இலங்கைச் செய்திகள்

பயணிகளை வீடு தேடிச் சென்று ஏற்றுவதால் கொழும்புக்கு தாமதமாகச் செல்லும் பஸ்கள்

காணிக் கொள்வனவில் அதிகரித்துவரும் மோசடிகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 123 ரூபாவாக குறைந்தது




இலங்கைக்கு உதவ ஈரான் உறுதி: றிசாத்



கொள்ளுப்பிட்டி தமிழ்ப் பெண் கொலை: சந்தேக நபர் கைது


50 இலட்சம் ரூபா சீதனம் பெற்ற பின் பெண்ணை ஏமாற்றிய வைத்தியர்


காலம் கனிந்து வரும் நிலையில் தமிழ்த் தலைமைகள் முரண்பட்டால் தமிழ் மக்களுக்கு அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்





பயணிகளை வீடு தேடிச் சென்று ஏற்றுவதால் கொழும்புக்கு தாமதமாகச் செல்லும் பஸ்கள்
Tuesday, 28 February 2012

jaffna_busயாழ்ப்பாணம் பண்ணை பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களில் பல தாமதமாகப் புறப்பட்டு பயணிகளை அவர்களின் இருப்பிடங்களை தேடி ஏற்றிவருவதால் இந்த பஸ்கள் கொழும்பை வந்தடைவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இந்த பஸ்கள் புறப்பட்டு குருநகர், நல்லூர், அரியாலை, கொழும்புத் துறை, பாஷையூர் போன்ற இடங்களுக்கு சென்று பயணிகளை ஏற்றுக்கின்றன. இவ் விடங்களில் இருந்து யாழ். பஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வருவதற்கு 250 ரூபா, 300 ரூபாவை பயணிகள் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் பயணப் பொதிகளையும் கொண்டு வரவேண்டியுள்ளதால் ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இப் பயணிகளின் வீடுகளுக்கு அருகில் இந்த பஸ்கள் சென்று ஏற்றிவருவதால் கொழும்பை காலை 8 மணியளவிலேயே சென்றடைகின்றன.

இதேநேரம் யாழ். பஸ் நிலையத்திலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இ.போ.ச. பஸ்கள் நேரத்துடன் மறுநாள் காலை கொழும்பை சென்றடைகின்றன.

நன்றி தினக்குரல்

காணிக் கொள்வனவில் அதிகரித்துவரும் மோசடிகள்
Sunday, 26 February 2012

காணி, சொத்து கொள்வனவு, விற்பனை நடவடிக்கைகளில் ஞமாற்று வேலைகள், மோசடிகள் அதிகரித்து வருவதுடன் இந்தக் குழறுபடிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகளவுக்எ குவிந்து கொண்டிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.


அதேசமயம் பாதிக்கப்பட்ட சிலர் குற்ற விசாரணைத் திணைக்களத்திடமும் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மோசடிகளால் வங்கிகளுக்கும் பெரும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. காணிக் கொள்வனவுக்காக கடன் வழங்கிவிட்டு அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில் வங்கிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலைமை தோன்றியிருக்கிறது. நகரப் பகுதிகளிலேயே இந்த மோசடிகள் அதிகரித்துக் காணப்படுவதாக பலர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

காணி மோசடி தொடர்பாக மூன்று மாத காலப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை காணி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விசேட பிரிவு பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில மோசடிகளில் சம்பந்தப்பட்ட நான்கு பிரதான குழுக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த விசாரணைகளில் ஈடுபட்டிருக்கும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தொடர்மாடிக் கட்டிடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் அவரின் இரு நண்பர்களும் ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவை முதலீடு செய்ததாகவும் ஆனால், இந்தப் பரிவர்த்தனை முடிந்த பின்னரே அந்தக் காணியை விற்றவர் உண்மையான உரிமையாளர் அல்ல என்பதும் அந்த நிலம் அவரின் தந்தையுடையது என்பதும் அறியவந்ததாகவும் போலி உறுதி மூலம் அவர் விற்பனை செய்தமை அறிய வந்ததாகவும் ஆனால், இந்த ஆவணங்களுக்கு அரச வங்கியொன்று கடன் வழங்கியமையே ஆச்சரியமான விடயம் என்றும் அந்த வர்த்தகர் கூறியிருப்பதுடன் வங்கி கடன் கொடுத்ததால் இந்த ஆவணங்கள் உண்மையானவையென்ற நம்பிக்கை ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இப்போது பணத்தை மீளப்பெற சட்ட ரீதியான போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று அறியவருகிறது. இத்தகைய மோசடியில் ஈடுபடுவோரில் நில உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையிலும் முதலாவதாக மோசடி செய்கின்றனர். பின்னர் பிறப்பு சான்றிதழில் மோசடி செய்கின்றனர். பின்னர் நொத்தாரிசின் உதவியுடன் காணி உறுதியில் மோசடி செய்யப்பட்டு போலி உறுதிகள் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் மோசடி தடுப்புப் பிரிவின் தலைமை இன்ஸ்பெக்டர் எச்.எல்.விமலசேன ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தமை விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த மோசடிகளில் பாதாள உலகக் குழுக்களும் சம்பந்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் வசிப்போரின் சொத்துகளே அடிக்கடி இந்த மாதிரியான முறைகேடுகளுக்கு இலக்கு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடு, காணி மோசடிகள் மேற்கு மாகாணத்திலேயே குறிப்பாக தலைநகர் கொழும்பிலேயே அதிகளவு இடம்பெறுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டோர் நாட்டில் நடைமுறையிலுள்ள பழைய சட்டத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்ற அபிப்பிராயம் இந்த மோசடி வழக்குகளைக் கையாளும் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. 1907 ஆம் ஆண்டு நொத்தாரிசு கட்டளைச் சட்டம் அதிகளவுக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக இந்த விடயம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். அதேசமயம் 1988 ஆம் ஆண்டு சட்ட விதி 21 இன் கீழ் இலத்திரனியல் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் 2006 ஆம் ஆண்டு இலத்திரனியல் ஆவணச் சட்டமும் பயன்படுத்தப்படுகிறது. புதிய முறைமையின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட உறுதியும் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும். இந்த முறைமையின் பிரகாரம் மோசடியாக உறுதி பதிவு செய்யப்பட்டு அதன் பின் செல்லுபடியான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

இதேவேளை காணிக் கொள்வனவு, நடவடிக்கையில் ஈடுபடுவோர் முன் எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. காணி ஒன்றைக் கொள்வனவு செய்யும் போது அதன் உண்மையான உரிமையாளர் எவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சேவை அதிகாரி மற்றும் அயலவர்களுடன் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் சந்தை விலையிலும் பார்க்க குறைவாக விற்பனை செய்ய முன்வருவோர் விடயத்திலும் முன்ஜாக்கிரதையுடன் நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய மோசடிப் பேர் வழிகள் காணிகளைத் துரிதமாக விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

எவரை ஏமாற்றியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற இந்த தார்மீகப் பிறழ்வுச் சிந்தனை ஏன் ஏற்படுகின்றது? பிறர் பொருளைத் தீண்டுவது பெரும்பாவம் என்ற சிந்தனை ஏன் சமூகத்தில் அருகிவருகின்றது? நேரிய வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். குறுக்கு வழியை நாடக்கூடாது என்ற நல்வழி அறிவுரைகள் இன்று எள்ளிநகையாடப்படுமளவுக்கு சமூகம் வழிநடத்தப்படுகின்றதா? காணி மோசடிகள் போன்ற அடாத்தான நடவடிக்கைகளால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சட்டத்தின் துவாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய தில்லுமுல்லுகளில் ஈடுபடுவோரைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான சட்ட விதிகளை அமுல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் தமது மனச்சாட்சிக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்களாக இருக்கிறார்கள்.

நன்றி தினக்குரல்


இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு


29/ 2/2012

இலங்கையில் இடம்பெற்ற போர்க் காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.

பிரசெல்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகாரப் பேரவையின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் இலங்கை குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன் வைக்கவுள்ள அமெரிக்கா அந்த தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது.

இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ் நிலைச் செயலாளராகப் பணியாற்றி வரும் மரியா ஒரேரோ நாளை ஜெனிவா கூட்டத் தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்தத் தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவித்து எச்சரிப்பதற்காக றொபேட் ஓ பிளேக்குடன் கொழும்புக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி  வீரகேசரி


டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 123 ரூபாவாக குறைந்தது


29/2/2012

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமை அதி குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டு ரூபா 123.20 சதமாக மாறியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவதைத் தடுக்கும் நோக்கில் ஓர் அரசாங்க வங்கி டொலர்களை விற்பனை செய்தது. இந்த நடவடிக்கை இலங்கை நாணயத்தின் பெறுமதியைப் பேணுவதற்காக இனிமேல் தலையிடுவதில்லை என்ற மத்திய வங்கியின் தீர்மானத்தை மீறுவதாகவுள்ளது.

ஓர் அரசாங்க வங்கி டொலரை 123 ரூபாவுக்கு விற்ற பின்னர் படிப்படியான 121 ரூபா என்ற மட்டத்துக்கு கொண்டு வந்தது என பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அந்நிய செலாவணி வர்த்தகர் கூறினார்.

ஒரு டொலரின் விலையை 121 ரூபாவில் பேணுவதற்கு தார்மிக ரீதியான தூண்டுதலை நாணய மாற்றுநர்கள் அளிக்க வேண்டும் என மத்திய வங்கி கூறியுள்ளதாக சில நாணய மாற்றுநர்கள் தெரிவித்தனர்.

சொற்ப அளவான டொலர்களே இவ்வளவு குறைந்த ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் கூறினார். இலங்கை நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தார்மிக ஊக்குதலை மத்திய வங்கி பயன்படுத்துமா எனக் கேட்ட போது ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அதையும் நாம் பயன்படுத்தக் கூடும் எனக் கூறினார்.
நன்றி வீரகேசரி


இலங்கைக்கு உதவ ஈரான் உறுதி: றிசாத்


28/2/2012

இலங்கைக்கு எதிராக மேற்கத்திய வல்லரசுகள் சில முன்னெடுக்கும் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய ஈரான் எல்லா சந்தரப்பங்களிலும் இலங்கைக்கு உதவுமென ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி இலங்கை அமைச்சர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஜக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தினையடுத்து,அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ரவூப் ஹக்கீம்,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா ஆகியோர் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கையும்-ஈரனும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும்,பல் துறைகளில் இரு நாடுகளும் மிகவும் நெரக்கமான செயற்பாடுகளை கொண்டதாக இருப்பதால்,அண்மைய இலங்கை நாட்டின் முன்னேற்றம் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக காண்ப்படுவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹி,இக்குழுவினரிடம் எடுத்துரைத்துள்ளார்.

அதே வேளை இலங்கை அரசாங்கத்தின் தற்போதை முன்னேற்றம் பற்றியும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் உச்ச நிலையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து அமைச்சர்கள் மேலும் விளக்கமளித்தாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.ஈரான் தமது ஆதரவையும்,தம்மோடு நெருக்கமாக செயற்படும்,ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளிடமும்,இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயற்படுவதற்கான தெளிவான விளக்கங்களையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் சலாஹி பிரதி நிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

அதே வேளை சவுதி ஆரேபிய அமைச்சரை இலங்கை அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் நியாயங்களை எடுத்துரைத்ததுடன்,பேரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகள் இலங்கையின் பக்கம் ஆதரைவை வழங்க வேண்டிய காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஜெனீவா பேரைவைக் கூட்டத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுரபொங் டொவிசக்சைகுள் தமது ஆதரவு முழுமையாக இலங்கைக்கு வழங்கப்படும் என்ற உறுதியினை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வழங்கினார்.தாய்லாந்து பிரதமர் வின்லக் சினவத்ராவின் விசேட பணிப்புரையானது இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குவதாகும்.

அதே வேளை கற்றறிந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறியதை அவர் அங்கு நினைவுபடுத்தியதாக ஜெனீவாவிலிருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்
நன்றி வீரகேசரி


கொள்ளுப்பிட்டி தமிழ்ப் பெண் கொலை: சந்தேக நபர் கைது


1/3/2012

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

சுதர்ஷனி சகிலா கனகசபை (48) என்ற இப்பெண் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இவர் ஏற்கனவே அங்கு திருமணமானவர் என்பதுடன் 2 குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் இங்கு வேறொரு நபரை மறுமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் அறையொன்றில் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த அறையானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் காணப்பட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அறையைத் திறந்து பார்த்த போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தமையைக் கண்டுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே சடலம் கிடந்துள்ளது.

உடனே அவ் ஊழியர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.

பெண்ணின் நகைகள் மற்றும் பணம் ஆகியன அறையில் பத்திரமாக இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காக இக்கொலை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி வீரகேசரி


50 இலட்சம் ரூபா சீதனம் பெற்ற பின் பெண்ணை ஏமாற்றிய வைத்தியர்
Thursday, 01 March 2012

வைத்தியரொருவர் 50 இலட்சம் ரூபா சீதனத்தை வாங்கிக் கொண்டு மணப் பெண்ணை ஏமாற்றிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வைத்தியர் தற்பொழுது சிலாபத்தில் பணிபுரிந்து வருகிறார்.


இவர் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இதன் போது பெண்ணிடமிருந்து 50 இலட்சம் ரூபா சீதனத்தையும், காணியையும் வாங்கிவிட்டு பெண்ணை மணமுடிக்க முடியாதென மறுத்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த அந்தப் பெண் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் வைத்தியரிடம் விசாரித்த போது பெண்ணின் உடை, நடை, பாவனைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தினக்குரல்



காலம் கனிந்து வரும் நிலையில் தமிழ்த் தலைமைகள் முரண்பட்டால் தமிழ் மக்களுக்கு அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்


01 March 2012  அக்கரையூரான்



நீண்ட காலப் போராட்ட வாழ்வில் முரண்பாடுகளுக்குள் இணக்கத்தை உருவாக்க வேண்டியது பலவீனப்பட்டுப் போயிருக்கும் எமது தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரை மிகவும் தேவையானது. இணக்கத்திற்கான முன் முயற்சிகள் முன் நகர்த்தப்பட வேண்டியதும் காலத்தின் இன்றைய தேவையாகும். இதற்கான ஒரு பூர்வாங்க முன்னோடி நடவடிக்கையாக தமிழ் சிவில் சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட கூட்டமொன்று கடந்த பதினெட்டாம் திகதி சனி அன்று வவுனியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. பல் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனும் தமிழ் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களும் அதன் தலைமைப் பிரதிநிதியுமான மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் கிட்டத் தட்ட பல மணித்தியாலங்களுக்கும் மேலாக இப் பேச்சுவார்த்தைகள் கருத்துப் பரிமாற்றங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதாகவும் அந்த விலகல் நிலைமையானது இலங்கை அரசின் கைப் பொம்மைகளாகவும் இந்திய அரசின் ஆலோசனையை அதிகம் கேட்பதாகவும் அதனூடாக எமது இனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இழைத்து விடுவார்கள் என்ற எண்ணக் கருவை அடியொற்றி பல்வேறு கோணங்களிலிருந்து பல்வேறுபட்டவர்களினால் ஆழமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தமிழ் பேசும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு, தன்னாட்சி அதிகாரம் போன்றன முக்கிய உள்ளடக்கமாக விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களிலிருந்து தம்மைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு களமாகவும் இந்த அமர்வு இனங்காணப்பட்டது. இந்த விமர்சனக் கருத்தரங்கில் மன்னார் ஆயரின் நிதானமான போக்கும் பார்வையும் மிகவும் நேர்த்தியானது.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் அவதானிப்பாளர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்து கொண்டதோடு மிகவும் சாதூரியமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதுடன் அந்தக் கருத்துப் பரிமாற்றங்களை நிறைந்த பயனையும் தந்தது. ஆனாலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன் கூட்டி÷ ய அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் விட்டிருந்தமை பல்வேறு விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாகியது.

தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் சந்திப்பில் பரந்துப்பட்ட அளவில் பொதுவான விடயங்களில் இணக்கம் காணப்பட்டதை பாராட்டியே ஆகவேண்டும். ஏனெனில் தமிழ் இனமானது ஆயுதப் போராட்டமாக முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவங்களிலிருந்து ஒப்பு நோக்குகையில் எமது அரசியல் உரிமைகளில் அபிலாஷைகளில் பாதிப்பை, ஏமாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் தமிழர் தரப்பு பற்றுறுதியுடன் செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் மிகவும் நிதானமானவைகளாகும். பல்வேறுபட்ட அபிப்பிராயங்களின் அடிப்படையிலும் வியூகத்தின் தன்மைகளிலிருந்துமே தமிழ் சிவில் சமூகத்தின் சந்திப்புக்கள் தெளிவுறப்பட்டிருக்கின்றன.

தமிழ் சிவில் சமூகத்தை பின்புலத்திலிருந்து வழி நடத்தக் கூடியவர்கள் வெவ்வேறு பரிமாணங்களையும் பின்னணியையும் கொண்டவர்களாக இருப்பினும் மன்னார் ஆயரின் கருத்துகள் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தமிழர் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுத்து தமிழர்களுக்குள்ளேயே மாற்று சக்தியினரைத் தேட முடியாது என்பதைத் தெளிவுறக் கூறியிருந்தார். கூட்டமைப்பின் தவறுகளை பலவீனங்களை நாம் திருத்திக் கொள்ள மாற்ற முற்பட வேண்டும். இன்றைய யதார்த்த நிலையில் தேசியத்தின் தலைவர்களாக இனங்காட்டி நிற்கும் அவர்களை ஓரங்கட்டவோ ஒதுக்கிவிடவோ நாம் முயலக் கூடாது என்பதையும் சாமர்த்தியமாகக் கையாண்டு கொண்டார்.

எட்டப்பட முடியாத விடயத்திற்காக ஏன்? தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்ற விடயமும் ஸ்ரீ லங்கா அரசு தமிழர்களுக்கான தீர்வாக எதைத் தந்தாலும் (அதிகாரம் மிகக் குறைந்ததான) ஏற்றுக் கொள்வோமென்ற தன்மையும் இந்தக் கலந்துரையாடலில் சந்திப்பில் பல்வேறுபட்ட தன்மை கொண்டோரும் கலந்து கொண்டிருப்பினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பின் கூட்டமைப்பின் மீதான அக்கறையும் அணுகு முறையும் கருத்துகளும் மிகவும் காத்திரமானவையாகக் கொள்ளமுடிகிறது.

ஆனாலும் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறுபட்ட கருத்துக் களங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டியதும் செயற்பட வேண்டியதும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழக் கூடிய தமிழ் மக்களின் பொதுவான அபிப்பிரயங்கள், மேற்குலக நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களுடன் கூடிய கருத்துக்கள், உள்ளூரில் நோக்கும் போது தமிழ் சிவில் சமூகம் போன்ற அமைப்புகளின் கருத்துக்களென பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதும் அனைவராலும் அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆயருக்கு வெளிக் காட்டிய நம்பிக்கை மிகுந்த கருத்துகள் சிறந்தவை ! அதன் பரிமாணத்தை ஆண்டகை அமர்வு நிறைவுற்றவுடன் ஊகடத்துறைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அந்தத் தெளிவூட்டல்களின் பின்னரான பொழுதுகளையும் சற்றுத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆயரின் விடைபெறலைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தமிழரசுக் கட்சியின் புதிய கிளை நிறுவல், புதிய உறுப்பினர்களின் இணைவுகள் போன்ற பாரிய பிரச்சினையாகவே கருத்துக்கள் முட்டி மோதின ! மட்டக்களப்பு , அம்பாறை, திருமலை மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து வருகை தந்த கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் ஈர்ப்புடையோர் போன்றோரின் கேள்விகளால் தமிழரசுக் கட்சியின் செயலாலர் மாவை சேனாதிராஜா தட்டுத் தடுமாறித் தான் போனார்.

இருப்பினும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சில தெளிவான கருத்துக்களாலும் தமிழரசுக் கட்சியின் செயலர், மாவை சேனாதிராஜாவின் சாமர்த்தியமான மௌனத்தாலும் அக் கட்சியின் உத்தியோக பூர்வ பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோரின் நெறிப்படுத்தலினாலும் மென்மேலும் தமிழரசுக் கட்சி தொடர்பான முரண்பாடுகள் தலை தூக்காது தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், கருத்துகள் போன்றன ஆணித் தரனமாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் (அண்மையில் தமிழரசுக் கட்சியில் உறுப்புரிமை பெற்றார்கள்) இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டமை மிகுந்த விசனத்ததை ஏற்படுத்தியது.

கடந்த காலங்களில் முரண்பாடுகளினால் நமது சமூகம் சந்தித்த துயரங்கள் எழுத்ததில் வடிக்க முடியாதவை! ஒரு மனிதன் ஆத்திரப்படும் போதும் அதில் உள்ளார்ந்த நியாயம் இருக்க வேண்டியது உண்மை என தன் கவிதை வரிகளினால் எடுத்தியம் பிய பிரஞ்சுக் கவிஞன் போஸ்ட்டன் கார்ஸை, இந்த இடத்தில் கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும். தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றாக (விடுதலை இயக்கங்களும் மிதவாத அரசியல் தலைமைகளும்) இணைந்து செயற்படுவதற்கான காலம் கனிந்து வரும் வேளையில் முரண்பாடுகளுக்குள் நாம் முட்டிமோதிவிடவோ, ஆத்திரத்தின் அடிப்படையில் முடிவுகள் எட்டப்பட முடியாதவாறு செயற்பட வேண்டும்!

மேற்குறிப்பிட்ட விடயங்களை இன்றைய தமிழ்த் தலைமைகள் உதாசீனம் செய்ய முற்படின் எதிர்காலத்தில் மிதவாதத் தலைமைகள் வேறாகவும் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் வேறு ஒரு வடிவமாகவும் செயற்படுவதற்கான நிலைமையானது தமிழ் மக்ககளைப் பொறுத்தவரை மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் ! இந்த இக்கட்டான நிலைமையைப் புரிந்து கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

விட்டுக் கொடுப்புடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டால் எமது இனத்திற்கான விடிவு வெகு தூரத்தில் இல்லை.

நன்றி தினக்குரல்























No comments: