தமிழ் சினிமா


மறுபடியும் ஒரு காதல்

மருத்துவராக இருக்கும் கதாநாயகன் ஜீவாவுக்கு, அவர் படித்த மருத்துவ கல்லூரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்விழாவிற்கு செல்லாமல் மது அருந்திவிட்டு லாரி ஒன்றில் அடிபட்டு கீழே விழுகிறார். அப்போதிலிருந்து பிளாஷ் பேக் விரிகிறது.

கதாநாயகி கவிதா லண்டனில் இருக்கிறார். லண்டனில் பெரிய புள்ளியாக இருக்கும் சுமனின் ஒரே மகள் இவர்.

லண்டனில் உள்ள எப்.எம் ரேடியோ நடத்தும் கவிதைப் போட்டி ஒன்றில் சென்னையில் இருக்கும் நாயகனும், லண்டனில் இருக்கும் நாயகியும் கலந்து கொள்கின்றனர்.

இருவரும் வெற்றிபெற, கதாநாயகி மட்டும் பரிசினை பெற வருகிறார். அங்கே கதாநாயகனின் கவிதையைக் கண்ட நாயகி, எப்.எம். மூலம் நாயகனின் மின்னஞ்சல் முகவரியைப் பெறுகிறார். இமெயில் சாட்டிங்காக மாற அது காதலாக மாறுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் சுமன் தன் மகளை தமிழ்நாட்டிற்கு கூட்டி வருகிறார். தனது காதலனின் தகவல்களை பென் டிரைவில் எடுத்து வரும் நாயகி, அதை தவற விட்டு விடுகிறார். சென்னை வரும் கதாநாயகி மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். இக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் நாயகன்.

இருவருக்குமான சாட்டிங் தொடர்பு லண்டனோடு முடிந்து போகவே, இருவரும் தவித்துப் போகிறார்கள். இதனிடையே சில சந்திப்புகளால் நாயகன், நாயகி பெற்றோர்கள் ஒன்றிணைய, இருவருக்கும் வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

தன் கணவர்தான் தான் காதலித்தவர் என்று நாயகிக்கு தெரியாமலும், தன் மனைவிதான் தான் காதலித்தது என நாயகனுக்கு தெரியாமலும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். இருவரும் தங்களது காதலை எண்ணி ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்கிறார்கள்.

இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

ஜீவா கேரக்டரில் வரும் அனிருத் சிறப்பாக நடித்திருக்கிறார். கவிதா கேரக்டரில் வரும் ஜோஷ்னா கண்ணுக்கு பார்க்க அழகாக இருக்கிறார். போலி டாக்டர் சிங்காரம் கேரக்டரில் வரும் வடிவேலுவின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.

நாயகனின் தந்தையாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், நாயகியின் தந்தையாக வரும் சுமன் ஆகியோர்கள் தங்களது கேரக்டரை நிறைவாய் செய்திருக்கிறார்கள். காதலை சுருக்கமாய் காண்பித்து, பிரிவினை பெரிதாக காண்பித்திருப்பது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுகிறது.

கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. நாயகன் நாயகியின் சோகத்தை ஒரு டிராக்கில் அமைத்து, மறு டிராக்கில் வடிவேலுவின் காமெடியை வைத்து படத்தை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் வாசு பாஸ்கர். கிளைமாக்ஸில் எதிர்பாராத முடிவை தந்து படத்தை முடித்திருக்கிறார் வாசு பாஸ்கர்.

மறுபடியும் ஒரு காதல் - ரசிகர்களிடம் புதைந்து போகும் காதல்.

நடிகர்: அனிருத், வடிவேலு, ஒய்.ஜி.மகேந்திரன், சுமன்.
நடிகை: ஜோஷ்னா.
இயக்குனர்: வாசு பாஸ்கர்
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு: கண்ணன்.



முரட்டுக்காளை


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை.

பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார்.

அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார்.

காளையின் ஊருக்கு வரும் சரோஜா, காளையை பற்றி முழு தகவல்களை அறிந்து கொண்டு பிரியாவிடம் வருகிறார். காளைக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சம்மதம் சொன்னால் காளை உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்கிறார்.

இதனையடுத்து காளையின் தம்பிகளை சந்திக்கும் பிரியா, தனது கல்யாணத்திற்கு அவர்களிடம் சம்மதமும் வாங்கிக் கொள்கிறார்.

வரதராஜன் தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம் கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக் கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம் தருகிறார்.

இந்நிலையில் தனது தங்கை காதலிக்கும் ஆள் காளை என்பதை விட, அவரது நிலத்தில் கனிமப் பொருள் இருப்பது வரதராஜனுக்கு தெரியவரவே, அவர் மாப்பிள்ளை கேட்டு காளை வீட்டிற்கு வருகிறார். இது அறியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் காளை.

நிச்சயதார்த்தத்தின் போது வரதராஜனின் நிலத்தாசை தெரிய வருகிறது. பிரியா தன் தம்பிகள் மேல் வெறுப்பு காட்டுவதும் தெரிய வருகிறது. இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் காளையும் வரதராஜனும் எதிரிகளாகி விடுகின்றனர்.

தம்பிகள் மேல் அன்பு காட்டும் புவனாவை காளைக்கு பிடித்துப் போகிறது. அவரை கைப்பிடிக்க நினைக்கிறார். இதற்கு பலவிதமான முட்டுக் கட்டைகளைப் போடுவது மட்டுமின்றி ஒரு கொலைப்பழியையும் அவர் மீது சுமத்துகிறார் வரதராஜன்.

இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காளை வேடத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ரேக்ளா பந்தயக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். புவனா கேரக்டரில் வரும் சினேகா அழகாய் நடித்திருப்பது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.

வரதராஜன் வேடத்தில் வரும் சுமன் வில்லன் நடிப்பில் அசத்துகிறார். பிரியா கேரக்டரில் வரும் சிந்து துலானி தன் பங்கை உணர்ந்து நடித்திருகிறார்.

திருநங்கை சரோஜாவாக வரும் விவேக் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமனோடு இருந்து கொண்டு அவருக்கு எதிராக காளையை கொம்பு சீவி விடும் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

தனி டிராக்கில் இவர் நடத்தும் காமெடி, சில காட்சிகளில் சிரிப்பைத் தருகிறது. இவர் குளியல் போடும் காட்சிகளில் அருவறுப்பைத் தருகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். பொதுவாக என் மனசு தங்கம் ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய சுந்தர புருஷா பாடல் தாளம் போட வைக்கிறது.

ரேக்ளா பந்தயம், டிரெயின் சண்டை காட்சி, கிராமத்து பசுமை ஆகியவற்றை சான்டோனியோ கேமிரா அள்ளி வந்திருக்கிறது. அதனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்களான பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த்.

ரஜினியின் முரட்டுக் காளையை இப்படத்தில் மீள்பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது வந்திருந்தாலும் ரசிக்கும் படியாகவே கொடுத்திருக்கிறார் செல்வபாரதி.

நடிகர்: சுந்தர் சி, சுமன், விவேக்.
நடிகை: சினேகா, சிந்து துலானி.
இயக்குனர்: செல்வபாரதி.
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு: சான்டோனியோ.

 நன்றி விடுப்பு

No comments: