East Meets West நடன நிகழ்ச்சி ஒரு பார்வை

.                                                             நாட்டிய கலாநிதி கார்ததிகா கணேசர்

21 ஜூலை  பகாய் அரங்கிலே East Meets West என ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் ஜனனி   Beadle இளம் வயது முதல் பரதத்தையும் மேற்கத்தைய நடனத்தையும் பயின்ற இள நங்கை. சிறுவயதுமுதல் ஒஸ்ரேலியாவில் வாழ்பவர்.  அதனால் East ரும்  West ரும் இணையும் புதிய சமுதாயத்தின் வாரிசு.
நிகழ்ச்சியின் முன்பகுதி பரத நிகழ்ச்சியாகவும் இடைவேளையின் பின் திரை இசைக்கான  Bollywood நடனமும் மேற்கத்தைய நடனமும் நடைபெற்றது. சின்னன் சிறிசு முதல் வயது வந்தோர்வரை ஆடினார்கள்.பரதத்திலே புஸ்பாஞ்சலி சம்பிரதாய முறையில் அமைந்திருந்தது. அடுத்து வந்த கணேசஸ்துதியில் ஜனனி  உடன் அவரது பரத நாட்டிய குருவும் சிறிய தாயாருமான தமயந்தி பால்ராஜ்யும் இணைந்து ஆடினார்கள்.
பரதத்தை கன்னிப்பெண்கள் தான் ஆடவேண்டும் என்ற எண்ணம் பரவலாக எம்மிடம் உண்டு. தமயந்தி பால்ராஜ் ஆடியது எம்மவரின் தப்பான எண்ணத்தை மாற்றுவதாக அமைந்தது.ஆடுபவர் முறையாக ஆடினால் நிட்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள். அவர்கள் மனத்திரையில் இவர் ஆடலாமா என்ற கேள்வியை அகற்றிவிட்டு,  யார் எவர் என்பதையும் ஆராயாது , நாட்டியத்தை ரசிக்கவேண்டும். ரசிக்கும் படியாக ஆடுபவவர் ஆடினால் ரசியுங்கள்.

Queen of Abinayam என போற்றப்படும் பால சரஸ்வதி 65 வயதுக்குமேல் ஆடியபோது பார்க்கும் பாக்கியம் பெற்றவர் நான். " கிறிஸ்னா நீ பேகனே பாரோ" (கிறிஸ்ணா நீ வேகமாய் வராய்) என்ற பாடலுக்கு அவர் தனியாக நின்றுதான் ஆடினார்.அவரது அபார அபிநய திறமையால் அங்கு ஓடிவிளையாடும் சின்னக் கண்ணனை எம் கண்முன்னே கொண்டுவந்தார்.
எனது குருவான வருவூரரின் பிரதம சிஷ்யை கமலா லக்ஷ்மன் 61 வயதிலே ஆடினார். மறுநாள் பிரபல Hindu பத்திரிகையில் விமர்சனம் "அரிதாரம் போட்டதும் கமலாவின் அரை வயது குறைந்து விட்டது. ஆடத்தொடங்கியதும் அதிலும் அரை வயது குறைந்து விட்டது" என எழுதியது. " இன்றைய  இ ளம் தலைமுறைக்கு கமலா ஒரு எடுத்துக்காட்டு" என புகழ்ந்தது. நான் அந்த நிகழ்ச்சிக்குப் போய் இருந்தேன். ஒரு  இளம் நாட்டிய நங்கையால்கூட இப்படி ஆட முடியுமா என வியந்தேன்.நான் சிட்னிக்கு வந்த புதிதில் ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடத்தினேன். முழுநீள வர்ணத்தை ஜம்பது வயதில் ஆடினேன். பலர் இந்தவயதில் இப்படி ஆடமுடியுமா என வியந்தனர். .பார்ப்பவர் ரசிக்கும்படியான திறமை இருக்கும்போது நாட்டியக்கலைஞருக்கு வயது கட்டுப்பாடு கிடையாது.அடுத்து நிகழ்ச்சிக்கு வருவோம் சிறுமிகளும் பரதத்தை ரசிக்கும்படியாக ஆடினார்கள் மீனாட்சி தாலாட்டை காயத்திரி போஸ் அழகாக ஆடினார்.பாவயாமி ரகுநாமம் என்ற இராமாயண முழு கதையையும்கொண்ட உருப்படி. தமயந்தியின் மாணவிகள் குழுவாக ஆடியமை நாட்டியத்தைக் கற்று அறிந்தவர் புரிந்து ரசிக்கும் படியாக அமைந்திருந்தது.ஆனால் நாட்டியம் அறியாதார் புரியமுடியவில்லை . தில்லானாவுடன் பரதம் நிறைவேறியது.

இடைவேளையின் பின் Bollywood  நடனமும் மேற்கத்தைய நடனமும் மாறி மாறி நடைபெற்றது. முற்று முழுதாக ஒரு பதிய உத்வேகத்தை கொடுத்தது. மேற்கத்தைய நடனத்திலே பெண்களுடன் இணைந்து ஆண்களும் ஆடினர். நிகழ்ச்சி தங்கு தடையின்றி வேகமாக ஓடியது.
 East ரும்  West ரும் இணைந்த புதிய சமுதாயத்தின் வாரிசான ஜனனி புதுமை படைக்கும் கலைஞர்.கலை என்பது எமது உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே,. சமுதாய மாற்றங்கள் தவிர்க்கமுடியாத நியதி. நாம் வாழும் சமுதாயத்தின் வெளிப்பாடே எமது ஆக்கங்களும். கலைப்படைப்புக்களும். புதுமையை பழமைவாதிகள் எதிர்க்கலாம் ஆனால் தடைபோட முடியாது. வாழ்த்தி வரவேற்போம் புதுமைக் கலைஞர் ஜனனி மென்மேலும் வழர வாழ்த்துகிறேன்.No comments: