கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பொலிசாரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் அலுவலகக் கூரை, ஜன்னல்கள், கதவுகள், அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளன.
'சிக்கிய மூவரை பொலிசார் விடுவித்தனர்'
தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக வளாகத்தினுள் பிரவேசிக்க முயன்றபோது, முதலில் இருவரையும் பின்னர் மற்றுமொருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆயினும் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி அவர்களை பொலிசார் விடுவித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
மூன்றாவதாகப் பிடிபட்டவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் புலனாய்வு படையினரின் அடையாள அட்டை இருந்ததாகவும், எனினும் அவர் அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வந்ததாகக் கூறி அவரையும் விடுவித்துவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பனர் சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி மாவட்ட பொலிசார் சம்வத்தை நேரில் கண்டவர்களிடமும் தன்னிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டு சென்றிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, பொலிசாரும் இராணுவத்தினரும் அந்தச் சுற்றாடலில் இருந்த போதிலும் கலகக்காரர்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அவர்களைக் கைது செய்யவோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் சம்பவம் நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வந்த பொலிசார் வழக்கம்போல வாக்குமூலங்கைளப் பதிவு செய்து கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்றும் சிறிதரன் அதிருப்தியோடு தெரிவித்தார்.
நன்றி தேனீ 




.

நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்

04/04/2013 அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர் இன்று காலை 6 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானமொன்றிலேயே அவர்கள் இங்கு வந்தடைந்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினர் அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்
.

நன்றி வீரகேசரி

No comments: