இலங்கைச் செய்திகள்

.
மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை உடைப்பு

சிலை உடைப்பு விஷமத்தனம்


கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில் எம்மிடம் வர வேண்டும்: பதில் வெளிவிவகார அமைச்சர்


ஆணைக்குழுவின் அறிக்கையும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை உடைப்பு


10/1/2012

மட்டக்களப்பு மண்முனைப்பற்று(ஆரையம்பதி) பிரதேச செயலகப்பிரிவில்காத்தான்குடி - ஆரையம்பதி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி


சிலை உடைப்பு விஷமத்தனம்

Thursday, 12 January ௨௦௧௨
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்பதி பிரதேச எல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச் சிலை விஷமிகள் சிலரால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் தமிழ்முஸ்லிம் என்ற வேறுபாடின்றி சகல மக்களையும் பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களாலும் அனைத்து மதத் தலைவர்களாலும் மட்டுமன்றி பலநாடுகளினாலும் போற்றிப் புகழப்படும் ஒரு மகான். அவரின் உருவச்சிலை மூவின மக்களும் வாழும் இடத்தில் உடைத்து சேதமாக்கப்பட்டதை சாதாரண சம்பவமாகக் கருதி விட்டு விட முடியாது. அதிலும் சில தினங்களுக்கு முன்னரே வைக்கப்பட்ட அந்த உருவச்சிலை உடைக்கப்பட்டமைக்கு பலமானதொரு பின்னணி இருக்க வேண்டும். இந்த சிலை உடைப்பை விளையாட்டுத்தனமென்றோ விஷமத்தனமென்றோ கூறி விட்டு விட முடியாது. இது ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கை.


தந்தை செல்வாவின் உருவச்சிலை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரில் உடைத்து சேதமாக்கப்பட்டு அச் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு வீசப்பட்டது. இது தொடர்பில் தமிழ் மக்களும் தமிழ்க் கட்சிகளும் ஆட்சேபத்தை வெளிப்படுத்தவே உடனடியாக சிலை புதுப்பிக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட தலை மீண்டும் பொருத்தப்பட்டு அங்கு ஏற்படவிருந்தவொரு பதற்றநிலை தடுக்கப்பட்டது.இது மட்டுமன்றி வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டத்திலும் தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்களின் சிலைகள் உடைத்தெறியப்படுவதுடன் வரலாற்றுச் சின்னங்களும் அழித்தொழிக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி பூர்வீகமான தமிழ்ப் பிரதேசங்கள், வீதிகளின் பெயர்கள் கூட சிங்களப் பிரதேசங்கள், சிங்கள வீதிகளாக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவையெல்லாம் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தை விடவும் கிழக்கு மாகாணம் வேறுபட்ட தன்மை கொண்டது. இங்கு மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். பல தடவைகள் இன முரண்பாடுகள், மோதல்கள் இடம்பெற்ற மாகாணம். சிறு பொறி கூட பெரும் தீயாக மாறிவிடும் நிலைமையே இம் மாகாணத்தில் உள்ளது. தற்போது யுத்தம் முடிவடைந்து மூவின மக்களும் ஓரின மக்களாய் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் வாழ்ந்துவரும் நிலையிலேயே திட்டமிட்ட ரீதியிலான சிலைகள் உடைப்பு சம்பவங்கள் நடந்தேறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வா சிலை உடைப்பும் மட்டக்களப்பில் தற்போது இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பும் இன முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தும் நோக்கங்களைக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைக்கப்பட்ட விடயத்தில் தமிழ்முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. விவேகானந்தரின் சிலை உடைப்புத் தொடர்பில் கட்சி, மத பேதமின்றி கண்டனங்களையும் கவலைகளையும் வெளிப்படுத்தியதுடன் இச் செயல் இன முரண்பாடுகளையும் இன மோதல்களையும் ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட செயல் என்பதனை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தியதுடன், உடனடி விசாரணைகளுக்கு வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இவ்வாறான செயல்கள் மூலம் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க கிழக்கு மாகாணத்தில் சதி முயற்சிகள் இடம்பெற்றுவருவதை மக்களும் உணர்ந்துள்ளதையும் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது.

திருகோணமலையில் தந்தை செல்வா சிலை உடைப்பு மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பென சிலை உடைப்புப் படலங்கள் தொடரும் நிலையில் இவற்றைத் தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யவோ பொலிஸார் போதிய அக்கறை செலுத்தவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றபோதிலும் சிலை உடைப்புக்கான பின்னணி தொடர்பாகக் கண்டறிவதில் அல்லது அதன் பின்னணியில் செயற்படுபவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அக்கறை காட்டாமல் இருப்பதாக மக்கள் உணருகின்றார்கள். சிலை உடைப்பின் பின்னணி கண்டுபிடிக்கப்படவேண்டும். அதன் மூலமே இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம்பெறாது தடுக்க முடியும்.

நன்றி தினக்குரல்




கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில் எம்மிடம் வர வேண்டும்: பதில் வெளிவிவகார அமைச்சர்

ரொபட் அன்டனி    10/1/2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு எந்தத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும்போது இலங்கை அரசாங்கத்துடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுதான் யதார்த்தம். அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்கும் என்று பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரெரா தெரிவித்தார்.

அரசாங்கத்தை பொறுத்தவரை வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தேவை எதுவோ அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அப்பகுதிகளில் விரைவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே பதில் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.

நன்றி வீரகேசரி


ஆணைக்குழுவின் அறிக்கையும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்
Saturday, 07 January 2012

மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகளுக்கு பயனுறுதியுடைய வழிகாட்டல்களை ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளினாலும் அவதானிப்புகளினாலும் எந்தளவுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதைப் பற்றிய மதிப்பீடுகளாகவே அந்த விமர்சனங்கள் அமைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆணைக்குழுவின் விதப்புரைகளின் போதாமைகள் என்று அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கும் அம்சங்கள் பற்றிய விமர்சனங்கள் உள்நாட்டை விடவும் வெளிநாடுகளிலிருந்தே வருவதையும் அவதானிக்க முடிகிறது. மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட ,ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை வெளிக்காட்டக்கூடிய உருப்படியான சமிக்ஞை எதுவுமே தென்படுவதாக இல்லை.

விதப்புரைகள் முழுவதையுமே அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்ச்சையில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் பொறுப்புடைமையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளினால் செய்யப்பட்டிருக்கக்கூடிய விமர்சனங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாடுகளின் பரப்பெல்லைக்கு வெளியே தனது விதப்புரைகளும் அவதானிப்புகளும் சென்றுவிடாதிருப்பதை முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான ஆணைக்குழு உறுதி செய்திருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

இத்தகையதொரு பின்புலத்திலேயே, நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் சர்வ மதத் தலைவர்கள் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தெரிவித்த கருத்துகளையும் அரசாங்கத்திடம் முன்வைத்த வேண்டுகோளையும் நோக்க வேண்டியிருக்கிறது. ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எவருமே எதிர்பார்த்திருக்கக்கூடியதைப் போன்றே மதத்தலைவர்கள் விமர்சன ரீதியான கருத்துகளை முன்வைக்க வில்லை. முக்கியமான விதப்புரைகளை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதை அவர்களின் கருத்துகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. விதப்புரைகளை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாகவும் முக்கியமான விதப்புரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறினால், சமூகங்கள் மத்தியில் உகந்த முறையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிவில் இயக்கமொன்றை அமைக்கப்போவதாகவும் மதத்தலைவர்கள் பிரகடனம் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகருவதற்கு சிறந்த வழி சமூகங்கள் மத்தியில் முறையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியையும் நிறுவனங்களையும் அரசியல் மயப்படுத்துவதை நிறுத்துவதுமாகும் என்று வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்த கருத்து கவனத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளுக்கான உடனடிப் பிரதிபலிப்பு அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக் வெலவிடமிருந்து வந்திருக்கிறது. "பிரச்சினைகளில் பங்கும் ஈடுபாடும் கொண்ட சகல தரப்பினருடனும் கலந்தாராயாமல் ஆணைக்குழுவின் விதப்புரைகள் முழுமையையும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது சிக்கல் வாய்ந்த ஒரு நிலைவரமாகும். ஜனநாயக அரசியல் முறைமையிலே பல்வேறு அரங்குகளில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் வெளியிடப்பட முடியும். ஆனால், இது விடயத்தில் அரசாங்கம் அரசியற் கட்சிகளுடனும் ஏனையவர்களுடனும் விவகாரங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே அரசாங்கத்தினால் வரையப்பட்ட பயணத் திட்டம் (கீணிச்ஞீ Mச்ணீ) ஒன்றுக்கு இசைவான முறையிலேயே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்த முடியும். இதுவே சிக்கலின் உயிர்க் கூறு' என்று அமைச்சர் ரம்புக்வெல நேற்றைய தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றுக்குக் கூறியிருக்கிறார்.

ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புக்களையும் அவதானிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவையாக அரசாங்கத்தின் அடுத்த கட்ட அணுகுமுறைகள் அமையப் போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்துகளை அர்த்தப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதாவது, ஆணைக்குழு அறிக்கையின் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடியதாக ஏதாவது பாடங்கள் இருக்குமானால், அவற்றை அரசாங்கம் கற்றுக்கொள்ளத் தயாராயில்லை என்பதுவும் ஏற்கெனவே அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே, ஆணைக்குழுவின் விதப்புரைகளில் அரசாங்கம் தனக்கு சாதகமானது என்று கருதக்கூடியவற்றை நடைமுறைப்படுத்துவதில் (அதுவும் விரும்பினால் மாத்திரமே) அக்கறை காட்டும் என்பதுமே அமைச்சரின் கருத்துகளினால் நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படுகின்ற செய்தியாகும். இலங்கை அரசியலைப் பொறுத்தவரை வரலாற்றில் இருந்து நாமெல்லோரும் படிக்கக்கூடியதாக இருக்கும் பாடம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்கப்படுவதில்லை என்பதேயாகும்!
நன்றி தினக்குரல்













No comments: