வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 35 வளவளா குளகுளா

.
ஞானா: அப்பா…….அப்பா…..திருக்குறளிலை வளவளா குளகுளா எண்டு ஒரு குறள் இருக்குது, உங்களுக்குத் தெரியுமே?

அப்பா: ஞானா, உன்னைப் போலை பெம்பிளைப் பிள்ளையள்தான் வளவளா குளகுளா எண்டு பேசுறது. திருவள்ளுவப் பெருந்தகை சொற் சுருக்கமானவர் கண்டியோ.

ஞனா: இந்தாருங்கோ அப்பா, நீங்கள் வாங்கித் தந்த திருக்குறள் புத்தகம். 523 ஆவது குறளைப் பாருக்கோ.

அப்பா: எங்கை கொண்டா ஞானா பாப்பம். …..ம்….53ஆம் அதிகாரம் சுற்றந்தழால். சுற்றந்தழால் என்டால் கருத்து உனக்குத் தெரியுமே?

ஞானா: அதிலை போட்டிருக்குத்தானே. வாசிச்சுப் பாருங்கோவன்.

அப்பா: சுற்றந்தழால் என்பது, சுற்றம் தழுவுதல். உறவினர்களை ஆதரித்தல் என்பது பொருள். இதிலை நீ சொன்ன 523ஆம் குறளைப் பாப்பம்………எடி விசர்ப்பிள்ளை. இதிலை வளவளா குளகுளா எண்டே கிடக்குது?

சுந்தரி: அப்பா அவள் பிள்ளை ஞானா ஏதாவது குறும்புவிட சொல்லியிருப்பாள். நீங்கள் அந்தக் குறளை வாசியுங்கோ கேட்பம்.

அப்பா: இஞ்சை பாரும் சுந்தரி, இவள் என்ள விறுக்கா விட்டிருக்கிறாள் எண்டு. குறளைக்கேளும்.

“அளவளா இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று,”

ஞானா: மன்னியுங்கோ அப்பா. சும்மா ஒரு முசுப்பாத்திக்குச் சொன்னனான். இனிமேல் நான் உந்தமாதிரிக் குறும்பு விடுகிறதை நிறுத்தப் போறன். குறளிலை விளங்காத விஷயத்தை நேரடியாய் வந்து கேக்கிறன்.

அப்பா: அது நல்ல பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய் ஞானா.



சுந்தரி: குறும்பு விடுகிறதும் நல்லதுதான். ஆனால் நெடுக விட்டால் அலுப்புத் தட்டினாலும் தட்டும். ஏதோ பாத்துச் செய் ஞானா.

ஞானா: ஓம் அம்மா. அதைப் பாத்துச் செய்யிறன். அப்பா இஞ்சை தாருங்கோ திருக்குறள் புத்தகத்தை. குறளிலை விட்ட குறும்புக்குப் பிராயச் சித்தமாய், அந்தக் குறளின்ரை விளக்கத்தை வதசிச்சு விடுகிறன்.

அப்பா: சரி…..சரி…..இந்தா புத்தகம். வாசிச்சுவிடு அம்மாவும் கேக்கட்டும்.

ஞானா: “அளவளா இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.”

அதாவது, குலவிமகிழ உற்றார் உறவினர்கள் இல்லாதவனுடைய வாழ்க்கை செல்வம் நிறைந்திருந்தாலும் கரை இல்லாத குளத்தில் நீர் நிறைந்ததை ஒக்கும்.

அப்பா: பொருள் விளங்குதே ஞானா. கரையில்லாத அதாவது அணைக்கட்டுச் சரியாய் இல்லாத் குளத்திலை தங்குகிற தண்ணீர் விவசாயத்துக்கோ அல்லது வேறு உருப்படியான காரியங்களுக்கோ உதவாமல் பல பக்கத்தாலும் வழிந்தோடி வீணாய்ப் போய்விடும்.

சுந்தரி: அதுபோலை இனசனத்தோடை கூடிக் குலாவாதவனுடைய வாழ்க்கை செல்லம் நிறைந்திருந்தாலும் யாருக்கும் பயன்படாமல் வீணாய்ப் போய்விடும். எணடது கருத்து, என்ன அப்பா?

அப்பா: சரியாய்ச் சொன்னீர் சுந்தரி.

ஞானா: விளங்குது அப்பா. குளத்துக்குக் கரை இருந்தால் தண்ணீருக்குப் பாதுகாப்பாய் இருக்கும். அதுபோலை இனசங்களைத் தனனுடைய செல்வத்தைக் கொண்டு ஆதரிக்கிறவனுடைய வாழ்க்கைக்கு அவனுடைய இனசனங்கள் பாதுகாப்பாய் இருப்பினம். இல்லையே அப்பா.

அப்பா: உண்மைதான் ஞானா.

“அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்து.”

சுந்தரி: அப்பா! இவள் பிள்ளை ஞானாவின்ரை வளவளா குளவளாவாலை, நல்லதொரு புத்திமதி எங்களுக்குக் கிடைச்சுது. இனசனத்தை ஆதரிச்சு நடக்கிறவையளுக்கு துணைக்குக் குறைவில்லாமல் ஆக்கள் இருப்பினம்.

அப்பா: அது மட்டுமில்லைச் சுந்தரி, ஏதோ அதிஷ்ட வசத்தாலை ஒருவனுக்குச் செல்வம் வந்து சேர்ந்தால் அதை அவன் பதுக்கி வைச்சிருக்காமல் சுற்றத்தாரை ஆதரிக்க வேணும் எண்டு அவன் நினைக்க வேணும். இப்ப என்னைப் பாருங்கோ நான் என்ரை சீவியகாலம் முழுக்கச் சேகரிச்ச செல்வத்தை நானே என்ரை பேரிலை வங்கியிலை
போட்டுவைக்காமல் உங்களோடை கலந்து பகிர்ந்து உங்களை ஆதரிச்சன். இப்ப நீங்கள் எனக்கு என்ன துணை செய்யப்போறியள்?

ஞானா: ஒரு கப் கோப்பி கொண்டுவரப்போறம்.

சுந்தரி: மகள் ஞானாவுக்கு விளங்கியிட்டுது பாத்தியளே அப்பா!

(இசை)


No comments: