மௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்

.
கனவாகிப் போன சிவராமின் எதிர்பார்ப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்ட கருணாவும்.

முதலில் கிழக்கின் உடைவு-கருணா-தராக்கி என்ற பகுதி பற்றி வந்த முக்கியமான சில விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் தொடரவிரும்புகிறேன்..

சிவராம் என்கிற தனிமனிதரைத் தாக்குவதற்காக அல்லது அம்பலப்படுத்துவதற்காகவே நீ உனது மெளனத்தைக் கலைத்ததுபோற் தெரிகிறது எனச் சில நண்பர்கள் விமர்சித்திருந்தார்கள்.

எனது இந்தத் தொடரை ஆரம்பத்தில் இருந்து கவனமாகவும் ஆழமாகவும் வாசித்து வருபவர்கள் இத்தொடர் தனிநபர் மீதான சேறடிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதை உணர்வார்கள். மேலும் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வரும் எங்களது ஊடக வெளியில் தனிநபர் தாக்குதல்களோ சேறடிப்புக்களோ நிகழ்ந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர்.திரு சிவராம் அவர்களின் கொலை புலிகளில் இருந்து கருணா வெளியேறிச் சில வருடங்களின் பின் (2005இல்) நிகழ்ந்தது. நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் விடையங்கள் அதற்கு முன்னரான காலப்பகுதியைச் சேர்ந்தவை. ஆயினும் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்திற்கு பொறுப்பான முறையில் பதிலளிக்க வேண்டுமென்பதால் கருணா உடைவு காலத்தில் தொடங்கி 2005 ஆண்டை நோக்கிச் சற்றே செல்வோம்.

கருணாவினது பிளவில் சிவராமினது பாத்திரம் பங்களிப்பு மற்றும் எதிர் பார்ப்புகள் பற்றி முன்னைய தொடர்களில் சொல்லி இருக்கிறேன்.

சிவராமின் கொலைகான – பல காரணங்களுள் ஒன்றாக கருணா- சிவராம் முரண்பாடும் பின்னாளில் அமைந்து விட்டதையும் இங்கு சொல்லி விடவேண்டும்.

உண்மையில் கருணா தனதும் தன் போன்றவர்களினதும் ஆலோசனையின் படியே எதிர்காலத்தில் நடப்பார் எனச் சிவராம் நம்பியிருந்தார். ஆனால் சிவராமினதும் கருணாவை ஆதரித்த கிழக்கின் புத்திஜீவிகளினதும், சமுகப் பிரதிநிதிகளதும் எதிர்பார்ப்பிற்கு மாறாக கருணாவின் போக்கு அமைந்தது.

சமாதானகாலத்தின் ஆரம்பத்திலேயே (இரண்டாவது சுற்றுப்பேச்சின் போதேயே) அன்றைய ஆட்சியாளர்களுடன் குறிப்பாகக் கிழக்கின் அப்போதைய இராணுவத் தளபதி சாந்த கோத்தாகொடவுடன் கருணாவுக்கு நெருக்கம் ஏற்படத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே கருணா நகரத் தொடங்கியிருந்தார். இந்த நெருக்கத்திற்கு கருணாவின் சிறுபராய நண்பர் அலிசாகீர் மெளலானாவும் துணைபுரிந்திருந்தார். இதனால் கருணாவின் பிளவு குறித்துத் தமிழ் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக வெளிவரமுன்பே அரசாங்கத் தரப்புகளினூடாகவும் இராணுவத் தரப்புகளினூடாகவும் கசிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில மற்றும் சர்வதேச ஊடகங்களில் கருணாவின் இந்தப்பிளவு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

கருணாவின் பிளவு உறுதிப்பட்டதும் றணில் அரசாங்கத்தின் ஏற்பாட்டின்படிக்கு விசேட உலங்கு வானூர்தியில் சிமா... என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளர் மூன்று நாட்கள் கிழக்கில் தங்கியிருந்து கருணாவின் ஊடக அறிக்கைகள் செவ்விகள் என்பவற்றைத் தீர்மானிப்பவராக மாறியிருந்தார்.

இதனால் திரு சிவராம் அவர்கள் கடும் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகியிருந்தார். (இதனைச் சிவராமின் நெருங்கிய நண்பர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.)

கருணாவின் "ஊடகத்தொடர்பாளராக" மாறிய அந்த ஊடகவியலாளர் சமாதானகாலத்தில் பல பேச்சுவார்த்தைகளுக்குச் செய்தி சேகரிப்பாளராக வந்ததுடன் கருணாவுடனும் பேசிப் பழகி ஏற்கனவே கருணாவுக்கு நெருக்கமானவராகியிருந்தார். அது மட்டுமல்ல இந்தப் பெண் ஊடகவியலாளர் கிழக்கின் இராணுவத் தளபதி சாந்தகோத்தாகொடவிற்கும் மிகவும் நெருக்கமான நண்பர் எனச் சிங்கள ஊடகவியலாளர்கள் கூறியதும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. இந்தப்பத்திரிகையாளர் அன்றைய ஆட்சியாளர்களுடன் எவ்வளவு நெருக்கத்தைக் கொன்டிருந்தார் என்பதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்ல முடியும்.

ஐந்தாம் கட்டச் சமாதானப் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகச்சந்திப்பு இடம்பெற இருந்தது. அதற்கு முன்பதாக ஊடகவியலாளர்கள் எவரும் அரச மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் குழுமி நின்ற இடத்திற்குச் செல்லமுடியாதபடி தடை போடப்பட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தடைக்கு வெளியே காத்திருந்தோம். எங்களுடன் நின்றிருந்த சிமா... அப்போதைய சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் பாலித கோகன்னவை கண்டதும் "திரு பாலித" என அழைத்ததார் அவரும் உடனனே "ஹாய் சிமா... உள்ளே வாருங்கள்" விளித்து அருகில் வந்து தடைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். இது அங்கு நின்ற ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. இத்தகைய செல்வாக்கைக் கொண்டிருந்த அப்பெண்பத்திரிகையாளர் கருணாவை நெருங்கியிருந்தது கருணா சென்று கொண்டிருந்த திசையை சிவராமுக்குத் தெளிவாக இனம் காட்டியிருந்தது.

அதுமட்டுமல்ல சிவராமின் ஆலோசனையின் பேரில் கருணா புலிகளிடம் வைத்த கோரிக்கை எடுபடாமல் போய்ப் புலிகளின் கை ஓங்கி வருவதையும் சிவராம் அவர்கள் கண்டுகொண்டார்.

வன்னிக்கு வருமாறு கடுமையான தொனியில் சிவராம் அவர்களுக்குப் புலிகள் அறிவுறுத்தல் அனுப்பிய போது அதனால் அச்சமடைந்து குழம்பிப் பின் வன்னிக்குச் சென்று புலிகளிடம் சரணாகதி அடைந்தது குறித்தும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கருணாவின் பிளவை விமர்சித்துக் கட்டுரைகளை வரையத் தொடங்கியது குறித்தும் முன்னைய தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன்.

சிவராம் ஆரம்பத்தில் கருணாவை ஆதரித்துப் பின்னர் குறுகிய காலத்திலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்துக் கருணா கடும் கோபம் கொண்டிருந்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். "............(தூஷணம்) தண்ட புத்தியைக் காட்டிட்டான்" எனச் சிவராமைப்பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் (எனது கூற்றுத் தவறாகவிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க முடியும்)

சிவராமின் மீது கருணா கொண்ட கோபமும் சிவராமின் நாட்கள் எண்ணப்படுவதற்குக் காரணமானது. (எனினும் சிவராமின் கொலையின் பின்னணியில் பல தரப்புகள் சம்பந்தப்பட்டு இருந்தன)

அமரர் சிவராமை நான் புளோட்டில் 1984ஆம் ஆண்டு இணைந்த போதிருந்தே எனக்குத் தெரியும். புளொட் இயக்கத்தில் அவர் எஸ்.ஆர் எனவே அழைக்கப்பட்டார்.அவரால் புளொட்டில் நடத்தப்பட்ட பல அரசியற் பாசறைகளில் கலந்துகொண்டும் இருக்கிறேன். அப்போழுதிருந்து திரு சிவராம் அவர்கள் இறப்பதற்குச் சில தினங்களுக்குவரையும் அவருடனான தொடர்பும் உரையாடலும் கருத்துப் பகிர்வும் நீடித்திருந்தது. இதனை அவரையும் என்னையும் அறிந்த அனைவருமறிவர்.

அது மட்டும் அல்ல சிவராம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நான் ஒரு கனவு கண்டிருந்தேன்.

அந்தக்கனவு திரு சிவராம் அவர்கள் பற்றியதாகும். கனவுகள் குறித்து மதரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவை குறித்து ஆழமான அறிவு என்னக்கில்லை. ஆயினும் ஒரு சில கனவுகள் எமது மனதில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்று விடும்.

கனவுகண்ட மறுநாட் காலை சூரியன் எவ். எம் 6:45 மணிச் செய்தியை முடித்துக் கொண்டு சிவராம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு "சிவராமைச் சிலர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்வதாகவும் கொல்லப்பட்ட இடத்திற்கு உடன் நான் சென்று பார்ப்பதாகவும் அவரது மனைவி பிள்ளைகள் என்னிடம் அவரது மரணத்தைச் சொல்லிக் கதறி அழுவததாகவும் கனவு கண்டேன் எனச் சொல்லிக் "கவனமாக இருங்கள்" என்று கூறியிருந்தேன். இதனை சிவராம் அவர்கள் தனது மனைவியிடமும் கூறியிருக்கிறார்.சிவராம் அவர்கள் கடத்தப்பட்ட இரவு 9.30ற்கும் 10மணிக்கும் இடையில் எனது நண்பர் ஒருவர் அது குறித்துத் தொலைபேசியில் அறியத் தந்தவுடன் உடனடியாக எமது வானொலியில் அதனை அறிவித்தேன். மேலும் அவரது கடத்தல் தொடர்பாக இரவிரவாக அரசியற்தொடர்புடைய எனது பல நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவரது நிலையை அறிய முயற்சித்துமிருந்தேன். அது பலனளிக்காதபோதும் அவரது கடத்தல் தொடர்பாக வேதனை அடைந்திருந்ததைச் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அறிவார்கள். இறுதியாக அவர் கடத்தப்பட்ட மறுதினம் பத்தரமுல்லை மாதிவலப் பாராளுமன்றக் குடியிருப்புக்களுக்கு அண்மித்த ஒரு பற்றைப் பகுதியில் சடலமொன்று இருப்பதாகவும் அது சிவராமுடையது என தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் எனது நண்பர் ஒருவர் எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கூறிய போது உடனடியாக நண்பர் சிவகுமாருடன் தொடர்புகொண்டு பேசி நண்பர் சோமிதரனையும் அழைத்துக் கொண்டு எனது வாகனத்தில் அங்கு சென்றோம். சிவராமின் நண்பர் அஜித் சமரநாயக்க மற்றும் வேறு ஒருசில மனிதர்களுக்கு பின் நாமே முதலில் அங்கு சென்றிருந்தோம். அரச புலனாய்வாளர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவரது நண்பர்கள் என்ற வகையில் அன்று கொல்லப்பட்டது சிவராமே என்பதை உறுதிப்படுத்து வேண்டிய துர்ப்பாக்கியமான துயர நிலையிலுமிருந்தோம். அது மட்டுமல்ல சிவராமின் மனைவி அந்த இடத்திற்கு சிவராமின் மகளுடன் அழைத்து வரப்பட்டபோது அவர் வாகனத்திலிருந்து இறங்கும் போதே "குரு நீங்கள் கண்ட கனவு பற்றி இவர் என்னிடம் சொன்னபோது நான் கவனமாக இருக்கச் சொன்னேனே இவர் கேட்கவில்லையே ஐயோ!"எனக் கதறியழுதார். சிவராம் என்ற மனிதனொடு கொண்டிருந்த உறவின் தன்மை இது.இந்த வகையில் சிவராமுடனான உறவு என்பது வேறு, ஒரு காலத்தின் அரசியற்போக்கு மீதான மீள்பார்வை என்பது வேறு என்பதில் நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன். சிவராம் அவர்களின் புலமை மீது எனக்கிருந்த மதிப்பு அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய மதிப்பிலும் வேறுபட்டதாகும்.

மூன்று தசாப்தகாலப் போர்வாழ்வு தந்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் வெளிக் கொணர்வதற்காக மெளனம் கலையும் போது இங்கு பேசப்படுபவைகள் ஏதோ ஒருவகையில் பலரையும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கும் என்பதனை மிகுந்த துயரத்துடன் உணர்கிறேன். ஆனாலும் தனிப்பட்டவர்களின் அசெளகரியங்களுக்கு அப்பால் ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தின் காயங்களை ஆற்றுவதற்கு ஒவ்வொருவரும் தமது மெளனத்தைக் கலைப்பது தேவையாகிறது. அந்த மெளனத்தை கலைக்கும் நான் சிவராமின் கொலை அதன் பின்னணி, அதனோடு தொடர்புடையவர்கள் பற்றியும் பொறுப்புணர்வோடு அடுத்துவரும் பகுதிகளில் எழுதுவேன்.

எனது தொடர் எவரையும் “வேண்டுமென்றே” காயப்படுத்துவதாக அமைவதாக எவரேனும் கருதினால் அது குறித்து அறியத்தாருங்கள்.கடந்த தொடரில் கருணாவின் உத்தியோகபூர்வ வெளியேற்றம் நிகழ்வதற்கு முன்பு புலிகளுள் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் குறித்த காலத் தவணையில் சில தவறுகள் இருப்பதனை நண்பர்களின் விமர்சனங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தத் தவறு நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலங்களில் பட்ட அனுபவங்களைக் குறிப்புக்களாக எழுதி வைத்துக் கொள்ள நினைத்ததில்லை காரணம் அவற்றை இடம்பெயரும் போதெல்லாம் பல்வேறு அதிகார சக்திகளுக்கிடையிலும் அகப்படாமல் பாதுகாத்துக் கொள்வதே பெரிய பிரச்சனையாகவிருந்திருக்கும். ஆளைக்காப்பாற்றுவதே அரும்பாடாக இருந்த காலங்களில் எழுதிய குறிப்புக்களையும் பாதுகாத்து வைப்பது என்பது நினைத்துக் கூடப்பார்க்க முடியாதது. மேலும் இப்படியேல்லாம் எழுத நேருமென்று அன்றைக்கே என்னைத் தயாரித்திருக்கவுமில்லை. ஆக ஆழ்மனைதை நம்பி பட்டவற்றைப் புதைய விட்டிருந்தேன். விளைவு மனப்பதிவுகளில் இருந்து கிளறி எடுக்கும் போது கால முரண்கள் ஏற்பட்டு விடுகின்றன. தவறுகளை விமர்சனமாக எழுதுங்கள். அல்லது எனது மின் அஞ்சலுக்குக் குறிப்புகளாக அனுப்பி வையுங்கள் உங்கள் பெயரில் நிட்சயமாகப் பதிவிடுவேன்.கருணாவின் பிளவு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே இந்த பிளவுக்கான அறிகுறிகள் கிழக்கில் பல்வேறு சந்தர்பங்களில் தெரியத் தொடங்கியிருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் முன்பாகவே குறிப்பாக 2000ஆண்டின் நடுப்பகுதியிலேயே ஆரம்பித்து இருந்தது.

இங்கு முக்கியமான ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் செளந்தரநாயகத்தின் கொலை தொடர்பான உத்தரவைக் கருணாவே வழங்கியிருந்ததாக ஊடக உலகில் அறியப்பட்டிருந்தது. திரு நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் கொலைக்கான காரணமாக நிமலன் சௌந்தர நாயகம் அவர்களின் வாகனச்சாரதியாகப் புலி உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்யக் கோரியதாகவும் நிமலன் அவர்கள் அதனை மறுத்தனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல எனப் பின்னர் தகவல் கசிந்தது. நிமலன் செளந்தரநாயகம் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் தரப்பினரோடு நெருக்கத்தை வைத்திருந்ததாகவும் கருணாவின் உத்தரவுகளை புறக்கணித்ததாகவும் அதனால் கோபமுற்ற கருணா அவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. (இந்தச்சம்பவத்திற்கு வேறு ஏதேனுமொரு பரிமாணம் இருப்பின் உட்தகவல்கள் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டித் திருத்தமுடியும்)

இதன் தொடர்ச்சியாக 2002ன் பிற்பகுதியில் 2003ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. வன்னி என்றும் கிழக்கு என்றும் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பட்ட புலிகளின் புலனாய்வாளர்களிடையே ஒரு உடைவு ஏற்பட்டது. இந்த உடைவு புலிகள் அமைப்பின் பல முக்கியஸ்தர்களுக்குக் கூடத்தெரியாதுமிகவும் இறுக்கமான கட்டமைப்பினையும், இரகசியமான செயற்பாட்டையும் கொண்டிருந்த, புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு பொட்டம்மான் பொறுப்பிற் செயற்பட்டு வந்தது யாவருமறிந்ததே. இந்த நிலையில் குறிப்பாக கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புலிகள் அமைப்பினது புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் றெஜினோல்ட் தலைமையிலான அணி பொட்டம்மானின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து விலகிக் கருணாவுடன் தம்மை இணைத்துக் கொண்டது. பொட்டு அம்மானுடன் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக இந்த பிளவு ஏற்பட்டது. சுமார் அறுபது வரையிலான கிழக்கைச் சேர்ந்த புலனாய்வுப் போராளிகள் இந்த பிரச்சனைகளின் பொழுது புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறி, கருணாவின் நேரடித் தலைமையின் கீழ் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். அச் சந்தர்ப்பத்தில் கிழக்கைச் சேர்ந்த கீர்த்தி, நீலன், மாவேந்தன், சத்தியசீலன், இளங்கோ உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில போராளிகளைத் தவிர மிகுதி அனைவருமே புலிகள் அமைப்பின் தேசியப் புலனாய்வுப் பிரிவில் இருந்து விலகி, கருணாவின் தலைமையின் கீழ்ச் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். இவர்கள் பிற்பாடு மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட நிர்வாகப் பிரிவாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்தச் சந்தர்பத்தில்தான் 2002ன் ஆரம்பத்தில் கிழக்கில் பொட்டம்மானின் நேரடி பிரதிநிதியாகச் செயற்பட்ட அற்புதன் மாஸ்டர் என்கிற ஒரு புலனாய்வுப் போராளி மீது ஒரு பொறிவெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர் தனது காலை இழந்திருந்தார். யாழ்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இந்தப் போராளி மீதான தாக்குதல் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படை அணியினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது கருணா சார்புப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அறியப்பட்டது. இந்தச்சம்பவம் புலிகள் கருணா மோதலின் ஆரம்பதாக்குதலாகவும் வெளிப்பட்டது.

ஆக கிழக்குப் புலனாய்வாளர்களின் பிளவு, அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் என்பன கருணாவின் வெளிப்படையான பிரிவென்னும் நெருப்புக்கு ஒருவருடத்திற்கு முன்னரே வெளிவரத் தொடங்கி விட்ட புகைகள் ஆகும். (எனது மெளனம் கலைகிறது நாலாவது தொடரில் இந்தச்சம்பவங்கள் கருணாவின் பிளவின் பின் நிகழ்ந்தவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.)No comments: