இலங்கைச் செய்திகள்

சர்வமத மாநாட்டு தீர்மானங்கள்

கட்டுப்படுத்த முடியாத பெரும் சவாலாக டெங்கு

வறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்

ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும்

இரணைமடுக் குளத்தில் மீன் பிடித்த தொழிலாளர் மீது படையினர் தாக்குதல்

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு இராணுவ முகாமில் செயலமர்வு

முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்!

 தமிழ் கல்வி முறையாக இல்லாததால் சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்

மன்னாரில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கலில் முறைகேடு

திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம்

ஜூலாம்பிட்டியே அமரேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
சர்வமத மாநாட்டு தீர்மானங்கள்

Monday, 18 June 2012

போர் முடிவுக்கு வந்து மூன்று வருட காலம் கடந்துவிட்ட நிலையிலும் வடக்குகிழக்கில் இராணுவம் செறிவாக நிலை கொண்டிருப்பதால் மக்கள் யுத்த மனோபாவத்துடனேயே காணப்படுவதாக கொழும்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களின் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்கள் மீட்சி பெறுவதற்கு சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் சர்வமதத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். நாட்டில் காணப்படும் முக்கியமான பிரச்சினை ஒன்றின்பால் சர்வமதத் தலைவர்கள் தமது கவனத்தை குவித்திருப்பதுடன், கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருப்பது கவனத்துக்குரிய ஒன்றாகும். எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அப்பால் சர்வமதங்களினதும் தலைவர்கள் நடத்திய சர்வமத மாநாட்டிலேயே இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் பின்னர் காணப்படும் சந்தேகம், அச்ச நிலை, நம்பிக்கையின்மை போன்றவை நீக்கப்பட வேண்டும் என்பவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்து வழமை நிலை தோன்றியுள்ளதாகக் கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தமனோநிலையில்தான் பொதுமக்கள் இன்னமும் வைக்கப்பட்டுள்ளார்கள். சர்வமதத் தலைவர்களின் தீர்மானம் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் அறிக்கைகள் கூட இதனைத்தான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியிருந்தது. இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கின்றது என “சேவ் த சில்ரன்’ என்ற அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரட்ண இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். “இராணுவ நடமாட்டம் என்பது போரினால் அச்சமடைந்துள்ள சிறார்களுக்கு கடந்த போரை நினைவூட்டுகின்றது. அத்தோடு அந்த நினைவூட்டல் போர் இன்னமும் முடிவடையவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன்ரன்கின் கூட இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற விகிதாசாரத்தில் வட பகுதியிலும் இராணுவத்தை வைத்திருக்கலாம் என்பது தான் அவருடைய கருத்து. அவரது இந்தக் கருத்துக்கு சிங்களக் கடும் போக்காளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பிய அதேவேளையில், இலங்கை அரசாங்கமும் இந்தக் கருத்தினால் சீற்றமடைந்திருந்தது வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் இவ்வாறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கண்டிக்கப்பட்டார். ஆக வட பகுதியில் இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை யாரும் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் எண்ணிக்கை கணிசமானளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதும் வன்னிப் பிராந்தியத்தின் நிலைமைகள் அவ்வாறில்லை. வன்னியில் இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவும் இல்லை. வடக்கில் இவ்விதம் இராணுவம் செறிவாக வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் என்பன இடம்பெறுகின்றன. இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக அரசாங்கம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.

கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு காரணங்களை அரசாங்கம் கூறிக்கொள்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மையாகும். நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் போன்றவற்றைச் சாத்தியமாக்குவதற்காகவே இவ்வாறு வட பகுதியில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டிருப்பதாக மக்கள் கருதுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதற்குப் பொருத்தமான காரணம் ஒன்றைக் கூறக்கூடிய நிலையில் அது இல்லை. வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இராணுவம் அகற்றப்படுவது அவசியம். வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இராணுவம் அவசியமில்லை. ஆனால், இராணுவத்தின் அதிகரித்த பிரசன்னம் தொடர்ந்தும் ஒரு யுத்த பீதிக்குள்ளேயே மக்களை வைத்திருக்கின்றது. உளவியல் ரீதியாக மக்களை இது பாதிக்கின்றது என்பதை மனித உரிமைகள் அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் இராணுவப் பிரசன்னத்தைப் பேண வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்புக் காட்டுவது ஏன்?

போர் முடிவுக்கு வந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிவில் நடவடிக்கைகளில் பொலிஸாரே ஈடுபடுத்தப்பட வேண்டும். பொலிஸ் என்பது ஒரு சிவில் படையாகும். ஆனால், இராணுவம் அவ்வாறல்ல. சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடுத்துவது வேண்டத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எனவே மக்கள் மத்தியில் காணப்படும் அச்ச நிலையைப் போக்கி சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கு இராணுவக்குறைப்பு மிகமிக அவசியமானதாகும். சர்வதேச சமூகமும் இலங்கையிடம் இன்று அதனைத்தான் கேட்கின்றது. சர்வமத மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதனைத் தான் கேட்கின்றது. இந்த நிலையில் சிங்களத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்!
நன்றி தினக்குரல்

கட்டுப்படுத்த முடியாத பெரும் சவாலாக டெங்கு

Monday, 18 June 2012

மருத்துவத்துறை தற்போது போன்று வளர்ச்சி கண்டிராத கடந்த நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் பிளேக், மலேரியா போன்ற கொடிய நோய்கள் பெருந்தொகையான உயிர்களைக் காவு கொண்டிருந்தன. ஆனால், மருத்துவ விஞ்ஞானம் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் இந்தப் புத்தாயிரமாம் ஆண்டிலும் டெங்கு போன்ற நோய்களினால் உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கையில் மட்டும் இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தில் 80 பேர் டெங்கினால் இறந்துள்ளதுடன், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்பத்திரிகளில் டெங்கு நோயாளர்களினால் வார்ட்டுகள் நிரம்பி வழிவது கொள்ளை நோயின் அளவுக்கு இது இட்டுச் சென்றிருக்கின்றதோ என்ற பீதியை ஏற்படுத்துகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊழியர் ஒருவர் பத்தரமுல்லையில் டெங்கு நோயினால் மரணமடைந்திருப்பதும், டெங்குக் காய்ச்சலால் இளம் பிக்குகள் பலர் பீடிக்கப்பட்டதையடுத்து கண்டியிலுள்ள அஸ்கிரிய மகா பிரிவேனா தற்காலிகமாக மூடப்பட்டதும் நுளம்பினால் ஏற்படும் இந்த மோசமான நோயின் தாக்கத்தை வெளிப்படுத்திய அண்மைய சம்பவங்களாகும். நகரப்பகுதிகளில் வாழ்வோரே இந்த டெங்கு நோயினால் அதிகளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் 46 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 26 மரணங்களும், கம்பஹாவில் 14 மரணங்களும், களுத்துறை மாவட்டத்தில் 6 மரணங்களும் சம்பவித்திருக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை, கொலன்னாவை, கொழும்பு மாநகரசபைப் பகுதி, மொரட்டுவ, நுகேகொடை, கடுவல, மகரகம ஹோமாகம, பிலியந்தலப் பகுதிகளும் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையும் மன்னார் மாவட்டத்தில் மன்னாரும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சியும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பும் மற்றும் நாத்தாண்டியா, ருவான்வெல, ரம்புக்கனை, பெல்மதுளை, பலாங்கொடை, பேருவளை, பாணந்துறை, மத்துகம, கம்பளை, குருந்துவத்த, கண்டி மாநகரசபைப் பகுதி, வத்தேகம, மாத்தறை பிரதேச சபைப் பகுதி, காலி மாநகரசபைப் பகுதி, வத்தளை, தொம்பே, நீர்கொழும்பு மாநகரசபைப் பகுதி, பியகம, கம்பஹா, களுத்துறை போன்ற பகுதிகள் டெங்கு நுளம்பின் ஆபத்து அதிகமாக உள்ள பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கினால் உயிரிழந்தோரில் 24 சதவீதமானோர் 524 வயதுக்கு இடைப்பட்டோர் என்பதை புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கின் தாக்கம் அதிகளவுக்கு ஏற்படக் கூடியவர்களாக இளம் பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் மூன்று நாட்களில் குறையாவிடில் உடனடியாக இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு டெங்கா? இல்லையா? என்பதை தீர்மானித்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான பிள்ளைகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி, செயற்பாடுகளில் மாற்றங்கள், தோலில் புள்ளிகள், உடல்வலி என்பன இந்த நோய்த் தாக்கத்திற்கான அறிகுறிகளாகும். உரிய காலத்தில் சிகிச்சை பெறாததால் 9 மரணங்கள் சம்பவித்திருப்பதாக லேடி ரிச்வே மருத்துவமனையின் பணிப்பாளர் இரட்ணசிறி ஏ. ஹேவாகே கூறியுள்ளார்.

காலத்துக்குக் காலம் அறிவுறுத்தல்கள் விடுத்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் வருகின்ற போதிலும் இந்த நோய்த் தாக்கம் அதிகரித்திருப்பதற்குரிய காரணம் என்ன என்பதே தற்போதுள்ள முக்கியமான கேள்வியாகும். டெங்கு நோய்த் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதையடுத்து இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலணிப்பிரிவின் அவசரக் கூட்டத்துக்கு சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன அழைப்பு விடுத்திருக்கிறார். டெங்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை உள்ளூராட்சி சபை அதிகாரிகள் சிலர் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு சுகாதார அமைச்சிலுள்ள டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு பணிப்பாளரிடமிருந்து எழுந்திருக்கின்றது. டெங்குத் தாக்கத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவுறுத்தல்கள் அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்க உள்ளூராட்சி நிர்வாக மட்டத்தில் அரசாங்கம் குழுக்களை அமைத்திருந்தது. அக்குழுக்கள் தத்தமது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சில உள்ளூராட்சி நிர்வாகங்கள் இன்னமும் குழுக்களைக் கூட நியமிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் நிலையங்கள், பாடசாலைகள், குப்பை கூழங்களைப் போடும் இடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், காணிகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பான இடங்களாக உள்ளன. அத்துடன் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் இடங்கள், கழிவு நீர், வாய்க்கால் அடைபட்டுக் கிடக்கும் இடங்களும் நுளம்புகளின் பெருக்கத்துக்கு வாய்ப்பான இடங்களாகும். காலத்துக்குக் காலம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உரிய முறையில் அவற்றைப் பின்பற்றாததும் அதே சமயம் அதிகாரிகளின் கண்காணிப்பு நல்ல முறையில் இடம்பெறாதமையுமே டெங்கின் தாக்கம் கட்டுப்பாடின்றி பெருகுவதற்கான காரணமாகும். சுகாதார அமைச்சு மட்டும் இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தனியாக மேம்பாடு காணமுடியாது. பொதுமக்கள் மத்தியில் இந்த நோயின் தாக்கம் தொடர்பாக அதிகளவுக்கு விழிப்புணர்வு அவசியமாகும். உலக சனத் தொகையில் ஐந்தில் இரண்டு பகுதியினரான 250 கோடி மக்கள் டெங்கு நோயினால் பீடிக்கப்படும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமையம் எச்சரித்திருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் டெங்கு மரணங்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கை இதனைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகமிக அவசியம்.
நன்றி தினக்குரல்

வறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்

Monday, 18 June 2012

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விமர்சனத்தின் மத்தியில், அரசாங்கம் யுத்த அகதிகளை"மீள்குடியேற்றுதல்' என்னும் தனது பிரசாரத்தினை ஆரம்பித்தது. அகதிகளில் 90 வீதமானவர்களை மீளக்குடியமர்த்தியுள்ளதாக வலியுறுத்தியுள்ள அரசாங்கம், அவர்களது வாழ்க்கை யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட நல்ல நிலையில் இருப்பதாக கூறிக் கொள்கின்றது.


2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டது. ஆயினும், முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான இலங்கையின் வடக்கில் வன்னியில் வாழ்கின்ற "மீள்குடியமர்த்தப்பட்டுள்ள' தமிழர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் வாழ்கின்றனர். பின்வரும் கட்டுரை அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த உலக சோசலிச வலைத்தள (ஙிகுஙிகு) நிருபர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டது. வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக குடியிருப்பாளர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஙிகுஙிகு நிருபர்கள் குழு, கிளிநொச்சியில் இருந்து 13 கிலோமீற்றர் தூரத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள தர்மபுரம் கிராமத்துக்கு சென்றது. அக்கிரமம் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டதாகும். மீளக் குடியமர்த்தப்பட்டதில் இருந்து 6 மாதங்கள் மட்டும் உணவு, நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது அகதிகளுக்கு பொருத்தமான வேலையோ அல்லது வருமானமோ இல்லை. அடிக்கடி உணவு இல்லாமல் நாட்களைக் கடத்துகின்றார்கள்.

இந்தக் கிராமத்தின் முதலாவது பரம்பரையினர், 1950 களில் ஏற்பட்ட தமிழர் விரோத இனக்கலவரம் காரணமாக வெளியேறிய இலங்கையின் மத்திய மாகாணங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களுடன் 1990 களில் யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அகதிகளான மக்களும் கலந்து வாழ்கின்றனர். யுத்தத்தின் இறுதிக் கட்டதின் போது தர்மபுரம் வாசிகள் அகதிகளாக வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். தர்மபுரம் கிராமத்தை 2009 ஜனவரி 15 அன்று இலங்கை இராணுவத்தினர் புலிகளிடம் இருந்து கைப்பற்றினர்.

தர்மபுரத்தில் உள்ள தரப்பாள் குடிசை

கூடுதலான மக்கள் இன்னமும் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தரப்பாள்களினால் அமைக்கப்பட்ட குடிசைகளின் கீழ் வாழ்கின்றனர். அதற்குப் பின்னர், கூரைக்கு உபயோகிப்பதற்காக அவர்களுக்கு 8 தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிசையும் 8 து 8 அடி நீள அகலம் கொண்ட ஒரு அறையைக் கொண்டதாகும். அதைத்தான் படுக்கை அறை, சமையல் அறை மற்றும் வரவேற்பறையாகவும், பயன்படுத்துகின்றார்கள். வெப்பமான காலங்களில் தகரக் கொட்டில்களின் கீழ் தொடர்ந்தும் இருக்க முடியாது.குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வேலைகள் கிடையாது. அவர்கள் உயிர்வாழ்வதற்காக தினக் கூலி வேலைகளையே நம்பியிருக்கின்றனர்.

ஒரு சில வீடுகள் அரசாங்க உதவியுடன் கட்டப்பட்டுள்ள போதிலும், கூடுதலான மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. ஒரு புதிய வீடு கட்டுவதற்கு 600,000 செலவாகின்ற போதிலும், அரசாங்கம் 325,000 ரூபா (2.470 அமெரிக்க டொலர்) மட்டுமே வழங்கியுள்ளது. குடியிருப்பாளர்கள், வீட்டின் எஞ்சிய பகுதியை கட்டுவதற்காக கடன் வாங்க முயற்சிக்கின்றனர்.

ஒரு பெண் விளக்கியது போல், அரசாங்கம் (ஒரு வீட்டுக்கு) 325,000 ரூபா தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் நாங்கள் 225,000 ரூபா மட்டுமே பெற்றுள்ளோம். நாங்கள் மீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டோம். ஆனால் வீட்டினைக் கட்டி முடித்த பின்பு தான் மீதிப் பணம் எங்களுக்கு தரப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு வேளை கஞ்சிக்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எவ்வாறு மீதிப் பணத்தினை தேடுவது?

அவருடைய கணவர் பேசும் போது, நான் தினமும் சந்திக்குப் போய் ஏதாவது வேலைக்காக காத்திருப்பேன். யாராவது எனக்கு வேலை கொடுத்தால், அதன் மூலம் பெறும் பணத்தினைக் கொண்டு எனது குடும்பத்திற்கு உணவளிப்போன். வேலை கிடைக்காவிட்டல், நாங்கள் பட்டினி கிடப்போம் அல்லது கடையில் கடன் வாங்குவோம். நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலைதான் சாப்பிடுகின்றோம். சில வேளைகளில் அதுவும் இல்லாமல் இருப்போம் என்றார்.

13 வருடங்களுக்கு முன்னர் கணவனை இழந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயார் கூறியதாவது; நான் ஒரு வீட்டுக்கான உதவியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. நான் அதிகாரிகளிடம் கேட்ட போது, வீட்டுத் திட்டம் வந்தால் தருவதாக கூறுகிறார்கள். அநேகமானவர்கள் அந்தளவுக்குக் கூட முயற்சிக்கவில்லை.

எனக்கு நிரந்தரமான வேலை கிடையாது. நான் எனது தந்தையின் உதவியுடன் விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நில உரிமையாளர்கள் தங்களின் நிலத்துக்கு கூடுதலான குத்தகைப் பணம் கேட்பதால் தொடர்ந்து விவசாயம் செய்வது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. இந்த குத்தகை கொடுப்பதற்காக ஒத்துக் கொண்டிருந்தால், மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் கையில் ஒன்றும் இருக்காது என அவர் கூறினார்.

இந்தப் பெண்ணைப் போல் பல குடியிருப்பாளர்களுக்கு, குடியமர்ந்தவர்களுக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.ஓ.எம்.) ஒருவருக்கு 50,000 ரூபா கோழிப் பண்ணை அமைப்பதற்காக வழங்கியிருந்தது. இதில் 20,000 ரூபா மானியமாகவும், 30,000 ரூபா 10 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடனாகவும் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் நோய் தொற்றியதால் எல்லாக் கோழிகளும் இறந்தன. இந்தப் பிரதேசத்தில் கால்நடை வைத்தியர் யாரும் கிடையாது.

அவர்கள் ஐ.ஓ.எம். நிறுவனத்திடம் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிக் ச்கொண்ட போதிலும், அந்த உதவி நிறுவனத்தின் அதிகாரிகள் பணத்தினை மீளச் செலுத்துமாறு வற்புறுத்தினார்கள். நாங்கள் உயர்ந்த வட்டிக்கு கடன்பட்டே கடனை திருப்பிச் செலுத்தினோம். நாங்கள் எங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள முனைந்து முடிவில் நாங்களே கடன்காரர் ஆகிவிட்டோம். நாம் சம்பாதித்தது அது மட்டுமே என அந்தப் பெண் கூறினார்.

கிராமவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் முகம் கொடுத்துள்ளார்கள். அங்கே சில கிணறுகள் இருந்த போதிலும், குழாய் நீர் விநியோகம் கிடையாது. அவர்களுக்கு ஒரு கிணறு தோண்டுவதற்கு குறைந்தது 200,000 ரூபா தேவை. பல குடும்பங்கள் குளிப்பதற்கும் உடைகள் கழுவுவதற்கும் ஒரு சிறிய குளத்தினை பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளன. அதே குளத்தில் மிருகங்களும் குளிப்பதனால் தண்ணீரால் பரவும் தொற்று நோய்களுக்கு உள்ளூர் வாசிகள் அகப்படுகிறார்கள். இக்கிராமத்தில் மலசல கூட வசதிகளும் மற்றும் மின்சார வசதிகளும் கிடையாது. சிறுவர்கள் பாதுகாப்பற்ற குப்பி விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மங்கலான வெளிச்சத்தில் தான் இரவில் படிக்கின்றார்கள்.

ஒரு வன்னி குடியிருப்பாளர் அவரின் குடிசைக்கு வெளியே இக் கிராமத்தில் உள்ள பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் இருக்கின்ற போதிலும், அதற்கான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளுக்கே இப்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் அவர்களுக்கு தனியார் வகுப்புக்கள் தேவைப்படுகின்றன. பல்கலைக்கழக நுழைவுக்காக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் கற்க வேண்டுமானால், அவர்கள் யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும்.

தர்மபுரத்தில் உள்ள சிறிய அரசாங்க வைத்தியசாலை அடிப்படை உபகரணங்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வைத்தியசாலை கல்மடு, வட்டக்கச்சி, உடையார்கட்டு, விஸ்வமடு போன்ற கிராமங்களுக்கும் சேவையாற்றுகின்றது.

வைத்தியசாலை ஊழியர்கள் வசதி பற்றாக்குறை பற்றி ஊடகங்களுடன் பேசுவதை அரசாங்கம் தடை செய்திருந்த போதிலும், ஒரு ஆஸ்பத்திரி ஊழியர் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்;

இந்த ஆஸ்பத்திரிக்கு ஆறு வைத்தியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் ஒரு வைத்தியர் மட்டுமே இங்கு சேவையாற்றுகின்றார். கட்டில்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. மருத்துவ பரிசோதனைக்கான ஆய்வு கூடங்கள் கிடையாது. குறைந்தது, மலேரியாவைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் கூட இங்கு கிடையாது.

யுத்தத்தின் போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இரண்டு தடவைகள் காயப்பட்ட ஒரு 22 வயது தாய் கூறியதாவது; எனது உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. எனது முகவாய்கட்டையில் ஒரு துப்பாக்கிச் சன்னம் உள்ளது. நான் அதை வெளியே எடுப்பதற்காக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிகளுக்கு போனேன். ஆனால் அவர்கள் என்னை கொழும்பு ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறிவிட்டார்கள். ஆனால், அந்த சிகிச்சைக்கு எனக்கு 200,000 தேவைப்படுகிறது. செல் தாக்குதலால் எனது கணவன் இடது கையை இழந்துள்ளார். அவரின் வலது கண்ணும் மோசமாக காயமடைந்துள்ளது. அவரால் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது. எங்களுக்கு சிகிச்சை தேவை. ஆனால், சிகிச்சைக்கான காசு இல்லை.

யுத்தத்தின் போது தங்களின் குடும்ப பராமரிப்பாளர்களை இழந்துள்ளார்கள். வயோதிப குடியிருப்பாளர்கள் தினமும் உணவுக்காக நம்பிக்கையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எண்பது வயதான பிலிப்பையா இராஜநாயகம், 2009 இல் இடம்பெற்ற செல் தாக்குதலால் தனது 30 வயது மகனை இழந்துள்ளார். பிலிப்பையாவும் அவரது மனைவியும் கிளிநொச்சியில் உள்ள பன்னங்கண்டி கிராமத்தில் வாழ்கின்றனர். அவர் உணவுக்காக அயலவர்களிடம் கெஞ்சும் நிலையில் உள்ளார். ஆனாலும் அயலவர்களும் வறுமைக்குள் தான் வாழ்கின்றனர்.

நாங்கள் சந்தித்த அனைவரும் தமது துன்பமான நிலைமைகள் பற்றிய கசப்பையும் அரசியல் கட்சிகள் பற்றிய தங்களின் வெறுப்பையும் வெளிப்படுத்தினார்கள். கட்சிகள் வாக்குகளுக்காக மட்டுமே எங்களிடம் வருகின்றன என்பது பொதுவான கருத்தாக இருந்தது.

கீதாஞ்சலி (ஆளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு அமைப்பாளர்) இங்கு வருவார். அவர் எந்நேரமும் தங்களின் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டும் நோக்கத்துடன் பெண்களுக்கு ஒரு நல்வாழ்வு பற்றியே பேசுவார். ஆனால் அவர் எங்களுக்குப் பிரயோசனமாக எதுவும் செய்வதில்லை என ஒரு பெண் கூறினார்.

இன்னொரு கிராமவாசி இலங்கையின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி கூறும் போது, அவர்கள் எங்களிடம் வாக்குகளுக்கு மட்டும் வருவார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்கு எதுவித பிரயோசனமும் கிடையாது. இறுதித் தேர்தல்களின் போது, நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தோம். அதற்குப் பின்னர் அவர்கள் எங்களிடம் வருவதேயில்லை என்றார்.

உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து
நன்றி தினக்குரல்


ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும்
 
Monday, 18 June 2012
இஸ்மாயில் பி.ம.ஆரிஃப்


இலங்கைக்கு சார்பான நாடு, சார்பற்ற நாடு என்ற வித்தியாசமின்றி சர்வதேச நாடுகளுக்கும் சென்று பரஸ்பர பேச்சுக்களில் ஈடுபாடு மாநாடுகளில் பங்குபற்றுகை, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுகை எனப் பல இன்னோரன்ன நடவடிக்கைகளில் ஜனாதிபதி அக்கறை காட்டிவரும் காலம் இது.

ஊர்ப் பேச்சுக்கள், ஊடகங்கள், பல தகவல்களை வெளிக் கொணர்ந்தாலும் சற்றேனும் சறுக்காதவர் போல் தோன்றக் கூடிய ஜனாதிபதி தமது லண்டன் விஜயத்தின் போது ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்பில் சலனம் காண்பிக்கவில்லையாயினும் அங்கு இடம்பெற்ற அசாதாரண நிகழ்வுகள் தொடர்பில் அதைரியப்படாவிடினும் அகௌரவப்பட்டிரார் என்பதற்கில்லை.

லண்டனின் குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதாக 3000 அளவான தமிழர்களின் ஆர்ப்பாட்டம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க உடன்பட்டிருந்ததாக பல பிரிட்டிஷ் ஊடக நிறுவனங்கள் கூறியிருந்ததாக ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர் மேற்கொள் காட்டப்பட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பரஸ்பரம் ஆதரவாகவும் எதிராகவும் எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தியதாக அறிய முடிந்தது. தமிழ்க் குழுவினர் ஸ்ரீ லங்கா ஜனாதிபதி யுத்தக் குற்றவாளி என்றும் இலங்கையை ஆதரிக்கும் மற்றுமொரு குழுவினர் வேறு ஒரு முனையில் நின்று கொண்டு ராஜபக்ஷ எங்களது அரசர் ராஜபக்ஷ எமது தலைவர் என்று ஆடிப்பாடி கோஷமிட்டனர்.

இத்தகைய நிகழ்ச்சிகள் கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி லண்டனுக்கு சென்றிருந்த போது நடந்ததையே மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்று ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற விருந்த முதல் இலங்கை நாட்டுத் தலைவர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி அதிகம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. முன்பதாக ஒக்ஸ்போட் யூனியன் அங்கத்தவராகவோ அல்லது பதவியஸ்தராகவோ இருந்திராத இலங்கை ஜனாதிபதி ஒரு சிறப்புரையாளராக அழைக்கப்பட்டிருந்தமை ஒரு பெருமையாக முக்கியஸ்தர்களால் கருதப்பட்டது.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் உரையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை செய்யவுள்ளதாக தமிழ்க் குழுக்கள் கூறியதைத் தொடர்ந்து தங்களால் ஒக்ஸ்போட் வீதி முழுக்கவும் பாதுகாப்பு வழங்க முடியாதென்று பொலிஸ் கூறியதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரையை இரத்துப் பண்ண வேண்டிய நிலை தோன்றியது. ஒக்ஸ்போட்டில் அன்றிருந்த கிறிஸ்மஸ் ஷொப்பிங்குக்கும் இடையூறாக இருந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அன்றும் இன்றும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்ற சிக்கல்களுக்குள்ளாகி தப்பித்ததாக கூறப்படுகிறது. ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் முந்திய ஜனாதிபதியின் விஜயத்தின் போது நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட கட்டளை நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தருணம் குறித்த அதிகாரி கொழும்பை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பயணத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தடவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களில் ஒன்றான லண்டனைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் போரம் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த இரு முக்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விஸா இரத்து செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. தமிழர் போரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோரிக்கை தவறாக புனையப்பட்டதாகவும், பிரிட்டனுக்குள் நுழைய ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து முக்கியஸ்தர்களை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் தேவை எழவில்லை என்றும் கூறியது.

குறித்த மனு மூலமான கோரிக்கை, காலம் பிந்தியதாக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி சம்பந்தப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நிலையில் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள வந்தடைந்து விட்டனர் என்று தெரிவித்தார். எவ்வாறாயினும் உலகத் தமிழர் போரம் யுத்தக் குற்றங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு விஸா வழங்கியிருந்த கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் தீர்மானத்தை தமது மனுவின் மூலம் சவாலுக்குட்படுத்தியிருந்தது. அவ் விருவருக்கும் வழங்கப்பட்ட விஸா அனுமதி வாபஸ் பெறப்பட வேண்டும் என நீதிமன்றத்தை கோரியிருந்தனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

எவ்வாறாயினும் ஒக்ஸ்போட் விவகாரத்தின் போதும் லண்டனுக்கான விஜயத்தின் போதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட விளம்பர அணுகுமுறையில் பாரிய வித்தியாசமிருந்ததாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் ஒக்ஸ்போட் விஜய காலத்தின் போது பிரிட்டனிலோ அல்லது வெளிநாட்டு ஊடகங்களிலோ பாரிய விளம்பரப்படுத்துகை இருக்கவில்லை எனக் கூறும் சர்வதேச நோக்கர்கள் அது ஒக்ஸ்போட்டில் ஒரு உரையாற்றும் குறிப்பிட்ட விவகாரமாக அமைந்திருந்ததாக கூறினார்.

ஆனால் சமீபத்திய ஜனாதிபதியின் லண்டன் விஜயம் மற்றும் நிகழ்ச்சிகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாகவும் செய்தி ஸ்தாபனங்கள் மூலமாகவும் பல நாட்களாக பிரித்தானியாவின் மூலை முடுக்குகளையும் உலகின் பல பிராந்தியங்களையும் ஆக்கிரமித்திருந்தன. குறிப்பாக எலிஸபெத் மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்களின் உலகளாவிய நேரடி ஒளிபரப்பின் போது இலங்கை மீதும் ஜனாதிபதி மகிந்த மீதும் கூடுதல் கவன ஈர்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்தகைய கவனஈர்ப்புக்கான காரணங்களாக போர்க்குற்றச் சாட்டுக்கள் இலங்கை மீதான ஜெனீவாத் தீர்மானம் போன்றவையாக இருக்கலாம். அநேகமாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொன்றிலும் வைரவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் முன்பக்கத்தை அலங்கரித்திருப்பினும் இலங்கை ஜனாதிபதியை மனிதஉரிமைகளை மீறியவர் என்ற தோரணையிலும் குற்றஞ்சாட்டியிருந்தன. கவலை என்னவென்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் கொடும்பாவியை காவிச் சென்றமை வீதிகளில் போட்டு எரித்தமையாகும். கொடும்பாவியின் கழுத்தைச் சுற்றியதாக ஒரு கயிற்றைப் போட்டு ஒரு பெரிய துணியில் தொங்கவிட்டமை இலங்கைப் பிரஜைகளால் பொறுத்துக் கொள்ள முடியாததாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுயமரியாதையுள்ள எந்த இலங்கையனும் எத்தகைய அரசியல்கோட்பாடுகளை கொண்டிருப்பினும் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு மண்ணில் வைத்து அவமானப்படுத்தப்படுவதை காண்பதற்கு விரும்பான். இதனை ஒரு அளவு கடந்த மிலேச்சத்தனமான செயல் எனக்குறிப்பிடும் அக்கறையுள்ள பிரஜைகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் உண்டு பண்ணிய செயல் என ஆதங்கப்படுகின்றனர். லண்டன் வீதிகளில் இலங்கையின் நற்பெயர் களங்கப்படும் வகையில் நாட்டுப்பிரச்சினைகள் வியாபிப்பு கண்டுள்ளதையிட்டு புத்திஜீவிகள் கவலையடைந்துள்ளனர்.ஆசியாவில் சிறந்த ராஜதந்திரி என்ற விருதைப் பெற்றுக்கொண்டவர்கள் கூட ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தை செம்மையாக்கவும் செப்பனிடவும் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகளுமுண்டு.

எவ்வாறாயினும் பிரிட்டனில் இலங்கையைபிரதிநிதித்துவப்படுத்தும் ராஜதந்திரி தனது சொந்த ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்கையில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை சரியானமுறையில் கணிப்பீடு செய்ய முடியாதிருந்த இயலாமை சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னர் அங்கிருந்த ராஜதந்திரி இலங்கை வெளிக்கொணர்ந்த ராஜதந்திரிகளில் சிறந்தவராக கருதப்படக்கடியவரல்ல என்று கூறப்பட்ட அந்நபர் குறைந்தபட்சம் கடந்த டிசம்பரில் ஒக்ஸ்போர்ட்டுக்கு ஜனாதிபதி வருவது உசிதமானதல்ல என்பதை எச்சரித்திருந்தாராம். தற்போதைய ராஜதந்திரி பொதுநலவாய வர்த்தக சங்கத்தில் ஒரு பணிப்பாளர். ஆபிரிக்காவிலும் கடமையாற்றியுள்ள அவர் ஒரு வர்த்தகரும் கூட. ஆயினும் கவுன்சிலின் பணிப்பாளர் என்ற கோதாவில் ஜனாதிபதி பொதுநலவாய வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் அமர்வில் உரையாற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஜேர்மன்,பிரான்ஸ் போன்ற தூர இடங்களில் இருந்தெல்லாம் பயணம் செய்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடியமை ஒரு பெரிய ரகசியமல்ல என்பதை அசௌகரியத்துக்குள்ளான வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உணருகின்றனர். குறித்த ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்படாவிட்டால் அவரது உரையை அசௌகரியப்படுத்தும் வகையில் செயல்படவென தமிழர் ஆதரவுக் குழுக்கள் குறைந்தது ஐம்பது நுழைவுச்சீட்டுகளையேனும் தமது இரண்டாவது நடவடிக்கையாக கொள்வனவு செய்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்தன.

நாட்டுத் தலைவர், அரச தலைவர் என்றடிப்படையில் இல்லையென்றாலும் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர் என்ற வகையில் பிரிட்டிஷ் பிரதமரை ஜனாதிபதி சந்திக்க விரும்பினார். பொதுநலவாய செயலக தலைமையான கமலேஷ்சர்மா வழங்கிய விருந்துபசாரத்தில் வைத்து ஒரு சில வார்த்தைகளை பிரிட்டிஷ் பிரதமரோடு பேசக்கிடைத்ததாக அறிய முடிந்தது. நாட்டின்அபிவிருத்தி தொடர்பான ஒரு சிநேக பூர்வ சந்திப்பு என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

ஆனால் பிரிட்டிஷ் பிரதமரின் பேச்சாளரை மேற்கோள்காட்டி அங்கு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்ததாம். இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தப்படுவதை பேசியதாகவும் பகல் போசனத்துக்காக 52 நாடுகளைச் சேர்ந்த பொதுநலவாய தலைவர்கள் ஒன்றுகூடியதால் இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட சம்பாஷணை சாத்தியப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எது எவ்வாறாயினும் பிரிட்டனிலும் ஏனைய இடங்களிலும் லண்டன் விவகாரம் தொடர்பில் வெளியாகியிருந்த அறிக்கைகள் மற்றும் வித்தியாசமான தலைப்புகள் நிதர்சனமான நிலைமைக்கு அசௌகரியமான சூழலை தோற்றுவித்தன. என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டனின் கார்டியன் செய்தி வெளியிடுகையில் ஆர்ப்பாட்ட அச்சங்கள் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது உரையை ரத்துச் செய்யவேண்டிய பலவந்தத்துக்குள்ளானதாக குறிப்பிட்டிருந்தது.

லண்டன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தியில் பொதுநலவாய பகற்போசனத்தில் தமிழர் ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்திய லண்டனிலுள்ள மல்பரோ இல்லத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஆஇ உலக சேவை தொலைக்காட்சி கூறுகையில், பொதுநலவாய தலைவர்களுக்கான ராஜ்ய பகல் போசனத்தை தமிழர் எதிர்க்கின்றனர். பகல் போசனத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது என்று தெரிவித்தது. க் ஹிந்து பத்திரிகை தனது செய்தியில் ராஜபக்ஷ மறுபடியும் லண்டனில் ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்வதாக கூறியிருந்தது.

மிகப் பிந்திய இலங்கைச் செய்திகளின் படி புலிஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஆற்றவிருந்த உரையை ரத்துச்செய்ய நேர்ந்தமையையிட்டு பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் வருத்தம் வெளியிட்டபோது தனது 42 வருட கால அரசியல் வரலாற்றில் ஆர்ப்பாட்டங்களுக்கு பழக்கப்பட்டவன் என்பதாலும் பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டாளர் என்பதாலும் கவலைப்படத் தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதிலளித்தாராம்.

எது எவ்வாறாயினும் ஏற்புடைய நியமங்கள் மறுக்கப்பட்டு ஒரு ஜனாதிபதிக்கு அசௌகரியமும் ஒரு தேசத்துக்கு அவமானமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

கட்டுரையாளர்சட்டத்தரணியும் சுயாதீன தேசிய முன்னணியின் தலைவருமாவார்.
நன்றி தினக்குரல்

இரணைமடுக் குளத்தில் மீன் பிடித்த தொழிலாளர் மீது படையினர் தாக்குதல்

Tuesday, 19 June 2012

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சாந்தபுரம் கிராம மீனவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.


வளமைபோல் மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த படையினர் மீனவர்களை கரைக்கு அழைத்து அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், உடனடியாக வீடுகளுக்குத் திரும்பிவிட வேண்டுமெனவும் எச்சரித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் தெரிவிக்கையில் ;

வழமை போல் 3 படகுகள் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் காற்றினால் படையினர் விதித்திருந்த எல்லையினை படகுகள் தாண்டிச் சென்றுவிட்டன. எனினும் அது குறித்து அவதானிக்காமல் வலைகளைப் போட்டு மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

இதனைக் கரையில் இருந்து அவதானித்த படையினர் அந்த மீனவர்களை கரைக்கு அழைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் உடனடியாக வீடுகளுக்குத் திரும்பி விடவேண்டுமென எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் தமது வலைகளை எடுத்துக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருக்கின்றனர். எனினும் அதற்கு படையினர் அனுமதிக்காத நிலையில் மீனவர்கள் வலைகளை விட்டு வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாந்தபுரம் கிராமத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய்களே மீனவர்களை எல்லைமீற அனுமதித்ததாக அவர்கள் மீதும் படை அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

படையினரின் இவ்வாறான தாக்குதலால் தொழில்களை விட்டு விட்டு மீனவர்கள் வீடுதிரும்பியுள்ளார்கள், இரணைமடு குளத்தினை நம்பி தொழில் செய்யும் தொழிலாளர்கள் மீது படையினர் அடிக்கடி பல்வேறு கெடுபிடிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு இராணுவ முகாமில் செயலமர்வு


19/6/2012

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகளை முக்கிய செயலமர்வு ஒன்றை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான புதிய திருப்பங்கள் குறித்து விளக்கமளிக்கவே இலங்கையின் தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நான்கு நாட்கள் இவர்களுக்கு தியத்தலாவ, கிளிநொச்சி மற்றும் கொழும்பில் சிறப்பு செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இந்தச் செயலமர்வில் ஜனாதிபதி மஹகிந்த ராஜபக்ஷ, வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கை தூதுவர்களுக்கு, வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர்.
நன்றி வீரகேசரி

முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்!


19/6/2012

மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தம் இடம்பெற்றபோது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த பின் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதன் போது கரடிக்குளி, மரிச்சுக்கட்டி,பாலைக்குளி,மொட்டை தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்களும் பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீர்கொழும்பு மக்களும் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பலனாக தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர்த்தாது அருகில் உள்ள கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமம் சுற்றிவர கடற்படையினருடைய பாதுகாப்பில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளினுள் சென்ற மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தடயங்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த கிராமத்தினுள் மக்களுடைய வீடுகள் பல திருத்தப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற விடயம் தெரிய வந்துள்ளது.

கடற்படையினர் தமது குடும்பங்களை அழைத்து வந்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து தமது குடும்பங்களை குடியேற்றியுள்ளனர்.

சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. எவரும் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள வயற்காணியில் தற்போது கடற்படையினர் சிறு போக நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருவதோடு மரக்கறித் தோட்டம் ஒன்றையும் செய்து வருகின்றனர்.

முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் உணவுகளைப் பிடித்து தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர். எமது சொந்த மண்ணில் எம்மை மீள் குடியேற விடாது அதனை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கி கடற்படையினரின் குடும்பங்களை குடியமர்த்தி விட்டு எம்மை நடுக்காடுகளினுள் குடியமர அனுமதித்துள்ளமை எவ்வகையில் நீதி என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நன்றி வீரகேசரி

 தமிழ் கல்வி முறையாக இல்லாததால் சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்
களுத்துறை நிருபர்

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, டிக்ஹேன மில்லேவ தோட்டப் பகுதிகளில் முறையான தமிழ்க் கல்வி இன்மையால் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளுக்கு கல்வி கற்கச் செல்வதைக் காண முடிகிறது. இபிபரதேசங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் இயங்கி வருகின்ற போதிலுளம் இங்கு கல்வி நடவடிக்கைகள் திருப்தியற்ற நிலை காணப்படுவதால் பிள்ளைகளை சிங்கள பாடசாலைகளுக்கு அனு“பப வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பெயரளவிலேயே தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதுட்ன இங்கு தமிழ் ஆசிரியர்கள் இல்லாமையினால் சமயம், தமிழ், கலை, கலாசாரப் பண்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில்  பெருந் தடையேற்பட்டுள்ளதாகவும், தமிழ் ஆசரேயர்களை நியமிக்ககக் கோரி கல்விப் பகுதியினரின் கவனத்துக்கு பல தடவைகள் கொணஅடு வரப்பட்ட போதிலும் எதுவித நன்மையும் ஏற்படவில்லையெனவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் கடமையிலிருந்து வரும் ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு சமூகத்தாரது தாமதமாக வந்து நேரத்துடன் செல்வதையும் காண முடிகிறது. இது குறித்து சில அதிபர்களிடம் கேட்ட போது அவர்கள் தூரப் பகுதிகளிலிருந்து வருகின்றனர்என்று கூறுகின்றனர்.
அதிரப் என்ற பெயரில் பாடசாலைக்குப் பொறுப்பாக இருந்து வரும் சில ஆசிரியர் இரண்டு மூன்று தினங்கள் தொடர்ச்சியாகப் பாடசாலைக்குச் சமூகத்தராது, வராமல் இருந்த நாட்களில் வரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கைவிரல் அடையாளத்துடன் நேரத்தைப் பதிவு செய்யும் கருவி பாடசாலைகளிலும் பொருத்தப்பட வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்


 மன்னாரில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கலில் முறைகேடு

மன்னார் நிருபர்

மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த காலங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் விரைவில் வழங்கப்படவுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் தொடர்பில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறன.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் கடும் பாதிப்பை அடைந்த மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசினால் கண்ணாடி இழைப்படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள், மீன்பிடி வலைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மன்னாரில் இயங்கும் சுமார் 40 மீனவ கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு தமது மீன்பிடி படகுகளை இழந்த மிகவும் வறிய நிலையில் வாழும் மீனவர்களின் பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ். முஸ்லிம் மீனவர்கள் சுமார் 175 பேரினது பெயர்களைக் கொண்டதாக இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. பின்னர் இப்பெயர்ப் பட்டியல் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளரின் சிபார்சுடன் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள தருணத்தில் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இந்தப் படகுகள் மற்றும் வலைகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் தொடர்பில் ஏலவே தயாரிக்கப்பட்ட பட்டியலை விட புதிய பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இப்பட்டியலில் இடம்பெற்றோர் பலர் மீனவர்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
புதிய இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே இந்தப் படகுகளையும், மீன்பிடிவலைகளையும் வழங்குவதற்கு ஒரு சிலர் முற்படுவதாகவும், அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இதன் நடவடிக்கையால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த இரண்டாவது பட்டியல் விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நன்றி தினக்குரல்
 
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம் 
20/6/2012 3

  திருகோணமலை துறைமுகத்துக்கு அண்டிய கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த கடல்பகுதியில் மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய தேவையில்லை எனத் தெரிவிக்கபபடுகிறது. 
 நன்றி வீரகேசரி


ஜூலாம்பிட்டியே அமரேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
20/6/2012 
  ஹம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணிக் கூட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி இருவரைக் கொலை செய்தமை தொடர்பில் நேற்று நிதிமன்றத்தில் ஆஜரான ஜூலாம்பிட்டியே அமரேவை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

அத்துடன் இவரை அடையான அணி வகுப்புக்கு உட்படுத்தும் பொருட்டு இம்மாதம் 29 ஆம் திகதி வலஸ்முள்ள நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
 நன்றி வீரகேசரி

No comments: