அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடல் பயணம்

Monday, 18 June 2012

அவுஸ்திரேலியா நோக்கி படகுகளில் கொண்டு செல்லப்படும் மக்கள் பலர் கடலில் காணாமற் போவதாகவும் கடந்த ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து இரு படகுகளில் புறப்பட்ட மக்களுக்கு என்ன நடந்ததென்பது இதுவரை தெரியவில்லை எனவும் கலாநிதி கிளட்சன் சேவியர் மற்றும் சந்திரகாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பிறிஸ்பன் ரைம்ஸ் ஊடகத்தில் அதன் செய்தியாளர் பென் டொஹேத எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்து சமுத்திரத்தைப் பாதுகாப்பாக கடந்து அவுஸ்திரேலியாவில் கொண்டு சேர்ப்பதற்கான உறுதிமொழியை தென்னிந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளிடம் அனைத்துலக ஆட்கடத்தல் குழுவினர் உறுதி தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவர்களின் உறுதிமொழியை நம்பி படகுப் பயணத்தை ஆரம்பித்த மக்கள் பலர் தமது உயிர்களைத் தொலைத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இரண்டு படகுகளில் பயணம் செய்து கொண்டிருந்த 50 தமிழ் அகதிகள் காணாமற் போயுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கை மற்றும் தென்னிந்திய கரையோரங்களிலிருந்து புறப்படும் படகுகளின் தொகை கடந்த ஆறு மாதத்தில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இவ்வாண்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொண்ட 708 பேர் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் 211 பேர் இவ்வாறு அவுஸ்திரலியாவை படகு மூலம் வந்தடைந்தனர்.

65 உலக நாடுகளில் 140,000 வரையான இலங்கைத் தமிழர்கள் அகதித் தஞ்சம் கோரியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. யுத்த காலப்பகுதியில் இலங்கையிலிருந்து தப்பியோடி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துகொண்ட தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 112 அகதி முகாம்களில் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். எவ்வாறெனினும் இந்தியாவானது அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. அத்துடன் இந்த மக்களுக்கு இந்தியாவானது தனது குடியுரிமையை வழங்கவுமில்லை. இவர்கள் முகாம்களுக்கு வெளியே வாழ்வதற்கான அனுமதியையும் வழங்கவில்லை.

இவ்வாறு தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் மக்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல அச்சப்படுகின்றனர். இவ்வாறு தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றால் தாம் துன்புறுத்தப்படலாம் என இவர்கள் அச்சப்படுவதாகவும் ஆனால்,இவர்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்கமாட்டாது என்பதையும் இந்த மக்கள் நன்கறிவர் எனவும் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் மட்டும் நடக்கின்ற ஆட்கடத்தல் அல்ல. இவ்வாறான ஆட்கடத்தல்கள் அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று விடுவதாக இந்த மக்களை ஏமாற்றி இவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது. இந்தியாவில் செயற்படும் ஆட்கடத்தல்காரர்கள் தாம் நினைத்தபடி செயற்பட முடியாது. இவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்பைப் பேணிக்கொள்ள வேண்டும் எனவும் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளில் பெரும்பாலானவர்கள் இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக தமிழ் அகதியும், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பொருளாளருமான சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இலாப நோக்கம் கருதி ஆட்கடத்தல்காரர்களின் தவறான வழிகாட்டலுக்குள் அகப்பட்டுள்ள அகதிகளும் உள்ளனர். இவ்வாறான ஆட்கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாதம் ஒன்றுக்கு 1800 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க முடியும் என மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவுடன் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என இங்குள்ள பெண்ணொருவருக்குக் கூறப்பட்டுள்ளது என சென்னையில் வாழும் சந்திரகாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செல்ல முற்படும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் 50,000 ரூபா தொடக்கம் 200,000 ரூபா வரை கட்டணம் செலுத்த வேண்டும். சிலர் தமது சொந்தப் பணத்தையும் வேறு சிலர் இரவலாக வாங்கியும் இப்பணத்தை செலுத்துகின்றனர்.

இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வேளையில் பிடிக்கப்பட்ட அகதிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இவ்வாறான முயற்சியை எடுத்திருந்தனர். இதனால் தாம் பெற்றகடனை அடைக்க வழியில்லாத சிலர் தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டுள்ளதாக சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான படகுப் பயணங்களின் மூலம் விரைவில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அகதி நிலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற வலுவான நம்பிக்கையை ஆட்கடத்தல்காரர்கள், தென்னிந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக மெல்பேர்னில் உள்ள லோயல் கல்லூரியின் சமூக செயற்பாடுகள் தொடர்பான பேராசிரியர் கலாநிதி கிளப்ஸ்ரன் சேவியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரும் அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் செங்கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும் என்கின்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. உண்மையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறான எந்தவொரு வரவேற்பையும் அளிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்ட ரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைகின்ற மக்கள் நான்கு ஆண்டு காலம் வரை தடுத்து வைக்கப்படுகின்றனர் என தமிழ் அகதிகள் அறிந்துள்ள போதிலும் தமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என இவர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல கல்வி மற்றும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக கனடா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் செல்கின்றனர்.

அவுஸ்திரேலியா நோக்கி படகுகளில் கொண்டு செல்லப்படும் மக்கள் பலர் கடலில் காணாமற் போவதாகவும் கடந்த ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து இரு படகுகளில் புறப்பட்ட மக்களுக்கு என்ன நடந்ததென்பது இதுவரை தெரியவில்லை எனவும் கலாநிதி கிளட்ஸ்ரன் சேவியர் சந்திரகாசன் ஆகியோர் தெரித்துள்ளனர்.

இந்த மக்களுக்கு உண்மையில் என்ன நடந்ததென்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், நடுக்கடலில் இவர்களுக்கு ஏதும் விபரீதம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. அவர்களது உறவுகள் இவர்கள் தொடர்பாக எதையும் அறியவில்லை. இவர்கள் சென்ற படகுகள கடலில் மூழ்கியிருக்கும் என நாம் கருதலாம் என சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படகுகளில் 40 தொடக்கம் 50 வரையான மக்கள் காணப்பட்டதாக பேராசிரியர் கூறுகின்றார்.

இவ்வாறு அண்மையில் படகுகள் மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட அகதிகளில் 135 பேர் இருந்ததாகவும் இதில் 18 மாதக் குழந்தையும் 72 வயது பெண்மணி ஒருவரும் உள்ளடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த வாரம் கேரளக் கடலில் மீன்பிடிப் படகில் வைத்து பிடிக்கப்பட்டனர். இவர்களை விட மேலும் 16 பேர் கரையில் வைத்து பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறான படகுப் பயணம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய கிட்டத்தட்ட 18 தொடக்கம் 20 நாட்கள் வரை எடுக்கும். அண்மையில் பிடிக்கப்பட்ட படகில் சிறிது உணவுப் பொருட்களும் மிகக் குறைவான குடிநீரும் காணப்பட்டது.

இப்படகில் வழமையாக மீன் பதப்படுத்தி வைக்கின்ற பெரிய குளிர்சாதனப் பெட்டிகளில் பெண்களும் சிறுவர்களும் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுடன், இவர்களை காவல்துறையினர் கண்டபோது இவர்கள் சுவாசிப்பதற்கு மிகக் கடினப்பட்டவாறு இருந்தனர்.

இந்த அகதிகள் முற்றிலும் மனிதர்கள் வாழ வேண்டிய நிலைக்கு முரணாக பயணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அந்தப் படகில் எழும்பி நிற்பதே முடியாத காரியம். அவுஸ்திரேலியாவுக்கான 20 நாட் பயணத்தின் பின், அவர்களில் பலரைக் காப்பாற்ற முடியாமல் இருந்திருக்கும் என உதவி காவல்துறை அதிகாரி தோம்சன் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் பலர் தமது உறவுகள் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக காவல்துறை விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். இவ்வாறு செல்ல முற்பட்ட 21 வயதான கர்ப்பிணித் தாயாரான செல்வி என்பவர் தான் சிறந்த வாழ்வொன்றைத் தேடியே அவுஸ்திரேலியா சென்றதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் தமிழர் என்ற காரணத்தால் எமது நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டோம். இந்தியாவில் எம்மை அந்நாட்டு குடிமக்கள் போல் நடத்தவில்லை. இந்நிலையில் நாங்கள் எமது வாழ்வை சிறப்பாக்க நாட்டை விட்டு வெளியேறியது தப்பா? என செல்வி வினவியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம் செய்வதற்கான ஒரு மையமாக தென் மேற்கு இந்தியக் கரையோரத்தில் உள்ள கேரளா மாறிவருகின்றது. ஆட்கடத்தல்காரர்கள் மூலம் இலங்கையிலும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் மற்றும் தமிழ்நாட்டு அகதி முகாம்களிலிருந்து தப்பி நடந்தும் பேரூந்துகளிலும் வரும் மக்கள் கேரளாவை அடைகின்றனர்.

செலவு குறைந்த படகுப் பயணம், உள்ளூர் தமிழ் ஆதரவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டே கேரளாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கான படகுப் பயணம் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து படகுகள் ஆட்களை ஏற்றிச் செல்கின்றது. இலங்கைத் தீவின் கிழக்குக் கரையிலிருந்து 28 பேரை கொண்ட படகொன்று புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
நன்றி தினக்குரல்


No comments: