வானொலி மாமா நா. மகேசனின் - குறளில் குறும்பு 42 – “ எல்லாப் பொருளும் உளது”
ஞானா:        அப்பா….திருவள்ளுவ மாலையிலை ஒரு புலவர் திருக்குறளிலை எல்லாப்  பொருளும் சொல்லப்பட்டிருக்கு, அதிலை இல்லாத பொருள் ஒண்டும் இல்லை எண்டு பாடியிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமே?

அப்பா:        ஓம் ஞானா, மதுரைத் தமிழ் நாகனார் எண்ட புலவர் பாடியிருக்கிறார்.
           
            எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்
            இல்லாத எப்பொருளும் இல்லையால் ------ சொல்லால்
            பரந்தபா வால்என பயனவள் ளுவனார்
            சுரந்தபா வையத் துணை.

       
        இதுதான் அந்தப் பாட்டு ஞானா.

ஞானா:        அம்மா நீங்கள் சொல்லுங்கோ. இது இந்தக் காலத்துக்குப் பொருத்தமாய் இலைத்தானே. இந்தத் தமிழ்நாகனார் கொஞ்சம் மிகைப்படச் சொல்       யிருக்கிறார் எல்லே?

சுந்தா:     எனக்கும் அப்பிடித்தான் படுகுது. அப்பா நீங்கள் என்ன சொல்லிறியள்?

அப்பா:        தாயும், பிள்ளையுமாய் வழக்கமான குறும்பு விடுகிறியளோ அல்லாட்டில் என்னை மடக்க வேணுமெண்டு வாறியளோ?

ஞானா: 
       அப்பா, திருக்குறளிலை எல்லாப் பொருளும் இருக்கெண்டால் இந்தக் காலத்திலை உள்ள விஞ்hன ரீதியான பொருள் எல்லாம் இருக்கே?

அப்பா:        ஞானா, சுந்தரி, எல்லாப் பொருளும் இருக்கெண்டால் அதைச் சொன்னவர் எந்தக் காலத்திலை வாழ்ந்தார், அதை எந்தக் கருத்திலை சொன்னார் எண்டதை நீங்கள் சிந்திக்க வேணும். அதிலை எல்லாப் பொருளும் உள்ளது எண்டதை வைச்சுக்கொண்டு திருக்குறளிலை, கார் இருக்கோ, TV இருக்கோ, CD  இருக்கோ எண்டு கேட்டால் நான் என்ன பதிலைச் செல்லிறது?

ஞானா: 
       அப்பா நீங்கள் ஒரு பதிலைத்தான் சொல்லலாம். மதுரைத் தமிழ் நாகனார் மிகைப்படச் சொல்லியிருக்கிறார் எண்டு ஒப்புக் கொள்ள வேணடடியதுதான்.

அப்பா:        ஞானா அவர் சொன்னது, தமிழர்களிடையே உள்ள இயல்புகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் இதுகளைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் உண்மை.

சுந்தரி:        ஆ!....ஆ!....கொஞ்சம் பொறுங்கோ அப்பா……தும்…..தும்……தும்மல் வரு..   அச்சும்…..அச்சும்……

ஞானா:        நல்ல நேரத்திலை தும்மினியள் அம்மா…..அப்பா இப்ப சொல்லுங்கோ திருக்குறளிலை தும்மல் இருக்கோ?

அப்பா:        நான் சொன்னால் நீ நம்பமாட்டாய் ஞானா. நான் அறிஞ்ச மட்டிலை ஒரு நாலு ஐஞ்சு குறள்களிலே இந்த் தும்மலைப்பற்றி இருக்கு.

சுந்தரி:        என்னப்பா? ஐஞ்சு குறளிலை தும்மலைப் பற்றி இருக்கோ.?

ஞானா:        அப்பா அந்த ஐஞ்சு குறள்களையும் சொல்லுவியளே அப்பா?

அப்பா:        ஞானா, நான் என்ன நடக்கும் திருக்குறள் எண்டே நினைச்சாய்? நானும்  புத்தகங்களைப் பாத்துத்தான் சொல்ல வேணும். இப்ப வேணுமெண்டால் ஒரு குறளைச் சொல்லிறன் கேளுங்கோ. பிறகு மற்றதுகளைத் தேடிச் சொல்லிறன்.

சுந்தரி:        ஓமப்பா, இப்ப நீங்கள் ஒண்டை எண்டாலும் சொல்லுங்கோ பாப்பம்

அப்பா:        சுந்தரி “மூக்குளையிது, ஆரோ நினைக்கினம் போலை கிடக்கு” எண்டு ஆக்கள்  சொல்லிறதை நீர் கேள்விப்படயில்லையே?

சுந்தரி:        கேள்விப்பட்டிருக்கிறன் அப்பா, எங்கடை அம்மா நெடுகச் சொல்லுவா. இந்தத்தும்மல் வந்து, சிலநேரம் வாறதுபோலை இருக்கும். பிறகு வராமல் அடங்கிப்போகும்.

அப்பா:        சுந்தரி உதை வைச்சு வள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறார். காமத்துப்பாலிலை நினைந்தவர் புலம்பல் என்டு ஒரு அதிகாரம் இருக்கு. இந்த அதிகாரத்திலை ஒரு காதலி, தன்ரை காதலனை நினைச்சு மனவருத்தப் படுகிற செய்தியளைச் சொல்லியிருக்கிறர் திருவள்ளுவர்.

சுந்தரி:        அந்த அதிகாரத்தின்ரை இலக்கம் தெரியுமே அப்பா? பிறகு எடுத்துப் பாக்கலாம்.

அப்பா: 
       அததிகாரத்தின்ரை இலக்கம் எனக்கு ஞாபகம் இல்லைச் சுந்தரி. நூற்றிச் சொச்சமாய் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

ஞானா:        இஞ்சை இருக்கப்பா 121 அதிகாரம்.

அப்பா:
        எட கடவுளே! திருக்குறள் புத்தகத்தை விரிச்சு வைச்சுக் கொண்டு என்னைச் check பண்ணிறியே ஞானா?

ஞானா:        இல்லை அப்பா, உங்களோடை கதைக்கேக்கை புத்தகத்தையும் வைச்சுக்கொண்டு குறள்களைப் பாத்தால் நல்லாய் விளங்கும் எண்டு நினைச்சன். அதுதான்………

அப்பா:        சரி சரி, அதுகும் ஒரு நல்ல யோசினைதான். இப்ப குறளைக் கேளுங்கோ:

                நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
                 சினைப்பது போன்று கெடும்.
       
        ஞானா தும்மல் குறளிலை இருக்கோ இல்லையோ?

சுந்தரி:        இருக்குதுதான் அப்பா. கையோடை கருத்தையும் சொல்லுங்கோவன்.

அப்பா:        உங்க தரவளியளுக்கு வாழைப்பழத்தை உரிச்சு வாயிலை குடுக்கக் கூடாது.
        உவள் பிள்ளை ஞானா புத்தகம் வைச்சிருக்கிறாள் கண்டுபிடிச்சுப் படிக்கச்
        சொலலும்.

ஞானா:    உது பெரிய வேலையே அப்பா. படிக்கிறன் கேளுங்கோ. 1203 குறள் காதலி சொல்லிறாள் “எனக்குத் தும்மல் வருவது போலத் தோன்றி வரவில்லை. ஏனோ தெரியவில்லை,    என்காதலர் என்னை நினைப்பதுபோல் இருந்து பின் நினைக்கவில்லைப் போல் இருக்கிறது. அதனால்தான் எனக்கு வந்த தும்மல் வாராமல் நின்றுவிட்டது. அவர் என்னை ஏன் நினைக்கப் போகிறார், அவருடைய எண்ணத்தில் நான் இருந்தால்தானே    நினைப்பார்” எண்டு மனம் வருந்துகிறாள்.

அப்பா:        எப்பிடியிருக்குத் தும்மல் விளையாட்டு. சுந்தரி இவள் பிள்ளை ஞானாவுக்கு உந்த
        நிலை எப்ப வரும் எண்டுதான் நான் காத்துக்கொணடிருக்கிறன்.

ஞானா:        சும்மா போங்கோ அப்பா. உங்களுக்கு என்னோடை பகிடிதான்.


                            (இசை)

No comments: