இலங்கைச் செய்திகள்

.
ஜனாதிபதியின் கடிதத்துக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பதில்

பம்பலப்பிட்டி இந்துவில் 13 பேர், இராமநாதனில் 7 பேர் 9 பாடங்களில் A சித்தி

யாழில் 9A பெற்ற கல்லூரிகள்

யாழ். பண்ணைக் கடலின் வடக்குப்புறம் அழகுக் கடற்கரை அமைக்கும் செயற்பாடு

சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு

வரணி பிரதேசத்தில் ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்க நடவடிக்கை

அமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்

வேண்டாம் சுயநலம்; தேவை பொது நலம்

அரசியல்வாதிகளுக்கு இது உறைக்குமா ?


1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்


ஜனாதிபதியின் கடிதத்துக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பதில்


25/3/2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியாவின் ஆதரவு கோரி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பிய கடிதத்துக்கு, இந்தியப் பிரதமர் பதில் அனுப்பியுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ அனுப்பிய கடிதத்துக்கு மன்மோகன்சிங் அனுப்பிய பதில் கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தில்,

“ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது.

இலங்கையில் நீடித்து வந்த போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வந்ததில் இருந்து, மூன்று ஆண்டுகளாக இலங்கையும் இந்தியாவும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், புனர்வாழ்வு உதவிகளை வழங்கி வருகின்றன.

தேசிய முக்கியத்துவம் நிறைந்த இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய அமைப்புகளுக்கு சிறிலங்கா அரசு அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லிணக்க ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நீங்கள் காட்டும் முனைப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசியல்தீர்வை அளிக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கடந்த காலங்களிலும் நாம் விவாதித்துள்ளோம்.

இனங்களைக் கடந்து அளிக்கப்படும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மூலம் தான் அவர்களுக்கு நீதி, கண்ணியம், சமத்துவம், சுயமரியாதை கிடைக்கும்.

அதற்காக இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உதவியாக இருக்கும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தைப் பொறுத்தவரை, சாதகமாக வழி காணும் முயற்சியில் இலங்கைத் தரப்புடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளும்படி நான் இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

தீர்மானத்தில் இடம்பெற்ற வரிகளில், சிறிலங்காவுக்கு சமமான நிலையை ஏற்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள்.

அந்த நோக்கத்தின்படி, சிறிலங்காவில் நிலையான, பாதுகாப்பான, வளமான சூழ்நிலையில் அனைத்து சமூகத்தினரும் வாழ மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியா தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும்.

இதன் மூலம் வலுவாக உள்ள இந்திய - சிறிலங்கா உறவு மேலும் வலுப்பெறும்“ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி


பம்பலப்பிட்டி இந்துவில் 13 பேர், இராமநாதனில் 7 பேர் 9 பாடங்களில் A சித்தி


சி.எல்.சிசில் 27/3/2012

2011 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 13 பேரும், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் ஏழு பேரும், றோயல் கல்லூரியில் தமிழ்ப் பிரிவில் 5 பேரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேடதரத்தில் (A) சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் கடந்த திங்கள் அதிகாலையிலேயே இணையத்தளத்தின் மூலமாக பெறுபேறுகளை வெளியிட்டது,

இதன் பிரகாரம் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் 13 மாணவர்கள் 9 பாடங்களிலும், 15 மாணவர்கள் 8 பாடங்களிலும், 13 மாணவர்கள் 7 பாடங்களிலும், 9 மாணவர்கள் 6 பாடங்களிலும், 12 மாணவர்கள் 5 பாடங்களிலும் (A தர) அதிவிசேட சித்தியடைந்துள்ளனர்.

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் ஏழு மாணவிகள் 9 பாடங்களிலும், 7 மாணவிகள் 8 பாடங்களிலும், 9 மாணவிகள் 7 பாடங்களிலும், 8 மாணவிகள் 6 பாடங்களிலும், (A தர) அதிவிசேட சித்தியடைந்துள்ளனர். இந்தக் கல்லூரியிலிருந்து கடந்த முறை 148 மாணவிகள் பரீட்சைக்கு பரீட்சைக்குத் தோற்றியதுடன் அதில் க.பொ.த. உயர் தரத்திற்கு 84.3 வீதமான மாணவிகள் தகுதி பெற்றிருந்தனர்.

இதேவேளை கொழும்பு றோயல் கல்லூரியில் தமிழ் பிரிவில் கடந்தமுறை 99 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியதுடன் அதில் 5 பேர் ஒன்பது பாடங்களிலும், 22 பேர் 8 பாடங்களிலும், 58 பேர் 7 பாடங்களிலும், (A தர) அதிவிசேட சித்தியடைந்துள்ளனர்.

இதேவேளை வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் மீள் திருத்தத்திற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு. எம்.என்.ஜே. புஸ்பகுமார கூறினார்.

நன்றி வீரகேசரியாழில் 9A பெற்ற கல்லூரிகள்
சி.எல்.சிசில் 27/3/2012

கடந்த டிசம்பரில் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தமிழ்மொழி மூலம் 14 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும், யாழ். இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 11 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர்.

மேலும் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் ஒருவரும், ஆங்கில மொழி மூலம் ஒருவரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர்.

இதேவேளை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் ஒருவருக்கு 8 Aயும், 1B யும், ஒருவருக்கு 4A யும், 3B யும், 1C யும், 3 பேருக்கு 3 Aயும், 3B யும், 3 Cயும் கிடைத்துள்ளன.
நன்றி வீரகேசரி


யாழ். பண்ணைக் கடலின் வடக்குப்புறம் அழகுக் கடற்கரை அமைக்கும் செயற்பாடு

Monday, 26 March 2012
pannai_kadal_யாழ். பண்ணைக் கடலின் வடக்குப் புறமாக உள்ள கடற்கரைப் பகுதியில் கடற்கரை வீதி ஓரமாக அழகுக் கடற்கரை ஒன்று அமைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண டச்சுக் கோட்டையின் தென்புறமாக இந்த உல்லாச புரி போன்ற கடற்கரை பண்ணை வீதி மற்றும் அங்குள்ள சுற்று வட்டம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.


கிழக்குப் புறமாக நீண்டு செல்லும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்தகடற்கரை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அழகுப்பூங்காவாக அமைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சின் அனுசரணை யுடனும், திட்டமிடல் ஏற்பாட்டுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டம் யாழ்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் துரித செயற்பாட்டுக்கு உரியதாகும்.

கடற்கரை அமைப்பதற்குத் தேவையான பல நூற்றுக்கணக்கான "லோட்' மண் கடற்கரை வீதியோரமாக பறிக்கப்பட்டு நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதுடன் இதன் கண்காணிப்பிற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் பண்ணை சுற்று வட்டத்தில் கடமையில் ஈடுபட்டு இருப்பதைக் காணலாம். இந்தத் திட்டத்திற்கான மண் யாழ். நகரப்பகுதியில் உள்ள குளம் ஒன்றை ஆழமாக்குவதன் மூலம் பெறப்பட்டதாகும்.

நவீன வசதிகளைக் கொண்டு இருக்கும் இந்த கடற்கரை வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடிய உல்லாசப் பூங்காவாக அமைக்கப்படுவதுடன் கடற்கரை மணல் பாங்கானதாகவும் அமையவுள்ளது. இந்த கடற்கரைபூங்கா, புல்லுக்குளம், சுப்பிரமணியம் பூங்கா என்பவற்றோடு இணைந்ததாக இருக்கும் என்றும் பன்முக நோக்கத்துடன் நல்ல கடற்காற்று, சுத்தமான, மகிழ்ச்சியான சுற்றாடல் என்பவற்றைக் கொண்டதாக அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி தினக்குரல்

சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு


 Monday, 26 March 2012

nch_ட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
nch_3

இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம் நிலத்தடி நீர் குறித்தே அதிகம் கவலைப்பட்டோம். ஆனால் அந்த கவலையினை முற்றாக நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வைத்தியசாலையில் பொருத்தியிருக்கின்றனர். அந்த வகையில் சிறப்பான பணியை இந்த மண்ணுக்கு ஆற்றியுள்ளனர் என்றார்.
nch_2
தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தனதுரையில், வெளிநாட்டிலிருந்து வருவோர் எங்களிடமே வடக்கு மாகாணத்தில் சர்வதேச தரத்திலான வைத்தியசாலை, ஆங்கில பாடசாலைகள் இல்லையே ஏன் என்று கேட்கின்றனர். எனவே அந்த நிலையை இன்று இந்த வைத்தியசாலை மாற்றியமைத்திருக்கின்றதென தெரிவித்தார்.
nch_4
மேலும் இந்த நிகழ்வில், யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், வைத்திய கலாநிதி ரவிராஜ், முதலீட்டுச்சபையின் யாழ். பணிப்பாளர் ஆர்.ஜெயமனோன், கைத்தொழில் வணிகமன்றத்தின் தலைவர் எஸ்.பூரணச்சந்திரன், வைத்தியகலாநிதி தெய்வேந்திரம், வட மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி மற்றும் பலரும் உரையாற்றினர்.
nch_5

இதேவேளை இந்த நிகழ்வில், வங்கி முகாமையாளர்கள், யாழ்.மாவட்டத்தின் சிரேஷ்ட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாவட்ட வர்த்தகர்கள் இராணுவ அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

nch_6


நன்றி தினக்குரல்


வரணி பிரதேசத்தில் ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்க நடவடிக்கை

Monday, 26 March 2012

வரணி பிரதேசத்தில் ஆயுள் வேத வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் நான்காண்டு வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் ஒன்று அண்மையில் மேற்படி பகுதியில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இதுவரை காலமும் தமது பிரதேசத்தில் ஆயுள்வேத வைத்தியசாலை இல்லையெனவும், இதனால் மந்திகை, சிலையடி ஆயுள் வேத மருந்தகத்திற்குச் சென்றே சிகிச்சை பெற்று வருகின்றோம் எனவும் கவலை தெரிவித்திருந்தனர்.


மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மேற்படி பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்களின் பங்களிப்புடன் நான்காண்டு வேலைத்திட்டத்தில் குறித்த வைத்தியசாலையை அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்
அமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்

Monday, 26 March 2012

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சில அமைச்சர்கள் தான்தோன்றித்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வேறு சில அமைச்சர்களோ அந்தப் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று மறுநாள் மறுதலிக்கிறார்கள். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச அமெரிக்க பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று மக்களுக்கு அழைப்புவிடுத்தார். மறுநாள் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன அமெரிக்கப் பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து விமல் வீரவன்ச அமெரிக்கப் பொருட்களை தடை செய்ய வேண்டுமென்று தான் கோரவில்லை. மக்கள் அவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக செயற்பட்டதை முன்னிட்டு இலங்கையர்களுக்கு இருக்கும் உணர்வை வெளிக்காட்டுவதற்கு எதையாவது செய்ய வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு கூறியதாக மழுப்பல் செய்தார்.

ஜாதிக ஹெல உறுமய தலைவர்களில் ஒருவரும் மின் சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கெதிராகக் கடுமையாகப் பேசிவருகிறார். ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்த செயலுக்கான விளைவுகளுக்கு இந்தியா முகம் கொடுக்க வேண்டியிருக்குமென்று எச்சரிக்கை வேறு செய்கிறார். இந்தியாவுக்கு பொருளாதார விவகாரங்களில் வாய்ப்புகளை இலங்கையில் வழங்கக்கூடாது என்று அரசாங்கத்தை ரணவக்க வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். இவரின் இந்த வலியுறுத்தல் கூட அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்று சிரேஷ்ட அமைச்சர்கள் பிறகு சமாளிப்பு வார்த்தைகளைக் கூறுகிறார்கள்.

இது இவ்வாறிருக்க பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் "கலாநிதி' மேர்வின் சில்வா ஜெனீவாவுக்குச் சென்ற இலங்கை ஊடகவியலாளர்களினதும் மனித உரிமைகள் ஆர்வலர்களினதும் கை, கால்களை முறிக்கப் போவதாக பகிரங்கமாக அச்சுறுத்தியிருக்கிறார். மேர்வின் சில்வா இவ்வாறாக பேசுவது ஒன்றும் புதுமையல்ல. ஆனால், அவர் அவ்வாறு பொறுப்பற்ற முறையில் பகிரங்கமாக பேசுவதை அரசாங்க உயர்மட்டத் தலைவர்கள் பொறுத்துக்கொண்டிருப்பது தான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக உள்ளது. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக சண்டித்தனம் செய்வதில் பெயரெடுத்தவர் மேர்வின் சில்வா. அவர் செய்கின்ற அடாவடித்தனங்களுக்காக கடவுளின் தண்டனை கிடைக்குமென்று வேறுயாருமல்ல அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன ஒருதடவை கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறோம். ஊடகங்களுக்கு எதிரான தனது அட்டகாசங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்து அரசாங்கத்திற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டதையடுத்து மேர்வின் சில்வா இனிமேல் ஊடகவியலாளர்களைத் துன்புறுத்தப் போவதில்லையென்றும் அவர்களின் சிறந்த நண்பனாக விளங்கப் போவதாகவும் பகிரங்கமாக ஒரு தடவை அறிவித்தார்.

ஆனால், ஊடகவியலாளர்களின் இந்த சிறந்த நண்பன் கடந்த வாரம் களனித் தொகுதியில் இடம்பெற்ற பகிரங்க வைபவமொன்றில் உரையாற்றுகையில், ஊடகவியலாளர் போத்தல ஜெயந்தவை நாட்டை விட்டு விரட்டியடித்ததே தான் என்று மார்தட்டிப் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. போத்தல ஜெயந்த அங்கோடைப் பகுதியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வீதியோரத்தில் கிடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். அவர் பிறகு தனது உயிருக்கு இருக்கின்ற ஆபத்தை மனதில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார் என்று தான் ஊடகவியலாளர் சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால், மேர்வின் சில்வா இப்பொழுது போத்தல ஜெயந்தவை அடித்து விரட்டியதைப் போன்று பேசுவது குறித்து அரசாங்க உயர்மட்டம் என்ன கூறப் போகிறது? நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் தாக்கப் போவதாக மேர்வின் சில்வா விடுத்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். வன்முறையில் ஈடுபடப் போவதாக எவராவது அறிவித்தால் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பீரிஸ் கூறியிருந்தார்.

இவ்வாறாக அமைச்சர்களில் சிலர் கண்ணியமற்ற முறையில் தான்தோன்றித்தனமாக பேசும் போது வேறு அமைச்சர்கள் அவற்றை அரசாங்கத்தின் கருத்தல்லவென்று மறுதலிப்பதும் அதேவேளை ஊடகங்கள் இரு தரப்பினரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வழமையான நிகழ்வுகள் போன்று தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கையிலே ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தைத் தணிப்பதற்கு இத்தகைய போக்குகள் ஒருபோதும் உதவப் போவது இல்லை. பொறுப்பற்ற அமைச்சர்கள் எதை எதையெல்லாமோ பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடாமல் கலரிக்கு விளையாட்டுக் காட்டும் கைங்கரியத்தில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் இலங்கைச் சமூகத்தைப் பற்றி வெளியுலகம் எவ்வாறு நினைக்கும் என்பதை ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நன்றி தினக்குரல்

வேண்டாம் சுயநலம்; தேவை பொது நலம்

Wednesday, 28 March 2012
சண்டை சச்சரவுகளும் குழப்பங்களும் உலகில் மலிந்து செல்வதற்கு மனிதனிடம் இயல்பாகவுள்ளதும் தவறான வழக்கமுமான சுயநலமே முக்கிய காரணம் எனவும் சுய நலத்தை விட்டொழித்து பொது நலத்தை சிந்தையிலிருத்தி செயற்பட்டால் போட்டி, பொறாமை உணர்வுகள் இல்லாத அமைதிப் பூங்காவாக உலகம் விளங்கும் என்று மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆயினும் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரத் துறை சார்ந்த அடம்ஸ்மித், தோமஸ் றொப்பெஸ், மில்சன் பிரைட்மான், ரிச்சர்ட் டாகின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் சுயநலமானது மனிதனுடன் ஒட்டிப் பிறந்த குறைபாடுடைய வழக்க முறைமையென்ற வாதத்தை உறுதியுடன் முன்வைத்திருக்கிறார்கள். விதிமுறைகள், சட்டங்கள், அரசாங்கத்தின் வரிமுறைகள், தடைகள் என்பன இல்லாவிடின் சகல வற்றுக்கும் சகல வேளைகளிலும் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம் என்று இவர்கள் கூறுகின்றனர். சுயநலவாதிகளாகவே நாங்கள் பிறந்தோம். பொருளாதாரத் தேவைகளுக்கான நடவடிக்கைகளுக்காக எம்மை ஏவி விடுவது சுயநலமே என்பது இவர்கள் கற்றுத் தந்த பாடம்.


ஆனால் இந்த அறிவியலாளர்களின் கருத்து தவறு என்பதை சமகால விஞ்ஞானம் இப்போது அதிகளவில் கூற ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. உயிரினங்கள், இன வகைகளின் வளர்ச்சி மாற்றத்துக்கும் உயர்வுக்கும் மையமாகத் திகழ்வது கூட்டுறவே என்று விஞ்ஞானம் தற்போது கூறுகிறது. உயிரியல் வளர்ச்சி, உளவியல், மானிடவியல், விளையாட்டுத் துறை என்பனவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளும் ஆதாரங்களைக் கொண்டு பரிணாம வளர்ச்சிக்கு பிரதான காரணி கூட்டுறவே என்ற வாதம் உறுதியாக முன்வைக்கப்படுகிறது. மனிதர்கள் விலங்குகளைப் போன்று வாழ்க்கையை நடத்திய முற்காலம் தொட்டு இக்காலம் வரை கூட்டுறவே முன்னிலை வகித்து வருகிறது என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறைப் பேராசிரியரான சாரா பிளாவர் என்பவர் கூறுகிறார். லெய்செய்க்கிலுள்ள மானிடவியல் பரிணாம வளர்ச்சிக்கான மாக்ஸ் பிளாங் நிறுவனத்தின் இணைப் பணிப்பாளர் மைக்கேல் ரொமாசெல்லோ என்பவர் குழந்தைகளின் பொது நலப் பண்பை ஆய்வு செய்வதில் பெருமளவு நேரத்தை செலவிட்டிருந்தவர். தாங்கள் முன்னர் அறிந்திராத ஆட்களுடன் கூட ஒத்துழைத்து செயற்படுவதற்கு குழந்தைகள் விருப்பம் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்துள்ளார். பொம்மைகள், உணவு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் தன்மை இக் குழந்தைகளிடம் காணப்பட்டது. வெளியாருக்கு கூட விடயங்களைத் தெரிவிப்பது குறித்தும் உதவியாக இருப்பதற்குமான விருப்பத்தை அவர்கள் கொண்டிருப்பது ஆய்வின் மூலம் அறியவந்திருக்கிறது.

ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அப்பாற்பட்டதாக பொது நலப் பண்பு அசாதாரணமான முறையில் மனிதர்களிடம் காணப்படுகின்றமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த (ஒத்துழைப்பு)த் தன்மையானது 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியை கட்டி எழுப்பியிருக்கும் கர்த்தா என்று ஹாவாட் பல்கலைக்கழகத்தின் உயிரியல், கணிதத் துறைப் பேராசிரியர் மார்ட்டின் ரொபாக் உறுதிபடக் கூறுகிறார். முதலாவது அமைப்பொன்றை உயர் மட்டத்துக்கு முன் கொண்டு செல்வது இந்த ஒத்துழைப்பே என்றும் அவர் கூறியுள்ளார். சகல துறைகளிலுமே தாழ்ந்த மட்டத்திலிருந்து உயர்ந்த மட்டம் வரை கூட்டுறவுடன் செயற்பட்டால் கோடி நன்மை என்பது அறியப்படாத விடயம் அல்ல. ஆனால் தான் தனது குடும்பம் , தனது இனம், தனது மதம், தனது மொழி என யாவுமே தனது என்ற சிந்தனையின் பாற்பட்ட செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்படுவதே சகல விதமான முரண்பாடுகளுக்கும் காரணமாகின்றது. இந்த ஒத்துழைப்பு என்பது காலக் கணிப்பு வழுவல்ல. நவீனமானதும் அபிலாஷைகளைக் கொண்டதும் உயிரோட்டம் உடையதுமாக இதனை நாம் பார்க்க வேண்டும். நுகர்வுக் கலாசாரத்திலும் கூட இந்தக் கூட்டுறவுப் பண்பு மையமாகத் திகழ்வது நேரடிச் சாட்சியமாக காணப்படுகிறது. விஞ்ஞானம், கலாசாரம், வர்த்தகம் என சகல துறைகளிலும் வெற்றியடைய இந்த ஒத்துழைப்பே இதயமாக விளங்குகிறது. ஒருவர் ஒன்றைக் கொடுக்கும் போது அல்லது உதவும் போது பதிலுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் எம்மிடம் ஏற்படுகின்றது அல்லவா. அதிலேயே வாழ்வின் உயிரோட்டம் தங்கியிருக்கின்றது.

நிதி நெருக்க,டி காலநிலை மாற்றம், வளங்கள் பற்றாக்குறை தொடர்பான சர்வதேச ரீதியான சவால்கள் மட்டுமன்றி அன்பு, பராமரிப்பு, நட்புறவு, மரியாதை, நம்பிக்கை போன்ற உறவுகள் சம்பந்தமான விடயங்களிலும் ஒத்துழைப்பு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. சமூகங்கள் ஒப்பீட்டளவில் நீதியானவையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதற்கு இந்தக் கூட்டுறவு மனப்பான்மையான ஒத்துழைப்பே காரணம் என்பது மிகச் சாதாரணமாக புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

வளங்கள், உரிமைகள், சலுகைகள் என்பனவற்றை தானும் தனது குடும்பமும் தனது இனமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று சிந்தித்து திட்டமிட்டு செயலாற்றுவதே முடிவில்லாத பிரச்சினைகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என்பதை சிந்தையில் இருத்தி எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பொது நலப் பண்பை வளர்ப்பது கடினமான விடயமல்ல. மனிதர்களிடம் கூட்டுறவுப் பண்பும் ஒத்துழைப்பு மனப்பான்மையும் இயல்பாகவே விருத்தியடைந்துள்ளதென்ற விஞ்ஞானிகளின் உறுதியான நிரூபிப்பு எமது சிந்தனையை புதிய திசையில் கொண்டு செல்வதற்கு நிச்சயம் உதவும்.
நன்றி தினக்குரல்


அரசியல்வாதிகளுக்கு இது உறைக்குமா ?
 
Thursday, 29 March ௨௦௧௨
நாட்டின் பொருளாதார நிலைமை அதல பாதாளத்திற்குள் சென்று கொண்டிருப்பதை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களே வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகமானது 2012 இல் சுமார் 100 கோடி டொலர் (1 பில்லியன் டொலர்) வர்த்தக நிலுவையுடனேயே ஆரம்பமாகியுள்ளது.


ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இறக்குமதி அதிகரித்தமையும் இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு வருட ஜனவரியில் ஏற்றுமதி 0.6 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதே சமயம் இறக்குமதி 20 சதவீதத்தால் 1.88 பில்லியன் டொலராக அதிகரித்திருக்கிறது. இதனால் வர்த்தக நிலுவை 965.5 மில்லியன் டொலராக உயர்வடைந்திருக்கிறது. விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும் 20 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளன. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை அதிகளவுக்கு ஈட்டித்தரும் தேயிலை ஏற்றுமதியும் 20 சதவீதத்தால் குறைவடைந்திருக்கிறது. ஆனால் ஆடை ஏற்றுமதி 1.6 சதவீதமே அதிகரித்திருக்கிறது. வர்த்தக நிலுவை இடைவெளி அதிகரித்திருப்பதை குறைப்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. துரிதமாக மதிப்பிறங்கி வரும் நாணயத்தின் பெறுமதியை ஸ்திரப்படுத்துவதற்கு நிதிப்பாய்ச்சலை ஏற்படுத்த மத்திய வங்கி தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நாணய பெறுமதி குறைவடைவானது ஏற்றுமதியையும் மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியில் 14 சதவீதத்தால் நாணயம் மதிப்பிறக்கம் செய்யப்பட்டிருந்தது. வர்த்தக நிலுவையில் துண்டு விழும் தொகை அதிகரிப்புடன் பொருட்களில் விலைகள், சேவைகளுக்கான கட்டணங்கள் அன்றாடம் அதிகரித்து வரும் நிலையின் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் மட்டுமன்றி மத்திய தர வர்க்கத்தினரும் மோசமான தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் சாதாரண மக்களின் விருப்பங்கள், ஆர்வங்களைப் பயன்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடும் கைங்கரியங்களையே ஆளும் தரப்பு முடுக்கி விடுவதாக தென்படுகின்றது. இந்த நோக்கத்துடன் மானியக் கலாசாரத்தை இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஜப்பானின் உயர் மட்ட பொருளியலாளரான ஷின்ஜி அசனுமா எச்சரித்திருக்கின்ற விடயத்தை நாட்டின் நிதி முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மனதில் கொள்வது சிறப்பானதாக அமையும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற போது இலங்கையும் மலேசியாவும் ஒரே விதமான தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் இப்போது மலேசியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் மாறான தன்மையை கொண்டிருப்பதாக ஜப்பானின் நிட்டோ சுபாசி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொதுக் கொள்கைக்கான கல்லூரியின் பேராசிரியரான ஷின்ஜி அசனுமா சுட்டிக்காட்டியிருக்கும் விடயம் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமானதாகத் தென்படுகிறது.

பரும்படி நுண்பக பொருளாதாரக் கொள்கைக்கு இடையிலான நிதிக் கொள்கையானது மிக மிக முக்கியமான விடயமாகும். ஆனால் இலங்கை தொடர்ச்சியாக மானியக் கலாசாரத்திலே தங்கியிருப்பதானது கவலை அளிக்கும் விடயமாகும். சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் (அரசியல் தலைவர்கள்) நீண்ட காலத்தை தொலை நோக்காகக் கொண்ட தந்திரோபாயத்தை கொண்டிருக்கின்றனரா? ஆனால் குறுங்காலத்தில் மக்கள் செல்வாக்கை திரட்டிக் கொள்வதில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது அந்த ஜப்பானிய பொருளியல் நிபுணர் தொடுத்திருந்த கேள்வியாகும்.

அதேவேளை அந்தப் பேராசிரியர் முக்கியமான உண்மை ஒன்றையும் சுட்டிக்காட்டியிருக்கத் தவறவில்லை. மலேசியாவில் பல்வேறு இனக் குழுமங்கள் உள்ளன. அவை யாவும் ஒன்றுபட்டு பங்காளிகளாகச் செயற்படுவதால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி தந்திரோபாயத்திற்கு அது பேருதவியாக உள்ளது. ஆனால் இலங்கை அதற்கான வாய்ப்புகள் பலவற்றை தவறவிட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையின் தலைவர்கள் மலேசியா நடைமுறைப்படுத்தும் கொடுத்து எடுக்கும் தன்மையை ஒத்த செயற்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பதிலாக பெரும்பான்மை ஜனநாயகம் என்ற தன்மையுடனேயே இலங்கை அசியல்வாதிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பான்மை ஜனநாயகத்தில் நீங்கள் ஈடுபட்டு இருப்பீர்களேயானால் அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக (குறுங்காலத்தில்) உருவாகுவீர்கள். இந்த குறுங்கால மக்கள் செல்வாக்குப் பொறிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டால் சாதாரண மக்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு (பிரயோசனமற்ற) முன்னுரிமை கொடுத்து செல்வாக்கை நிலை நிறுத்த விரும்பும் அரசியல்வாதிகள் ஒன்றுபடுவதோ கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதோ கடினம். இது இறுதியில் தமது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும் என்று ஷின்ஜி அசனுமா நியாயபூர்வமான கருத்தை முன்வைத்திருக்கிறார்? அதிகாரத்திலுள்ள அரசியல் வாதிகள் இதனை சிந்தையில் இருத்துவார்களா?
நன்றி தினக்குரல்


1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி


28/3/2012

இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம்.

இவ்வாறு களனிப் பல்கலைக்கழக தத்துவவியல் சிரேஷ்ட பேராசிரியர் தயா எதிரிசிங்க முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கொழும்பில் நடத்திய சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க செயலமர்வில் பேசுகையில் குறிப்பிட்டார்.

மேற்படி செயலமர்வு முன்னிணியின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லைலா உடையார் நெறிப்படுத்தலில் இரு தினங்கள் நடைபெற்றது.

செயலமர்வில் பௌத்தம் சார்பாக பேராசிரியர் தயா எதிரிசிங்க இந்து சமயம் சார்பாக வே.உமையாள், இஸ்லாம் சார்பாக ரவுஸ்ஸின், கத்தோலிக்க சமயம் சார்பாக கனிஸ்ரா ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு பேராசிரியர் தயா எதிரிசிங்க பேசுகையில், இலங்கையில் 30 வருட கால போர் நிகழ்ந்து அமைதியை சமாதானத்தை இழந்து நிற்கிறது. அப்போர் சடுதியாக இடம்பெறவில்லை. போர் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூற முடியும். ஆனால் போரால் முழு இலங்கையும் முழு சமூகமும் பாதிக்கப்பட்டதென்பது உண்மை.

அது கடந்தது கடந்து விட்டது. இன்று நாம் அதற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றி ஆராய வேண்டும் . போருக்கான ஒரு காரணம் மொழி உரிமை மறுக்கப்பட்டதாகும். எனவே மொழி பற்றிய முரண்பாட்டிற்குத் தீர்வு காண வேண்டும்.
தனிச் சிங்களச் சட்டம்

ஆங்கிலேய மொழி அவர்களது ஆதிக்கத்திலிருந்து சுதேசத்தை மீட்டெடுக்க எண்ணி 1956 இல் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் நாட்டிற்கு பாரிய பாதிப்பை உண்டு பண்ணியதை மறக்க முடியாது.

இச் சட்டம் சிறுபான்மைத் தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி என்பதற்கப்பால் நாடு ஆங்கிலத்தை இழந்தது. சகலரும் சிங்கள மொழியைப் பயிலக் கட்டாயப்படுத்தப்பட்ட காரணத்தினால் உயர் கல்வி பெறக் காரணமான ஆங்கிலக் கல்வி மெது மெதுவாக நாட்டை விட்டு ஒதுங்கிக் கொண்டது.

1963 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆங்கில மொழி மூல பாடநெறி இருந்தது. அதன் பிறகு சகல நெறிகளும் சிங்கள தமிழ் மொழி மூலங்களிலேயே இருந்தன. அதனால் அதன் பிறகு உயர் கல்வியை ஆங்கிலத்தில் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவியது. இது துன்பமான நிகழ்வு. இது பாரிய இழப்பை ஏற்படுத்தியது.

எமது நாட்டுக்கு அருகிலுள்ள இந்தியாவில் பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றன. ஆனால் அமெரிக்காவைப் போல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் நிற்கின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் அங்கு அவர்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றமை.

அமெரிக்காவுக்கே தொழில் நுட்ப வல்லுனர்கள் ஏற்றுமதி செய்கின்ற வல்லமை இந்தியாவுக்குரியது. அந்தளவுக்கு அவர்கள் ஆங்கில மொழியில் தொழில் நுட்பத்தை வளர்த்திருக்கின்றனர்.

இந்தியா எம்மை விட வறுமையானது தான். வறுமை என்பது அங்கு சனத்தொகை கூடியதனால் மட்டும் தவிர அறிவியல் வறுமை அல்ல. ஆனால் எம்மைப் பொறுத்த மட்டில் சனத்தொகையும் இல்லை. அறிவியலும் இல்லை. அதற்குக் காரணம் 1956 ஆம் ஆண்டு சட்டமே.
யாழ் ஆங்கில நிலை

அன்று யாழ்ப்பாணத்தில் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றோர் ஏராளம். தமிழ் மக்கள் பொதுவாக ஆங்கிலத்தில் வல்லமை உடையவர்கள். மிஷனரிப் பாடசாலைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டமையால் ஆங்கில அறிவுக்கு அங்கு பஞ்சமிருக்கவில்லை.

ஆனால் இன்று யாழ். நிலைமை ஆங்கிலத்தில் கவலைக்குரியது. யுத்தம் காரணமாக இளம் சந்ததி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டது. அங்கு சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஆங்கிலம் தெரியுமளவிற்கு இளம் சந்ததிக்குத் தெரியவில்லை. இன்று அனைவரும் ஆங்கில மொழிக் கல்வியை ஆர்வத்துடன் மீண்டும் கற்க ஆரம்பித்துள்ளனர். நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆங்கில மொழி மூலம் பாடசாலைகள் இயங்குகின்றன.

பலர் கொழும்புக்கு கடன் பட்டு வந்து பிள்ளைகளை ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்க வைப்பதைக் காண முடிகிறது. ஆஙகில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மும்மொழிக் கல்வியை போதனையை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பல பாடசாலைகளில் இருமொழிப் போதனை நடைபெற்று வருகின்றது. அந்தளவிற்கு இப்போது ஆங்கிலத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
பௌத்தம்

நேபாளத்தில் பிறந்த கௌதம புத்தர் 35 வயதில் பரி நிர்வாணமடைந்தார். அவரது போதனைகள் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வியாபித்து நிற்கிறது. தேரவாதம்,மகாயாணம் என இருபிரிவுகள் உண்டு.

பிந்திய மகாயாண வாதம் இந்து மதத்தோடு தொடர்புடையது. திரிபீடகத்தை வலகம்பாகு மன்னன் பாணியில் மொழி பெயர்க்க வழி சமைத்தான்.

பிறப்பால் அனைவரும் சமமான மனிதர்களே. அங்கு சாதி முறைமை இல்லை. 2500 ஆம் ஆண்டுகளின் முன்பே பெண் உரிமைகள் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது. பெண் இல்லாமல் சமூகம் வாழாது. எனவே உரியவர்களுக்கு அதை வழங்க வேண்டும் என்றார்.
நன்றி வீரகேசரி

மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்


1/4/2012

தமிழ்நாட்டின் தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதிநெருக்கடி காரணமாக ரத்துச்செய்யப்பட்டிருந்த இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகச் சிறிய ரக கப்பல்கள் இயக்கப்படும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா இன்று தமிழ்நாடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
நன்றி வீரகேசரி


No comments: