இரவிச்சந்திராவுக்கு ஓடர் ஒவ் அவுஸ்திரேலியாவிருது


.
பிரபல மிருதங்க வித்துவான் இரவிச்சந்திராவுக்கு
ஓடர் ஒவ் அவுஸ்திரேலியா (OAM விருது.    பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


மெல்பேணில் கடந்த 29 வருடங்களாக வாழ்ந்துவரும் மிருதங்க வித்துவான்  மதியாபரணம் இரவிச்சந்திராவுக்கு அவுஸ்திரேலிய அரசின் சமூகசேவையாளர்களுக்கான உயர்ந்த பாராட்டுக்களில் ஒன்றான “ஓடர் ஒவ் அவுஸ்திரேலியா” என்ற விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் “பத்மவிபூசன்”; விருதுக்குச் சமமானதாக இதனைக் கொள்ளலாம். உத்தியோக ரீதியாக விக்றோட்ஸ் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரியான இரவிச்சந்திரா மிருதங்க ஆசிரியராக அவுஸ்திரேலியாவில் இதுவரை தனது 38 மாணவர்களுக்கு அரங்கேற்றம் கண்டவர். அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிருதங்கக் கலையினைப் பயின்றுவருகின்றார்கள்.



யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக் கல்லூரியினால் சங்கீதரத்னம் பட்டம் வழங்கப்பட்ட இரவிச்சந்திரா இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட பல்லிசைவாத்திய போட்டியில் தங்கப்பதக்கத்தை முதன்முதலில் பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவர்.

1975 இல் இலங்கையிலிருந்து இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த இரவிச்சந்திரா, அங்கே மாபெரும் இசைக்கலைஞர்களும், வாத்தியக்கலைஞர்களுமான கலாநிதி சீர்காழி கோவிந்தராஜன், பேராசிரியர் ரி.என்.கிருஸ்ணன், கலாநிதி எஸ் இராமநாதன், வைணிகர் விஸ்வேஸ்வரன், திருச்சூர் ராமச்சந்திரன், புல்லாங்குழல் மேதை மாலி முதலியவர்களுடன் இசைக்கச்சேரிகளில் மிருதங்க இசை வழங்கிப் பாராட்டுப் பெற்றவர்.
கச்சேரியில் தமது மிருதங்கவாசிப்புத்திறமைக்காக சென்னை மியூசிக் அகடமியின் பரிசினை 1989 இல் பெற்றவரான இரவிச்சந்திரா அகில இந்திய வானொலியின் முதல்தர மிருதங்கக் கலைஞர் (A Grade Artisteஎன்ற அந்தஸ்தைப் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1983 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் கர்நாடக இசைத்துறையின் இன்றியமையாத கலைஞராக விளங்கிவரும் அவர் அவுஸ்திரேலிய இந்தியன் மியூசிக் அகடமியினை ஆரம்பித்து அதன் இயக்குனராக உள்ளார்.
புகழ்பூத்த இந்திய இசைக்கலைஞர்களான லால்குடி ஜெயராமன், ரமணி, ஸ்ரீனிவாஸ், காயத்திரி ஆகியோர்களுடன் சேர்ந்து அவுஸ்திரேலியாவில் கர்நாடக வாத்திய இசை இறுவெட்டினை முதன்முதலில் 1996 இல் வெளியிட்ட அவர் கர்நாடக இசைத்துறைக்குச் செய்துவரும் சேவை அளப்பரியதாகும்.
கர்நாடக இசையின் சிறப்பை மேலைத்தேய இசையுலகும் அறிந்துகொள்ளும் வகையில் இரவிச்சந்திரா ஆற்றுகின்ற பணி போற்றுதற்குரியதாகும். அந்த வகையில் மொனாஸ் பல்கலைக்கழகம், விக்டோரிய கலைக் கல்லூரி என்பவற்றில் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கு கொன்னக்கோல், மிருதங்கம் பற்றிய விரிவுரைகளை ஆற்றியும், இசைப்பட்டறைகளை நடாத்தியும் வருகின்றார்.
இரவிச்சந்திராவின் இந்தியன் மியூசிக் அகடமி கடந்த இருபத்தி மூன்று வருடங்களாக மெல்பேணில் தியாகராஜ இசைவிழாவை ஆண்டு தோறும் நடாத்தி வருகின்றது. அத்துடன் அவரது குருவான காரைக்குடி மணி அவர்களின் சுருதி லய கேந்திராவுடன் இணைந்து இசை மேதைகளான, லால்குடி ஜெயராமன், ரமணி, ராஜம், கல்யாணராமன், சுதா ரகுநாதன், ஸ்ரீனிவாஸ், ~சாகிர் ஹசைன், விவ மொகன் பட் ஆகியோரின் பங்களிப்புடன் இசை நிகழ்ச்சிப் பயணங்களை ஒழுங்கு செய்து வருகின்றது.
இரவிச்சந்திராவின் மனைவி திருமதி நர்மதா இரவிச்சந்திரா பட்டம் பெற்ற ஓர் இசை நடனக் கலைஞராவார். இசை, நடனம் மற்றும் வயலின் என்பவற்றை மாணவர்களுக்கக் கற்பித்து வருகின்றார். அவரின் உதவியும், ஒத்தாசையும் இரவிச்சந்திராவின் இசைப்பயணத்தில் மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளமையை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
தேசிய இனவேற்றுமைகளுக்கு ஆட்படாத வகையில், தனது இசைத்திறமை எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற கொள்கையுடன், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகக்; கர்நாடக இசைத்துறைக்குக் காத்திரமான பணியினை ஆற்றிவரும் ஓர் இசைமேதைக்கு அவுஸ்திரேலிய அரசின் உயர்விருதொன்று கிடைத்திருப்பதனைப் புலம்பெயர்ந்த நாடொன்றில் கீழைத்தேய இசையுலகுக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் என்றே கொள்ளலாம். மதியாபரணம் ரவிச்சந்திரா அவர்களின் இசைப்பயணம் தொடரட்டும். இன்னும் பல உச்சங்களை அவர் தொடட்டும். ஈழத்தமிழ் இனம் பெருமையடையட்டும்.

- அவுஸ்திரேலியாவிலிரந்து பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

 ரவிச்சந்திரா அவர்களின் இசைப்பயணம் தொடர tamilmurasuaustraliya  வாழ்த்துகிறது 


No comments: