.
அன்பே
உனக்கும் எனக்குமான
உறவுகள்
எந்தக் கவிஞ்ஞனும்
இதுவரை புனைந்துவிடாத
வார்த்தைகளின்
வனப்புகளைத் தாண்டி
வரையப்பட்ட கவிதைகளடி...
நாம் பழகிய
அழகிய நாட்களின்
நினைவுகள்
எந்த ஓவியனது
தூரிகையிலும்
இதுவரை சிக்கிவிடாத
அற்புதமான ஓவியங்களடி...
உன் வார்த்தைகள்
என் செவிகளில் விழுந்த
அந்த மிகமெல்லிய
முதலாவது குளிர்நாளில்
நீ பேசிய ஒவ்வொரு
வரிகளையும்
என் நினைவுப் பெட்டகத்தில்
எடுத்துச் செல்கிறேன்..
பழைய சில
முத்திரைகளையும்
பட்டாம்பூச்சிகளின்
இறகுகளையும்
பொன் வண்டு
முட்டைகளையும்
எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்
சேகரித்து வைத்திருக்கும்
சிறுவனைப்போலவே
உன் மேலான
என் அன்பின் நினைவுகளையும்
என்னுடனே எடுத்துச் செல்கிறேன்..
என் கனவுகளில்
அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்
எல்லைகள் பரந்தவை என்பதை
உணர்ந்து கொண்ட பொழுதில்
உன் பறத்தலுக்காக
உன் பாதைகளில் இருந்து தூர விலகி
என்காதலுடன் நான்
ஒடுங்கிக் கொள்கிறேன்..
சிகரங்கள் தொடவேண்டிய
உன் சிறகடிப்புக்காக
சுய நலங்களுடன்
உன்னைச் சுற்றிய
என் கனவுகளுக்கு நானே
தீ மூட்டிக் கொள்கிறேன்..
எல்லையற்ற வானத்தில்
கட்டற்றுப் பறக்கும்
பட்டாம் பூச்சி
உன் கனவுகளுக்கு நான்
வட்டமிட்டுவிடக் கூடாதென்பதால்
உன் எண்ணங்களில் இருந்து விலகி
எட்ட நின்றுகொள்கிறேன்..
கால நதியின்
நீள் பாய்ச்சலில்
கண்ணீராய் கரைந்து.....
தூரங்கள் பிரிந்து......
நீயொரு திசையிலும்
நானொரு திசையிலுமாகக்
கனவுகளைச் சுமந்துகொண்டு
அலைந்து திரிந்தாலும்
ஒன்றாகும் உணர்வுகளிலும்
சிந்தனைகளிலும்
எம்மிரண்டு இதயங்களினதும்
இயங்கு புள்ளிகள்
சுற்றிக்கொண்டிருக்கும்..
நீ உயரப் பறந்து கொண்டே இரு..
உன் கனவுகளை யாருக்காகவும்
விற்றுவிடாதே..
பிரிந்தும் பிரியாத
உன் நினைவுகள்
மனதின் ஆழத்தில்
பூக்கும் பொழுதெல்லாம்
உன் வெற்றிகள் - என்னை
உற்சாகப் படுத்தும் அன்பே..
பிரிவதற்கென்றே
சேர்ந்த உறவா நாம்..?
புரியாத மெளனங்களே
விடைகளாக
உனை விட்டுப்போவதை
நினைத்து
செத்துப்போகும்
என் விழிகளில்
எட்டிப்பார்க்கின்றன
உன் நினைவுகள்
கண்ணீராய்...
உருகி வழியும்
கண்ணீர்த்துளிகளுடன்
யாரும் காணாமலே
கரைத்துவிடுகிறேன்
என் இதய வலிகளை...
நாளை இவை உன்
கனவுகளின் சிறகுகளில்
பாரமாக இருந்து விடக் கூடாதென்பதால்....
Nantri:theeraanathi.blogspot
No comments:
Post a Comment