இலங்கைச் செய்திகள்



ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கையை ஆதரித்தன

நீண்ட நாட்களுக்கு பின்

தெரிவுக் குழுவும் கூட்டமைப்பும்

 தேசிய நல்லிணக்கம்' எப்போதுமே அழகிய கனவுதான்

அரசின் "புதிய எதிரிகள்"

பொன்சேகாவால் ஆவதென்ன ?

யுத்த்த்தில் இந்தியாவை இலங்கை சாமர்த்தியமாக சேர்த்த்து எவ்வாறு? இந்திய அரசியல் தலைவர்களின் முக்கிய பங்களிப்பை தவிர்த்துக் கொண்ட சாணக்கியம் விபரிக்கும் “கோதாவின் யுத்தம்’

பொன்சேகாவும் எதிரணியும்


நாணய மதிப்பிறக்கம் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்:கலாநிதி எம்.கணேசமூர்த்தி




ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கையை ஆதரித்தன

22/05/2012

வரலாற்று காலம் தொட்டு இலங்கைக்கும் அரபு நாடுகளுக்குமிடை யில் நல்லுறவு நீடித்துக் கொண்டிருக்கிறது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் இலங்கைக்கு வர்த்தகம் செய்வதற்காக ஆரம்ப காலத்தில் வந்தார்கள்.

அவர்கள் அன்று இலங்கையில் இருந்து வாசனைத் திரவியங்களையும், இரத்தினக் கற்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டி, பின்னர் எங்கள் நாட் டில் உள்ள சில எட்டப்பர்களின் உதவியுடன் படிப்படியாக தங்கள் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி இலங்கையை கைப்பற்றி தங் கள் காலனித்துவ நாடாக மாற்றினார்கள்.

இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள் இலங்கை யின் செல்வத்தை சூறையாடி எமது நாட்டு மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை பறித்து, கொடுமையும் படுத்தினார்கள். இவர்களில் கடைசியாக ஆட்சி செலுத்திய பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரம் இந்நாட்டு மக்களுக்கு சிறிதளவு நன்மை செய்தததை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆங்கில அறிவை நம்நாட்டு மக்களுக்கு புகட்டி, ஜனநாயகத்தை இலங்கையில் தலைத்தோங்கச் செய்வதற்கு உதவக்கூடிய முறை யில் வெஸ்ட் மினிஸ்டர் பிரிட்டிஷ் பாராளுமன்ற அரசியல் சம்பிரதாயத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆங்கிலேயர் எங்கள் நாட்டின் தேசிய செல்வத்தை தேயிலையாக மாற்றி சூறையாடியதை எமது மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

ஆங்கிலேயர் தங்கள் பதவிக்காலத்தில் ரயில் சேவையையும், மலை யகப் பாதைகளையும் அமைத்ததும் அவர்கள் இலங்கையில் செய்த சாதனைகளில் ஒன்றாகும். அத்துடன் கொழும்பு மற்றும் பேராத னைப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதிலும் ஆங்கிலேயரின் பங்களிப்பு இருந்தது.

இவ்விதம் ஐரோப்பிய நாடுகள் இலங்கையை வரலாற்றுக் காலம் முதல் சுரண்டி வந்த போதிலும் இங்கு வர்த்தகர்களாக வந்த சீன நாட்டு மாலுமிகளும், அரபு நாட்டு மாலுமிகளும் இலங்கையுடன் வர்த்தகம் செய்த போதிலும் இந்நாட்டு மக்களின் இறைமைக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் தங்கள் நாடுகளின் இராணுவப் பலத் தைப் பயன்படுத்தி எமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரபு நாடுகளும், சீனாவும் அன்று முதல் இன்று வரை இலங்கையின் உண்மையான நட்பு நாடுகளாக இருந்து வருவதற்கு சான்று பகர்கின்றது. எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் பிரவேசித்த தினம் முதல் அரபு நாடுகளின் குறிப்பாக இஸ்ரேலினால் கொடு மைப்படுத்தப்படும் பலஸ்தீனிய மக்களின் ஓர் உற்ற நண்பனாக விளங்கினார்.

பலஸ்தீனிய மக்களுடன் நெருக்கமாக இருந்தால் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் பகைக்க வேண்டியிருக்கும் என்று நம் நாட்டு அரசியல் தலைவர்கள் அஞ்சி பலஸ்தீனத்துடனான உறவை மேம்படுத்த விரும்பாத காலகட்டத்தில் தென்னிலங்கையில் இரு ந்து தோன்றிய வீரப் புதல்வரான மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனிய ஒருமைப்பாட்டு இயக்கத்தில் 1970ம் ஆண்டு தசாப்தத்தில் சேர்ந்து இன்று வரை அவ்வியகத்தின் உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை முதல் பலதரப்பட்ட சர்வதேச பேரவைகளில் குரல் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய அரபு நாடுகளுடன் நட்பை உருவாக்கும் கொள்கையினால் ஜனாதிபதி இன்று அரபுலகின் நண்பனாக கருதி பாராட்டப்படுகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டார் தேசத்தின் அமீர் ஷேய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார்.

1931ம் ஆண்டில் சர்வஜன வாக்குரிமை பெற்ற ஆசியாவின் பழைய ஜனநாயக நாடான இலங்கை சமாதானம், செளபாக்கியத்துடன் கூடிய ஒரு புதிய யுகத்தை நோக்கி பயணிக்கின்ற இவ்வேளை யில் டோஹா நகரில் நடைபெறும் பொருளாதார மகாநாட்டில் தமக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி யடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

84 நாடுகளின் 600 பேராளர்கள் வரை பங்குபற்றிய டோஹா மகாநாட் டின் 12ஆவது தொடர் அமர்வு கட்டார் அமீர் அஷ்ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் தலைமையில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் பொருளாதார முன்னேற்றம் குறித்து இம்மாநாட் டில் ஆராயப்படுகிறது. மத்தியகிழக்கு, ஐரோப்பா உட்பட ஆசிய நாடுகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

கட்டார் தேசத்திற்கும் இலங்கைக்கும் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 15 வருடங்களாகும். அந்நாட்டில் சுமார் ஒரு இலட்சம் இலங்கை யர் தொழில் புரிகின்றார்கள். இதுவே முதல் தடவையாக இலங்கை யின் அரச தலைவர் ஒருவர் கட்டாருக்கு விஜயம் செய்வது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு கொள்கையில் அரபு நாடுகளுடனும் குறிப்பாக, பலஸ்தீனிய நாட்டுடனும், சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் தனது நல்லுறவை மேலும் வளர்க்கக்கூடிய வகை யில் தனது இராஜதந்திர கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட் டில் இலங்கை மீது அழுத்தங்களை கொண்டு வந்த அமெரிக்கா வின் பிரேரணைக்கு எதிராக அரபு நாடுகள் இலங்கையை ஆதரி த்து வாக்களித்தமை இலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்றே நாம் கருதுகிறோம்.
நன்றி தினகரன் 

நீண்ட நாட்களுக்கு பின்

22/ 5/2012

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் உணவருந்தி மகிழ்ந்தார்.

இதன்போது மனைவி அனோமாவுக்கு பொன்சேகா உணவூட்டினார். மகள்கள் அப்ஸராவும் அபர்ணாவும் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினர்.





நன்றி  வீரகேசரி


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஒரே வழி பாராளுமன்றத் தெரிவுக்குழுவே என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்த பிறகு தீர்வை நோக்கிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதே தவிர நிலைவரங்களில் எந்த மேம்பாட்டையும் காண முடியாமல் இருக்கிறது.  தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பங்கேற்க செய்யமுடியாத பட்சத்தில் அடுத்த நகர்விற்கு இடமில்லை என்பதையும் அரசாங்கம் நன்கு அறியும். அதனால், இப்பொழுது தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கொண்டுவருவதற்கு உள்நாட்டில் மூன்றாந் தரப்பினரின் உதவியை நாடும் முயற்சிகளில் நாட்டங்காட்டப்படுகிறது. ஒருபுறத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முட்டுக்கட்டை நிலையை அகற்றும் முயற்சியாக கூட்டமைப்பின் தலைவர்களுடன் சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பை நடத்தியதாகக் கூறப்பட்டது. தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்துவதற்கு நாட்டங்காட்டப்படுவதாக பேசப்படுகிறது.
கடந்த வருடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலை இல்லாமற்போவதற்கான சூழ்நிலை தோன்றுவதாக இல்லை. இரு தரப்பினரும் கடந்த வருடம் ஜனவரியில் பேச்சுகளை ஆரம்பித்தபோது தெரிவுக்குழு பற்றிய எந்தச் சிந்தனையுமே அரசாங்கத்திற்கு இருக்கவில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் அளவில் தான் அரசியல் தீர்வுக்கான வழிவகைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்ற யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. இந்திய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் கொழும்பு வந்திருந்த வேளையில் அரசாங்கம் அந்த யோசனையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு கைத்தொழில்கள், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஊடாகவே முதலில் பகிரங்கத்திற்குக் கொண்டு வந்தது.  தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக கூட்டமைப்புடனான தனியார் பேச்சுவார்த்தைகள் தொடருவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அந்தக் கட்டத்தில் அரசாங்கத் தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவும் தவறவில்லை.  இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டை தெரிவுக்குழுவில் முன்வைக்கத் தயாராயிருப்பதாகவும் அந்தக் கட்டத்திலிருந்து கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம் என்றும் கூட அரசாங்கத்தரப்பினர் உறுதியளித்திருந்தார்கள். அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியம் தனக்கிருப்பதை அரசாங்கம் உணரத் தவறியதையடுத்தே முட்டுக்கட்டை நிலை தோன்றியது.தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பினர் பெயர்களை அறிவிக்காத பட்சத்தில் அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இனிமேல் இடமேயில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இப்போது இருக்கிறது. ஆனால், கூட்டமைப்பினரோ அரசாங்கம் தங்களுக்கு அளித்த உறுதிமொழியின் பிரகாரம் இரு தரப்பு இணக்கப்பாட்டைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முன்வராத பட்சத்தில் தெரிவுக்குழுவுக்கு பெயர்களைத் தரமுடியாது என்று உறுதியாக நிற்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தெரிவுக்குழுவில் ஒருபோதுமே பங்கேற்க முடியாது என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கவில்லை.  அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு அடிப்படை பயணத்திட்டம் வகுக்கப்படாத பட்சத்தில் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் பிரயோசனம் இல்லை என்ற கூட்டமைப்புத் தலைவர்களின் நிலைப்பாடு முற்றிலும் நியாயமானதேயாகும். கடந்த காலத்தில் இன நெருக்கடிக்கு  அரசியல் தீர்வைக் காண்பதற்கென்று கூறிக்கொண்டு நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய தெரிவுக்குழுக்களுக்கும் சர்வகட்சி மாநாடுகள் மற்றும் வட்ட மேசை மகாநாடுகளுக்கும் நேர்ந்த கதியே கூட்டமைப்பினரின் இன்றைய நிலைப்பாட்டிற்குக் காரணமாகும். தெரிவுக்குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் நியமிப்பதென்பது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதை விடவும் காலத்தை கடத்துவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருந்ததைக் கடந்த கால அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை  இந்த தெரிவுக்குழுக்கள், ஆணைக்குழுக்கள், அவற்றின் அறிக்கைகள் பற்றியெல்லாம் கசப்பானது மாத்திரமல்ல கனதியானதுமான அனுபவங்கள் இருக்கின்றன. அந்த அனுபவங்களை அலட்சியம் செய்துகொண்டு மீண்டும் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலைக்குள் தங்களைத் தாங்களே தள்ளிவிடுவதற்கு கூட்டமைப்பின் தலைவர்கள் தயாராக இல்லை. 
ஆனால், அதேவேளை, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைப்படுத்தக்கூடியதும் நிலைபேறானதாக அமையக்கூடியதுமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைக்கத் தயார் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மைக்காலமாக அழுத்தி உரைத்து வருகிறார். இத்தகைய பின்புலத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களின் நிலைப்பாட்டில் தளர்வைச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத் தரப்பினர் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதனால் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு மத்தியஸ்தராகவோ, அனுசரணையாளராகவோ, இடைத்தரகராகவோ செயற்படுவதற்கு முன்வரக்கூடிய எவருமே அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்தக்கூடிய தகுதியும் ஆற்றலும் உடையவர்களாக இருந்தால் மாத்திரமே நிலைவரங்களில் ஓரளவுக்கேனும் மேம்பாட்டைக் கொண்டுவர முடியும். தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எப்படியென்றாலும் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கிலான சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளாக இந்த உள்நாட்டு மத்தியஸ்த முயற்சிகள் அமைந்துவிடக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டுத் தலையீடுகளினாலும்  அனுசரணை முயற்சிகளினாலும் கூட கொண்டுவர முடியாத மன மாற்றங்களை உள்நாட்டு மத்தியஸ்த முயற்சிகளோ நல்லெண்ண முயற்சிகளோ, கொண்டு வரக்கூடியதாக இருக்குமென்று நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை.
நன்றி தினக்குரல்

தேசிய நல்லிணக்கம்' எப்போதுமே அழகிய கனவுதான்

Monday, 21 May 2012

யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வாஷிங்டனில் அழுத்தி உரைத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. “தேசிய நல்லிணக்கம்‘ என்ற வார்த்தையை அரசியல் தலைவர்கள் கடந்த மூன்று வருடங்களாக அடிக்கடி மந்திரம் போன்று உச்சாடனம் செய்து வருகிறார்களே தவிர அந்த மந்திரத்தை ஜெபிப்பதால் பொதுமக்களுக்கு எந்தவொரு அனுக்கிரகமும் கிடைத்திருப்பது பார்வைக்குப் புலனாகவில்லை.
தேசிய நல்லிணக்கம் என்பது உடனடியாகக் கொள்வனவு செய்யும் விடயமல்ல. இலங்கை போன்ற பல்லின, பல்கலாசார, பலமத சமூகங்கள் வாழும் நாட்டில், இந்த “வேற்றுமைகளிலிருந்தும் ஒற்றுமை‘ யை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் காரியங்களை இதய சுத்தியுடன் படிப்படியாக முன்னெடுத்தால் மட்டுமே அவசரமாகவும் அதிகமாகவும் தேவைப்படுகின்ற தேசிய நல்லிணக்கம் என்ற கவை நனவாக்க முடியும். 1948 இல் காலனித்துவ ஆட்சியிலிருந்தும் நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளே இந்தத் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய தடங்கலாக இருந்து வருகின்றது.
கலாசார, சமய, அரசியல் ரீதியான பாரபட்சங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகளில் சமத்துவமற்ற கொள்கைகள், வளங்கள் சமனாக பகிரப்படாமை என்பன கொடிய தொற்றுவியாதியாக நீடித்துச் செல்லும் போக்கே வியாபகமடைந்துவருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான போட்டித்தன்மையான இன ரீதியான அரசியல் இலங்கையின் ஜனநாயகத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்டதாக உருவெடுத்திருக்கிறது. சரியோ, பிழையோ, நீதியோ, அநீதியோ, அதிகார பலமே நியாயமானது என்ற கொள்கையே கோலோச்சுகிறது. பெரும்பான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத, மொழி, கலாசார உரிமைகளை புறந்தள்ளி ஓரம் கட்டி விடும் போக்கும் தொடர்கிறது.
சமவுரிமை, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், பிராந்திய மட்டத்தில் காணப்படும் பொருளாதார, சமூக ரீதியான சமத்துவத்தை ஏற்படுத்துதல் போன்ற தேவைப்பாடே அதிகளவுக்கு தேவைப்படுகிறது. பன்முக கலாசாரத்தைக் கொண்ட நாடென்ற வரலாற்றுப் புகழைக் கொண்டது இலங்கையென பெருமை பேசுவது கள நிலைவரத்துக்கு பொருந்தாத் தன்மையைக் கொண்டதாகவே காணப்படுகிறது. பிராந்திய மட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களுடன் அரசியல் அதிகாரத்திற்கான சமத்துவத்தைக் கோரும் வலியுறுத்தல்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் தோற்றம் பெற்று சாத்வீக ரீதியான போராட்டத்துக்கு பின்னர் ஆயுதப் போராட்டத்துக்கும் இட்டுச் சென்றது என்பது புதிய கதை அல்ல. இப்போது யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் மோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு நீதியான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாட்டுக்குமான இடப்பெயர்வுகள், உயிர், உடைமை அழிவுகள், முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் நிலையங்களில் தொடரும் ஏக்கத்துடனான வாழ்க்கை தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வட, கிழக்கில் குறிப்பாக வட மாகாணத்தில் முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு செல்கிறது.
நாட்டை வடிவமைப்பதற்கு பன்முக கலாசாரத்தை இதய சுத்தியுடன் அங்கீகரிக்கும் கொள்கையை கடைப்பிடிப்பது சிறப்பான கருவியாக இருக்கும் என்று புத்திஜீவிகள் கூறுகின்றனர். ஆனால், இது "மேற்குலக வாய்ப்பாடு' என்று ஏளனத்துடன்  நிராகரிக்கும் போக்கே கள நிலைவரமாக காட்சி தருகின்றது. அண்டை நாடான இந்தியா தொடக்கம் தென்னாபிரிக்கா, கனடா, ஏன் கென்யா போன்ற நாடுகளில் கூட பன்முகக் கலாசாரத்தை மனப்பூர்வமாக உள்ளீர்த்துக்கொண்டமை பல்லின சமூகங்கள் மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கணிசமான அளவுக்கு உதவியுள்ளதை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். ஆனால், இந்த இலக்கை இலங்கை சென்றடைவதற்கான தூரம் கண்ணுக்கு தென்படாத வெகு தொலைவில் என்பதே யதார்த்தமாகும்.
 நன்றி தினக்குரல்



உள்நாட்டுப் போரின் அரசாங்கப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் மூன்றாவது"தேசிய வெற்றிவிழா' நேற்றைய தினம் காலை கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளினதும் பிரமாண்டமான அணிவகுப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட போது  அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வட பகுதியிலிருந்து துருப்புகளை வாபஸ் பெறப் போவதில்லை என்று செய்த பிரகடனம் உள்நாட்டு அரசியல் அரங்கிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
"வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிலர் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழம்வாதிகள் நாட்டுப் பிரிவினை இலட்சியத்தைக் கைவிடவில்லை. அதனால் இராணுவ முகாம்களை அகற்றி தேசிய பாதுகாப்பை இடருக்குள்ளாக்க முடியாது. வட பகுதியில் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் அரசாங்கப் படைகள் சம்பந்தப்படுவதாகக் கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன். ஈழம்வாதப் பயங்கரவாதிகள் பல தசாப்த காலப் போரின் ஊடாகச் செய்ய முடியாமல் போனவை வேறு மார்க்கங்களில் இப்போது சாதிப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் இராணுவத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய சில மணிநேரங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து இத்தகைய அறிவிப்பு வந்திருக்கிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். "மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை சர்வதேச சமூகம் சாதகமான ஒளியில் பார்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சமத்துவமான ஒரு நாடாகவே நாமும் அமர்ந்திருக்கிறோம். அந்த நாடுகளை நாம் சமத்துவமானவையாகவே நடத்துகிறோம். எமது சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான  வல்லமை எமக்கிருக்கிறது' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ மயத்தை ஓரளவுக்கேனும் தளர்த்துவதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. இராணுவமயத்தைத் தளர்த்துவதற்குப் பதிலாக அது மேலும் தீவிரப்படுத்தப்படுகின்ற போக்கையே காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ்ப் பகுதிகள் தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் பெருமளவுக்கு இராணுவக் கொத்தளப் பிராந்தியங்கள் போன்றே காட்சி தருகின்றன. இதன் விளைவாக வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. இராணுவமயத்தைப் படிப்படியாகத் தளர்த்தி முழுமையான குடியியல் வாழ்வுக்கு மக்கள் விரும்புவதற்கு வகை செய்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய ஜனநாயக அரசியல் செயன்முறைகளை மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கக்கூடிய திராணியற்றவையாக எதிரணிக் கட்சிகள் இருப்பதால் இதுவிடயத்தில் சர்வதேச சமூகத்திடமிருந்து வெளிப்படுத்தப்படுகின்ற  அக்கறைகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டிய நிலையேற்படுகிறது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூட அதன் அறிக்கையில் வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தின் குறைப்புக் குறித்து விதந்துரைத்திருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்புடைமை குறித்து சர்ச்சைகளைக் கிளப்பி வந்திருக்கும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் வடக்கு, கிழக்கின் தொடர்ச்சியான இராணுவமயத்தின் பாதகமான விளைவுகள் குறித்து இடையறாது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்றத் தூதுக்குழுவும் கூட தமிழ்ப் பகுதிகளில் இராணுவமயத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கைத் தலைவர்களிடம் பிரத்தியேகமாக வலியுறுத்தத் தவறவில்லை.
தமிழ்ப் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்பிலான தமிழ் மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் அக்கறைகள் இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்றைய தினம் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லையென்று அறிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த ஈழம்வாதிகள் நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிடவில்லையென்பதால் முகாம்களைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி தேசிய பாதுகாப்பை இடருக்குள்ளாக்க முடியாதென்பதே தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்வைத்திருக்கும் காரணமாகும்.
தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பயனுறுதியுடைய எந்தவொரு அரசியல் சமிக்ஞையையும் தமிழ் மக்களுக்குக் காட்டாமல் இருந்துவரும் அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளின் இடத்திற்கு புதியதொரு எதிர்நிலைச் சக்தி தேவைப்படுகிறது என்று நாம் அடிக்கடி கூறிவந்திருக்கிறோம். போரின் முடிவிற்குப் பிறகு அரசாங்கத்திற்கு அதன் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்த எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்தச் சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயன்முறைகள் நீண்டகால நோக்கில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய  விளைவுகளைக் கொண்டுவரக்கூடியதாக இருக்குமென்பது விவாதத்திற்குரியதொன்றாக இருக்கின்ற போதிலும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை வசதியான ஒரு எதிரியாக அவை அமைந்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. 
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்டு வந்த முறைமைகளைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கக்கூடிய பிரிவினரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கின்றபோதிலும் கூட ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த தமிழர்களை எதிரிகளாகச் சிங்கள மக்களுக்குக் காட்டுவதன் மூலமாக அரசாங்கத்தினால் அரசியல் அறுவடையைத் தாராளமாகச் செய்யக்கூடியதாக இருக்கிறது. தற்பொழுது வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை அகற்றுமாறு அல்லது குறைக்குமாறு விடுக்கப்படுகின்ற வலியுறுத்தல்களை நிராகரிப்பதற்குக் கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய  அரசியல் சக்திகளை சாட்டாகக் காட்டுவதற்கே அரசாங்கம் முன்வந்திருப்பதைக் காண்கிறோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள்  நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை கைவிடவில்லையென்பது உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதைத் தவிர்ப்பதற்கு எந்த விதத்திலுமே முன்வைக்கப்பட முடியாத ஒரு காரணமாகும்.  உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு தங்கள் மத்தியில் ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயம் இல்லாமல் அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருந்த மக்கள் தங்களது பிரதான அரசியல் பிரதிநிதியாகத் தெரிவு செய்திருக்கக்கூடிய அரசியல் அணி இன்று எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்து நிற்கிறது என்பதையே அரசாங்கம் கருத்தில் எடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது நாட்டுப் பிரிவினை பற்றி பேசுவதில்லை. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியஏற்புடையதானநடைமுறைப்படுத்தக்கூடியநிலைபேறானதாக அமையக்கூடிய ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மைக்காலமாக அடிக்கடி வலியுறுத்திக் கூறிவருவது அரசாங்கத்தின் தலைவர்களின் காதுகளுக்கு ஏன் எட்டாமல் இருக்கிறது.?
நியாயமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் அரசியல் துணிச்சலை வெளிக்காட்டிச் செயற்படுமேயானால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இலங்கையை மையமாகக் கொண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு வாய்ப்பிருக்காது. அத்துடன் அதற்குப் பிறகு வெளிநாடுகளில் இடம்பெறக்கூடிய புலம்பெயர் தமிழர்களின் எந்தவொரு அரசியல் செயற்பாட்டையும் பொருட்படுத்த வேண்டிய தேவையும் கூட அரசுக்கு இருக்காது என்பது எமது உறுதியான அபிப்பிராயமாகும். ஜனாதிபதி கூறுவதைப் போன்று புலம்பெயர் ஈழம்வாதிகள் நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்கள் என்றால் அதைத் தடுப்பதற்கு ஒரே வழி உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வொன்றை வழங்கி அவர்களும் இந்த நாடு தங்களுக்கும் உரித்தானது என்ற உணர்வை ஏற்படுத்துவதேயாகும். இல்லாத எதிரிகளையும் இறந்து போன எதிரிகளையும் பிறக்காத எதிரிகளையும் தோற்கடிக்கும் பிரமையிலிருந்து  அரசாங்கம் முதலில் விடுபடவேண்டும்!
 நன்றி தினக்குரல்

ராஜபக்ஷவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா ? முடியாதல்லவா? ஆனால் சரத் பொன்சேகா விடயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்க வில்லை. இப்போது ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒரு வழியாக  சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகி விட்டார் அவர். அதாவது யுத்தத்தை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா , இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப் படுகிறார்.
தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
கடைசி நாள்வரை யுத்தகளத்தில் தமிழர்களை வதை செய்து விட்டு திடீரென ராஜபக்ஷவுக்கு எதிராகத் திரும்பி, கொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா. கோதபாயவும்  பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை இராணுவத்தினர்  கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார். இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால் அரசியல் கட்சிகள் நம்பின.
ராஜபக்ஷவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்?  ராஜபக்ஷ சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு? பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்? பொன்சேகா சிறையில் இருந்த போது கருணை வேண்டுமா என ராஜபக்ஷ அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்? இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக்  கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.
தங்களது  கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள் கூட அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது. அரசியல் தந்திரோபாயம் மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லாத் தமிழர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார் மீது குற்றம் சாட்டினார்களோ  அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் ஓடோடி வருகிறது. முன்னர் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டது போல பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராத போது வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்து விட்டுப் போகட்டும், ஆனால், பொன்சேகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை.
யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்களால் பலவிடயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. ராஜபக்ஷ அசையும் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில் கூட ஒருமித்த கருத்து இல்லை. அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல் நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்க வில்லை.  இறந்து விட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல். உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில்  நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன. இன்னொரு பக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன. வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப் பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன. “ மேற் கூரை இன்னும் உயரமாக இருக்க வேண்டும், புகை போக்கி பெரிதாக அமைக்க வேண்டும்” என்றும் அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இதையெல்லாம் பார்த்தால் நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில் நுட்பக் கட்டமைப்பில்  உருவான ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார், கூடவே “இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை” என்றும் கூறுகிறார். உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் “ஆமாம்” என்கின்றனர். சிலநாட்கள் வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு “ அளுத்கம  களுத்துறை இடையே ரயில்  பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாட்கள் ரயில்கள் இயங்காது” என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.
“இலங்கையில் உள்ள தமிழர்களே ஈழம் கேட்காத போது” என்கிற வாதம்  தமிழர்கள் மத்தியில் நுழைந்து விடுகின்றது. இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப் படுகின்றது.
ஏற்கனவே இருக்கும் தடுமாற்றங்ளுக்கு மத்தியில் யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார். இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம்  எடுக்கலாம். அல்லது ராஜபக்ஷடன் போய் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு வேளை ராஜபக்ஷவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூட சூளுரைக்கலாம். என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா. விலும் சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்ஷவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது.
ராஜபக்ஷவை எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றிநாள். தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள். இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் இரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
 நன்றி தினக்குரல்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விபரிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர்  நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3 ஆவது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந்நூலுக்கு “கோதா’வின் யுத்தம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷதான் “கோதா’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவின்  சகோதரர்.
இரு நாடுகளின் அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நிலையில் இரு நாடுகளிலும் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து தங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்து ஒருங்கிணைத்தால் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிடலாம் என்று கோதாபய திட்டமிட்டுச் செயல்பட்டதையும் அதற்கு இந்திய அரசின்  மூத்த அதிகாரிகள் ஒத்துழைத்ததையும் நூல் விபரிக்கிறது.
அரசியல் தலைவர்களின் குறுக்கீடு கூடாது என்பதை இலங்கைக்கான இந்தியத் தூதவர் அலோக் பிரசாத் என்பவரும் ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார் . 2005 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே மகிந்த ராஜபக்ஷ, இந்தியா சென்றபோது அவருடைய பயணத்தின் நோக்கம் அரசியல் குறுக்கீடுகளால் தடைப்பட்டது. எனவே தான் அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்கும் உத்தி குவிக்கப்பட்டது.
2006 மே  15 ஆம் திகதி இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோரையும் இந்திய இராணுவத்தின் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்தச் சந்திப்பும் தோல்வியில்தான் முடிந்தது.
13 ஆவது திருத்தம்
ராஜீவ்ஜெயவர்தன உடன்பாட்டின்படி இலங்கை அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டால்தான் இலங்கை அரசுடன் ஒத்துழைக்க முடியும் என்று நாராயணன் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே தோல்வி ஏற்பட்டது. கோதாபய இதனால் மனம் தளரவில்லை. இரு நாடுகளின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து பரஸ்பரம் ஒத்துழைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். அரசியல்வாதிகளின் கவனத்துக்கு வராமலே நாம் செயலாற்ற வேண்டும் என்றார். அது ஏற்கப்பட்டது.
தேசிய  பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோர் இந்தியத் தரப்பிலும் அதிபரின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை தரப்பிலும் இக்குழுக்களில் இடம்பெற்றனர்.
இந்தியக் கடற்படை செய்த உதவி
இக் குழுக்கள் நியமிக்கப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. இராணுவ ஒத்துழைப்புஅதிலும் குறிப்பாக இலங்கைக் கடல் எல்லைக்கும் அப்பால் கண்காணித்து காவல் காக்கும் பொறுப்பை இந்தியக் கடற்படை ஏற்றது. இதனால் விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் வராமல் நிறுத்த முடிந்தது.
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்று சிவ்சங்கர் மேனன் தொடர்ந்து வற்புறுத்தினார். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று எம்.கே.நாராயணன் வலியுறுத்தினார். அதே சமயம் இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏதும் இல்லை என்று இந்திய அரசு தரப்பில் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் மாற்றம்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டதும்தான் 2008 பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்திய அரசின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் தருவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக முடியும் என்று கோதாபய கூறுவதை 100% ஏற்பதாக அலோக் பிரசாத் வெளிப்படையாக அறிவித்தார்.
வன்னிப் பகுதியில் இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி மிகவும் சிறப்பானது. இதனால், விடுதலைப் புலிகளின் முதுகெலும்பு முறிந்திருக்கும் என்று சிவ்சங்கர் மேனன், கோதாபயவிடம் தெரிவித்தார்.
ஆனால், கோதாபயவோ அந்தக் கருத்தை ஏற்காமல், கிளிநொச்சியில் புலிகள் இன்னமும் வலுவுடன் இருப்பதாலும் வெளிநாடுகளிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்துக் கொண்டே வருவதாலும் இந்த வெற்றி போதாது என்று பதில் அளித்தார்.
2008 அக்டோபர் மாத வாக்கில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய “அரசியல் தலைவர்களுக்கு’ ஏற்பட்டது.
இலங்கைப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டும், சமரசத் தீர்வு காண வேண்டும் என்ற வழக்கமான பல்லவிகளைக் கூட அவர்கள் பொது மேடைகளில் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
2008 அக்டோபர் 18 இல் தான் இந்தியத் தரப்பில் கடைசியாக, விடுதலைப் புலிகள் பிரச்சினையைத் தீர்க்க இராணுவத் தீர்வு இல்லை என்று கூறினார்கள்.
2008 அக்டோபர் 26 இல் வெளியிட்ட இந்தியஇலங்கை கூட்டறிக்கையிலோ பயங்கரவாதத்தை உறுதியுடன் முறியடிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். அப்போதுதான் பசில் ராஜபக்ஷ டில்லிக்கு வந்து தலைவர்களுடன் பேசியிருந்தார்.
மக்களவைத் தேர்தலால் அழுத்தம்
2009 மக்களவைப் பொதுத் தேர்தல் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்களால் லேசாக அழுத்தம் தரப்பட்டது. இதை புதுடில்லியும் கொழும்புக்கு உணர்த்தியது. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2009 ஜனவரி 27 இல் கொழும்புக்கு வந்து, “தற்காலிகமாக சண்டையை நிறுத்த முடியுமா? பொதுமக்கள் போரில் மடியாமல் தப்பிக்க பாதுகாப்பான இடத்தை இலங்கை அரசு ஒதுக்க முடியுமா?’ என்று கேட்டார். இதை ஏற்ற இலங்கை அரசு அவ்வாறே சில நடவவடிக்கைகளை எடுத்தது.
மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, “விடுதலைப் புலிகளின் இறுதிக்காலம் வந்துவிட்டது’ என்று புரிந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, சாகும்வரை  உண்ணாவிரதம் இருக்கப் போவதாக  அறிவித்துவிட்டு சென்னைக் கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் ஏப்ரல் 27 ஆம் திகதி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
எம்.கே.நாராயணனும் சிவ்சங்கர் மேனனும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை உடனே தொடர்புகொண்டனர். இந்திய அரசுக்கு இப்போது நான் எப்படி உதவ வேண்டும் என்று ராஜபக்ஷ கேட்டார். கனரக ஆயுதங்களைப் போரில் ஈடுபடுத்தாதீர்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் குண்டுவீசியோ, பீரங்கிகளால் சுட்டோ தமிழர்களைக் கொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
பிரபாகரன் அறிக்கைக்கு முன்னால்...
“கருணாநிதிதான் தங்களைக் காக்கக்கூடிய ஒரே தலைவர்’ (ஹீரோ) என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரித்த அறிக்கை கருணாநிதியை அடைவதற்கு முன்னால் இலங்கை அரசின் போர்ச் சலுகை அறிவிப்பு கருணாநிதியை எட்டுமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
இதற்கு இலங்கை அரசின் “தமிழகத் தொடர்புகள்’ பயன்படுத்தப்பட்டன. கருணாநிதியும் தன்னுடைய உண்ணா விரதத்தைக் கைவிட்டார். புதுடில்லியும் கொழும்பின் மீது கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
பிரபாகரனே தன்னை ஹீரோ என்று பாராட்டிய அறிக்கை கருணாநிதிக்குக் கிடைத்திருந்தால் அவர் மேலும் தீவிரமாக இந்தப் பிரச்சிøனையில் ஈடுபட்டுவிடுவார் என்று இலங்கை அரசு அஞ்சியது. அப்படி நேராமல் அது தடுத்துவிட்டது.
மற்றவர்களால் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட செயல்களை இருதரப்பிலும் ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் சாதித்துவிட்டன என்று கோதாபயவின் புகழைப் பாடும் இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.
இருதரப்பு உயர் அதிகாரிகளின் கடைசிக் கூட்டம் புதுடில்லியில்  2010 ஆகஸ்ட் 26 ஆம் திகதி நடந்தது என்ற குறிப்பும் நூலில் உள்ளது.
  நன்றி தினக்குரல்

பொன்சேகாவும் எதிரணியும்

Thursday, 24 May 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய மன்னிப்பை அடுத்து சிறையிலிருந்து நேற்று முன்தினம் மாலை வெளியே வந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முதன்முதலாக ஊடகமொன்றிற்கு அளித்திருக்கக்கூடிய பேட்டியென்றால் அது இந்தியாவின் தேசியத் தினசரிகளில் ஒன்றான இந்துவின் கொழும்பு செய்தியாளருக்கு அளித்த பேட்டியேயாகும். அதில் அவர் அரசியலில் தனது உடனடி இலக்கு என்னவென்பதை சந்தேகத்திற்கிடமின்றிக் கூறியிருக்கிறார்.


"கட்சி அரசியல், நிறங்கள், கட்சிகளின் பெயர்கள் என்பவற்றுக்கப்பால் அரசாங்கத்திற்கு பலம்வாய்ந்த எதிர்ப்பை உறுதிப்படுத்துவதற்காக பொதுவான எதிரணியொன்றைக் கட்டியெழுப்புவதை நோக்கி பாடுபடவேண்டியதே முதற்பணியாகும். அதற்குப் பிறகு யார் அந்தப்பொது எதிரணிக்கு தலைமை தாங்குவது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்' என்று பொன்சேகா கூறியிருக்கிறார். எதிரணிக்கு மக்கள் மத்தியில் கூடுதலாக ஆதரவைத் திரட்டுவதற்கான நாடு தழுவிய பிரசார இயக்கத்தை ஆரம்பிக்கத் தயாராகுவதாகவும் அவர் அறிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் இராணுவத் தளபதி தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அதன் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு பொன்சேகா கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அவரது கட்சியான ஜனநாயக தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சில ஆசனங்களைப் பெற்ற ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.), எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் வரக்கூடுமென்ற போதிலும் அவருடன் நீண்ட கால அரசியல் கூட்டு ஒன்றை ஏற்படுத்துவதென்பது வித்தியாசமான சூழ்நிலைகளில் பரிசீலிக்கப்படவேண்டிய விடயமாகும் என்று அறிவித்திருப்பதைக் காண்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் சேர்ந்து பொன்சேகாவை ஆதரித்த போதிலும் பின்னர் சிறை வைக்கப்பட்ட அவரின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் இவ்விரு கட்சிகளினதும் அணுகுமுறைகள் உற்சாகமானவையாக இருக்கவில்லை. அதனால், எதிர்காலத்திலும் முன்னாள் இராணுவத் தளபதியுடன் சேர்ந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் துடிப்பான அணுகுமுறைகளைக் கையாளுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.

பொன்சேகாவுக்காக எதிரணிக் கட்சிகள் நடத்திய போராட்டங்களின் விளைவான நெருக்குதல்கள் காரணமாகத்தான் அவருக்கு இவ்வளவு விரைவாக மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது என்று இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடைய எவரும் நம்பப்போவதில்லை. ஆனால், தனக்காகப் போராடியவர்களுக்கும் சிறையில் இருந்த காலத்தில் தனக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டிய மக்களுக்கும் பொன்சேகா நன்றியறிதலைத் தெரிவிப்பதென்பது வேறுவிடயம். அவரை விடுவிக்க வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளிடமிருந்து குறிப்பாக, அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் இடையறாது வந்துகொண்டிருந்ததாகப் பேசப்பட்டதும் அதை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வந்ததும் சகலருக்கும் தெரிந்தது.

பொன்சேகாவை வெளியில் விடுவதன் மூலமாக தங்களுக்கு ஏற்படக்கூடிய அரசியல் பிரச்சினைகளை சமாளிக்க முடியாத ஒரு பலவீனமான முறையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. ஆனால், ஏற்கெனவே படுமோசமாகச் சிதறுண்டு பலவீனப்பட்டுக்கிடக்கும் எதிரணிக் கட்சிகள் மத்தியில் மேலும் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கு பொன்சேகாவின் விடுதலை உதவும் என்பதை அரசாங்கத் தலைவர்கள் நன்றாகவே புரிந்துகொண்டுதான் அவருக்கு மன்னிப்பு அளிப்பதற்குத் தீர்மானித்தார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. பாரதூரமான பொருளாதார நெருக்கடி, அரசாங்க நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் படுமோசமான ஊழல் மோசடிகள், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு, ஜனநாயக மற்றும் குடியியல் உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் வகையிலான அரசியல் அதிகாரச் செயற்பாடுகள் என்று பெருவாரியான நெருக்கடிகளினால் திணறிக்கொண்டிருக்கும் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது படிப்படியாக பெரும் வெறுப்படைய ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களின் விளைவாக ஏற்படுகின்ற பிரச்சினைகளை இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான வெளிச்சக்திகளின் சதி முயற்சி என்று கூறி மக்களை அவர்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் தந்திரோபாயத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தீவிரமாகத் தொடர முடியாது என்பதையும் அரசாங்கத் தலைவர்கள் அறிவார்கள். இதனால், எதிரணியை மேலும் குழப்ப நிலைக்குள்ளாக்க வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியான வெகுஜனப் போராட்டங்களை எதிரணியினர் முன்னெடுக்க முடியாத வகையில் அவர்களைத் தொடர்ந்தும் சிதறுண்ட அரசியல் சக்திகளாக வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கு பொன்சேகாவின் விடுதலை உதவும் என்பது அரசாங்கத் தலைவர்களுக்குத் தெரியும். பொன்சேகா வெளியே வந்து அளித்த முதல் பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் எதிரணி எத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன!
நன்றி தினக்குரல்



நாணய மதிப்பிறக்கம் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்:கலாநிதி எம்.கணேசமூர்த்தி



நிர்ஷான் இராமானுஜம்               24/ 5/2012

இலங்கையில் நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டமையானது தற்கொலைக்கு ஒப்பான செயல் எனவும் எதிர்காலத்தில் எதிர்மறையான பல்வேறு பின்விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும் என்றும் கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பாக எமது இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அந்த நேர்காணலின் முழு விபரம் வருமாறு,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்துப் பலரும் பல்வேறு விதமாகக் கூறுகிறார்கள். அதன் உண்மையான நிலைவரம் குறித்து விளக்குவீர்களா? பொருளாதார வளர்ச்சி வீதம் என்ற கருத்தை அண்மைக்காலமாக பலரும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இந்த பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவாக இருக்கின்றது என்றும் மேலும் சிலர் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றது என்றும் கூறுகின்றார்கள்.

முன்னைய ஆண்டைவிட இப்போது நடைமுறை ஆண்டிலே இருக்கின்ற உற்பத்தியினுடைய பெறுமதி எந்த நூற்று வீதத்தினால் அதிகரிக்கின்றது என்று பார்ப்பதுதான் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆகும். பொருளாதார வளர்ச்சி வேகம் அல்லது பொருளாதார வளர்ச்சி வீதம் என்று பார்க்கின்ற போது சர்வதேச அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நியமங்களின் அடிப்படையில் தான் கணிப்பிடப்படுகின்றது. எனவே அவ்வாறு கணிப்பிடப்பட்டு அந்த நூற்றுவீதம் விளங்கப்படுத்தப்படும் போது கணிப்பீட்டிலே பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால் உற்பத்தியினுடைய பெருக்கம் சம்பந்தமாக சில தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டிருப்பின் அதனால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. எனவே அங்கு கணீப்பீட்டில் குறைபாடுகளினால் ஏற்படுகின்ற பிரச்சினையல்ல. அது உண்மையில் எந்த விதமாக நாங்கள் கணீப்பீடு செய்தாலும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் என்று ஒன்று இருக்கின்றது. அதன்படி தான் கணீப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிரிக்கின்றன. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து...

விலைவாசி அதிகரிப்புக்கு பலகாரணங்கள் உள்ளன. அதாவது உற்பத்தியிலே; ஏற்படுகின்ற குறைபாடு. உற்பத்தி போதியளவிற்கு இடம்பெறாவிட்டாலும் விலைவாசி அதிகரிக்கும். வெளிநாட்டு நாணயத்தினுடைய பெறுமதி அதிகரிக்கின்ற போதும் விலைவாசி அதிகரிக்கும். உற்பத்திச் செலவு அதிகரிக்கின்ற போதும் விலைவாசி அதிகரிக்கும். அரசாங்கம் அதிக வருவாயைப்க் பெறவேண்டும் என்ற நோக்கிலே வரி விதித்தாலும் விலைவாசி அதிகரிக்கும். இவ்வாறு விலைவாசி அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன.

நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்?

இது ஒரு விதமான சந்தையை நோக்கியதான நாணயத்தின் பெறுமதியை உடனடியாக மாற்ற அனுமதித்தமை சந்தையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த நாணயத்தினுடைய பெறுமதியை தீர்மானிக்கின்ற மிதக்கும் நாணயமாற்று முறையினை இலங்கை அரசு 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தியிருந்தது.

என்றாலும்கூட நாணயக் கொள்கைக்கு அப்பால் சென்று நாணயத்தினுடைய பெறுமதியை - இலங்கை ரூபாவினுடைய பெறுமதியை நிலையாக வைத்திருப்பதற்காக செயற்கையாக சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

அவ்வாறு மேற்கொண்டு உடனடியாக அந்த நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டமை இலங்கை ரூபாவினுடைய பெறுமதி அதிகளவில் வீழ்ச்சியடைய ஒரு காரணமாக அமைந்தது. இவ்வாறு நாணயத்தினுடைய பெறுமதி வீழ்ச்சி அடைகின்றபோது அதனால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம், எதிர்த்தாக்கம் என்று பார்க்கும் போது அது மிக அதிகம். நேர்கணியத்தாக்கமாக இலங்கை பொருளாதாரத்திற்கு சாதகமான தாக்கம் ஒரேயொரு தாக்கம் இருக்கின்றது. இலங்கை பொருட்கள் வெளிநாட்டவர்களுக்கு மலிவானதாக மாறும். எனவே ஒரு டொலரைக் கொண்டு முன்பைவிடக் கூடுதலாக வெளிநாட்டவர்கள் அதிக இலங்கைப்பொருட்களைக் கொள்வனவு செய்யலாம். எனவே இலங்கையினூடாக ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

ஆனால் இங்கே இருக்கின்ற முக்கியமான கேள்வி அந்த சாதகத் தன்மையைப் பேணும் வகையில் எந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்பது முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. மறுபுறம் இறக்குமதிகளைப் பார்க்கின்ற போது முன்னர் செலவு செய்ததை விடக் கூடுதலான பணம் இலங்கை ரூபாவிலே செலவு செய்துதான் இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கனவே இந்த நிலைமையைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கின்றது. அண்மைக்காலத்திலே இறக்குமதி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களினுடைய விலைகளும் உள்நாட்டு சந்தையிலே அதிகரிக்க தொடங்கியிருக்கின்றமை. இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

அடுத்த முக்கியமான பிரச்சினை என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து வருகின்ற மூலதன உட்பாய்ச்சல்கள் .குறிப்பாக நீண்டகால அடிப்படையிலும், குறுங்கால அடிப்படையிலும் வருகின்ற மூலதன உட்பாய்ச்சல்கள் இலங்கை அரசு உண்மையிலேயே வெளிநாட்டு மூலதனம் ,வெளிநாட்டு முதலீடுகள் உள்வரவேண்டும் என்று விரும்புகின்ற ஒரு காலகட்டத்திலேயே இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்கின்ற போது வெளிநாட்டிலிருந்து டொலரைக் கொண்டு வருகின்றார்கள். இங்கே முதலீடு செய்த பின்னர் இவ்வாறானதொரு நாணய மதிப்பிறக்கம் தொடர்ந்து நிகழுமாக இருந்தால் அதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கின்ற வருவாய் மிகக்குறைவானதாக மாறுகின்றதொரு நிலையிலேயே அவற்றை உடனடியாக அவர்கள் மீளப்பெறுகின்ற நிலைமை வரும். அவ்வாறு மீளப்பெறுகின்றபோது இலங்கை எதிர்;பார்க்கின்ற முதலீட்டு மட்டத்தைப் பேணமுடியாத ஒரு நிலைமை வரும். எனவே இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு விழக்கூடிய முக்கியமானதொரு அடி. அது போல இலங்கை ஏற்கெனவே பெற்றிருக்கின்ற கடன்கள் இருக்கின்றன.

அந்தக் கடன்களுக்காக செலுத்த வேண்டிய இலங்கை ரூபாவிலான அளவு அதிகரிக்கப்போகின்றது. டொலர் அடிப்படையிலேயே பெறப்பட்ட கடன்கள் அவற்றிற்கு நாங்கள் ரூபாவை டொலருக்கு மாற்றித்தான் கடன்களைக் கட்டவேண்டும். எனவே அவ்வாறு செய்கின்றபோது அதிகளவிலான ரூபாவைம கொடுக்கவேண்டிய ஒரு நிலைமை வரும்.

இதுபோன்ற பல்வேறு தாக்கங்கள் பொருளாதாரத்திலே ஏற்படுகின்றன. விலைவாசி அதிகரிக்கும் போது அந்த நாணயமாற்று வீதம் எந்தளவு எத்தனை நூற்றுவீதம் தேய்வடைய அனுதிக்கப்பட்டதோ அதைவிட பலமடங்கு விலைவாசிகளிலே நூற்றுவீத அதிகரிப்பு அதிகமாக அதிகரிக்கும். எனவே ஒரு பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டிலே உடனடியாக நாணய மாற்று வீதத்தை இதுபோல அதிர்ச்சியளிக்ககூடிய வகையிலே தேய்வடைய அனுமதிப்பதானது தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயல்.

மேற்குலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றமையால் இலங்கைப் பொருட்களுக்கான கேள்வி குறைவடையும் அபாயம் உள்ளதாக சர்வதேச நிதித் திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துப் பற்றி...

அவர் சரியாக அதைக் கணிப்பிட்டிருக்கிறார் என்று நான் கூறுகிறேன். ஏனென்றால் மேற்குலக நாடுகளிலே குறிப்பாக கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளோடு பெரிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளும் அதிகளவு சிக்கன நடவடிக்கைகளிலே ஈடுபட்டிருக்கின்றன.

இந்த சிக்கன நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலே ஓர் அதிருப்தியை ஏற்படுத்தி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் என்ற அடிப்படையில் அந்தளவுக்கு முன்னோக்கிச் சென்றிருக்கின்றன. அண்மையிலே இந்தப் பெரிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக பிரான்ஸிலே மிக அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அந்த ஆட்சிமாற்றம் .அவருடைய தேர்தல் வாக்குறுதியே இந்த சிக்கன நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்வேன் என்பது தான்.

எனவே மக்கள் தங்களுடைய வயிற்றிலே அடிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகப் போராடுகின்ற ஒரு நிலைமை வரும். ஆகவே மேற்குலக நாடுகள் தங்களுடைய அந்த செலவினங்களை கட்டுப்படுத்திக்கொள்கின்ற நோக்கிலேயே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது அதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள், மக்கள் வன்முறைகளை நாடும் ஒரு போக்கும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.

எனவே இலங்கையிலும் அவ்வாறானதொரு சிக்கன நடவடிக்கையை அரசாங்கம் எப்போதும் மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எனவே எதிர்காலத்திலே வரிகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விலைகள் அதிரிக்கின்ற போது அதற்கேற்ற விதத்திலேயே மக்கள் தங்களது ஊதிய உயர்வுகளை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகின்ற நிலைமை வரும்.

எனவே சம்பள உயர்வுப் போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை அரசு அனுமதிக்குமாக இருந்தால் தங்களுடைய சிக்கன நடவடிக்கைகளைப் பேண முடியாது. எனவே இவற்றை மீறி அரசாங்கம் அந்த சிக்கன நடவடிக்கையை நடைமுறைப்படுத்துகின்ற போது மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கை இழக்க வேண்டியதொரு நிலை ஏற்படும்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிறகுதான் பொருளாதார ரீதியாக நாடு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுவது குறித்து?

இலங்கையைப் பொறுத்த மட்டில் ஜெனீவா பொருளாதார நடவடிக்கை என்ற வகையிலே சிக்கலை உடனடியாக ஏற்படுத்தியது என்று கூறமுடியாது. என்றாலும் பொருளாதார சிக்கலுக்கு அவசியமான நிபந்தனைகள் அதற்கு முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டு விட்டன. அண்மையிலேயே இலங்கைக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற மற்றுமொரு விடயமாக ஈரான் மீதான அமெரிக்காவினுடைய அந்தத் தடைகளைக் கூறலாம்.

இலங்கையின் இறக்குமதியில் மூலதாரமாக விளங்கிய எண்ணெயில் 90-95 சதவீதத்திற்கு மேற்பட்ட எண்ணெயை இலங்கை ஈரானிடமிருந்து பெற்றுக்கொண்டது. தற்போது அந்த நடைமுறைகளை மீள்பரிசோதனை செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.

அதேபோல இலங்கையினுடைய தேயிலை ஏற்றுமதிகளிலே கணிசமான அளவு ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனவே இந்தத் தடை காரணமாக இலங்கைக்குக் கணிசமானதொரு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேமில்லை. ஆனால் ஜெனீவா தீர்மானத்திலே மேற்குலகநாடுகள் எந்த விதமான பொருளாதாரத் தடையையும் இலங்கைக்கு விதிக்கவில்லை. அவ்வாறு விதிக்கின்ற நோக்கமும் அவற்றிற்கு இதுவரையிலே இல்லை. எனவே ஜெனீவாத் தீர்மானம் எந்த விதமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது என்ற கருத்து எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடும் என்பது சம்பந்தமாக எனக்கு சந்தேகம்.

வீரகேசரி இணையம்









No comments: