பின்தொடரும் வியட்நாம் தேவதை - முருகபூபதி-


    .
வியட்நாம் போரின் நாற்பது ஆண்டு நிறைவில், நினைவாக ஒரு பதிவு.

  காலத்தின் கோலத்தில் முரண்நகைக்குட்பட்ட தேசங்கள்

வாழ்க்கைப்பயணத்தில் நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கலாம். ஆனால் அவர்களில் எத்தனைபேர் எமது நெஞ்சங்களில் நீக்கமற நிலைபெற்று, எமது நினைவுகளில் தொடர்ந்து வந்துகொண்டிருப்பார்கள்?
அவ்வாறு நினைவுகளில் தொடருபவர்களுடனான முதல் சந்திப்பு ‘பல முதல்கள்’ போன்று மறக்கவே முடியாத நிகழ்வாகிவிடும். சுமார் இருபத்தி ஏழு வருடகாலமாக என்னைத்தொடர்ந்துவரும் ஒரு வியட்நாம் தேவதையைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த  வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை பதிவுசெய்துள்ள இணையத்தளங்கள் மற்றும் இதழியல் ஊடகங்களில் இடம்பெற்ற அந்தப்படத்தை எவரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.





இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமில் நடந்த அந்த கோரச்சம்பவம் முழு உலகையும் உலுக்கியது.
1972 ஜூன் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்க விமானங்கள் ஈவிரக்கமின்றி அந்த அழகிய வியட்நாம் கிராமத்தை நேபம் குண்டுகளை எறிந்து சிதைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் எரிகாயங்களுடன் தமது உயிரைப்பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தத் தாக்குதல் சம்பவத்தில் தனது இரண்டு சகோதரர்களை துடிதுடிக்க பறிகொடுத்துவிட்டு தனது உயிரைப்பாதுகாக்க உடலில் உடையேதும் இன்றி ஓடிக்கொண்டிருக்கிறாள் அந்தச்சிறுமி. நேபாம் குண்டுச்சுவாலையினால்  அவளது உடைகள் எரிந்துவிட்டன. எஞ்சியது உடைகள் ஏதுமற்ற அவளது உடல்தான். அதனையாவது காப்பாற்றிக்கொள்ள அவள் பதறிக்கொண்டு ஓடுகிறாள்.
உடலெங்கும் எரிகாயங்கள். அந்த கோரக்காட்சியை ஒரு கெமரா படம்மெடுத்துவிடுகிறது. அந்தப்படம் அமெரிக்காவின் மனச்சாட்சியை உலுக்கியது. அமெரிக்க மக்கள் வியட்நாம் மீதான யுத்தத்தை நிறுத்துமாறு வீதிக்கு இறங்கி உரத்துக்குரல் எழுப்புகின்றனர்.
சர்வதேசத்தின் முன்னாள் ஒரு போர்க்குற்றவாளியாகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
ஏற்கனவே ஹீரோசிமாவிலும் நாகசாகியிலும் புரிந்த அநர்த்தங்களின் சுவடு மறைவதற்கு முன்பே அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில் அந்த சுவடுகளை ஆழப்பதித்தது.
இந்த ஆண்டு (2012) ஜூன் மாதம் 12 ஆம் திகதியுடன் அமெரிக்கா வியட்நாமில் விதைத்த நேபாம் குண்டுகளுக்கு நாற்பது ஆண்டுகள் வயதாகின்றது.
அண்மையில் அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழின் அவுஸ்திரேலிய சிறப்பிதழின் விமர்சன அரங்கில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அச்சமயம் ஏற்கனவே சில மாதங்கள் சுகவீனமுற்றிருந்த சகோதரி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து அவர்களது சுகம் விசாரிக்கவும் அவரில்லம் சென்றேன்.
பராசக்தி அவர்கள் இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளரும் இலங்கைப்பாராளுமன்றத்தில் முன்னர் சமகால மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான ‘அப்பல்லோ சுந்தா’ சுந்தரலிங்கத்தின் துணைவியாவார். ஈழத்து மற்றும் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் பல கலை, இலக்கியவாதிகளுக்கு நன்கு அறிமுகமானவர் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம். சிறந்த வாசகர்.
எமது உரையாடலின்போது மேலே குறிப்பிட்ட அந்த வியட்நாம் தேவதை பற்றிய பேச்சு வந்தது.
சமீபத்தில் சென்னை வுhந ர்iனெர பத்திரிகையில் அந்தப்பெண்பற்றிய செய்தி படத்துடன் வெளியாகியிருப்பதாகவும் வியட்நாம் யுத்தத்தின் நாற்பது ஆண்டு நினைவாக ஆக்கம் ஒன்று அதில் வெளியாகியிருப்பதாகவும் அதனை எனதும் கனடாவில் வதியும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தினதும் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“ அக்கா, தகவல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. நானும் நண்பர் முத்துலிங்கமும் அந்தத்தேவதையை ஏற்கனவே நேரில் பார்த்து உரையாடியிருக்கிறோம்.” என்றேன்.
 அவரது முகம் ஆச்சரியத்தினால் பிரகாசித்தது.

‘எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை’ என்று பல சந்தர்ப்பங்களில் எழுதியும் பேசியும் வந்திருக்கின்றேன். அப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு 1985 இல் என்னைச்சந்தித்தது.
குறிப்பிட்ட ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் நூற்றிஐம்பது நாடுகளின் ஆயிரக்கணக்கான பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்ட மாஸ்கோவில் நடைபெற்ற உலக இளைஞர் மாணவர் விழாவுக்கான அழைப்பு எனக்கும் கிடைத்தது.
இலங்கையிலிருந்து சென்ற ஒரே ஒரு தமிழ்ப்பத்திரிகையாளனாக அந்த விழாவில் கலந்துகொண்டபோது நான் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தேன்.
திரும்பி வந்ததும் வீரகேசரி வாரவெளியீட்டில் பதினாறு வாரங்கள் ‘சமதர்மப்பூங்காவில்’ என்ற பயணத்தொடரை எழுதி, பின்னர் அதனைத்தொகுத்து நூலாக வெளியிட்டேன். அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்துவிட்டதால், எனது சமுகம் இன்றி கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இந்நூல் வெளியிட்டுவைக்கப்பட்டபோது சோவியத் எழுத்தாளர்கள் குப்ரியானோவும் அனடோலி பர்பராவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை ஒழுங்கு செய்தவர்களில் மிக முக்கியமானவர் எனது நெஞ்சில் இன்றும் வாழும் நண்பர் ராஜஸ்ரீகாந்தன்.
 சமதர்மப்பூங்காவில் தொடரில் 12 ஆவது அத்தியாயம் பாரதியின் கவிதை வரிகளுடன் தொடங்கியது.
 உடன்பிறந்தவர்களைப்போலே - இவ்வுலகினில் மனிதரெல்லோரும்
 திடங்கொண்டவர் மெலிந்தோரை
 இங்கு தின்று பிழைத்திடலாமோ?
மாஸ்கோ ஹோட்டல் கொஸ்மோஸ் மாநாட்டு மண்டபம் திரையரங்கைக்கொண்ட விஸ்தீரனமானது. அன்று நாம் அங்குசென்றபோது அந்த மாநாட்டு மண்டபம் ஒரு சர்வதேச நீதிமன்றமாக உருமாறியிருந்தது. ஏகாதிபத்தியமும் அதன் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மூன்றாம் உலக நாடுகளையும் வறிய மற்றும் வளர்முக நாடுகளையும் எவ்வாறு பாதித்தன - அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையெல்லாம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் கண்டவர்கள், சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஆய்வாளர்கள் தமது வாக்கு மூலங்களில் சமர்ப்பிக்கவுள்ளனர் என்ற தகவல் அந்த நீதிமன்றத்தினுள் பிரவேசித்தபோது எமக்குக்கிடைத்தது.
ஏழு நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் நீதிபதிகளாக அன்று செயற்பட்டனர். பதினைந்து நாடுகளின் பிரதிநிதிகள் தத்தம் நாடுகளில் ஏகாதிபத்தியம் செய்த அடாவடித்தனங்களையும் நாசகாரச்செயல்களையும் வாக்குமூலமாக விபரித்தனர்.
நிகழ்ச்சி அறிவிப்பாளர், “ இனி அடுத்து ஒரு குறுந்திரைப்படம் காண்பிக்கப்படும்” என்றார்.
அந்த நீதிமன்றம் இருளில் மூழ்கியது.
மேடையிலிருந்த அகலத்திரையில் தோன்றியது வியட்நாமில் அமெரிக்க விமானங்களின் நேபாம் குண்டு வீச்சுக்காட்சிகள். பதட்டத்துடன்; பார்க்கின்றோம். ஒரு சிறுமியும் சிறுவனும் மேலும் சில குழந்தைகளும் உடல் தீப்பற்றி எரிய கதறிக்கொண்டு ஓடுகிறார்கள். நெஞ்சத்தை உருக்கும் காட்சி. அச்சிறுவனின் உடலில் ஆடைகள். ஆனால் அந்த அழகிய சிறுமியோ எரிந்த ஆடைகளை களைந்து விட்ட நிலையில் எரிகாயங்களுடன் கதறிக்கொண்டு ஓடிவருகிறாள். அவளைக்காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு எம்மை உந்தித்தள்ள ஆசனத்தின் விளிம்புக்கு வந்துவிடும்போது ‘ நாம் வியட்நாமில் இல்லை. அந்தக்கொடுமையை காண்பிக்கின்ற ஒரு நீதிமன்றத்தில் இருக்கிறோம்’ என்ற பிரக்ஞையை தருகிறது அந்த நீதிமன்றத்தில் மெதுவாகப்படரும் மின்வெளிச்சம்.
அரங்கில் மயான அமைதி. மேடையில் அந்தக்காட்சியை காண்பித்த திரை மேலே சுருண்டு சென்றுவிடுகிறது. மேடையிலும் தற்போது ஒளி பரவுகிறது.
இளம் கத்தரிப்ப+ நிற ஆடையில் தேவதையாகத்தோன்றுகிறாள் ஒரு அழகிய சிறுமி.  கைகூப்பி, கையசைத்து தன்னை தனது பெயர் சொல்லாமலேயே அறிமுகப்படுத்திக்கொள்கிறாள்.
யார் இந்த சின்னத்தேவதை? எங்கோ வெகு சமீபத்தில் பார்த்த முகமாக இருக்கிறதே என்று நினைவுப்பொறியில் ஒரு மின்னல். வியட்நாமில் ‘ட்ராங்பேங்’ என்ற கிராமத்தில் நேபாம் வீசப்பட்டபோது எரிகாயங்களுடன் ஓடிய அதே சிறுமி, பதின்மூன்று வருடங்களின் பின்னர் எமது கண்முன்னே.....மேடையில்....
ஆசனத்திலிருந்து எழுந்தோடிச்சென்று மேடைக்குத்தாவி அந்தச்சிறுமியை அணைத்துக்கொள்கின்றேன். எனது கண்கள் பனிக்கின்றன. அவளது கரங்களை தீண்டுகின்றேன். குளிர்ந்த நிலையில் எரிகாயத் தழும்புகளுடன் அந்தக்கரங்கள். என்னைத்தொடர்ந்து பலரும் மேடைக்கு வந்துவிடுகிறார்கள்.
 “நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் எமது வியட்நாம் நாட்டின் வெற்றிவிழாவை கண்டதும் எனது பாக்கியம்தான். எமது வெற்றியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முடித்துக்கொண்டு இங்கே உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்” என்றார்,  எங்களையெல்லாம் கவர்ந்த வியட்நாம் தேவதை கிம்புக். பதினைந்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்குள்ளாகி தனது உடலைத்தேற்றிக்கொண்ட கிம்புக் திருமணமாகி தற்போது இரண்டு பிள்ளைகளுக்கும் தாயகியிருக்கிறார்.
 1985 இல் சமதர்மப்பூங்காவில் தொடரில் கிம்புக்குடனான இந்த எதிர்பாராத சந்திப்பு பற்றி நான் எழுதியபோது அதனைப்படித்த பல வாசகர்கள் தாம் கண்ணீர்சிந்தியதாக எனக்கு எழுதிய கடிதங்களிலும் நேரிலும் குறிப்பிட்டனர்.
 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்பு ஒரு கோடைவிடுறையின்போது மெல்பனில் புதர்க்காடுகள் செறிந்துள்ள பிரதேசமொன்றுக்கு நண்பர்களுடன் சென்றேன். ரம்மியமான அந்தச்சூழலும் பஞ்சவர்ணக்கிளி மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் உட்பட பல வண்ணப்பட்சிகளின் ரீங்காரமும் புதர்க்;காடுகளை ஊடறுத்து சலசலவென ஓடும் நீரோடையும் எனது கண்களையும் கருத்தையும் ஈர்த்தன. இப்படித்தானே அந்த வியட்நாமிய ;ட்ராங்பேங்’ கிராமமும் அமைதியாக இருந்திருக்கும். அங்கு வியட்நாம் விடுதலைப்போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதலுக்கு தயாராகியிருப்பார்கள் என்ற அச்சத்தினால்தானா அமெரிக்க விமானங்கள் நோபம் குண்டுகளை அங்கே சிதறவிட்டது? என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் அந்த வியட்நாம் தேவதை கிம்புக் நினைவுக்கு வந்தார்.
அன்று இரவு தூக்கமில்லை. அதனால் மறுநாள் ஒரு சிறுகதை வரவாகியது. அதிகாலை எழுந்ததும் எழுதினேன். தலைப்பு ‘புதர்க்காடுகளில்’
 கற்பனையில் வியட்நாம் கிம்புக்கை அவுஸ்திரேலியாவுக்குப்படிக்க வந்த மாணவியாக்கி அவளுக்கு வோல்கா என்ற சோவியத்தின் பிரபல நதியின் பெயரைச்சூட்டி சிறுகதையை வளர்த்திருந்தேன்.
 நர்மதா, கங்கா, யமுனா, காவேரி, சரஸ்வதி முதலான நதிகளின் பெயர்களை எம்மவர்கள் தமது குழந்தைகளுக்குச்சூட்டி மகிழ்வதுபோன்று வியட்நாமின் வெற்றிக்காக ஆதரவுவழங்கிய சோவியத்தின் பிரபல நதியின் பெயரைச் சூட்டி கதையை நகர்த்தினேன். தேசங்களில் உள்நாட்டுப்போர்களிலும் அண்டைநாடுகளின் ஆக்கிரமிப்புப்போர்களிலும் கொல்லப்படுபவர்கள் பாதிக்கப்படுபவர்கள் உடல்ஊனமுறுபவர்கள் பற்றி வோல்காவுடன் உரையாடும் கதை அது.
 புதர்க்காடுகளில்...வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமானது. பின்னர் கொழும்பு தமிழ்க்கதைஞர்வட்டத்தின் (தகவம்) சிறந்த சிறுகதைக்கான சான்றிதழ் கிடைத்தது. அவுஸ்திரேலியாவில் மெல்பன் 3EA வானொலி, பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலி ஆகியனவற்றிலும் ஒலிபரப்பானது. இதனைப்படித்த சகோதரி ரேணுகா தனஸ்கந்தா அதனை Bush Walk என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நண்பர் கே.எஸ்.சிவகுமாரன்The Island இதழில் பிரசுரித்தார்.
 இக்காலப்பகுதியில் பிரான்சிலிருந்து வெளியான ஓசை இதழின் அட்டையிலும் வியட்நாம் ;கிம்புக்’ தீச்சுவாலைக்குள்ளிருந்து ஓடும் அந்த உலகப்பிரசித்தி பெற்ற படம் பிரசுரமாகியிருந்தது.
 அதனைப்பார்த்துவிட்டு ஓசை இதழுக்கு எழுதிய வாசகர் கடிதத்தில், வியட்நாம் கிம்புக்கை மாஸ்கோவில் சந்தித்த தகவலை குறிப்பிட்டதுடன், எங்கள் தாயகம் இலங்கையில் கொக்கட்டிச்சோலை என்னும் இடத்தில் நடந்த கொடுமை பற்றியும் பதிவுசெய்தேன். போராளிகள் வைத்த நிலக்கண்ணிவெடியில் சிக்குண்ட இராணுவத்தினர் சடலமாகவும் காயங்களுடனும் மீட்கப்பட்டவுடன் அந்த இடத்தில் நிலக்கண்ணிவெடியினால் தோன்றியிருந்த பெரிய கிடங்கின் முன்பாக நிறுத்தப்பட்ட பல கொக்கட்டிச்சோலை அப்பாவி கிராமவாசிகள் சுட்டுக்கொல்லப்பட்டதையும் அவ்வேளையில் சிறுகாயத்துடன் தப்பிய ஒரு குழந்தை தண்ணீர் கேட்டு கதறிய சம்பவத்தையும் சொல்லியிருந்தேன்.
 வியட்நாமில்  நடந்ததுபோன்ற பல கோரநிகழ்வுகள் இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் நீடித்திருக்கின்றன. ஆனால் பல உலக நாடுகள் அதனை உள்நாட்டு விவகாரமாகவே பார்த்துக்கொண்டு வாளாவிருந்தன என்ற செய்தியையும் பூடகமாகச்சொல்லியிருந்தேன்.
 எனது நினைவுகளில் தொடரும் அந்த வியட்நாம் தேவதையின் கதைக்கு மீண்டும் வருகின்றேன்.
 1990 இல் கியூபாவுக்கு கல்வி கற்கச்சென்ற கிம்புக், அங்கே தனது நாட்டவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.  1997 இல் யுனெஸ்கோ அவரை தமது நல்லெண்ணத்தூதுவராக (Goodwill Ambassador)  நியமித்தது.
 எந்த நாடு தனது ஏகாதிபத்தியத்தின் கொடுமையான கரங்களை நீட்டி அந்த வியடநாம் கிராமத்தை நேபாம் குண்டுகளினால் தீக்கிரையாக்கியதோ அதே நாடு சிலவருடங்களுக்கு முன்னர் கிம்புக்கை தனது நாட்டுக்கு அழைத்திருந்தது.
 அங்கு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கிம்புக் உரையாற்றும்போது, தான் அந்தப்போரில் சந்தித்த மறக்கமுடியாத கொடுமையான சம்பவங்களை விபரித்தார். அதனைக்கேட்டுக்கொண்டிருந்த பலரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. கிம்புக்கின் உரையை கேட்டுக்கொண்டிருந்த ஒரு முன்னாள் விமான ஓட்டி (Pilot) எழுந்து நின்று, குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் நடந்தபோது தானும் ஒரு விமான ஓட்டியாக அந்தக்கிராமத்தில் பணியிலிருந்ததாகவும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக்கோருவதாகவும் பகிரங்கமாகச்சொன்னபோது அந்தப் பொது நிகழ்வு நிசப்தத்தில் ஆழ்ந்தது.
“ உங்களையெல்லாம் நாம் எப்போதோ மன்னித்துவிட்டோம்.” என்று அதற்கு கிம்புக் பதில் சொன்னதும் அங்கு கண்ணீர் வெள்ளத்துடன் கரகோசமும் ஆர்ப்பரித்தது.
 அந்த விமானி அருகே சென்று கிம்புக்கை அணைத்து, “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று மீண்டும் சொன்னார்.
 இந்த உண்மைத்தகவலை தற்போது யாருக்குச்சொல்கிறேன் என்பதை இதனைப்படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.
 வியட்நாமின் விடுதலைக்கு பக்கபலமாக இருந்த சோவியத்நாடும், கிம்புக்கிற்கு கல்வி கற்க வசதியளித்த கியூபாவும் சமகாலத்தில் இலங்கை விவகாரத்தில் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதும் முரண்நகைதான்.
 கிம்புக், தற்போது Kim Foundation என்ற அமைப்பின் ஊடாக ஒரு தொண்டு நிறுவனத்தை தொடக்கி போரினால் உலகநாடுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவி புரிந்துவருகிறார்.
 கனடாவில் தற்போது வாழ்ந்துவரும் அவரை எமது கனடாவாழ் தமிழர்களும் மறக்கவில்லை என்பதற்கு ஒரு சிறு தகவல் தருகின்றேன். கனடாவில் இயங்கும் தமிழர் தகவல் அமைப்பினதும் ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வத்தினது மகன் அகிலன் நினைவாக இயங்கும் ‘அகிலன் அசோஷியேற்’ நிறுனமும் இணைந்து 1998 இல் நடத்திய ஒரு பொதுவைபத்திற்கு கிம்புக் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
 கனடாவில் வதியும் நண்பர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கிம்புக் அவர்களைச்சந்தித்து விரிவான படைப்பொன்றை ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார்.
 வியட்நாம் கிம்புக் போன்று ஆயிரக்கணக்கான  தேவதைகள் எங்கள் தேசத்தில் வாழ்கிறார்கள். இவர்களின் கதைகள் வெளியாகவேண்டும். அவை ஆங்கிலத்தில் அறிமுகமாகவேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல உலகநாடுகளிலும் ஆக்கிரமிப்பு போர்களை தொடுப்பவர்களுக்கு கிம்புக்கின் கதை காலம் பூராவும் ஒரு செய்தியை சொல்லிக்கொண்டுதான் இருக்கும். ஆயுத வியாபாரிகளும், அழிவுகள் நடக்கும்போது அமைதிகாத்துவிட்டு, தன்னலனை பூகோள நலனாக மாற்ற முனையும் தேசங்களும் அந்தச்செய்தியை மறந்துவிடாதிருக்கவேண்டும்.

                              ---0---



1 comment:

kirrukan said...

அந்த விமானி அருகே சென்று கிம்புக்கை அணைத்து, “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று மீண்டும் சொன்னார்.
இந்த உண்மைத்தகவலை தற்போது யாருக்குச்சொல்கிறேன் என்பதை இதனைப்படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்


அதாவது சிங்கள‌வர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் ...நாங்கள் மறந்தோம் மன்னித்தோம் என்று வாழவேண்டும் என ஐயா சொல்லுகிறார்....

இன்று எமக்காக ஒரளவு குரல் கொடுப்பது அமேரிக்கா எகாதிபத்தியம் என்பதை ஐயா மறந்து விட்டார்போலும்...

எமது போராட்டமும் விடுதலை போராட்டம்தான்....ரஸ்யாவும், கியூபாவும்,சீனாவும் அத்துடன் வியட்னாமும் எமக்கு எதிராகத்தான் குரல் கொடுக்கின்றன....

ஒரு சிறுமிக்காக அமேரிக்கா மக்கள் குரல் வீதியில் இறங்கி போரை நிறுத்தியுள்ளார்கள் என்றால் உண்மையிலயே அமேரிக்கா எகாதிபத்தியம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது .

ஆனால் மக்களின் விடுதலைக்காக போராடிய சீனா,ரஸ்யா, வியட்னாம்,இந்தியா போன்ற நாடுகள்......மக்களின் உணர்வுகளை மத்திக்கவில்லை என்றுதான் பொருள்....