உலகச் செய்திகள்


நைஜீரியாவில் தொடரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள்

கிலானியின் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு

நைஜீரியாவில் பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் 36 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

பிரான்ஸ் தேர்தலில் சோசலிசக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி

நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஆளும் கட்சிக்குள் பிளவு

சவூதியில் நால்வருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்


நைஜீரியாவில் தொடரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள்18/6/2012

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள 4 தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுவெடித்தது.

இதில் குழந்தைகள் உட்பட 25 பேர் பலியானார்கள்.

மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் கதுனா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே நகரில் இரண்டு தேவாலயங்களிலும், சாரிய நகரில் 2 தேவாலயங்களிலும் குண்டுகள் வெடித்தன.

இத்தாக்குதலுக்கு 'போகோ ஹராம்' போராளிக்குழுவே காரணம் என நம்பப்படுகின்றது.

நைஜீரியாவில் கடந்த சில காலங்களாகவே கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான தாக்குதலை 'போகோ ஹராம்' குழுவே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இக்குழுவானது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்ட முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

எனினும் அங்கு தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதலையடுத்து மக்கள் வழிபாட்டுக்குச் செல்ல அஞ்சுவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி

கிலானியின் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு


19/6/2012

பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அறிவித்திருந்தது.

மேலும் அவருக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் நின்றுகொண்டிருக்கும்படி தண்டனையும் வழங்கியது.

இதன் படி ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அவர் பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பளித்துள்ளது.

கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, 'பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


 நைஜீரியாவில் பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் 36 பேர் உயிரிழப்பு; பலர் காயம்
அபுஜா:  வட நைஜீரியாவின் ஹவுதான பிராந்தியங்களிலுள்ள 3 தேவாலயங்களில் இடம்பெற்ற பல்வேறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் கலவரங்களில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்புகளில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்  பல எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முஸ்லிம்களை  இலக்கு வைத்து இடம்பெற்ற கலகங்களில் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததாக உதவிப் பணியாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
24 மணித்தியால ஊரடங்கு சட்டத்தினை ஹவுதான பிராந்திய  அதிகார சபைகள் அமுல்படுத்தியுள்ளன.
ஹவுதான பிராந்தியங்களில் இஸ்லாமிய போராளிக்குழுவான போகோ ஹரம் குழுவினரே குண்டுத்தாக்குதல்களை அதிகளவு மேற்கொண்ட அதேவேளை இத்தாக்குதலுக்கு எக்குழுவும் உரிமை கோரவில்லை.
கடந்த வாரம் இரு தேவாலயங்களில் இடம்பெற்ற குழு தாக்குதல்களில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தேவாலயம் மீதான முன்னைய தாக்குதல்களின் போது 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸாரியாவின் வஸஸா மற்றும் ஸபோன் கரி மாவட்டங்களிலுள்ள இரு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக நைஜீரியாவின் தேசிய அவசர முகாமைத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
கலகங்களின் போது கொல்லப்பட்ட 20 இற்கு மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அடையாளப்படுத்த முடியாத வகையிலே எரிந்த நிலையிலேயுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி தினக்குரல்

 பிரான்ஸ் தேர்தலில் சோசலிசக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி
பாரிஸ்:   அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைப்பதற்கு தேவையான, போதுமான ஆசனங்களுடன் பிரெஞ்சு ஜனாதிபதி பிராங்கொய்ஸ் ஹொலன்டேயின் சோசலிசக் கட்சி அந் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது. இறுதி முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாத நிலையில்  577 ஆசனங்கள் உள்ள பிரான்ஸ் தேசிய சபையில் 313 க்கும் 315 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை சோசலிசக் கட்சி கைப் பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைக்கும் பலத்தினை பெற்றுள்ளது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஷியின் யு.எம்.பி. கட்சி 304 ஆசனங்களிலிருந்து தமது எண்ணிக்கையை 214 ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் புதிய ஜனாதிபதியின் வரி மற்றும்செலவீனத் திட்டத்துக்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளமையை காண முடிகின்றது. சிக்கன நடவடிக்கைகள் தொடர்பான தமது செயற்பாடுகளின் முக்கியத்துவத்திலிருந்து விலகிநிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நிதி முயற்சிகள் மற்றும் மேலதிக பொதுச் சேவை உத்தியோகத்தர்களை வாடகைக்கு அமர்த்துதல் போன்ற தமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு சோசலிசக் கட்சியினர் பசுமைக் கட்சியினர் மற்றும் இடதுசாரிக் கட்சியினரின் ஆதரவை பெற வேண்டிய தேவையில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி ஹொலன்டே மீதான  நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதற்கு இத்தேர்தல் வெற்றி மிகச் சிறந்த உதாரணமாக அமைகின்றது. இரு பகுதிகளைக் கொண்ட பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 55.9 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றுள்ளது. இது மிகவும் குறைவான வாக்குப் பதிவு வீதமாக கருதப்படுகின்றது.
நன்றி தினக்குரல்

நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஆளும் கட்சிக்குள் பிளவு
காத்மண்டு :  நேபாளத்தில் ஆளும் ஐக்கிய கம்யூனிஷக் கட்சியான மாவோயிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து தனிக்குழுவை அமைத்துள்ள மோகவ் வைத்யா கிரண், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் நேபாளம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராகவும் கிரண் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லையில் உள்ள இந்தியப் பாதுகாப்புப் படையினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசியக்கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில் கட்சியில் இருந்து விலகி தனிக்குழுவாக இயங்க இருப்பதாக கிரண் அறிவித்தார்.
எங்களுக்குப் பாராளுமன்ற ஆட்சிமுறையில் நம்பிக்கை இல்லை. எனவே புதிய மக்கள் குடியரசை அமைக்க இருக்கின்றோம். 
  நன்றி தினக்குரல்


சவூதியில் நால்வருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம் 
20/ 6/2012 
  எகிப்தியர் இருவருக்கும் சவூதி அரேபியர்கள் இருவருக்கும் சவூதி அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எகிப்தியர்களான மொஹமட் பின் நேப்பு, ஜமலத் பின் நேப்பும் 9 வயது சிறுமியொருவரை மதீனாவிலுள்ள புனித பள்ளிவாசலிலிருந்து கடத்திச் சென்று மூன்றரை வருடங்களாக தமது இருப்பிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இதன்போது மொஹமட் சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

அதன் பின் அவர்கள் அச்சிறுமியை நாட்டை விட்டுக் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அத்துடன் அவர்களது வன்முறை நடவடிக்கை காரணமாக மொஹமட்டின் மகன்மார் இருவர் மரணமானதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் மதினாவில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தனது சகாவைச் சுட்டுக் கொன்ற அலி பின் மொஹமட் அல் கஹ்தானி என்பவருக்கு அந்நாட்டின் அஸிர் பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், இரு பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவை வைத்திருந்தமை, சூனிய வேலைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முறாபின் அலி அல்அஸிரி என்ற சவூதி பிரஜைக்கு நஜ்ரான் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் சவூதி அரேபியாவில் இந்த வருடம் தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளானவர்கள் தொகை 39ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  நன்றி வீரகேசரி No comments: