மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 1


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)
முன்னுரை

கி.மு. 145 இல் இருந்து
ஈழத் தமிழ் மன்னனான எல்லாளன்
மாயாரட்டை, உறுகுணை என்னும் இரு பகுதிகளைத் தவிர இலங்கை முழுவதையும்
ஒருகுடையின் கீழ் ஆண்டுவருகின்றான்.
அநுராதபுரியைத் தலைநகராகக் கொண்ட
எல்லாளப் பேரரசின்கீழ்
முப்பத்தியிரண்டு சிற்றரசர்கள்
நூட்டின் வௌ;வேறு பகுதிகளையும்
ஆட்சிசெய்து வருகிறார்கள்
மாயாரட்டை உறுகுணை ஆகிய பகுதிகளை
எல்லாளனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு, ஆட்சிசெய்யும் கவந்தீசன் என்னும் குறுநில மன்னன்
கப்பம் கட்டுவதை நிறுத்தியதனால்,
அந்த விடயம் அரசவையில் பரிசீலனைக்கு வருகின்றது.

காட்சி 1

களம் :- எல்லாளனின் அரசவை
பங்குகொள்வோர்:- எல்லாளன்
அமைச்சர்
தளபதி
அரசவையினர்.

எல்லாளன்:- எ..ன்..ன? கப்பம் இல்லை என்றானா கவந்தீசன்? இப்புவியின் திக்கெட்டும்
வெற்றிக்கொடி நாட்டி, வீரப்புகழ் ஈட்டி, புதியதொரு வரலாற்றை இப் பூவுலகுக்குப் புகட்டிக் கொண்டிருக்கும் செந்தமிழ் மன்னனான இந்த எல்லாளனுக்கா கப்பம் இல்லையென்றான்?

அமைச்சர்:- அரசே! சிற்றரசன் கவந்தீசன் கப்பங்கட்ட மறுத்த சொல் கேட்டு
சீற்றமடைய வேண்டாம்;. சிந்தித்துச் செயலாற்றுவோம்.



எல்லாளன்:- சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது யார்? நானா? கவந்தீசனா?
ஈழத்தின் அனைத்துப் பகுதிகளும் எல்லாளனின் ஒரு கொடியின்கீழ் இணைந்து விட்டபின்னரும் தனித்து ஒரு பகுதியை ஆள்வதற்கு அவனுக்கு நான் சலுகை அளித்ததை நினைத்துப்பார்க்க வேண்டியது யார் நானா? கவந்தீசனா? அன்று கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டான், அதனால் நமது முற்றுகையிலிருந்து தப்பிக்கொண்டான். இன்று என்னையே எதிர்க்க நினைக்கிறான், அதனால்தான் கப்பம் செலுத்த மறுக்கிறான். அப்படித்தானே?

அமைச்சர்:- ஆயினும் தம்நிலை மறந்து, அகந்தை கொண்டு தகுதிக்குமீறி
நடப்பவர்களை பொறுமையால் வெல்வதே தங்களைப்போன்ற உயர்ந்தவர்களுக்கு உத்தமமானது மன்னா!

எல்லாளன்;:- தனது நிலையை அவன் மறக்கலாம், எமது திறையை எப்படி அவன்
மறுக்கலாம்? கப்பம் செலுத்தவேண்டியது அவனது கடமை. தவறினால் வற்புறுத்துவது நமது உரிமை. மறுத்தாலும், எதிர்த்தாலும் படையை நடத்தாமல் விடுவது மடமை. இதிலே எதற்குப் பொறுமை?

அமைச்சர்:- உண்மைதான் அரசே! கவந்தீசனோடு போர் கூடாது என்று நான்
கருதவில்லை. ஆனால்..

எல்லாளன்:- அப்படியானால் உங்கள் தயக்கம்..??

அமைச்சர்:- மன்னன் கவந்தீசனுக்கு எதிரான போரிலே எண்ணற்ற மக்கள் இறக்க
நேரிடலாம். சின்னஞ்சிறு இனமாக இந்த நாட்டில் மட்டுமே வாழ்கின்ற சிங்கள இனமே முற்றாக அழிந்துவிடலாம். அவ்வாறு நடந்துவிட்டால் திக்கெட்டும் புகழ்பரப்பி வாழுகின்ற செந்தமிழ் இனத்தின் வரலாற்றிலே அது வடுவாக அமைந்து விடலாம். அதனை எண்ணும் போதுதான்....

(தளபதி அவைக்குள் வருகிறார். வரும்போதே பேச்சில் குறுக்கிடுகிறார்)

தளபதி:- அப்படியொரு கவலைக்கு அறவே இடமில்லை அமைச்சரே! வணக்கம்
வேந்தே! அழைத்ததாக அறிந்தேன். வழியிலே வைத்தியர் வீட்டில் சிறிது சுணக்கம். அதனால் தாமதித்துவிட்டேன். தயைகூர்ந்து மன்னிக்கவேண்டும்.

அமைச்சர்:- வரும்போதே என்னுடன் தர்க்கித்துக் கொண்டுதான் வருகிறார். ஹ ஹ ஹ!

தளபதி:- ஆம் அரசே! அமைச்சர் கருதுவதைப்போல சிங்கள மக்களுக்கு போரிலே
தீங்கு எதுவும் நேரப்போவதில்லை. அதுமட்டுமல்ல, இடையிலேயுள்ள படைவீரர்களுக்குக்கூட இதிலே இடர்வர நான் விடப்போவதில்லை. விடத்தேவiயுமில்லை. ஆணையிடுங்கள் அரசே. கர்வம்பிடித்த அந்த கவந்தீசனை தன்னந்தனியாகச்சென்று, கன்னத்தில் அறைந்து கட்டியிழுத்து வருகின்றேன். சின்னஞ்சிறிய அந்த மன்னனைப்பிடிக்க எமது எண்ணரிய படைகள் எதற்கு? ஆணையிடுங்கள் எனக்கு. கப்பங்கட்ட மறுத்த அவனது கழிமண்தலை தப்பிவிடுமா என்பதைப் பார்த்துவிடுகிறேன். அவன்தலை என்ன அவனது தலைமுறையையே கொண்டுவருகிறேன் அல்லது கொன்றுவருகிறேன்.

எல்லாளன்:- செய்வாய் நீ என்று எனக்குத் தெரியும். ஆனால் எதற்கும் முறை என்று
ஒன்று உண்டு. அது தவறுதல் அறமன்று.

தளபதி:- போரொன்று வேண்டி என் புஜங்கள் புடைத்தெழுகின்றன அரசே

அமைச்சர்:- ஹக்..ஹக்..ஹக்.. போரொன்று வேண்டும் என நீர் வேண்டுவதற்காகப்
போர்புரிதல் நாட்டுக்கு நல்லதுமல்ல, உமது வீரத்திற்கு அழகுமல்ல தளபதி. அரசே! ஏன் என்றுகேட்டு கவந்தீசனுக்கு எழுதுவோம் ஓர் ஓலை. பின்னர் தூக்குவோம் வாளை.

தளபதி:- மன்னவா இது கோழைத்தனம். கப்பங்கட்ட மாட்டேன் என்று அவனே
அனுப்பிவிட்டான் ஓலை. இன்னுமேன் அவனுக்கு ஓலை? ஆணையிடுங்கள் எடுப்பதற்கு என்வாளை.

எல்லாளன்:- அதற்கு முன் அவனுக்கு ஓர் ஓலை...

தளபதி:- மன்...னவா?

எல்லாளன்:- அனுப்பவேண்டும் காலை.

தளபதி:- ? ? ?

எல்லாளன்:- அதிலே குறிக்கவேண்டும் போர் தொடுக்கும் நாளை!
என்ன அமைச்சரே?

அமைச்சர்:- அரசே!?

எல்லாளன்:- கவந்தீசனுக்கு இனியும் நாம் இரக்கம் காட்டினால் அதனால் எமக்கே
இழுக்கு. ஆகவே, கப்பம் தா அல்லது களத்திற்கு வா என்று சிறிது விளக்கமாகவே எழுதுவோம். அவனது விருப்பப்படி நடக்கட்டும். வாழும் ஆசை இருந்தால் கப்பங்கட்டி நாட்டை ஆளட்டும். அல்லது களத்திலே சந்தித்து மாளட்டும். என்ன சொல்கிறீர்?

அமைச்சர்:- தங்கள் சித்தம்! இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் இனி கந்தீசனுக்கு
இல்லை. போரைத் தொடங்க நீங்கள் காரணமாகக் கூடாதே என்பது தான் என் கருத்து. அப்படியே முடிவு செய்துவிட்டீர்கள். யுத்தம் பற்றிய முடிவை கந்தீசனின் புத்திக்கே விட்டுவிட்டீர்கள். இது அவனது புத்திக்கும் ஓர் அளவுகோல்.

எல்லாளன்:- நன்றி அமைச்சரே!
(தளபதியைப் பார்த்து) தளபதியாரே! நாளை உதயத்திலே ஓலை அனுப்புவதற்கு ஒழுங்குகள் செய்யவேண்டும். அத்தோடு...

தளபதி:- தெரியும் மன்னவா! போருக்கும் தயாராக இருக்கவேண்டும்...

எல்லாளன்:- மெத்தச்சரி! நீர் சென்றுவரலாம்.

(தளபதி சென்ற பின்னர்)

எல்லாளன்:- அமைச்சரே! நம் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துப் பிரதானிகளதும்
ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தினீர்களே. அவர்களது கோரிக்கைகளை ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.

அமைச்சர்:- அப்படியே மன்னா!
முதலில் பொத்துவில் பாணமைப் பிரதானியின் கோரிக்கை. காட்டு யானைகளாலும், கள்வர்களாலும் நாட்டு மக்களுக்கு அடிக்கடி ந~;டங்களாம். பாதுகாப்பும் தேவை. பொருள் உதவியும் தேவை என்று கேட்டிருக்கின்றார்.

எல்லாளன்:- நல்லது தென் இலங்கைக் கடல் எல்லைப்புறத்திலேயிருக்கும்
நல்லதொரு பிரதானி அவன். நமது மக்கள் காக்கும் படையின் ஐம்பது வீரர்களை உடனடியாக அனுப்பிவைக்கும்படி தளபதியிடம் சொல்லுங்கள். பிரதானிக்கு வேண்டிய பொருளுதவியையும் குறையாது வழங்கிவிடுங்கள்.

அமைச்சர்:- அடுத்து, செந்தமிழ்மக்கள் சீராக வாழும் சிலாபம் பிரதானியின்
கோரிக்கை.

எல்லாளன்:- சொல்லுங்கள்!

அமைச்சர்: இந்த வருடம் நடைபெறும் சிலாபம் சிவன்கோவில் திருவிழாவில் தாங்கள்
கலந்து சிறப்பிக்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

எல்லாளன்:- ஆண்டவனுக்கு நடைபெறும் திருவிழாவில் அரசனுக்குச் சிறப்பெதற்கு?
இறைவனின் சன்னிதானத்தில் எல்லோரும் சமம். இறுதிநாள் திருவிழாவைச் சிறப்பிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கலைஞர்களைத் தருவிக்க வேண்டும். ஏற்பாடுகளைச் செய்யும்படி சொல்லுங்கள். வேறென்ன கோரிக்கை?

அமைச்சர்:- நமது அனுராதபுரப் புறநகர்ப்பகுதிப்பிரதானியின் அவசியமான கோரிக்கை
 ஒன்று.

எல்லாளன்:- என்ன அது?

அமைச்சர்:- காஞ்சிரங்குளம், குஞ்சுக்குளம், நல்லவர்குளம், பெரியகுளம்,
பெரியவிளாங்குளம், விளாங்குளம் முதலிய பன்னிரண்டு குளங்களிலும் அணைக்கட்டுக்களைச் செப்பனிட வேண்டுமாம். பருவமழை கூடிவிட்டால், காட்டு வெள்ளமும் கரைபுரண்டு நாட்டுக்குள் வந்துவிடுமாம்.

எல்லாளன்:- உண்மை! உழவுத்தொழிலால் உயர்ந்த தமிழ்மக்கள் வாழும் இந்த
அனுராதபுரப் புறநகர்ப் பிரதேசத்தில் அனைத்துக் குளங்களையும்
திருத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். அதற்கு வேண்டிய பொருளைக் கருவறையில் இருந்தே நேரடியாக வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ம்…யாழ்ப்பாணப் பிரதிநிதி யாதும் உரைத்தாரா?

அமைச்சர்:- ஆம் அரசே! புலிக்கொடியின் கீழ், தங்கள் ஆட்சியில் மக்கள் வழமாக
வாழ்வதாகப் புகழாரம் செய்தார்.

எல்லாளன்:- அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்த மக்கள் செறிந்து வாழும் செந்தமிழ்ப்
பிரதேசமல்லவா அது. சிறப்பாகவே இருக்கும்.

அமைச்சர்:- துறைமுக அபிவிருத்தி வேலைகள் துரிதமாக நடைபெறுவதாகத்
திருமலைப் பிரதிநிதி செப்பினார். புளியந்தீவுப் பிரதி நிதியும் வந்திருந்தார்.

எல்லாளன்:- கோரிக்கைகள் ஏதாவது?

அமைச்சர்:- கோரிக்கைகள் ஏதுமில்லை. ஏனென்றால் குறைகள் ஒன்றுமில்லை என்று
கூறிச்சென்றார்.

எல்லாளன்:- ஹக்...ஹக்..ஹ. மானோட, மயிலாட தானாகக் களனிவிளையும், மீன்பாடும்
தேன் நாடல்லவா? குறையெதுவும் இருக்காது!

அமைச்சர்:- மன்னனர்மன்னா! பௌத்தமகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குகளும்
வந்திருந்தார்கள்..

எல்லாளன்:- அடடே.. அப்படியா? அத்தாணிமண்டபத்திற்கே அவர்களை அழைத்து
வந்திருக்கலாமே அமைச்சரே.

அமைச்சர்:- முன்னறிவிப்பு இல்லாமல் வந்துவிட்டதால் முடியவில்லை மன்னா. ஆனால்
தக்கபடி உபசரித்து அனுப்பிவைத்தேன். பௌத்தமத வளர்ச்சிக்காகத் தாங்கள் செய்துவரும் உதவிகளுக்காக நன்றிதெரிவிக்கவே அவர்கள் வந்திருந்தார்கள். தேவைகள் எதையும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் தங்களது உதவிகள் தேவைக்கு அதிகமாகவே திருப்தியளிப்பதாக தங்களை வாழ்த்திச் சென்றார்கள்.

எல்லாளன்:- மக்களுக்குத் தாம் விரும்பிய மதத்தை வழிபடும் உரிமையுண்டு. அரசுக்கு
அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் கடமை உண்டு. நமது கடமையைத்தானே நாம் செய்கிறோம்.
நல்லது அமைச்சரே! நமது ஆட்சியில் இலங்கைத் தீவின் எந்த மூலையிலும் மக்கள் குறையின்றி வாழ வேண்டும். குறைகண்டால் மறுகணமே அச்செய்தி என்னைவந்து சேரவேண்டும்.
அமை..ச்சரே..!

அமைச்சர்:- மன்னர்மன்னவா!

எல்லாளன்:- சிற்றரசர்களின் வருடாந்தக் கூட்டத்திற்கு அழைப்போலைகளை
அனுப்பிவிட்டீர்களா?

அமைச்சர்:- ஆம் அரசே! முப்பத்தியிரண்டு சிற்றரசர்களுக்கும் ஓலைகள் போய்ச்
சேர்ந்துவிட்டன. சித்திரைப்பூரணையன்று சிற்றரசர்கள் எல்லோரும் வந்து கூடுவார்கள். ஏற்பாடுகள் எல்லாம் வழமைபோல நடைபெறுகின்றன.

எல்லாளன்:- நல்லதுஅமைச்சரே! இதுவரை நான் இட்டக்கட்டளைகளை இனிதே
நிறைவேற்றுங்கள். சென்று வாருங்கள்.

அமைச்சர்:- அப்படியே மன்னா!

---திரை---


(மாமன்னன் எல்லாளன் மீண்டும் வருவான்)


No comments: