’ஸ்மாட் போன்’ கதை. - கே.எஸ்.சுதாகர்

.


வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

 I – Phone  ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

“அப்பா.... காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!
கார் இடையிலை நிண்டா... காட் அற்றாக் வந்தா என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு பிளானிற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.


நண்பன் ஒருவன் மலிவான கடையென ஒன்றை அறிமுகம் செய்திருந்தான். அங்கே வந்திருந்த கஸ்டமர்ஸ் எல்லாரிடமும் புதிது புதிதான கைத்தொலைபேசிகள் விதவிதமான நாதமெழுப்பிய வண்ணம் இருந்தன. அவர்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன். கவுண்டரில் மூன்றுபேர்கள் நின்றார்கள். எனது முறை வந்ததும் அவர்க்ளிடமிருந்த பிளான்கள் பற்றிக் கதைத்தேன். நான் தற்போது பாவிக்கும் ரெலிபோனைப் பார்க்க முடியுமா என்று அவன் கேட்டான். பொக்கற்றுக்குள்ளிருந்த பழைய நோக்கியா போனை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் பாம்பைக் கண்டுவிட்டவன் போல திடுக்கிட்டு, இரண்டு அடிகள் பின் நகர்ந்து மெதுவாக நழுவி உள்ளே ஓடினான். நான் எனது போனை உடனடியாக எனது பொக்கற்றுக்குள் செருகிக்கொண்டேன். கவுண்டரில் நின்ற மற்ற இருவரும் உதட்டிற்குள் புன்னகை ஒன்றைத் தவழவிட்டார்கள்.

அந்தப்புன்னகை எனக்கா, அல்லது உள்ளே சென்றவனுக்கா என்று தெரியாமல் மலங்க விழித்தேன்.

சற்று நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெண் வந்து அந்தக்கவுண்டரில் நின்று கொண்டாள். அருகேயிருந்த ஒரு இருக்கையைக் காட்டி என்னை அதிலே அமரும்படி சொன்னாள்.

நேரம் நகர்ந்தது. ஒருவரும் என்னைக் கவனிப்பதாக இல்லை. என்னைக்கண்டு மிரண்டு உள்ளே சென்றவன், கதவொன்றை மெதுவாக நகர்த்தி நான் போய்விட்டேனா என்று பார்த்தான். கடைக்கு அவர்கள் இனத்தவர்கள் வருகின்றார்கள், போகின்றார்கள்.

“அவங்கடை கடை. வருவார்கள்.... போவார்கள். இதிலே நமக்கென்ன வேலை?எழுந்து கொண்டேன். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் நடையைக் கட்டினேன்.

உடுப்புக்கடையொன்றிற்கு முன்னால் ராசன் அண்ணன் தனது காரை எடுத்து இடம் மாற்றிக் கொண்டு நிற்கின்றார். கார்க்கண்ணாடியூடாக எனக்குக் கையைக் காட்டினார். ராசன் அண்ணை எனது ஊரவர். அவருடைய அம்மா கைராசி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருக்கின்றார் என்று அறிந்திருந்தேன். அவ வந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இன்னமும் நாங்கள் அவரைப்போய் பார்க்கவில்லை.

இக்கணம் ராசன் அண்ணை பேசப்போகின்றார். அவர் தொடங்குவதற்கு முன்னால் நானே தொடங்கிவிட வேண்டும்.
“அண்ணை! இன்னும் உங்கடை அம்மாவை வந்து பார்க்கேல்லை. மகளின்ரை படிப்பு. ஒரே பிஷி
“எனக்குத் தெரியும்தானே தம்பி. அதைப்பற்றி நான் ஒண்டும் குறையா நினைகேல்லை. அம்மா உள்பட எல்லாரும் உடுப்புக்கடைக்குள்லைதான் நிக்கினம். ஒரு மணித்தியாலமாபோச்சு. இன்னும் உடுப்பு வாங்கினபாடில்லை. அதுதான் ஒருக்கா காரை மாத்தி விடுவோமெண்டு வந்தனான். இல்லாட்டி உடுப்புக்கு மேலாலை ஃபைன் கட்டவேண்டி வந்திடும்.

“அப்ப நல்லதாப்போச்சு. அம்மாவைப் பாத்து ஒரு ஹலோ சொல்லுவோம்.

இரண்டுபேருமாக கடைக்குள் நுழைந்தோம்.

இந்த இடத்திலை கைராசியக்காவைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இப்ப அவவுக்கு எண்பது தாண்டியிருக்கும். அப்ப அம்பது இருக்கேக்கை அது நடந்தது. சின்னனிலை ஒருமுறை சரியான இருமலாலை படுக்கையாக இருந்தேன். பத்துப்பன்னிரண்டு வயதிருக்கும். அப்ப ஒருநாள் அவ எங்கடை வீட்டுக்கு வந்தா. அம்மா எனது வருத்தம்பற்றி அவவிடம் ஆலோசனை கேட்டார். உடனே கைராசியக்கா ஒரு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்கடை வீட்டுத்தோட்டப்பக்கம் போனா. கொஞ்ச மண்புழுக்களைப் பிடித்துக் கொண்டு வந்தா. துடிக்கத் துடிக்க அவற்றை நறுக்கி தாச்சிச்சட்டிக்குள்ளை போட்டு வறுக்கத் தொடங்கினா. பிறகு அதுக்குள்ளை நீரை விட்டுக் காய்ச்சி, அந்தக் கசாயத்தை வடித்தெடுத்துக் கொண்டு வந்தா. நான் மூண்டுமுறை வீட்டைச் சுத்தி ஓட்டம் பிடித்துவிட்டு பனை வடலிக்குள்ளை ஓடி ஒளிச்சிட்டன். ஒவ்வொரு பனை பனையா ஒளிச்சிருந்து கடைசியிலை என்னை அமுக்கிப் பிடிச்சே விட்டா. பிறகென்ன... வாயை இழுத்துப் பிடிச்சு ஒரே அமுக்காக மருந்தை விட, மூக்குக்குள்ளாலை கொஞ்சம் வர வாயுக்குள்ளை மிச்சம் முழுவதும் போய்ச் சேர்ந்தது. அந்த ஒருமுறை மருந்தோடை இருமல் பறந்து போச்சு. ஆனா கைராசியக்கா பற்றின பயம் தொற்றிக் கொண்டது.

உடுப்புப்போட்டுப் பார்க்கும் இடத்திற்கு முன்னால் எல்லாரும் குழுமி இருந்தார்கள். கைராசியக்காவைக் காணவில்லை.
“எங்கே கைராசியக்கா?
“அப்பம்மா உள்ளுக்கை உடுப்புபோட்டுப் பார்த்துக் கொண்டு நிக்கின்றா என்றாள் ராசன் அண்ணையின் கடைசி மகள். பேர்த்தியும் உரிச்சு வைச்சாப்போல கைராசியக்கா மாதிரித்தான். சூரியோதயத்திற்காகக் காத்து நிற்பவர்கள்போல அதைச் சூழ்ந்து எல்லாரும் நின்றார்கள்.
இஞ்சை மீனாச்சியக்காவினரை மகன் சிவயோகன் உங்களைப் பாக்கவெண்டு வந்து நிக்கின்றார்  ராசன் அண்ணை குரல் கொடுத்தார்.

“ஏன் என்னைப் பாக்கிறதுக்கு இதுதானோ அவருக்குக் கிடைச்சிருக்கிற இடம்?
கைராசியக்காவின் குரல் உள்ளிருந்து கேட்டது. தொடர்ந்து கதவை நீக்கியபடி கைராசியக்கா காக்ரா சோளியுடன் வெளியே வந்தார். சூரிய உதயம்!
“அப்பம்மாவுக்கு நல்ல வடிவா இருக்கு. இதையே வாங்குவம்என்றாள் பேர்த்தி.

அவவைப் பார்க்க சோளக்கொல்லை பொம்மைக்கு சொக்காய் புதுசா மாட்டினமாதிரி இருந்தது.

போகிற போக்கிலை குண்டியிலை தட்டினா லைற் எரியுறமாதிரிச் சீலை இருந்தாத் தாங்கோ எண்டு கைராசி அக்கா கேட்டாலும் கேட்பா

“என்ன கைராசியக்கா மொடேர்ணா நிக்கிறியள்?”  எனது கேள்வி அவவைக் கோபப்பட வைத்திருக்க வேண்டும்.

“உனக்கடா வெளிநாடு வந்து திமிர் கூடிப்போச்சு. உனக்கொண்டு சொல்லிறன் கேள்.  காக்காய்ச்சோளி போடவேண்டுமெண்டது என்ரை சின்ன வயசு ஆசை. இப்பதான் நிறைவேறியிருக்கு. அப்ப ஒரு பத்துப்பன்னிரண்டு வயசிருக்கும். என்ரை அப்பனிட்டைக் கேட்டன். என்னை மரத்தோடை கட்டி விளாசு விளாசெண்டு விளாசிப்போட்டான். பிறகு என்ரை புருஷனைக் கேட்டன். உஷூம்...  பிறகு பிள்ளை! ஆர் உவன் ராசன் தான். உவனாலும் முடியாமல் போச்சு. இப்ப எத்தினையோ தலைமுறை கடந்து பேத்தி வாங்கித் தாறாள். ஒரு பெட்டைச்சியாலை முடியிற காரியம் ஆண்வர்க்கத்தாலை முடியாமல் போச்சுது எண்டதுதான் இப்ப என்ரை கவலை

“அம்மா. உது வடிவா இருக்கு. உதையே வாங்குவம்என்றான் ராசன். எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

“நான் இந்த உடுப்போடையே வரப்போறன். நீ போய் கவுண்டரிலை காசைக் குடுத்திட்டு வா. நான் இந்தத் தம்பியோடை கதைச்சுக் கொண்டு நிக்கிறன்

நல்லா இருக்கு கைராசியக்கா.... இப்ப உங்களைப் பாக்க சிம்ரன் மாதிரி இருக்குகைராசியக்காவுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது ரெலிபோன் கிணுகிணுத்தது. மனைவிதான்.

ரெலிபோனைக் கையிலெடுத்து ஒரு ஹலோ சொல்லவில்லை. எனது ரெலிபோனைப் பறித்து அருகே இருந்த குப்பைக்கூடைக்குள் எறிந்தா கைராசியக்கா.

“எட அறுவானே! உனக்கு ஒரு ரெலிபோன் வாங்க வக்கில்லை. என்னோடை கதைக்க வந்திட்டாய். உதாலை ஒரு படம் எடுக்கலாமோ சொல்லு... இந்தாபிடி... இதிலை கதை!என்றபடியே தனது மார்புக்குள் செருகியிருந்த கைத்தொலைபேசியை எடுத்து நீட்டினா கைராசியக்கா.

அது ஒரு ஐ போன் 5’  என்று உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.


No comments: