முருகன் புகழ் மாலை - டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் -


.
சிட்னி வழக்கறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் எழுதியுள்ள முருகன் புகழ் மாலை’ பாடல் இசைத் தகடு அபயகரம்  நிதிக்காக சோமா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது
 சிட்னி வைகாசிக் குன்றத்து  முருகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி , அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, ஆரத்தி காட்டி, ஊஞ்சலாட்டி, பின் வேண்டுதல் செய்து தாலாட்டி தூங்க வைப்பதாக இந்த இசைத் தகட்டின் பாடல்கள் அமைந்துள்ளன. முருகன் மீதான ஏழு பாடல்கள் முருகன் புகழ் மாலை எனப் பெயரிடப்பட்டு வெளி வந்திருக்கும் இந்த இசைத் தகட்டில் பதிவாகி உள்ளன.  மிக அழகிய ராகங்களான சங்கராபரணம்,    புன்னாக வராளி, குறிஞ்சி, ஆனந்த பைரவி, ராகமாலிகா போன்ற ராகங்களில் பாடல்கள் அமைந்துள்ளன. காதுக்கு இனிமையான குரலும் , செறிந்த தமிழ் வளமும் கொண்ட பாடல்கள் முருக பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

 

குறிப்பாக சிட்னி வைகாசிக் குன்றத்து  முருகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி , அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, ஆரத்தி காட்டி, ஊஞ்சலாட்டி, பின் வேண்டுதல் செய்து தாலாட்டி தூங்க வைப்பதாக இந்த இசைத் தகட்டின் பாடல்கள் அமைந்துள்ளன.

சிட்னி வழக்கறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் இந்தப் பாடல்களை எழுதியுள்ளார். இசை இளவரசி’ பாம்பே சாரதா இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார். ரஜினி காந்த் இசை அமைத்துள்ளார்.முருகன் தொடர்பாக டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் பெற்றுள்ள அறிவும் தமிழில் உள்ள பாண்டித்யமும் பாடல்களில் வெளிப்படுகின்றன. சோமா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள  இந்த இசைத்தட்டின் வருமானம் முழுவதும் சிட்னி அபயக்கரம் அமைப்பு நிதிக்காக வழங்கப் படும் என டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் தெரிவித்தார்.


மேலும் இம்முயற்சி குறித்து பேசும் போது 
எப்படி இந்த  முருகன் குறித்த பாடல்கள்  எழுதத் தோன்றியது?
பரம்பரையாக  கொழும்பு தட்டாரத் தெரு  முருகன் கோயிலுடன் தொடர்புடைய சிறு பிராயம். இளமைக்காலத்தில் திருச்செந்தூர் எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும் திருத்தலம்.தினமும் சிட்னி முருகன் கோயில் தாண்டிச் செல்லும் போது மின்னுகின்ற பொன் கலசம் .இவற்றின் கலவையான தாக்கம் முருகனிடம் ஈடுபாடாக இருக்கலாம்.
இந்த எழுத்து அடிக்கடி சிட்னி முருகன் கோயிலுக்கு போவதனால் வந்த அநுபவமா?
இல்லை எனக்கு கடவுள் கொடுத்த நல் வாழ்க்கைக்கு நன்றி சொல்ல முருகனும் நானும் தனித்து பேசக் கூடிய தருணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செல்வேன். ஆடம்பரமான ஆடைகள், உணவு , பேச்சு இவை திசை திருப்பக் கூடியன என்பது என் கருத்து. கோவிலுக்கு போகததனால் நான் பாவியாகப் போவதில்லை. கோவிலுக்கு போவதனால் உத்தமனாகப் போவதுமில்லை. மனசாட்சியை விட பெரிய கடவுள் இல்லை என்பது என் கருத்து.இது எனது தந்தை எனக்கு கற்றுத் தந்தது.
பின் எப்படி இந்த எழுத்து?
கோவிலுக்கு போகாததனால் நான் நாத்திகவாதியும் இல்லை. எதையும் இதய பூர்வமாக உணர்ந்து செய்ய வேண்டும்.முருகனுடன் எனக்கு உள்ள உணர்வு பூர்வமான தொடர்பு , வெள்ளிக்கிழைமைகளில் கடமையுணர்வுடன் கோயிலுக்கு போவதைத் தாண்டியது. அந்த  உணர்வு பூர்வமான தொடர்பின் வெளிப்பாடே இந்த எழுத்து.
வைகாசிக் குன்றத்து  முருகனை திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி , அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, ஆரத்தி காட்டி, ஊஞ்சலாட்டி, பின் வேண்டுதல் செய்து தாலாட்டி தூங்க வைப்பதாக எழுதும் கற்பனை  எப்படி த் தோன்றியது?
திருச்செந்தூர் ஏற்படுத்தும் அதே அதிர்வு எனக்கு திருப்பதியிலும் கிடைக்கும். எம் எஸ் அம்மா பாடிய பெருமாளின் சுப்ரபாதம் போல முருகனுக்கு ஒன்று எழுத வேண்டும் என்ற அவாவின் வெளிப் பாடே அதே மெட்டில் திருப் பள்ளியெழுச்சி எழுதக் காரணம். அதே போல ‘மன்னு புகழ் கோசலையின் மணி வயிறு வாய்த்தவனே’ குலசேகர ஆழ்வார் ராமருக்காக எழுதிய தாலாட்டு. ராகமாலிகை ராகத்தில் பிரியா சகோதரிகளின் குரலில் நாள் தோறும் ஒரு முறையாவது நான் கேட்கும் பாடல். அடுத்து தியாக பிரும்மம் ,  அன்னமாச்சார்யாவின் பாடல்கள் அதன் தாக்கம் தான் இந்த சிறு கற்பனை முயற்சி.
இதை முருகன் கோயிலில் வெளியிட்டு இருக்கலாமே?
என்னுடைய முதல் நூல் ‘ தென்னகத் திருக்கோயில்கள்’  கொழும்பு கைலேஸ்வரம் கோவிலில் தான் வெளியிடப்பட்டது. அதன் நிதி ராஜ கோபுர நிதிக்காக கொடுக்கப் பட்டது.அந்த நிகழ்ச்சிதானாகவே நடந்தது. அதுதான் இறைசித்தம். இந்த நூலையும் தகட்டையும்  முருகன் கோயிலில் வெளியிடுவதானால் நான் முயற்சி செய்து என்னை மெய்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அந்த அளவுக்கு என்னை யாருக்கும் தெரியாது. எனக்கும் யாரையும் தெரியாது. தேர் அன்று பிரதிகள் வந்தவுடன் முதலில் முருகன் திருப்பாதத்தில் தான் சமர்ப்பித்தேன். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய திருப்பணிகளில் முக்கியமானது ஆதரவற்றோர் இல்லம். கோவிலுக்கு கொடுக்க ஆயிரம்பேர் முன் வருவார்கள் இல்லாதவர்க்கு உதவுவதே எனக்கு திருப்தியானது.
பல துறைகளில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கு எப்படி எழுத நேரம் கிடைத்தது?
நேரம் என்பது கிடைப்பது அல்ல இருப்பது. அதை சரி வரப் பயன் படுத்துவது நம் கையில் தான் உள்ளது. மாலையில் என்னிடம் சட்ட ஆலோசனை பெற வருபவர்கள் வருவதற்கு இடைப்பட்ட கால் மணி , அரை மணி நேர இடை வேளைகளில் எழுதியது தான் இவை. காரில் பயணம் செய்யும் நேரம் எழுதியதை இசை கூடுகிறதா என்று சரி பார்த்துக் கொள்வேன். தவிர தனியாக நேரத்தை தேடியதில்லை. குறிப்பாக தாலாட்டு, பள்ளியெழுச்சி தவிர மற்ற நான்கு பாடல்கள் கிறிஸ்மஸ் இரவில் ஒரே நாளில் எழுதப் பட்டவை. வேண்டுதல் பாட்டு புத்தாண்டு அன்று எழுதப் பட்டது.
 பாடல்களில் பிடித்த வரிகள் சில?
வந்துதித்தாய் முருகா நீ உமையவளின் திருமகனாய், திருப்புகழின் கருப் பொருளே , திசை எல்லாம் புலர்கிறது
மந்திரங்கள் வாழ்த்தியுன்னை வந்தனைகள் செய்தருள , செந்தூரின் நாயகனே, சிவன் மைந்தா விழித்தெழுவாய் 
வேண்டுவது வேறேதும் வேண்டாமல், விரும்பி நின்று
வேண்டுவது நீயென்று உன் பாதம் சென்னி வைத்தோர் உளம் அறிந்து
வேண்டியது நீயென்றால் விருப்புடனே நினைத்தருவோய்
வேண்டுவது நீ ஒன்றே  வேலவனே  எழுந்தருள்வாய்
 முருகன் புகழ் மாலை குறுந்தகட்டை பெற விரும்புவர்கள் (02) 96335019 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 27 ஆம் தேதி பரமற்றா ரிவர் சைட் அரங்கில் நிகழும் நிகழ்ச்சியில் பெற்றுக் கொள்ளலாம்.

1 comment:

Anonymous said...

வைதாரையும் வாழவைப்போன் முருகன் அல்லவா? வாழ்த்தினால் எப்படி?
நல்ல முயற்சி. எனது பாராட்டு. நோக்கம் நிறைவுற எனது வாழ்த்து.
இளமுருகனார் பாரதி