முருகன் வருகைப் பத்து

                  உ
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவை
       ஒட்டிப் பிரசுரிக்கப்படுகிறது.
        அழகன் முருகனை நினைந்து
         ‘வருகைப் பத்து’ப் பாடி    
            மகிழ்கிறார்
“தங்கத் தாத்தா  நவாலியூர் க சோமசுந்தரப் புலவர் அவர்கள்     
அவரின் பேரனார் பாரதி சிறுவர்களுக்காகச் சிந்து பாடுகிறார்!

     முருகன் வருகைப் பத்து    
       (நவாலியூர் க சோமசுந்தரப் புலவர் இயற்றியது )      

       கூவாய் குக்குடமே – உயர்
       கொடியாகக் கொண்ட பிரான்
       மூவாமேனி முருகப் பிரான் வரக்
       கூவாய் குக்குடமே!.

       இசையாய் இன்குயிலே - இன்
       ஏழிசை எம்பெருமான்
       அசையா முத்தமிழ்  ஆறுமுகன் வர
       இசையாய் இன்குயிலே!.

       அகவாய் ஆய்மயலே – உனை
       ஆண்டவன் எம்பெருமான்
       மகவான் மங்கை மணாளன் இங்கே வர
       அகவாய் ஆய்மயிலே!.

       பலுக்காய் பல்லி நல்லாய் - உரை
       பயனுந்தா னாயபிரான்
       அலுக்கா தெம்மையும் ஆளுஞ் செவ்வேள் வரப்
       பலுக்காய் பல்லி நல்லாய்!.



       கரையாய் காக்கைப் பிள்ளாய் - இரு
       கண்மணியாய பிரான்
       விரையார் வெட்சி விசாகன் இங்கே வரச்
       கரையாய் காக்கைக் பிள்ளாய்!.

      
       மிழற்றாய் பைங்கிளியே – உறு
       மெய்ப் புகழ் கேட்டபிரான்
       கழற்றாவுந் தண்டைக்கான் முருகோன் வர
       மிழற்றாய் பைங்கிளியே!.

       முரல்வீர் வண்டினங்காள் - தமிழ்
       மூலவொலிப் பெருமான்
       குரல்வாய்ப் பைந்தினைக் குன்றுடையான் வர
       முரல்வீர் வண்டினங்காள்!.

       ஊதாய் வால் வளையே – தனி
       ஓமொலி யாகிநின்றான்
       நாதாந் தத்து நடனப் பிரான் வர
       ஊதாய் வால் வளையே!

       ஓலியாய் மாமணியே – ஒலி
       ஓய்ந்த இடமுடையான்
       கலிசேர் காலத்துக் கந்தன் இங்கே வர
       ஓலியாய் மாமணியே!.

       தோன்றாய் செங்கதிரே – சுடர்ச்
       சோதியுனக் கருளும்
       வான்றோய் சோதி வரைப்பெருமான் வரத்
       தோன்றாய் செங்கதிரே!.  
-------------------------------------


         நல்லூர் முருகன் கோயில்
                                ------சிறுவர் பாடல்கள்
         
             ( வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி )
          
          காலா காலம் அருள்பா லிக்கும்
             கருணைக் கந்தன் கோயில்
          நாலா திக்கும் புகழ் பெருக்கும்
             நல்லூர் முருகன் கோயில்!.
                 

          கோலா கலமாய் விழா வெடுக்கும்
             கோபுரம் கொண்ட கோயில்
          “வேலா விமலா வினைதீர்” என்றே
             வேண்டும்  நல்லூர்க் கோயில்!.

           சித்தர் முத்தி சிறக்கப் பெற்ற
              திருத்தலம் நல்லூர்க் கோயில்
            பத்தர் கூடிப் பழவினை போக்கப்
              பரவிடும் நல்லூர்க் கோயில்!.
                       
           அன்பொடு நீதி நேர்மை ஒழுக்கம்
               அனைத்தும் பெருக வேண்டி
           மன்பதை ஏத்தித் தொழுவது நல்லூர்
              வரமருள் முருகன் கோயில்!.
            
            ஆணவம் கன்மம் மாயை நீக்கி
               அருளும் ஒளியும் சேர்க்கும்
            மாணவர் நாமும் தூயவ ராக
               வணங்கிடும் நல்லூர்க் கோயில்!.

            “வந்தா தரிக்க மயில்மேல் ஏறி
              வாராய் முருகா” என்றே
            “கந்தா சுகந்தா கடம்பா” என்று
              கசிந்தே உருகித் தொழுவோம்!.
           
            -------------------------------------



No comments: