வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 36 மரண தண்டனை.
சுந்தரி : (பத்திரிகை வாசிக்கிறாள்) வங்கியில் கொள்ளை அடித்த இருவருக்கு மரண தண்டனை…… வேணும். சரியான தண்டனைதான். இந்தக் காலத்திலை கொலை, களவு, கொள்ளை எல்லாம் கூடிப்போச்சு. உப்பிடித் தண்டனை குடுத்தால்தான் உதுகள் அடங்கும்.

ஞானா : என்ன அம்மா…. ஆருக்குத் தண்டனை?

சுந்தரி: வங்கியிலை  கொள்ளை  அடிச்ச இரண்டு பேருக்கு மரண தண்டனை எண்டு இந்தப் பேப்பறிலை போட்டிருக்கு.

ஞானா : இதென்ன அநியாயம். வங்கியைக் கொள்ளை அடிச்சதுக்கு மரணதண்டனையோ? அதுகும் இந்தக் காலத்திலையோ?

சுநதரி : அதிலை என்ன பிழையெண்டு கேக்கிறன்? நீ திருக்குறள் ஆராயிற உனக்குத் தெரியாதே? திருவள்ளுவரே உப்பிடித்தான் தண்டனை குடுக்க வேணும் எண்டு குறளிலை சொல்லியிருக்கிறார். நான் முன்னை படிச்ச ஞாபகம். குறள்தான் தெரியேல்லை.

அப்பா: (வந்து) படிச்சதை மறக்கக் கூடாது எண்டும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார் சுந்தரி. நான் நினைக்கிறன் ஞானா திருக்குறளிலை செங்கோன்மை எண்ட அதிகாரத்திலை உதைப்பற்றி ஏதோ ஒரு குறள் இருக்கு.

சுந்தரி: திருக்குறள் புத்தகம் வைச்சிருக்கிறாய் தானே ஞானா, பாத்துச் சொல்லு பாப்பம் எனக்கு நல்ல நினைவு இருக்கு. தம்பு மாஸ்றர் படிப்பிச்சவர்.

அப்பா: செத்துப்போன தம்பு மாஸ்றரை ஏன் கூப்பிடுறீர் சுந்தரி….நீ பாத்துச் சொல்லு பிள்ளை ஞானா.

ஞானா: இஞ்சை இருக்கப்பா நீங்கள் சொன்ன செங்கோன்மை எண்ட 55 அதிகாரம்;.

அப்பா: நான் நினைக்கிறன் அதிகாரத்தின் கடைசிக் குறளாய் இருக்கும். அதைப் படிச்சுச் சொல்லு பாப்பம் ஞானா.

ஞானா:  அதிகாரக்தின்ரை கடைசிக் குறள் 550 வது குறள் அப்பா.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”

அப்பா இதிலை கொலை செய்த கொடியார் எண்டெல்லோ கிடக்குது. அம்மா களவெடுத்தவைக்கும் மரண தண்டனை குடுக்கச் சொல்லியிருக் கெண்டெல்லலே சொல்லிறா.

அப்பா: ஞானா அம்மாவிலை பிழையில்லை. அவவின்ரை தம்பு மாஸ்றர் சொல்லிக் குடுத்ததைச் சொல்லிறா. உன்ரை அம்மாவின்ரை தம்பு மாஸ்றரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறன். அவர் வகுபபுத் துவங்க முந்திச் சொல்லுவாராம்; “என்பெயர் தம்பு. கையிலை கம்பு. கவனமாய் இருங்கோ” எண்டு. இவையளுக்கு ஆளைக் கண்டாலே பயமாம். சொன்னதைக் கேட்டுக்கொண்ட இருக்கிறதுதானாம்.
சுந்தரி: பின்னை இந்தக் காலத்து இவையளைப் போலை கேள்வி கேக்க முடியுமே?

ஞானா: உவ்வளவு கண்டிப்பான உபாத்தியார் பிழையான கருத்தைச் சொல்லிக் குடுக்கலாமே அப்பா?

அப்பா: ஞானா, அவரிலும் பிழையில்லை. அவர் என்ன செய்வார் பாவம். பரிமேலழகர் சொல்லிவைச்ச கருத்தை அவர் சொல்லிக் குடுத்திரக்கிறார். அதாவது வந்து ஞானா, பரிமேலழகர் உந்தக் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் எண்ட குறளுக்கு “வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல், அதாவது அரசன் கொடியவர்களைக் கொலையால் ஒறுத்துத்துத் தக்கோரைக் காத்தல்;;- பைங்கூழ் களைகட் டதனொடு நேர் அதாவது உழவன் களையைக் களைந்து பைங் கூழைக் காத்தகலோடு ஒக்கும்” எண்டு பொருள் சொல்லியிருக்கிறார்.

சுந்தரி: அப்பா…. கொடியவர்களுக்கு அரசன் மரணதண்டனை குடுக்கிறது, உழவன் பயிருக்கை இருக்கிற களையை அகற்றுவது போன்றது எண்டுதானே சொல்லியிருக்கிறார்.

ஞானா: அப்பிடி எண்டால் அப்பா கொடியார் எண்டால் ஆரெண்டும் define பண்ணவெல்லோ வேணும்.

அப்பா: பரிமேலழகர் அதையும் செய்திருக்கிறார் ஞானா. அதாவது “கொடியவரென்றது- தீக்கொழுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார். சூறைகொள்வார், பிறனில் விழைவார் என்றிவரை” எண்டு சொல்லியிருக்கிறார்.

ஞானா: அதாவது வந்தப்பா இதிலை சொல்லப்பட்ட குற்றங்களைச் செய்யிறவைக்கு மரண தண்டனை குடுக்க வேணும் எண்டு வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

அப்பா: பிள்ளை ஞானா அவசரப்பட்டு வள்ளருவரைக் குற்றவாளி ஆக்காதை. அவர் உப்பிடிச் சொல்லேல்லை. பரிமேலழகர்தான் உப்பிடி உரை எழுதியிருக்கிறார். அவரும் வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் என்று பதங்களைச் சேர்த்துப் பொருள் சொன்னதானால் வந்த குழப்பம்தான்.

சுந்தரி: அப்பிடியெண்டால் உந்தக் குற்றங்களைச் செய்யிற ஆக்களைச் சும்மா விட்டுவிட வேணுமெண்டே சொல்லிறியள்.

அப்பா: அப்பிடி எண்டில்லைச் சுந்தரி. திருவள்ளுவர் கொலை செய்த பாதகர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக் களை பறிப்பதோடு ஒத்தது எண்டுதான் சொல்லியிருக்கறார்.

ஞானா: சரியாய் சொன்னீர்கள் அப்பா ஒறுத்தல் என்ற சொல்லு மரணதண்டனையைக் குறிப்பதல்ல. கொலைச் செயலுக்குத் கொலைத்தண்டனை சரி என்று சொல்லவும் திருவள்ளுவர் கூசினதாலேயே ஒறுத்தல் என்ற சொல்லை உபயோகித்திருக்கிறார் என்று நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் உரை சொல்லியிருக்கிறார்.

சுந்தரி:  ஓறுத்தல் எண்டால் எப்டித் தண்டிக்கிறது எண்டு கேக்கிறன்?

அப்பா: சுந்தரி ஒறுத்தல் எண்டது, சமயோசிதம்போலத் தண்டிப்பது. இந்தக் காலத்திலை குற்றவாளிகளைத் தண்டிக்கிறதுக்கு எத்தனையோ வழிவகைகளும், வசதிகளும் இருக்குது. சிறு சிறு குற்றஞ் செய்த ஆக்களையும் கொண்டுவிட வேணும் எண்டு நினைக்கக் கூடாது.

ஞானா: அதுமட்டுமில்லை அப்பா களை எடுக்கிறதெண்ட உவமானமே கொல்லிறதைக் குறிக்கேல்லை. களையை அப்புறப் படுத்திறது எண்ட பொருளிலைதான் சொல்லப்பட்டிருக்கு.

அப்பா: உதிலை இன்னுமொண்டு ஞானா, களையைப் பறிச்சு வேறை ஒரு இடத்திலை போட்டால் அது அந்த இடத்திலை முளைச்சு நிக்கும் எண்ட கருத்தும் இருக்கு.

சுந்தரி: அப்ப திருக்குறள் மரண தண்டனையை வரவேற்கயில்லை எண்டு சொல்லிறியள்;.

ஞானா: தற்காலத்திலை உலகத்திலை பல நாடுகளிலும் அந்தச் சிந்தனை வளந்துதானே இருக்கம்மா. சிந்தனைச் சிற்பியான வள்ளுவப் பெரந்தகை இதுகளை எல்லாம் சிந்தியாமல் குறள் எழுதுவரா?

சுந்தரி: எழுதமாட்டார்தான். அதுதானே அவருக்கம் குறளுக்கும் என்றென்றும் பெருமை.

(இசை)

No comments: