இளமை --கவிதை



முட்களை பொருட்படுத்தாமல்
பூக்கள் மீது அதிக கவனம் செலுத்தும்
ஒரு தீபம் ஏற்றும் போதே
நூறு தீபம் ஏற்றும் தொலை நோக்கு
பார்வை இருக்கும் !


முடிந்த பால்யத்தை நினைத்து கவலையில்லை
வரும் முதுமைப் பற்றி கனவுகளில்லை !
நடக்கும் வாழ்வை இனிமையாக
நடத்த நினைப்பது இளமை !!



வாய் சொல்லின் வீரர்கள் மத்தியில்
செயல் வீரனாய் செய்ய தூண்டுவது இளமை !
முதியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது
நாட்டுக்காக யுத்த களத்தில் செல்லுவது இளமை !
சனி தோஷம், செவ்வாய் தோஷம்
தூக்கி குப்பை தொட்டியில் போட வைக்கும் இளமை !
அல்லாவையும், ராமனையும் அழைத்து
அயோத்தியில் அமைதி நிலவ துடிப்பது இளமை !


உழைப்பை உதவியாகவும்
முயற்சியை நண்பனாகவும்
தன்னம்பிக்கையை ஊன்றுக் கோளாகவும்
வாழ்க்கை பாடத்தை சொல்லுவது இளமை !!


இயற்கையின் முக்கியத்துவத்தை
உணர்ந்தது இளமை !
ஒவ்வொரு மரங்கள் வெட்டப்படும் போது
வாதாட துடிப்பது இளமை !


உயிர் காப்பான் தோழன்
முயற்சி திருவிணையாக்கும்
இன்னும் பல பழமொழிகளுக்கு
உயிர் கொடுத்துக் கொண்டு இருப்பது இளமை !!


இளமை –
கன்னியரின் காதலை எழுதும்
கண்ணகியின் காவியத்தையும் எழுதும்
காமத்தை கொண்டாடும்
கர்மமென காரியத்தை செய்து முடிக்கும் 


இளமை –
எட்டு திசை பார்த்த பின்பு
ஒன்பதாம் திசையை தட்டி எழுப்பும்
360 டிகிரி வட்டத்தில்
361வது டிகிரியை உருவாக்கும் !


இளமை –
இமயத்தின் உச்சியை
தொட்டு விட துடிக்கும்
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும்
பாலம் கட்ட திட்டம் போடும் !


இளமை –
சோகங்களை சங்கீதமாக மாற்றும்
தோல்விகளை படிப்பினையாக்கும்
மூட நம்பிக்கையை தூக்கிப் போடும்
உழைப்பை உறுதுணையாக நம்பும் !


இளமை –
விரக்தியை விருந்தாளியாய் ஏற்றுக் கொள்ளாது
வறுமையை கண்டு வருத்தம் கொள்ளாது
கண்ணீரை நண்பனாய் கூட அருகில் சேர்க்காது
சோம்பலை தீண்ட சம்மதிக்காது !


பறவை இனத்தில்
பறப்பதில் கோழி விதிவிளக்கு
மீன் இனத்தில் 
நீந்துவதில் டால்பின் விதிவிளக்கு
விதி இருக்கும் இடத்தில்
விதிவிளக்கை மாற்றுவது இளமை !


பீடல் காஸ்ட்ரோவில் இளமை கனவு
க்யூபாவின் புரட்சி விடுதலை !
காந்தியின் இளமை கனவு
இந்தியாவின் அகிம்சை விடுதலை !
நெல்சன் மண்டேலாவின் இளமை கனவு
கறுப்பு இனத்திற்கான விடுதலை !
பெரியாரின் இளமை கனவு
மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை !


புயலின் நடுவில் மீனவனின் புன்னகை
விஷ பாம்புகளின் நடுவில் இருளர்களின் புன்னகை
வெடிகுண்டு நிலத்தில் இராணுவ வீரனின் புன்னகை
மிருகங்கள் நடமாடும் காட்டில் ஆதிவாசி புன்னகை
எல்லாம் சாத்தியமாகிறது
இளமை வாழ்க்கையோடு பயணம் செய்வதால் !


இளைஞர்கள் ஆதரவில்லாமல்
யாரும் கோட்டை பிடித்ததில்லை !
இளைஞர்கள் உழைப்பில்லாமல்
போராட்டங்கள் முன்னேற்றம் அடைவதில்லை !
இளைய சமூதாயத்தை நினைக்காத
திட்டம் வெற்றி பெறுவதில்லை !
இளைஞர்களின் கருத்து இல்லாமல்
எந்த பொருளும் சந்தைக்கு வருவதில்லை !


இளைஞனின் பேனா முனை விழும் போது
ஒவ்வொருவரின் முதுகெலும்பு தட்டி எழுப்பும்
இளைஞன் தோல்வி அடையும் போது
சரித்திரத்தில் அவனுக்கான
பக்கத்தை முன்பதிவு செய்து கொள்ளும் !!


நாம் வாழும் போதே 
அனுபவிக்கு அதிசயம் இளமை !!


***
guhankatturai.blogspot

No comments: