அயராமல் இயங்கி ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நனவிடைதோயும் கவிஞர் அம்பி ஓடிடும் தமிழருக்கு அறைகூவல் விடுத்தவர் - முருகபூபதி

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம். ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.


அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப்பதவி ஏற்றதையடுத்து தமிழ்நாட்டில் 1968 இல்  நடந்த இரண்டாவது தமிழாரய்ச்சி மாநாட்டிற்காக நடைபெற்ற அகில உலக கவிதைப்போட்டியில் பங்கேற்ற கவிஞர் அம்பி, அதில் வெற்றியீட்டி தங்கப்பதக்கம் பெற்றவர். இதனை அம்பி அவர்களுக்கு, அச்சமயம் தமிழக அரசில் அங்கம் வகித்த மக்கள் திலகம் எம்..ஜி.ஆர். அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரசிகமணி கனகசெந்திநாதன் ஈழத்து பேனா மன்னர்கள் என்ற தலைப்பில் தொடர் எழுதியபோது அம்பியின் எழுத்துலகம் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இயல்பிலேயே இனிய பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள அம்பி நகைச்சுவையாகவும் அங்கதம் தொனிக்கவும் பேசவல்லவர்.
இதுவரையில் 15 நூல்களை எழுதியிருக்கும் அம்பி அவர்கள், இலங்கையின் தமிழ்மருத்துவத்துறை முன்னோடியான அமெரிக்க பாதிரியார் மருத்துவகலாநிதி சாமுவேல் கிறீன் அவர்களைப்பற்றி விரிவான ஆய்வு நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
அம்பி அத்துடன் நில்லாமல் குறிப்பிட்ட மருத்துவ முன்னோடிக்கு இலங்கையில் தபால் தலை வெளியிடுவதற்கும் முயற்சித்து அதில் சாதனை புரிந்தார். அம்பியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டது.
இந்த மதிப்பிற்குரிய செயலைப்புரிந்தமைக்காக இலங்கையில் அமெரிக்க தூதுவராலயம் அம்பி அவர்களை அழைத்து கௌரவித்து பாராட்டியது. இலங்கையில் இவரிடம் கற்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் இவரது தூண்டுதலாலும் ஊக்குவிப்பினாலும் எழுத்தாளர்களாக அறிஞர்களாக, கவிஞர்களாக உருவாகியிருக்கிறார்கள். கவிதைத்துறையில் இவரது ஆற்றலை வியந்து தமிழக இலக்கிய இதழான சுபமங்களா இவரை ஈழத்தின் கவிமணி என்று புகழாரம் சூட்டியுள்ளது.
பாப்புவா நியூகினியிலும் அவுஸ்திரேலியாவிலும் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுவர் இலக்கிய வரிசையில் சில கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அத்துடன் அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழ்மொழியை ஒரு பாடமாகப்பயில தமிழ் மாணவர்கள் முன்வந்தபோது அவர்களின் தேவைகருதி உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாட நூலாக்கக்குழுவில் பிரதம ஆலோசகராக பணியாற்றி இங்கு வாழும் தமிழ்க்குழந்தைகளின் தமிழ் அறிவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாகத்தொண்டாற்றினார்.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளின் நாவில் தமிழ் வாழவேண்டும் என்பதற்காக இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழைக்கற்பிக்க அமைக்கப்பட்ட பாடநூலாக்கக்குழுவில் கவிஞர் அம்பியின் பணியானது விதந்துபோற்றுதலுக்குரியது.
தமிழ்சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள், விழாக்கள்  உட்பட பல கவியரங்குகளிலும் அம்பி அவர்கள் புகலிட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற தொனிப்பொருளிலேயே தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். தேமதுர தமிழ் ஓசை உலகமெலாம் பரவச்செய்யவேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க தமிழின் சிறப்பை ஏனைய மொழிகள் அறிந்தவர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான அம்பி அவர்கள் அந்த அமைப்பின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பதுடன், இந்த அமைப்பின் வருடாந்த எழுத்தாளர் விழா ஒன்று கூடலில் நடைபெறும் சிறுவர் அரங்கு மற்றும் மாணவர் அரங்கு முதலானவற்றில் பங்குபற்றும் இளம் தலைமுறையினருக்கு தான் படைத்த சிறுவர் இலக்கிய நூல்களைப்பரிசளித்துவருகின்றார்.
அம்பி  இதுவரையில் எழுதியுள்ள நூல்கள்: .கிறீனின் அடிச்சுவடு,                     அம்பிப்பாடல், வேதாளம் சொன்ன கதை (கவிதை நாடகம்) Lingering Memories                                                                                   (ஆங்கிலம் மூலம் கற்கும்   தமிழ்க்குழந்தைகளுக்கான கவிதை நூல்)  அம்பி கவிதைகள் ( நான்கு தசாப்த கவிதைகள்) மருத்துவத்தமிழ் முன்னோடி,   Scientific Tamil Pioneer Dr. Samuel Fisk Green    ,  உலகளாவிய தமிழர்,  The World Wide Tamils,                  A String of Pearls , யாதும் ஊரே (ஒரு யாத்திரை) ,அம்பி மழலை                                              பாலர் பைந்தமிழ் , அந்தச்சிரிப்பு (கவிதை நாடகம்)                           கொஞ்சும் தமிழ் (வண்ணப்படங்களுடன் தமிழ்சிறார்களை கவரும் பதிப்பு) 
அம்பி இதுவரையில் பெற்றுள்ள விருதுகள்:
1968 உலகத்தமிழாரராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம்)
1993 இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’
1994 கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது.
1997 அவுஸ்திரேலியாவில்  மெல்பன் ‘நம்மவர்’ விருது.
1998 கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம்)
2004 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது
 இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள்  முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.
 அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதைநாடகம், பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தாஸிசியஸின் நெறியாள்கையிலும் யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளையபத்மநாதனின் அண்ணாவியத்திலும் (நாட்டுக்கூத்தாகவும்) அரங்கேறியுள்ளன.
  அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
தற்பொழுது அம்பி, அவுஸ்திரேலியா சிட்னியில் தமது மனைவி, மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசிக்கின்றார்.
தாயகம்விட்டு அந்நியம் புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழருக்கு கவிஞர் அம்பி விடுக்கும் பிரசித்திபெற்ற அறைகூவல் கவிதை இது:-

ஓடிடும் தமிழா

ஓடிடும் தமிழா நில், நீ ஒரு கணம் மனதைத்தட்டு
 வீடுநின்னூருள் சொந்தம், விளைநிலம் நாடு விட்டாய்
தேடியதெல்லாம் விட்டுத்திசைபல செல்லும் வேளை
 பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே
ஓர்தலைமுறையின் பின்னே உன்னடி உறவென்றேனும்
 ஊரிலே அறியாப்பிள்ளை உலகரங்கினில் யாரோ
தாரணிமீதில் நானோர் தமிழனென்றுறுதி செய்யின்
 ஊர்பெயர் உடைகள் அல்ல ஒண்டமிழ் மொழியே சாட்சி

சாட்சியாய் அமையுஞ் சொந்தச் செந்தமிழ் மொழியே முன்னோர்
 ஈட்டிய செல்வம் எங்கள் இனவழிச்சீட்டாம்
ஏந்த நாட்டிலே வாழ்ந்தபோதும் நடைமுறைவாழ்வில் என்றும்
 வீட்டிலே தமிழைப்பேணும் விதிசெயல் கடமை ஐய!
வீட்டிலே தமிழைப்பேசும் விதி செயல் கடமை ஆமாம்
 பாட்டனாய் வந்து பேரன் பரம்பரை திரிதல் கண்டே
ஈட்டிய செல்வம் போச்சே, இனவழி போச்சே என்று
 வாட்டு நெஞ்சுணர்வை வெல்ல வழி பிறிதொன்றுமில்லை.


No comments: