மௌனம் கலைகிறது 12 – நடராஜா குருபரன்


மரணத்தின் வாசல் வரை....மௌனம் கலைகிறது 12 – நடராஜா குருபரன்

மரணத்தின் வாசல் வரை....


' புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள்  முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.' 
Wednesday 30th August 2006 The Island


உலக வர்த்தக மையத்தில் அமைந்திருந்த சூரியன் அலுவலகத்திற்கு லயன்ஸ் கிளப் உறுப்பினர் எனக்கூறிக்கொண்டு வருகைதந்த படைப் புலனாய்வாளர் ஒருவர் என்னை நேரடியாகப்பார்த்து உரையாடிச் சென்ற பின்னர் என்னையும் எமது சூரியன் எவ் எம் வானொலியின் செய்திகளையும் முழுமையாக கண்காணிக்கும் படலத்தில் அரச புலனாய்வாளர்கள் களம் இறங்கி இருந்தனர். 
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் ஒருதடவை கடல் மார்க்கமாக இடம்பெற்ற ஆட்கடத்தல் குறித்த மிக முக்கியமான செய்தி ஒன்றை எனது செய்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தேன். அந்தச்செய்தியில் அக்கடத்தல் எவ்வாறு இடம்பெற்றது என்ற விபரம் துல்லியமாக இடம்பெற்றிருந்தது. இந்தத்தகவலை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியாக இருந்த எனது சிங்கள நண்பர் ஒருவர் மூலமாகப் பெற்றிருந்தேன் இந்தச் செய்தி அன்றைய காலைச்செய்தியாக ஒலிபரப்பாகிய அன்று மாலை கடற்படையின் அப்போதைய ஊடகப் பேச்சாளராக இருந்தவர் (தகநாயக்கா என நினைக்கிறேன் பெயர் சரியாக  ஞாபகம் இல்லை) எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது என்றும் அதனை ஏன் தம்மிடம் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தவில்லை எனவும் கடுமையான தொனியில் பல கேள்விகளைக் கேட்டு மிரட்டியிருந்தார்.
இதேபோன்று இன்னும் பல சம்பவங்கள் நான் கடத்தப்படுவதற்கு முன்பு இடம்பெற்றிருந்தன. 
மீண்டும் யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கொழும்பு துறைமுக உயர்பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் புலிகளின் மூன்று தாக்குதல் படகுகள் உட்பிரவேசித்து தாக்குதலை நடத்த முற்பட்டிருந்தன. ஆயினும் கடற்படையினர் விழிப்பாக இருந்ததனைக் கண்ட புலிகள் சிறு துப்பாக்கிச்சண்டையின் பின் தப்பித்துச் சென்று விட்டார்கள்.
அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எல்லா ஊடகங்களுமே குளப்பத்தில் இருந்த போது அன்ரைய காலைச் செய்தியில் அந்தத் தாக்குதல் முனைப்பு தொடர்பான முழு விபரத்தையும் நான் துணிந்து வெளியிட்டிருந்தேன். ஆயினும் இந்தச் செய்தியை அரச படைகளின் பேச்சாளர்கள் மறுத்திருந்ததுடன் அந்தச் செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பாகக் கடுமையான கோபத்தையும் கொண்டிருந்தனர்.  காரணம் வத்தளை நீர்கொழும்புப் பக்கமாக இருந்து வந்த மீனவப் படகுகளை ஒத்த புலிகளின் படகுகள் அதியுயர் பாதுகாப்பு வலையமான துறைமுகத்துள் புகுந்தமை வெளித்தெரிவது அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை அளிக்கும் செயலாக இருந்தது. அதனால் அச்செய்தி வெளியில் கசியாமல் தடுக்கவே படையினர் முனைந்தனர். ஆனால் எமது செய்தி அறிக்கையில் அது வெளியிடப்பட்டவுடன் படையினர் கடுமையான கோபம் அடைந்தனர். 
முன்பு ஒருமுறை என்னுடன் தொடர்பு கொண்ட அதே கடற்படைப் பேச்சாளர் மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரத்துக்கத்தினார். அந்தச் செய்தியை துறைமுகத்துள் இருந்தே பெற்றுக் கொண்டேன் எனவும் மேலும் அந்தச் சம்பவம் நிகழவில்லை எனப்படையினர் மறுத்ததனையும் எமது மதியச்செய்தியில் ஒலிபரப்பி விட்டோம் எனவும் நான் பதிலளித்திருந்தேன்.  
இன்னுமொரு சம்பவத்தையும் இங்கு நினைவுகூரலாம். வடமாராட்சியில் பொது மக்களின் வீடுகள் சில எரியூட்டப்பட்டமை தொடர்பாக செய்தி ஒன்றை எமது  அப்போதைய யாழ்ச்செய்தியாளர் வழங்கியிருந்தார். அந்த எரியூட்டலின் பின்னணியில் படையினரே இருந்தார்கள் என்பதனையும் ஆதாரபூர்வமாக அந்த செய்தியில் ஒலிபரப்பி இருந்தோம். இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியிருந்ததோடு எனது வேலைக்கும் ஆபத்து ஏற்படும் நிலையை தோற்றுவித்துமிருந்தது. 
இந்த செய்தி பொய்யானது என இராணுவப் பேச்சாளர் என்னுடன் வாதிட்டிருந்ததுடன் எமது சிங்கள பிரிவின் செய்தியாளர்களுக்கும் கூறி கோபப்பட்டு உள்ளார். அதனால் இந்தப் பிரச்சனை எமது அலுவல நிர்வாக மட்டத்திலான கூட்டத்திலும் எதிரொலித்தது. குருபரன் எமது படையினரைப் பற்றித் தவறான செய்தியை பிரசுரித்திருக்கிறார் எனவும் இது எமது நிறுவனத்தையே பாதிக்கும் என என் முன்னிலையிலேயே ஒரு கடும்போக்கு சக உத்தியோகத்தர் ஒருவர் எனது தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறைப்பாடு செய்தார். எமது முகாமைத்துவப் பணிப்பாளர் அந்தச் செய்தி குறித்து ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். எனினும் இது குறித்து ஏற்கனவே சகல ஆதாரங்களையும் திரட்டி ஒரு கோர்ப்பாக எடுத்து சென்றிருந்ததால் அதனை உடனடியாகவே அவரிடம் கையளித்தேன். அவற்றைப் பரிசீலித்துப் பார்த்த பின் செய்தியளிப்பதென்றால் இப்படித்தான் செய்தி அளிக்கவேண்டும். வெளியிடுகிற செய்திகளுக்கு தகுந்த ஆதாரங்களை வைத்திருந்தால் அதனால் வரும் விளைவுகளை என்னால் பிரச்சனையின்றி எதிர்கொள்ளமுடியும் என எமது தலைமை நிர்வாகி கூறிய போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே கடுமையான நிசப்தம் நிலவியது.
ஓவ்வொரு தடவையும் யுத்தம் ஆரம்பிக்கப்படும் போது உடனடியான நேரடியான தாக்கங்களை அனுபவிக்கும் தமிழ்ச் சமூக நிறுவனங்களில் யாழ் பல்கலைக் கழகம் மிக முக்கியமானது. 1983களில் இருந்து யுத்தத்தை நடத்திய இலங்கை அரசாங்கங்களின் படைத் தரப்புகளால் யாழ் பல்கலைக் கழகமும் அதன் மாணவர்களும் அடைந்த துன்பங்கள் அளவிட முடியாதவை. அந்த வகையில் 2005 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது படைத்தரப்பினர் கடுமையான அழுத்தங்களையும் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி இருந்தனர். இது சம்பந்தமான செய்திகள் யாவற்றையும் உடனுக்குடன் சூரியனே வெளியிட்டு வந்தது. 
ஒரு முறை பல்கலைக்கழக மாணவர் ஒருவரோ இருவரோ சரியாக ஞாபகம் இல்லை திருநெல்வேலி பரமெஸ்வராச் சந்திக்கு அருகாமையில் படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் போன செய்தியை ஒலிபரப்பி இருந்தேன். 
அன்றிரவு எனது வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் 'ஆ... மேக்க கொட்டியா கெதர னேத'  எனத் தொடங்கி பின்னர் தமிழில் பேசினார். மட்டக்குளியில் இருந்து கதைப்பதாக கூறிய அவர் தான் முதலில் பகிடியாகப் பேசியதாகவும் திருநெல்வேலியில் காணாமல் போனவர் தமது உறவினர் என்றும் அவர் கடத்தப்பட்ட தகவல் எப்படி வந்தது என்றும் மேலதிக தகவலைப் பெற அவருடன் தொடர்பை ஏற்படுத்தி தருவீர்களா எனவும் கேட்டார். மனதுக்குள் சிரித்தபடி இந்தத் தகவல் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தான் வந்தது. இதனைக் கடத்தப்பட்டவர்களுடைய உறவினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தகவல் யாரூடாகக் கிடைத்தது என்பதனை படையினர் மட்டுமல்ல ஆண்டவன்  கேட்டால் கூட நாங்கள் சொல்ல மாட்டோமென்றேன். 'ஓ அப்படியா'  மீண்டும் தனது குரலை கடுமையாக்கிய அவர் சரி சரி பார்ப்பம் நீங்கள் எல்லாம் புலிகள் தானே எத்தனை நாளுக்கு ஆடப் போகிறீர்கள் எனக் கூறி அந்த அரசபடைகளின் தமிழ் எடுபிடி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இப்படி வீட்டு தொலைபேசிக்கும் அலுவலகத் தொலைபேசிக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் எத்தனையோ மிரட்டல் அழைப்புக்கள் வந்தன. அரசாங்க அமைச்சர், இராணுவப் பேச்சாளர், கடற்படைப் பேச்சாளர் புலனாய்வுப்படையினர் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பெயர் சொல்லியும் சொல்லாமலும் வந்த எல்லாக்குரல்களுக்கும் ஒரு ஊடகவியலாளனின் நேர்மையுடனும் தர்மத்துடனும் நான் கடத்தப்படும் வரை பதில் அளித்துக்கொண்டேதானிருந்தேன். 
இன்னும் ஒருநாள், நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த போது எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஒருவர் சிங்களத்தில் மிக மரியாதையுடன் நீங்கள் நடராஜா குருபரன் தானே உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உங்கள் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டேன். தெகிவளை குவாரி றோட்டில் மிகப் பெரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. உங்களது வானொலியில் உடனடி இடையீட்டுச் செய்தியாக வழங்கலாம் உடன் வருகிறீர்களா? எனக் கேட்டார். இந்த குவாரி றோட்டில் தான் ஊடகவியலாளர் சம்பத் லக்மல் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு சடலமாக போடப்பட்டு இருந்தார்.
எனது உள்ளுணர்வு அவர் எதற்கோ வலைவிரிப்பதாகச் சொல்லவே இப்போது என்னால் வர முடியாது நான் அலுவலகத்தில் இரவுக் கடமையில் இருப்பவருக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அவர் பொலிஸ் மற்றும் வைத்தியசாலைகளுடன் தொடர்பு கொண்டு செய்தியின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் அதனைச் செய்தியாக ஒலிபரப்புவார் எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் எனது தொலைபேசியை எடுக்காமல் அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டேன். மறு நாள் விசாரித்தபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அறிந்து கொண்டேன்.
இவை தவிரவும் நான் விடுதலைப்போராட்ட அமைப்பில் இருந்த போது எனக்கு நண்பர்களாக இருந்த பலரிடம் கூட படைப் புலனாய்வாளர்கள் என்னைப்பற்றி பலமுறை விசாரித்து இருந்திருக்கிறார்கள். உலக வர்த்தக மையத்தில் 35 ஆவது மாடியில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு குருபரன்தான் பொறுப்பெனவும் இராணுவத்தரப்பு என் நண்பர்களிடம் கூறியிருக்கிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து எனக்காக வாதாடிய நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்துமிருந்தார்கள்.  
இப்படியே எனக்கு எதிராகத் அரசபடை தொடர்ந்த புலனாய்வு யுத்தம் ஒருநாள் எனது வீட்டிற்குள்ளும் வந்தது.
ஒருநாள் அதிகாலை 1.45 மணியிருக்கும் வீட்டின் அழைப்புமணி அலறியது. எழுத்து கதவருகில் வந்து யார் என்று கேட்ட போது மீரிகானா பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். கதவைத்திறவுங்கள் எனக் கூறினார்கள். கதவைத் திறந்தேன்.  போலிஸ் உடையிலும் சாதாரண உடையுடனும் ஏகே 47 துப்பாக்கியுடனும் துப்பாக்கி இல்லாமலும் 10ற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். சிலர் வீட்டின் உள்ளே சென்று எதனையோ தேடினார்கள். சிலர் கூரையின் மீது ஏறித் தேடினார்கள். சிலர் வீட்டை சுற்றி நின்றார்கள். என்னுடன் சாதாரணமான முறையில் உரையாடுவது போல உரையாடி நான் வேலைக்கு செல்லும் நேரம் திரும்பும் நேரம் போன்றவற்றையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனைக்காக வந்ததாகவும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிப்போனார்கள்.  அதே அதிகாலை 2.15 இருக்கும் மீண்டும் அழைப்புமணி அலறியது. நாங்கள் கல்கிசைப் பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். சற்று முன்னர் யாராவது பொலிஸ் உடையில் வந்தார்களா எனக் கேட்டார்கள். (வந்தவர்களில் ஒரு உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர். அவரைக் கல்கிசைப் பொலிஸ்நிலையத்தில் கண்டிருக்கிறேன்.) 'ஆம் யார் சொன்னார்கள்' எனக் கேட்டேன் உங்கள் அயல் வீட்டவர்கள் சிலர் கல்கிஸைப் பொலிஸ் நிலையத்தைத்தொடர்பு கொண்டு சாதாரண உடையுடனும் பொலிஸ் உடையுடனும் சில ஆயுதங்களுடன் வந்து உங்கள் கதவைத் தட்டிக் கரைச்சல் தருவதாக முறைப்பாடு செய்தார்கள். அதுதான் வந்தோம் எனக் கூறினார்கள். 
ஆம் வந்தார்கள் வந்தவர்கள் தாம் மீரிகானா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள் வீட்டைச் சோதனை செய்தார்கள் பின் திரும்பிச் சென்றுவிட்டார்கள். என நான் கூறினேன். 
இந்தப்பகுதிக்குப் பொலிஸ் வருவதாக இருந்தால் அது கல்கிசைப் பொலிஸிலிருந்தது தான் வரமுடியும். தாங்கள் அப்படியான நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவே இது வேறு ஏதாவது ஒரு குழுவாக இருக்கலாம் எனக் கூறிப் போனார்கள். 
உண்மையில் வீட்டுக்கு முதலில் வந்து சென்றவர்கள் அரச படைகளோ பொலிசோ அல்ல என்னும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான நாடகத்தையே கல்கிசைப்பொலிஸ் அன்று அதிகாலையில் ஆடியிருந்தது.
ஆனால் நானோ ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்கிற மெல்லிய உணர்வைத்தவிர கடத்தப்படப்போகிறேனென்ற உணர்வோ எனது மரண நாள் எண்ணப்படுகிறதேன்ற வலிமையான உணர்வோ இல்லாமல் எதுவுமே நடக்காதவன் போல் காலை எழுந்து வழமை போல் அலுவலகம் சென்றேன். 
எனது வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் அதன் அயலில் நாய்கள் அளவுக்கதிகமாக குரைத்த நாட்கள் எல்லாம் எனது மரணத்திற்கு குறிவைக்கப்பட்ட நாட்கள் என்பதை உணராதிருந்திருக்கிறேன் என்பதை எத்தனை நாட்கள் என்னைப் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை என்னை கடத்தி வைத்திருந்த போது தொடுத்த கேள்விகளின் போதேயே உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கடத்திய அதிகாலைக்கு முதல் நாள் வேறு எங்காவது சென்று படுத்ததாயா? அதிகாலையில் வீட்டில் வாகனம் இல்லையே எனக் கேட்டிருந்தார்கள்.
அது போல ஏன் வேலை முடிந்து நேரே வீடு செல்லாமல் வெள்ளவத்தை சென்று பின் வீடு செல்கிறாய் எனக்கேட்டிருந்தார்கள்?
வேலை முடிந்து செல்லும் வழியில் அனேகமாக வெள்ளவைத்தையில் உள்ள என் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வது வழமை அதுபற்றியே ஏன் வேலை முடிந்ததும் வெள்ளவத்தைபோய் பின் வீட்டுக்குப் போவாய் எனக்கேட்டிருந்தார்கள்.
உண்மையில் எனக்கெதிரான மிரட்டல்கள் வர ஆரம்பித்ததில் இருந்து என்னை யாராவது பின் தொடரக்கூடும் என்பதனை உணர்ந்து கொண்டு  அவதானமாக இருந்தேன். எனது வேலைக்கு செல்லும் நேரமோ வேலையில் இருந்து வீடு திரும்பும் நேரமோ ஒழுங்கற்றவையாக எவராலும் ஊகிக்க முடியாதவையாக அமையும் படி பேணியிருந்தேன்.   
இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்த போதும் இவற்றைப் பகிரங்கப்படுத்தி எனக்கு சுய விளம்பரம் தேடவோ அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெறவோ விரும்பவில்லை. நான் கடத்தப்படும் வரை கொழும்பில் எனக்கென ஒரு இருப்பிருந்தது. இலங்கையில் வாழவதனால் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளைத்தவிர நானும் எனது குடுப்பமும் வேரறாத வாழ்க்கையை கொண்டிருந்தோம். 
எனக்கு தரப்பட்ட நெருக்கடிகளைப் பெரிதுபடுத்தினால் இலங்கையில் வாழும் சூழல் அற்றுப் போய்விடும் என்பதை உணர்ந்திருந்தேன்.
ஆனால் நான் கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் ஒரு நாடகமென்று கிண்டல் செய்து என்னைக் காயப்படுத்தியவர்கள் பலர். கடத்தப்பட்டவரைக் காலையில் பிணமாகத்தானே காண்பது வழக்கம் ஆனால் இவர் மட்டும் எப்படி உயிருடன் வந்தார் எனச் சிலர் ஆய்வில் ஈடுபட்டு இருந்தார்கள்.  இன்னும் சிலர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியவருக்கு "இதுவும் வேணும் இன்னமும் வேணும்'  எனக்கூறினார்கள்.
புலிகளை அடியோடு வெறுத்தவர்களும், சில ஈ.பீ.டீ.பீ உறுப்பினர்களும் என்னைப் புலியாகவே சித்தரித்து அதனாற்தான் நான் கடத்தப்பட்டதாகவும் விவாதித்தார்கள். 
'எங்கட பெடியள் மற்றும் எங்கடை ஊடகவியலாளர்கள்
(ஊடகவியலாளர் சின்ன பாலா போன்றோரை) புலிகள் சுட்ட போது உந்தப் புலி ஆதரவாளர்கள் அதனை எல்லாம் ஆதரிச்சவர்கள்தானே! இப்ப தங்கடையாள் கடத்தப்பட்டவுடனே குமுறுகினம்'  என ஈ.பீ.டீ.பீ.யின் பாக்றோட் முகாமில் உரையாடப்பட்டதாகவும் நான் கடத்தப்பட்டது தொடர்பாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்ததாகவும் அந்த முகாமில் இருந்த என்னுடன் நல்ல தொடர்பைக்கொண்டிருந்த ஒரு ஈ.பீ.டி.பீ உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கவலையடைந்தார்.
புலிகளைத் தனிப்பட்ட வெறுப்புணர்வின் காரணமாக எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியான காரணங்களுக்காக வெறுத்தவர்கள் அரசை ஆதரித்த தமிழர் என யாவருக்கும் சூரியன் வானோலி அவர்களது கருத்தை தணிக்கை இன்றி தெரிவிக்க முழுமையான இடமளித்திருந்தது. புலிகள் வடக்கு கிழக்கில் பலமாக இருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை கொண்ட அரசியல் வாதிகளுக்கும் புத்திஜீவிகளுக்கும் சூரியன் அளித்த சனநாயக ரீதியான களம் போன்று இலங்கையின் அரச வானொலி கூட களம் அளிக்க வில்லை. 
இங்கே சில முக்கியமான சில சம்பவங்களை நினைவு கூரலாம்.
ஈ.பீ.டீ.பீ.யின் அரசியல்செயற்பாட்டாளராக மாறிய ஊடகவியலாளரும் எழுத்ததாளருமான சின்னபாலா என்கிற பாலநடராஜ ஐயர் புலிகளால் சுடப்பட்ட போது அது குறித்தும், ஊடகவியலாளர் றேலங்கியும் அவரது கணவரும் புளொட் உறுப்பினருமான செல்வராஜாவும் சுடப்பட்ட போது அது குறித்தும் ஊடகவியலாளர்களின் கொலை என்ற வகையில் அவற்றைக் கண்டித்து தனித்தனியாக சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் பலரையும் இணைத்துக் கருத்துக்களை பரிமாறும் ஒரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்தேன்.
மூதூரில் யுத்தம் வெடித்து முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேறிய போது ஆண்களையும் பெண்களையும் பிரித்து தனித்தனியாக இரண்டு வழிகளால் புலிகள் வெளியேற்றினர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஆண்களில் சிலரைப் புலிகள் சிறைப்பிடித்துச்சென்று காணாமல் போகச்செய்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரை உடனடியாகவே சூரியன் தனது விழுதுகள் நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தது. எந்த ஊடகமும் செய்யாத ஒன்றை நாம் அன்று செய்திருந்தோம். 
நான் சூரியனில் இணைந்த 2000 ஆண்டில் இருந்து நாட்டை விட்டு வெளியேறும் வரை இலங்கையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக்கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன். 
நிலைமை இவ்வாறிருக்க என்னைப்புலியாக அல்லது புலி ஆதரவாளனாக முத்திரை குத்துவதற்கு இவர்கள் முயன்றமை விசித்திரமானது. 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விழுதுகள் நிகழ்ச்சிக்கு அழைத்தால் வானொலியில் வந்து மூச்சு விடாமல் புலிகளைக் கண்டபடி திட்டுவார். ஜே.வீ.பி சந்திரசேகரனை நிகழ்ச்சிக்கு அழைத்தால் தொடங்கியதில் இருந்து முடியும் வரை கொலைகாரப்புலிகள் பாசிசப்புலிகள், வன்னிப்புலிகள் என வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈபீ.ஆர்.எல்.எவ் சுகு, சித்தார்த்தன் போன்றோரை அழைத்தால் அவர்கள் வந்து புலிகளின் செயற்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சிப்பார்கள். அரசாங்கத்துடன் இருந்த முஸ்லீம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தால் முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றி பேசி புலிகளை கடுமையாக விமர்சிப்பார்கள்.  
புலிகளுக்கெதிரானவர்களின் கருத்துக்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் நான் விழிப்புடனேயே இருந்தேன். இங்கே இன்னுமொரு விடையத்தையும் நான் பதிவு செய்யவேண்டும். புலிகள் மீது வசவு பாடும் நிகழ்வாக இருந்தாலும் சரி அவர்கள் மீதான அரசியல் விமர்சன நிகழ்வாக இருந்தாலும் சரி அவற்றைச் செய்வதால் எனக்கு ஆபத்து ஏற்படுமேன அவர்கள் என்னை ஒரு போதும் மிரட்டவில்லை.
நான் ஊடகவியலாளனாக இலங்கையில் இருந்த காலத்தில் புலிகளின் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் மட்டுமே மிரட்டல்கள் வந்திருந்தன. 
ஆனையிறவு யுத்தத்தில் கேணல் பானு கொல்லப்பட்டதாக ஒரு செய்தியை அவ்யுத்தகாலத்தில் ஒலிபரப்பியிருந்தோம். எமது செய்தியாளரின் தகவலில் இருந்த தவறுகாரணமாக  அது நிகழ்ந்தது.  தவறான செய்தியை ஒலிபரப்பியமைக்காக என்னைத் தூஸணவார்த்தைகளால் புலிகள் திட்டியிருந்தனர்.  அது ஒரு சம்பவம். மற்றைய சம்பவத்தில் புளியங்குளத்தில் இருந்து எமக்கு அனுப்பிய ஒரு செய்தியை அதன் தன்மை கருதி நாங்கள் சூரியனின் செய்தியில் சேர்க்கவில்லை. அதனால் கோபமடைந்த புளியங்குள பகுதியில் செயற்பட்ட போராளி ஒருவர் புளியங்குளத்தில் ஏ9 வீதியில் அமைந்திருந்த புலிகளின் பிரதான அலுவலகத்தில் இருந்து தொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருந்தார். பதிலுக்கு நானும் "தம்பி நீர் வந்து எனது கதிரையில் இரும் நான் புலிகளின் குரலில் வேலைக்கு வருகிறேன்' எனக்கோபமாக சொல்லியதோடு தயா மாஸ்ரருடன் நான் நேரடியாக பேசுகிறேன் எனச் சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்திருந்தேன். உடனே தயா மாஸ்ரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் முறையற்ற அணுகு முறையைக்கூறினேன். ' உவங்கள் விசரன்கள். உவங்கடை கதையை விட்டுட்டு நீங்கள் உங்கட வேலையை பாருங்கள்'  எனக்கூறியிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் தவிர வேறு எந்தப் பொழுதிலும் புலிகள் எம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவோ மிரட்டவோ தங்களது ஆளுமைக்குள் கொண்டுவரமுயலவோ இல்லை.
ஆனால் அரச படையினரும், அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் எனக்கு எல்லா வகையிலும் நெருக்குவாரங்களையும் அச்சமூட்டல்களையும் வழங்கி இறுதியில் எனக்கு மரணத்திகதியை குறிக்குமளவுக்கும் சென்றனர்.
The Sunday Leader, September 3, 2006
 


No comments: