தமிழ் சினிமா

.
காதல் பிசாசு


கனடாவாழ் இலங்கை தமிழர் அரவிந்த், தனது நண்பருடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். ஹீரோவும் அவரே.. இயக்கமும் அவரே..!

சந்தானபாரதி மிகப் பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு ஒரு மகள். ஹீரோயின் மிதுனா. இவரது வீட்டில் வேலை பார்க்கும் வனிதாவின் மகன்தான் ஹீரோ அரவிந்த். தங்களது மாடி வீட்டிலேயே வனிதாவையும், அரவிந்தையும் தங்க வைத்து பராமரித்து வருகிறார் சந்தானபாரதி. ஹீரோவையும் அவரே படிக்க வைக்கிறார். மிதுனாவும், அரவிந்தும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். மிதுனாவுக்கும், அரவிந்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்பாவிடம் சொல்கிறாள் மகள். ஏற்றுக் கொள்கிறார் அப்பா. காதல் சிறகு காற்றில் பறக்கும் நேரத்தில், இங்கே பரீட்சை பேப்பரில் மானம் பறந்துவிடுகிறது..! இருவருமே பெயிலாகிவிடுகிறார்கள்.

இப்போது குடும்பத்தினர் வட்டமேசை மாநாடு போட்டு, முதல்ல படிப்பு. அப்புறமாத்தான் காதல் என்கிறார்கள் கண்டிப்போடு. ஹீரோவுக்கு திடீர் ஞானதோயம். காதலியின் அருகில் இருந்தால் படிக்கவே முடியாது என்ற எண்ணத்தில் மும்பையில் ஒரு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் வாங்கி அங்கே பறக்கிறார். ஹீரோ மும்பைக்கு போனவுடன் எட்டாமிடத்தில் சனி பகவன் வந்து உக்கிரப் பார்வை பார்த்துவிடுகிறார்.

தெரியாத்தனமாக தனக்கு முன்பே தெரிந்த ஒரு பெண்ணை ஹோட்டலில் காப்பாற்றப் போய் மும்பையின் மிகப் பெரிய டானின் மகன் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிறார். டான் ஹீரோவைத் துரத்த, அந்த டானையும் போட்டுத் தள்ளுகிறார் அரவிந்த். இந்த டானுக்கு எதிர் கோஷ்டியான இன்னொரு டான் அரவிந்தை அரவணைத்துக் கொள்ள.. என்ஜீனியரிங் படிக்க வந்த ஹீரோ பில்லாவாகிறார். தனது குடும்பத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் இவரது நிலைமை வீட்டாருக்குத் தெரியவில்லையாம். இதற்குள் 3 வருடங்கள் ஓடிவிட்டதாம். அதற்குள் ஹீரோயின் மிதுனாவும் தனது படிப்பை முடித்துவிட்டு ஐ.பி.எஸ்.ஸாகி அதே மும்பைக்கு ஸ்பெஷல் டூட்டியில் வந்து சேர்கிறார்.

யாரோ ஒரு டானை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி வலைவிரிக்க அதில் தனது காதலனே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியாகிறார் மிதுனா. இறுதியில் என்ன ஆனது என்பதை என்னைப் போலவே நீங்களும் தியேட்டருக்குச் சென்று நேரில் பார்த்து அவஸ்தைப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டுமாய் சபிக்கிறேன்..!

மனம் நிறைய ஆசை இருக்கலாம். நடிப்பதற்கேற்ற முகவெட்டு இருந்தால் ஹீரோவாக விருப்பம் இருக்கலாம். அதே சமயம் கையில் காசு இருந்தால் தனக்குத் தோதான கதையை படம் இயக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து செய்யச் சொன்னால் நல்லதுதான்.. இப்படி இயக்கத்தையும் நானே செய்வேன் என்று சொல்லி குழி தோண்டி, அதில் தானே துண்டுவிரித்து படுத்துக் கொள்வதெல்லாம் முட்டாள்தனம்..!

தமிழ்ச் சினிமாக்கள் இன்றைக்கு என்ன லெவலில் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், தமிழ்ச் சினிமா ரசிகர்களின் சினிமா அறிவு பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் பலரும் வாரவாராம் படத்தினை வெளியிட்டு தங்களது உடலையே காயப்படுத்திக் கொள்கிறார்கள்..!

கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தங்கவேல் என்பவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையும், பல இடங்களில் வசனமும் பளிச்சிடுகிறது. இது மட்டும் இருந்தால் போதுமா..? முதல் காட்சியில் ஹீரோ ஓடி வருவதும், ஹீரோயின் போலீஸ் டிரெஸ்ஸில் துரத்துவதையும் பார்த்தபோதே வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.. அதேதான் படம் முழுக்க.. அரவிந்த் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொண்டு அதன் பின்பு வரலாம். அதே சமயம் படமெடுக்க முன் வந்த தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். வேறு வழியில்லை..!

ஹீரோயின் மிதுனா, 'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் உடன் பிறந்த தங்கை. சீரியலில் நடிக்க வந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். சிற்சில இடங்களில் நடிப்புக்காக பார்க்க முடிந்தாலும், ஹீரோயினுக்கான ஜாடையே இல்லாதவர். இவருடன் இன்னொரு ஐபிஎஸ்ஸாக வரும் ஒரு பெண் இவரைவிட அழகாக இருந்து தொலைத்துவிட்டதால் இடைவேளைக்கு பின்பும் பார்க்க சகிக்கவில்லை..!

படத்தின் விற்பனைக்காக கடைசி நேரத்தில் சந்தானத்திடம் கால்ஷீட் கேட்டு சில காட்சிகளை தனியே எடுத்து இதில் இணைத்திருக்கிறார்கள். தன்னை அழைத்தவர்களை அவரும் ஏமாற்றவில்லை. அண்ணன் சந்தானம், கொஞ்சம் சுத்தி வளைத்துச் சொல்லும் வசனங்களையும், நீட்டமாக எதுகை, மோனையாக அள்ளிவிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, கவுண்ட்டர் அட்டாக் செய்தால் நலமாக இருக்கும்..! இடைல கனடால கொஞ்சம் ஷூட் செஞ்சிருக்காங்கன்றது நல்லா தெரியுது. ஆனா எதுக்கு..? எல்லாம் வேஸ்ட்டு..! பெரிசுகளின் அலப்பறையையே சொல்ல முடியாத சூழல்ல ஒளிப்பதிவு, இசைன்னுல்லாம் கேட்டு நீங்க உங்க மூளைய கன்பியூஸ்ல விட்டுக்காதீங்க..!

நடிச்சே ஆகணும்ன்னா நல்ல இயக்குநர்களைத்தான் முதல்ல தேடிப் பிடிக்கணும்.. கடந்த 3 வாரமா வெளிவந்த எந்த சினிமாவும் மக்கள் ரசனைக்கேத்தாப்புலேயே இல்லைன்றதுதான் உண்மை. அதைவிட உண்மை சுத்தமான வாஷ் அவுட்டுதான் கடந்த 3 வாரங்களாக சினிமா தொழிலுக்கு பதிலா கிடைச்சிருக்கு..!

அரவான் படத்துக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர்ல செகண்ட் ஷோவுக்கு 10 பேர் வந்திருக்காங்க.. நாங்க படத்துக்கு தேவி பாரடைஸ் தியேட்டர்ல 28 பேர் வந்திருக்காங்க.. தேவி பாரடைஸ்ல இந்தப் படத்தை தூக்கிட்டு தியேட்டரையே மூணு நாளைக்கு மூடி வைச்சிருந்திருக்காங்க..! ஒரு வார தியேட்டர் கட்டணமான ஆறே முக்கால் லட்சத்தை வைச்சுட்டு ஒரு படத்தை ஓட்டுறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன் வரலை. அவங்க என்ன செய்வாங்க..? பூட்டுறா சாமின்னுட்டாங்க..! இதுதான் தற்போதைய தமிழ்ச் சினிமாவின் நிலைமை.

இந்த லட்சணத்துல பெப்சி-தயாரிப்பாளர்கள் சண்டை வேற மும்முரமா இருக்கு. அறிவிக்கப்படாத ஸ்டிரைக் இப்போ அறிவிக்கப்பட்டுவிடலாம்ன்ற ரேஞ்ச்சுல நிக்குது. என்னிக்குன்னுதான் தெரியலை..!

இன்னிக்கு 5 படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. எதையும் சொல்ல முடியாது. கடும் உழைப்பு, சிறந்த இயக்கத் திறமை, கதையாடல், படத்தின் நேர்த்தி இது எல்லாவற்றையும் தாண்டி நேரம், காலமும் சினிமால முக்கியம்.. அது எல்லாருக்குமே அமையாது. கிடைத்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்..! 99 சதவிகிதம் நமது முயற்சிதான்.. 1 சதவிகிதம்தான் லக்கு இல்லாட்டி இறைவனின் ஆசி...! இதுல 99 சதவிகித்தையே முழுசா செய்யலைன்னா, இறைவனின் ஆசி எப்படி கிடைக்கும்..? தப்பு தம் பக்கம்தான் என்பதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முதல்ல புரிஞ்சுக்கிட்டு அப்புறமா நஷ்டக் கணக்கையும், யாரால் நஷ்டம் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசட்டும்..!

தியேட்டருக்கு போங்கன்னும் சொல்ல மாட்டேன்.. போகாதீங்கன்னும் சொல்ல மாட்டேன்.. உங்க இஷ்டம்..!
நன்றி குசும்பு

No comments: