சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற் கானமழை 2013


.
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்


சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் அமர்ந்து அருளாட்சி நல்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மார்ச் மாதம் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை விநாயகர் அனுக்ஞையுடன் ஆரம்பமாகியது.  இந்த மகோற்சவத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளம் கலைஞர்கள் வந்திருந்தார்கள்.  அவர்கள் பொழிந்த கானமழையில் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நனைந்து நனைந்து திளைத்து ஊறிய ஈரம் இன்னும் காயவில்லை.  அந்த இனிமையின் தூறல்கள் இன்னும் ஓயவில்லை.




சுத்தசாவேரி, த்விஜாவந்தி, கல்யாணி, ஹம்சத்வனி, ஆனந்தபைரவி, சிந்து பைரவி, சாரங்கா, ரேவதி, யமன்கல்யாணி, ரஞ்சனி, சங்கராபரணம், ஆபேரி, ஹிந்தோளம், சாமா, வலஜி, மதுவந்தி, சண்முகப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, நவரஸகன்னட, சாருகேசி, காபி, கானடா, இப்படி எத்தனையோ இராகங்களையும் அவற்றில் அமைந்த  உருப்படிகளையும் பாரம்பரிய முறையிலும் தமக்கே உரிய தனித்துவமான புதிய பாணியிலும் மிக மிக அற்புதமாக வாசித்தார்கள்.  அதற்கு ஏற்றாற் போல நாதஸ்வர இசையை மூழ்கடிக்காத வண்ணம் மிக அடக்கமாக இனிமையாக பாடல்களுக்கு ஏற்றவண்ணம் வாசிக்கப்பட்ட தவில் இசை.  ஆகா என்ன இனிமையான பன்னிரண்டு நாட்கள் அவை.

திரு எஸ். பாலமுருகன், திரு பீ. குமரேசன், திரு எஸ். செந்தில்நாதன், செல்வன் எஸ். துளசிபரன் ஆகிய நால்வரும் யுத்த மேகங்கள் சூழ்ந்த கொடூரமான போர்க்கால சூழ்நிலையில் இருந்து முகிழ்த்த நான்கு முத்துக்கள்.  இவர்கள் நால்வரும் தாம் வாழ்ந்த சூழலின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு முகம் கொடுத்து, தமது கடின உழைப்பினாலும் அவர்களின் பெற்றோரின் உறுதியுடன் கூடிய வழி நடத்தலாலும் இன்று இந்தியாவின் புகழ் பூத்த மேதைகளான திருவாழப்புத்தூர் கலியமூர்த்தி, மன்னார்குடிவாசு, திருப்புங்கூர்முத்துக்குமாரசுவாமி, திரு. கலியாணசுந்தரம் ஆகியோருடன் இணைந்து கச்சேரி செய்து உலகப் புகழ் பெற்ற தவில்மேதை லயஞானகுபேரபூபதி வீ. தெட்சணாமூர்த்தி பிறந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள் என்று உலகிற்கு பறைசாற்றி வருகின்றார்கள்.

திரு. சுப்புசாமி பாலமுருகன்

பாலமுருகன் சிறுவயதிலேயே தனது தந்தை சுப்புசாமி அவர்களிடம் நாதஸ்வர இசையைக் கற்று அதிற் தேர்ச்சி பெற்றார். பின்னர் அளவெட்டி என். கே. பத்மநாதன் அவர்களிடம் நாதஸ்வர இசை நுணுக்கங்களைக் கற்று அதிற் சிறந்த தேர்ச்சியும் பெற்று சிறந்த வித்துவான்களோடு சேர்ந்து வாசிக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்..

1999ம் ஆண்டு பல வித்துவான்கள் அடங்கிய சபையில் பாலமுருகன் வாசித்த கனகாங்கி இராகத்தைக் கேட்டு மெய்சிலிர்த்த இயலிசை வாரிதி இணுவில் என். வீரமணிஐயர் இவருக்கு “நாதமதுரகீதன்” என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்து உள்ளார்.

பாலமுருகன் சிறுவயதிலிருந்தே அரியாலைப் பிள்ளையார் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார்.  அவரது துரித வளர்ச்சியைக் கண்டு பெருமைப்பட்ட ஆலய தேவஸ்தானம் “நாதஸ்வரகான வினோதன்” என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 19.9.2009ல் “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்துவான்” என்ற மிகப் பெரிய கௌரவத்தைக் கொடுத்து திரு பாலமுருகன் அவர்களைப் பாராட்டி உள்ளது.  ஹைதரபாத் ஆந்திர பிரதேச அரசு 1.6.2010ல் “ரீ. என். இராஜரத்தினம்பிள்ளை இன்ரநேசனல் எவாட் ( T.N. Rajaratnampillai International Award)” ஐக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

2012ல் அகில இலங்கை கம்பன் கழகம் “ஏற்றமிகு இளைஞன்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் கனடா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை மழை பொழிந்து பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார்.

திரு. பஞ்சமூர்த்தி குமரேசன்

குமரன் என்று அழைக்கப்படும் குமரேசன் சிறு வயதில் இருந்தே நாதஸ்வரத்தையும் வாய்ப் பாட்டையும் தனது தந்தையார் பஞ்சமூர்த்தி அவாகளிடம் கற்று வந்தார்.  அவரது திறமையைக் கண்ட தந்தை பஞ்சமூர்த்தி, குமரனைத் தன்னுடன் சேர்ந்து கச்சேரிகளில் வாசிக்க அனுமதி வழங்கிவிட்டார்.

குமரன்., திரு. ஏ.கே. பத்மலிங்கம் அவர்களிடமும் திரு. எஸ். சண்முகராகவனிடமும் பெங்களுர் திரு. ஸ்ரீராம் கங்காதரன் அவர்களிடமும் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார்.

இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரிகளையும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கைக் கலாசார அமைச்சு 2006, 2007 ஆகிய இரண்டு வருடங்களும் நாதஸ்வரம், வாய்ப்பாட்டு  ஆகிய இரண்டிற்கும் “சிறந்த இளங் கலைஞன்” என்ற விருதினைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

அகில இலங்கைக் கம்பன் கழகமும் நாதஸ்வரம், வாய்ப்பாட்டு ஆகிய இரண்டிற்கும் பட்டம் வழங்கி குமரனைக் கௌரவித்துள்ளது.

2007ல் கனடா விம்பில்டன் தேவஸ்தானம் “ஸ்வரஞானபாலதீரன்” என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

இவர் கனடா, சுவிஸ், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் ஆகிய நாடுகளுக்கும் சென்று நாதஸ்வர இசைமழை பொழிந்து பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.

திரு. சுப்புசாமி செந்தில்நாதன்

திரு. சுப்புசாமி செந்தில்நாதன் சிறு வயதிலிருந்தே தனது தந்தை சுப்புசாமி அவர்களிடம் தவிற்கலையை கற்று வந்துள்ளார். அதன்பின் தவில் வித்துவான் காரைநகர் முத்துக்கிருஷ்ண கம்பரிடமும் தவில் வித்துவான் நாச்சிமார் கோவில் கணேசனின் மகன் சிவகுமார் அவர்களிடமும் தவிற்கலையைக் கற்று அதிற் சிறந்த தேர்ச்சியும் பெற்றார்.

2010ல் இலங்கைக் கலாசார அமைச்சு நடாத்திய தவிற் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்..

இவருடைய தவில் வாசிப்பின் லயச் சிறப்பை உணர்ந்த நயினை நாகபூஷணி அம்மன் தேவஸ்தானம் “லயஞான பாலன்” என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

திரு. சிவபாலசுப்ரமணியம் துளசிபரன்

துளசிபரன் சிறுவயது தொடக்கம் தனது தந்தை தவில் வித்துவான் சிவபாலசுப்ரமணியம் அவர்களிடம் தவிற் கலையைக் கற்று வந்துள்ளார்.  அதன்பின் தவில் வித்துவான் இணுவில் இராமமூர்த்தி முருகானந்தம் அவர்களிடம் தவிற்கலையைக் கற்று அதில் மிகுந்த தேர்ச்சியும் பெற்றுள்ளார்.  இவரது தவில் வாசிப்பை மெச்சி இவரது ஊர் மக்கள் “தவில் இளவரசன்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.

இந்த நான்கு இளம் கலைஞர்களும் 1980ம் ஆண்டின் பின் பிறந்தவர்கள் என்பது மிக மிக முக்கியமான விடயம்.  1980ம் ஆண்டிற்கு முன் யாழ்ப்பாணத்தில் தவில் நாதஸ்வரக் கலை ஓர் உன்னதமான இடத்தினைப் பெற்றிருந்தது.

இந்தியக் கலைஞர்கள் பெருமளவில் யாழ்ப்பாணம் வந்து அடிக்கடி கச்சேரிகள் செய்வது வழக்கம்.  அதேபோல யாழ்ப்பாணத்தில் உள்ள தவில் நாதஸ்வர வித்வான்களும் இந்தியா சென்று வருவது வழக்கம்.  ஆகையால் தவில் நாதஸ்வரக் கலை எப்போதும் தரம் மிக்க கலையாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துள்ளது.  ஆனால் 1980ன் பின் இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது.  இந்தியக் கலைஞர்களின் வருகை முழுமையாக நின்றுவிட்டது.  யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கீதத்தைக் கற்றுக் கொள்வதற்குக் கூட இந்தியாவிற்கு செல்ல முடியாத சூழல்.

1980 களிலேயே தமிழ் ஈழப் போராட்டம் கூர்மை அடைய ஆரம்பித்தது.  கடந்த முப்பத்தி மூன்று வருடங்களாக ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சொல்லொணாத் துயரங்கள் உலகம் அறிந்த உண்மைகள்.

நிரந்தர வதிவிட வசதி இல்லை.  ஆரோக்கியமான உணவு இல்லை.  போர்க் காலங்களில் ஒருவேளை உணவிற்கே திண்டாட வேண்டிய துர்ப்பாக்கியம்.  நிரந்தர வருமானம் இல்லாமை.  அன்றாட வாழ்விற்கான போராட்டம்.  நல்ல கல்வியைப் பெற வசதி இல்லை.  அமைதியான சூழ்நிலையும் இல்லை.  புத்தி ஜீவிகளின் உயிர் இழப்புக்கள், புத்தி ஜீவிகளின் வெளியேற்றம்.  நாதஸ்வர தவிற் கலைஞர்கள் அந்த வித்தையைக் கற்கவோ அவற்றைச் சாதகம் செய்யவோ  முடியாத அவல நிலை.  மேலதிக தேடல்களுக்கு தாம் வாழும் சூழலை விட்டு வெளியே நகர முடியாத துயரம்..  குண்டுகள் மழையாகப் பொழிய மரண பீதி உயிரை நடுங்க வைக்க, மக்களின் மரண ஓலங்களுக்கிடையே குருதி ஆறாக ஓடிய மண்ணில் மரணமே வாழ்வாகக் கொண்ட ஒரு சூழலில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் தான் திரு. எஸ். பாலமுருகன், திரு. பீ. குமரேசன், திரு. எஸ். செந்தில்நாதன், செல்வன் எஸ். துளசிபரன் ஆகிய நால்வரும்.

எத்தகைய துயரம் நம்மை வாட்டிய போதும் நாம் தமிழர், எமது கலையும், மொழியும், கலாச்சாரமும் எமது உயிர், அதை நாம் என்றைக்கும் இழக்க மாட்டோம் என்று உலகத் தமிழர்களுக்கு உரத்துச் சொல்வதாக  இருந்தது இவர்களுடைய நாதஸ்வரக் கச்சேரி.

நாதஸ்வரத்தில் நல்ல இணைகள் வாய்ப்பது மிக அரிது.  அப்படி நல்ல இணைகள் வாசிக்கும் போது இரண்டு நாதஸ்வரம் வாசிப்பது போலக் கேட்காது.  ஒருவர் வாசிப்பது போலவே கேட்கும்.   இந்த அற்புதத்தைப் பாலமுருகனும் குமரனும் இணைந்து வாசித்தபோது உணரமுடிந்தது.  தாமரை பூத்த தடாகமடி, போ சம்போ சிவசம்போ, காற்றினிலே வரும் கீதம்,, சிங்கார வேலனே, சங்கராபரணம் பாடல்கள், கிருஷ்ணா நீ பேகனே, அலைபாயுதே, தில்லானா போன்றவற்றை வாசித்த போது ஊன்றிக் கவனித்தவர்களுக்கு நாதஸ்வரத்தில் அவர்கள் நிகழ்த்திய ஜாலங்கள் புரிந்திருக்கும். தவிர இராகம் வாசித்து, உருப்படி வாசித்து, கற்பனா சுரம் வாசித்த போது அனுபவம் மிக்கவர்கள் போல தங்கு தடையின்றிய அவர்களின் மனோதர்ம ஞானம் வெளிப்பட்டது.

வசந்த மண்டபப் பூசையின் போது அவர்கள் தேர்ந்தெடுத்து வாசித்த  இராகங்கள், தீபாராதனையின் போது வாசித்த தேவாரம், திருப்புகழ் எம்மை ஊனுடல் அழிந்து ஐம்புலனும் ஒடுங்கப் பெற்று இறைவனுடன் கலக்கும் ஓர் உயரிய அனுபவத்தினைத் தந்தது.

சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படும் மல்லாரி நாதஸ்வர தவிலுக்கே சிறப்பான ஒரு அம்சம்.  அவர்கள் அதை மூன்று காலங்களிலும் வாசித்த  போது சுவாமி மெல்ல எழுந்து  அசைந்து அசைந்து புறப்பட்டு வெகு ஆனந்தமாக நடனமாடி வருவது போலத் தோன்றியது.  அதற்கு ஏற்றாற் போல அற்புதமான தவில் வாசிப்பு. பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து தங்களின் வாசிப்புத் திறமையினால் கோயிற் சூழலை, மக்களை, அந்தணர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள்.  இது ஒரு சாதாரண விடயமல்ல.

எவ்வளவு பெரிய வித்துவான்களாக இருந்தாலும் நாதஸ்வரத்திற்கு தவில் பக்க வாத்தியம்தான். அதை உணர்ந்து வாசிப்பவர்கள் தான் சிறந்த வித்துவான்கள்.  தவிலை எவ்வளவு பலமாக யார் அடிக்கிறார்கள் என்பதை வைத்து அல்ல தவிற் திறமையை எடை போடுவது.  நாதஸ்வரத்திற்கு ஏற்ற வண்ணம் நாதஸ்வர இசையை மூழ்கடிக்காமல் அவர்களை நிழல் போலத் தொடர்ந்து மிருதுவாகவும் மென்மையாகவும்  பாடல்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு  ஏற்றபடி இனிமையாக வாசிப்பது தான் சிறந்த தவில் வாசிப்பு.  இதைத் துளசிபரனும் செந்தில்நாதனும் மிகக் கச்சிதமாக நிறைவேற்றினார்கள்.

ஒலிவாங்கி இடை இடையே சமநிலை குலைந்தமையாலும், சரியாக இயங்காமையாலும் வாசிப்போருக்கும் கேட்போருக்கும் சில அசௌகரியங்கள் ஏற்பட்டதை மறுக்க முடியாது.

இராகம் வாசிக்கும் போது தவிலில் லேசாகத் தட்டும் விதம் இராகம் வாசித்து  முடித்ததும் அவர்கள் வாசிக்கும் உருட்டுச் சொற்கள் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே உள்ள நேரத்தை செந்தில்நாதனும் துளசிபரனும் தவில் வாசித்து நிரப்பும் அழகே தனி.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது தவிற்கழியை தாளம் தப்பாது சுழற்றுவது, எறிந்து ஏந்துவது, வலந்தலையிலும் இடந்தலையிலும் தவிற் கழியாலும் விரல்களாலும் உண்டாக்கும் லய ஓசைகள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சப்பறத் திருவிழாவில் அன்று இரதம் வடக்கு வீதியில் நின்றதும் நாதஸ்வரக் கச்சேரியின் போது பக்தர்கள் நிலத்தில் அமர்ந்து விட்டனர்.  மிகுந்த சந்தோஷத்துடன் மேலும் மேலும் அவர்களை வாசிக்குமம்படி தூண்டினர்.  இது என்னை இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கே கொண்டு சென்று விட்டது.  ஒரு காலத்தில் நடந்த கே. ஆர். புண்ணியமூர்த்தி (தவில்) கே. ஆர். சுந்தரமூர்த்தி (நாதஸ்வரம்), என். ஆர். கோவிந்தசாமி, நாச்சிமார் கோவில் கணேசன் (தவில்), பீ. எஸ். ஆறுமுகம்பிள்ளை (நாதஸ்வரம்), இவர்களின் வடக்கு வீதிச் சமா நினைவிற்கு வந்து என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

இறுதியாக 30.3.2013 அன்று சிட்னி முருகன் கல்வி கலாசார மண்டபத்தில் அவர்களுடைய கச்சேரி நாலரை மணித்தியாலங்கள் இடம் பெற்றதோடு சிட்னி முருகன் மகோற்சவமும் நிறைவடைந்து கானமழையும் ஓய்ந்துவிட்டது.

இந்த நிகழ்வின் முற்பகுதி கர்நாடக சங்கீத உருப்படிகள் அடங் கியதாகவும் பிற்பகுதி திரை இசைப் பாடல்களாகவும் அமைந்து இருந்தது.  இதற்குப் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தவர் யாழ்ப்பாணத்தின் மிகச் சிறந்த மிருதங்க வித்துவான் திரு. ஏ. சந்தானகிருஷ்ணன் அவர்கள்.  அவர் அமர்ந்திருந்த  இருக்கையிலிருந்து இரண்டு இருக்கைகள் தள்ளி நான் அமர்ந்திருந்தேன்.  நாதஸ்வரக் கச்சேரி ஆரம்பித்ததிலிருந்து அவரின் முகத்தில் தோன்றும் பிரதிபலிப்புகளை அவதானித்தபடியே இருந்தேன்.  வர்ணம், த்விஜாவந்தி, சாருகேசி எனத் தொடர்ந்த போது அவருடைய முகம் மொட்டவிழ்ந்த தாமரை போல் மெல்ல மெல்ல மலர்ந்து தவில் தனி ஆவர்த்தனத்தின் போது புன்னகையோடு திறந்த வாயை அவர் மூடவேயில்லை.  45 நிமிட நேரம் செந்தில்நாதனும் துளசிபரனும் தமது வித்தைச் சிறப்பைக் காட்டினார்கள்.  அதைக் கண்ட பரவசம் அவருக்கு, “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”.

இது மட்டுமல்ல “நான்கு மாதங்கள் நோயோடு போராடிக் கொண்டு இருந்தேன். எழுந்திருக்க முடியாது, நடக்க முடியாது, கதைக்க முடியாது. மன அமைதி இன்றி தவித்தேன்.  பத்து நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய வாசிப்பைக் கேட்டதால் அந்த இசை என்னை உயிர்ப்பித்து மன மகிழ்ச்சியையும் தந்துள்ளது.  “அவர்கள் திரை இசைப் பாடல்களையும் உருப்படி போன்றல்லவா வாசிக்கிறார்கள்” என்றார்.

அவர்களுடைய வாசிப்பிற்கு இதைவிட வேறு சிறந்த விமர்சனம் தேவை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
இத்தகைய இளம் கலைஞர்களை எம் தாய் நாட்டிலிருந்து வரவழைத்து சிட்னி முருகன் கோவிலில் அவர்கள் திறமையைக் காட்ட களம் அமைத்துக் கொடுத்து சிறந்த முறையில் அவர்களைக் கௌரவப் படுத்திய சிட்னி முருகன் ஆலய சைவ மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஈழத்துக் கலைஞர்கள் சார்பில் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
      --திருவள்ளுவர் --
                   



                                      இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்

No comments: