யார் நமது குரு!‏ - Thinakaran


.
வெகு நாட்களுக்குப் பிறகு இரண்டு  மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின் தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
‘எங்க குருநாதர் இளமையிலேயே துறவறம் மேற்கொண்டவர்,  பெரிய மேதை, விஷய ஞானம் மிக்கவர், ஆன்மீக நூல்களைக்  கரைத்துக் குடித்தவர் தெரியுமா?’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு? ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’
’அப்படியா?’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண்டாவது மாணவர்.
’ஆமா. அவர் தினமும்  தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க!’
‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை!’
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது, தான் உணர்ந்ததை  பாமரனுக்கும் புரியும்படி சொல்வார். அவ்வளவுதான்!’

இப்போது முதல் மாணவர் பேசினார்.


‘நானும் உங்க குருநாதரைக் காணவேண்டும். உங்கள் குருநாதர் பற்றி இன்னமும் சில விபரங்கள் கூறமுடியுமா?
 
குரு, சீடன் பாரம்பரியம் எங்களுடையது என்று தன்முனைப்புடன் பேசிவரும் கால கட்டத்தில், நீ  இன்னொரு "புத்தன்", என்னைவிட  சிறந்த சிந்தனையாளனாக, ஞானியாக, மகானாக உன்னால் உயர முடியும் என பாமரனுக்கும்  உணர்த்தியவர் அவர். உலகநலத் தொண்டனாக தன்னை அறிமுகம் செய்துகொண்டு வாழ்நாள் முழுதும் உலக அமைதிக்காகவே  வாழ்ந்தவர்.எத்தனையோ உலக நலத் தொண்டர்களை உலகம் முழுதும் உருவாக்கிக் கொண்டிருப்பவர். எல்லோரும் கண் காதுகளை மூடி ஆடு மாடுகள் போல் ஆன்மீக வியாபரச்சந்தையில் சிக்கிக்கொள்ளும் இந்த நாளில்,ஏன்? எதற்கு? எவ்வாறு? என கேள்விகேட்கவைத்து  சுயமாக சிந்திக்கக் கற்றுத்தந்தவர்.ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்து இறையுணர்வு பெற முறை வகுத்தவர்.பொருள் ஈட்டும் முறையை மட்டுமே  போதிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மத்தியில் விடுபட்டுப்போன "வாழ்க்கைக் கல்வியை" போதனை முறையாக அல்லாமல் சாதனை முறையாக பாமரனுக்கும் கொண்டு சேர்த்தவர்.சாதி,மதம், இனம், மொழி, நாடு, நான், என்னுடையது என்னும் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வட்டங்களிருந்து வெளிக்கொணர்ந்து, எல்லாமே  இறைநிலையின் தன்மாற்ற நிகழ்வே என உணர்த்தியவர்.சமுதாயத்தில், சுரண்டலையே முதன்மையாகக்  கொண்டு வாழும் இன்றைய சூழ்நிலையில், மனிதன் வாழவேண்டியது  அறம் சார்ந்த வாழ்வே என  வாழ்ந்து காட்டியவர்.மனம் முதல் எண்ணம் வரை, பிரபஞ்ச தோற்றம் முதல் அணுத்துகள் வரை, ஜீவகாந்தம் முதல்  விண்காந்தம் வரை விஞ்ஞான விளக்கம் அளித்து, அதையே பாமரனும் உணரும் மார்க்கம் அளித்தவர்."நான் யார்" என்பதைக் காட்டி, தனி மனித அமைதியே உலக அமைதியென உணர்த்தியவர்.உலகம் முழுவதும் பெண்மையினை ஏதாவது ஒரு வகையில் அடிமையாய் நடாத்தும் ஆண் வர்க்கத்தின் நடுவில் அதை  மாற்றி, பெண்மையினை போற்றக்  கற்றுத்தந்தவர்.துறவு இல்லாமல்  இல்லறத்தில் இருந்து கொண்டு மக்களை விழிப்பு நிலைக்கு அழைத்துச் சென்றவர்."குரு" என்ற சொல்லுக்கு  புது இலக்கணம் வகுத்தவர் அவர் என்றார் இரண்டாவது மாணவர்.

1 comment:

Anonymous said...

குருநாதர் வேதாத்திரி மகானாரின் போதனைகளைத் தொடர்ந்து எழுதவும்
"வாழ்க வளமுடன்"
- பாரதி