.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தனவந்தர் மாணிக்கவேலு முதலியாருக்கு பெங்களூர் அரண்மனை சாலையில் பரந்த வளாகத்தின் நடுவே ஒரு மாளிகை காலனீய கட்டிடக்கலை பாணியில் பெரிய தூண்களுடன் கூடிய எழிலார்ந்த பங்களா. இந்த சொத்தை அரசுக்கு எழுதி வைத்துவிட்டு முதலியார் இறந்து விட்டார். 1996 முதல் இந்தக் கட்டிடத்தில் தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) செயல் படுகின்றது. பிரித்தானிய கால ஓவியர் டேனியல் முதல் நம்மூர் அச்சுதன் கூடலூர் படைப்புகள் வரை காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பெரிய மரத்தடியில் ஒரு சிற்றுண்டிக் கடையும் உண்டு. ஒரு சொகுசான திரையரங்கமும் அண்மையில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இங்கு நாடகம், நடனம், உரைகள் என பல நிகழ்வுகள் உண்டு. மின்னஞ்சலில் விவரம் வந்து விடுகின்றது. முந்தின நாள் நினைவுபடுத்தவும் செய்கிறார்கள். கடைசியாக இங்கு ஆர்சன் வெல்ஸ் இயக்கி, நடித்த Othello (1952) திரைப்படம் பார்த்தேன். பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த படம்.
ஆனால் நான் இங்கு கூறவந்தது வேறு விஷயம் பற்றி. இந்தக் கலைக்கூடத்தின் மூன்றரை ஏக்கர் வளாகத்தில் விளாம்பழ மரம், பன்னீர் புஷ்பமரம் அடங்க 28 வகை மரங்கள் உள்ளன. ஒரு ஞாயிறு மதியம், மரங்களை அறிமுகப்படுத்த இங்கு ஒரு கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Tour of trees என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு சுமார் ஐம்பது பேர், தண்ணீர் பாட்டில், நோட்டுப் புத்தகம் சகிதம் கூடினோம். விஷயம் தெரிந்த ஒருவர் - பெங்களுரின் மரங்களைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - ஒவ்வொரு மரமாக கூட்டிச் சென்று விளக்கினார். மாளிகையின் மாடியிலிருந்து ஆரம்பித்தோம். அந்த வளாகத்தின் மரங்களின் விதானங்களை மேலே இருந்து பார்க்க முடிந்தது. இலைகளின் அமைப்பு, பூக்களின் வடிவம் இவை பற்றி அருகில் பார்த்து அறிய முடிந்தது.
நம்மூரில் முள்ளு முருங்கை என்றறியப்படும் Silk Cotton treeயிலிருந்து தொடங்கினார். எல்லா இலைகளும் உதிர்ந்து, செந்நிறப்பூக்கள் மட்டும் நிறைந்திருந்தன. இந்த மரத்தின் பட்டையில் கூரிய முட்கள் இருப்பதால் இதில் குரங்கு, மனிதர் ஏறமுடியாது என்று அறிந்து கூடு அமைக்க இம்மரத்தை நாடி தேனீக்கள் வருகின்றன என்றார். மார்ச் மாதம் இலையே இல்லாமல் கிளைகள் முழுவதும் சிவப்பு பூக்களாகப் பூத்துக் குலுங்கியிருந்தன. இதிலிருந்து வரும் கோந்து நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பூப்பூத்து முடிந்த பின்னர் வரும் காய்களிலிருந்து கிடைக்கும் பஞ்சை மெத்தை, தலையணை செய்யப் பயன்படுத்துகிறார்கள். இம்மரம் தமிழ்நாட்டில் காணப்படும் இலவு மர வகையைச் சார்ந்தது.
பூக்கள் நிறைந்த நாகலிங்க மரமொன்றைப் பார்த்தோம். அதன் செந்நிறப் பூவில் லிங்கம், படமெடுத்த நாகம் போன்ற இரு பகுதிகள் இருப்பதால் இந்தப் பெயர். தென்னமெரிக்காவிலிருந்து நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மரம் என்றாலும் இரண்டு நூற்றாண்டுகளில் அது நமது தொன்மத்தில் இடம் பிடித்து விட்டது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் உலகின் பல இடங்களிலிருந்து-அவர்கள் காலனிகள்தான் உலகெங்கும் இருந்ததே - பல வகை மரங்களைக் கொண்டுவந்து இங்கு நட்டனர். அதிலும் அவர்களது பட்டாளங்கள் இருந்த பெங்களூர், புனே, ராஞ்சி போன்ற நகரங்களில் (கன்டோன்மென்ட் டவுன்) இவைகளை அதிகமாகக் காணலாம். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் காணப்படுவது தூங்குமூஞ்சி மரமென்று குறிப்பிடப்படும் Rain tree. பரந்த விதானத்துடன் இது நெடிதுயர்ந்து வளரும். பெங்களூரில் என் மகள் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஆறாவது தளத்தில் வசிக்கின்றாள். ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் விதானம் அதற்கும் மேல் உயர்ந்துள்ளது. வீட்டிற்குள்ளிருந்தே, அந்த மரத்திலிருக்கும் மசூதிப்புறா, குக்குறுவான், கிளி முதலான பறவைகளைக் கண்ணளவில் அருகில் பார்க்க முடிகின்றது. எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் குல்மொஹர் மரமும் மடகாஸ்கரிலிருந்து கொண்டு வரப்பட்ட தாவரம்தான்.
தமிழகத்தில் இருக்கும் அரிய வெளிநாட்டு மரங்களில் முக்கியமானது ஆப்ரிக்க மரமான பேயொபாப் மரம் (Baobob). அரபு வணிகர்களால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட மரமிது. கிளைகள் பார்ப்பதற்கு வேர்கள் போலிருக்கும். இறைவன் உலகைப் படைத்துக்கொண்டிருக்கும்போது, இம்மரத்தை உருவாக்கி விட்டு சற்று கண்ணயர்ந்த நேரத்தில், சாத்தான் அவரது வேலையைக் கெடுக்க இம்மரத்தை தலைகீழாக நட்டுவிட்டான் என்று ஒரு ஆப்ரிக்க தொன்மக் கதை உண்டு. சென்னையில் தூய தாமஸ் மலை ஏறும் இடத்தில் ஒரு மரமுள்ளது. தியாசாபிகல் சொசைட்டிக்குள்ளும் ஒன்று உண்டு. இதன் தமிழ்ப்பெயர் ‘பாப்பார புளிய மரம்'. என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. அதே போல் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்த மகாகனி மரங்களையும் சென்னையில் காணலாம்.
மரங்களைப் பற்றிய அக்கறை நாம் காட்டாதது புறவுலகிலிருந்து நாம் அன்னியப்பட்டிருப்பதன் ஒரு குறியீடுதான். சென்ற ஆண்டு, ட்ரைவ் இன் உட்லேண்ட்ஸ் எதிரே இருக்கும் தேவாலய வளாகத்தில், சாலைக்கருகே இருந்த நூறாண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு தொன்மையான, உயரமான அரிய வகை, நமை மரம் (Button tree) என்று குறிப்பிடப்படும் மரம் திடீரென சாய்க்கப்பட்டது. ஒரு கல்லூரிப் பேராசிரியை இதைக்கண்டு மனம் வெம்பி ஆங்கில இதழொன்றில் எழுதினார். ஆனால் போன மரம் போனதுதான். மற்ற நகரங்களில் இன்று இத்தைகைய மரங்களை heritage tree என்று இனங்கண்டு பாதுகாக்கிறார்கள். பெங்களூரில் இம்மாதிரியான மரங்களைக்காட்டும் ஒரு வரைபடம் கூட கிடைக்கின்றது.
நம் நாட்டில் புள்ளினங்களுக்கும் பாலூட்டிகளுக்கும் எளிய நடையில் எழுதப்பட்ட சிறப்பான கள கையேடு (field guide) கிடைக்கின்றன. ஆனால் மரங்களை அறிமுகப்படுத்தி, அடையாளம் காட்டி நூல் எழுதுவது சிரமம். எப்படி வர்ணிப்பது? இலைகளின் படம் வேண்டும். பூக்கும் மரமாக இருந்தால் பூவின் படம் தேவை. இந்திய மரங்கள் பற்றி எனக்குத் தெரிந்த அருமையான நூல் பிரதீப் கிஷன் எழுதிய Trees of Delhi என்ற புத்தகம். பிரமாதமான படைப்பு. நேர்த்தியான படங்கள். பெங்குவின் வெளியீடு.. இது டில்லியில் காணப்படும் மரங்களைப் பற்றியது என்றாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மரங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தலாம்.நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன்.
திருச்சி தூய யோசேப்பு கல்லூரியில் பேராசிரியராக இருந்த அருள்தந்தை மேத்யூ (1930-2004) தமிழ்நாட்டு மரங்களை, செடிகொடிகளைப் பட்டியலிட்டு பல ஆங்கில நூல்கள் வெளியிட்டுள்ளார். இதில் அவர் களத்தில் சேகரித்த தமிழ்ப் பெயர்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. மஞ்சள் நிற பூப்பூக்கும் ஒரு மரத்தின் பெயர் ‘வாதமுடக்கி’. வாதத்திற்கு மருந்தாக இதன் பட்டை பயன்படுத்தப்படுவதால் இந்தப்பெயர். இதில் ஒரு நூல் தமிழாக்கப்பட்டுள்ளது. நூலின் பெயர் சற்று கடினமாக இருந்தாலும்- மையத் தமிழக களவகைத் தாவரவியல்- உள்ளடக்கம் எளியதுதான்.எல்லா நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம். ஆனால் இது ஒரு கள கையேடு அல்ல.
மரங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் ஒரு சராசரி மனிதருக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு மரங்களுக்கு மேல் தெரியாது.சென்னையில், திருவான்மியூரில் வசித்த போது சில நண்பர்கள் மரங்களைப் பேண, அறிந்துகொள்ள ‘நிழல்’ என்ற அமைப்பை உருவாக்கியபோது அதில் நான் என்னை இணைத்துக்கொண்டேன். மாதமொரு முறை நகரின் ஒரு பகுதியில் சுற்றி நடந்து அங்குள்ள மரங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். tree walk என்ற இந்த நிகழ்வு மூலம் பல சுவாரஸ்யமான நண்பர்கள் கிடைத்தார்கள். நடேசனுக்கு மரங்கள்தாம் உயிர், மூச்சு எல்லாம். செங்குன்றம் அருகே தனது பண்ணையில் ஒரு சிறு காட்டையே உருவாக்கியிருக்கின்றார். அவ்வப்போது அங்கு எங்கள் குழு செல்வதுண்டு. நிழல் நண்பர்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளுக்குச் சென்று மரங்கள் நட்டு, கைதிகளுக்கு மரங்களைப் பராமரிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். மரங்கள் பற்றிய ஒரு நூலகத்தையும் நிழல் நடத்துகிறது.
ஒருமுறை தாம்பரம் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் இந்தக் குழுவினருடன் சுற்றியது மறக்க முடியாத அனுபவம். தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் கூட வந்து விளக்கினார். கட்டமரம் செய்யப் பயன்படும் மரத்தைக் காட்டினார். ஒரே முறை பூத்துக் குலுங்கி பின் அழிந்துபோகும் கூந்தல் பனைமரமொன்றைப் பார்த்தோம். இந்த மரத்தின் ஆயுள் ஏறக்குறைய 80 ஆண்டுகள். நம்மூரிலிருந்தும் இந்த மரங்களை வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்கள் எடுத்துச் சென்று பரப்பி இருக்கின்றார்கள். கூந்தல் பனை இன்று சூரிநாம் நாட்டிலிருப்பது, அங்கு சென்ற தமிழர்களால்தான்.
சென்னை நகரில் அருங்காட்சி வளாகம், மகளிர் கிறித்துவக் கல்லூரி, தியாசாபிகல் சொசைட்டி போன்ற பல பகுதிகளில் வெகு பழமையான மரங்களைப் பார்க்கலாம். புனித ஜார்ஜ் (ஜெமினி அருகே) ஆலய கல்லறைத் தோட்டத்தில் ஒரு உயரமான, தொன்மையான மருத மரம் ஒன்று நிற்கின்றது கோவில் தேர் செய்யப் பயன்படும் மரமிது. அறுத்து, துண்டாக்கி சிற்பம் செய்யும்போது செதுக்குவதற்குத் தோதாக மென்மையாக இருக்கும். வெயிலும் காற்றும் பட, கல் போல உறுதியாகி விடும் தன்மை கொண்டது.
நமது சுற்றுச்சூழலுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. நம் கோவில்களில் பல வகையான மரங்கள் ஸ்தல விருட்சம் என வழிபடப்படுவது நம் பாரம்பரிய சுற்றுச்சூழல் அக்கறையின் ஒரு வெளிப்பாடே. ஒவ்வொரு மரமும் ஒரு வாழிடம். பூக்களைத் தேடி தேனீக்களும் தேன்சிட்டுகளும் வருகின்றன. அணில்,பல்லி போன்ற பிராணிகளுக்கு மரம்தான் வீடு. குரங்கு, மரநாய், ஓணான் போன்ற உயிரிகளுக்கும் அதுதான் வசிப்பிடம். கொம்பேறிமூக்கன், கண் கொத்திப்பாம்பு போன்ற பாம்புகளும் மரங்களில் இருக்கும். பெரிய ஆலமரங்களில், மருத மரங்களில் பழந்தின்னி வௌவால்கள் தொங்கிக்கொண் டிருப்பதைப் பார்க்கலாம். பார்க்குமிடமெல்லாம் மரங்கள் இருந்தாலும் அவைகளை நாம் கவனிப்பதில்லை. ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்வார், "மரத்தைக் கவனித்துப் பாருங்கள்” (Observe a tree) என்று.
சென்ற சில ஆண்டுகளில் தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. எத்தனை மரங்கள் சாய்க்கப்பட்டன, எத்தனை புதிய மரங்கள் நடப்பட்டன என்ற விவரம் இல்லை. காலநிலை மாற்றத்திற்கும் மரங்களுக்கும் உள்ள இணைப்பு பற்றி இன்று நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் மரங்களுக்கு நாம் தரும் கவனிப்பு போதவே போதாது. எந்த இடத்தில் எந்த வகை மரம் நடவேண்டும் என்பதை யோசித்து செய்ய வேண்டும். முடிந்தவரை புங்கம், வேம்பு, புளியம் போன்ற உள்ளூர் மரங்களையே நட வேண்டும். அவைகளுக்கு கவனிப்பு அதிகம் தேவையில்லை. லேசாக விழுந்து விடாது. வெகு நாட்கள் நிலைத்திருக்கும். அண்மையில் தமிழக சட்டசபையில் மரப் பாதுகாப்பு சட்டம் சீக்கிரமே இயற்றப்படும் என்று அறிவிப்பு வெளியானது (15.5.12) நல்ல செய்திதான். மர நலனிற்கென ஒரு குழுவும் (Tree Authority) ஏற்படுத்தப்படும் என்ற செய்தியும் வருகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், தனியார் நிலத்திலிருக்கும் மரங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். தொன்மையான அல்லது அரிய வகை மரமொன்றை வெட்டித் தள்ளிவிட முடியாது.
இவைகளை விட முக்கியமாகச் செய்யவேண்டியது நமது பள்ளிகளில் மரங்களைப்பற்றிச் சொல்லிக் கொடுப்பதுதான். அவைகளை அடையாளம் கண்டு கொள்ளத் தெரிந்து கொள்வது மட்டுமன்றி, மரங்களுக்கும் நம்வாழ்விற்கும் உள்ள பிணைப்பை சிறுவர்கள் உணர வேண்டும். மரக்கன்றொன்றை நட எவ்வாறு குழியைத் தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படை விவரங்களையும் சொல்லித்தர வேண்டும். நம் நாட்டின் சிறப்பு மரங்களான ஆல், அரசு இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment