அடங்காத கொலை வெறி.. (எச்சரிக்கைப் பதிவு)


.


கொலைவெறி பி(ப)டிச்ச நடிகரையோ
ஆங்கில மொழியையோ குறைவாக மதிப்பிடுவதற்காக அல்ல இந்தப் பதிவு!
நடிகரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டவும்
ஆங்கிலேயர்களை எச்சரிக்கவுமே இந்தப் பதிவு...

இந்தப் பாடல் ப(க)டித்தமைக்காக  இந்த நடிகரை சிலர் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்..
சிலர் காலுக்குக் கீழே போட்டு மிதிக்காத குறையாகக் கோபப்படுகிறார்கள்...

தமிழ்மொழிமீது இன்றுவரை நடந்த பண்பாட்டுப் படையெடுப்புளையும், மொழிக்கலப்பையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் என்றோ அழிந்திருக்கவேண்டுமே..

இன்னும் எப்படி உயிரோடு, உணர்வோடு உள்ளது என்ற எண்ணமே ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

தமிழை யாரும் அழிக்கமுடியாது. தமிழ் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் மொழி.
இதற்குச் சான்றுகள்..
இன்றைய தமிழ் வலையுலகம், தமிழ் இணைய உலகம், தமிழ் மின்னூல் உலகம், சமூகத் தளங்களில் தமிழ்...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழை யாரும் வளர்க்கவேண்டாம். அதை கொல்லாமல் இருந்தாலே போதும் என்ற கருத்து இப்போது மக்களிடையே மேலோங்கிவருவது மகிழ்வளிப்பதாகவுள்ளது.

எனக்கு இந்த நடிகர் மீது கோபமே வரவில்லை..
இலக்கியத்திலிருந்து ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது.



ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நான்.

இப்பாடல் நந்திக் கலம்பகத்தில் இடம்பெற்றுள்ளது.

தலைவனைத் தலைவியிடமிருந்து பிரித்து பரத்தையரிடம் அழைத்துச் சொன்றான் பாணன்.

தலைவனைப் பரத்தையரிடம் அனுப்பிவிட்டு வாசலில் அமர்ந்து பாடல் பாடினான்.

பிறகு மறுநாள் தலைவியிடம் வந்து தலைவன் மிக நல்லவன் என்று பேச வருகிறான்.

அப்போது தலைவி சொல்கிறாள்...

நீ நேற்று எம் தங்கையர் தம் வீட்டிலிருந்து விடியும் வரை பாடல் பாடி(னாயே) அதை...

என் அன்னை காட்டில் என்ன பேய் அழுகிறதா?
என்று கேட்டாள்.

பிறர் நரி ஊளையிடுகிறதா?
என்று கேட்டனர்.

தோழி நாய் தான் இப்படிக் குரைக்கிறது என்றாள்..

நான் சொன்னேன்...
இது பேயுமல்ல, நரியுமல்ல, நாயுமல்ல... நீயென்றேன்...

என்ன சரிதானே... என்கிறாள் தலைவி.

என்ன நண்பர்களே..

இப்பாடலில்...
தலைவன்  இசை
தலைவி  தமிழ்
பரத்தை  ஆங்கிலம்
பாணன் - ???


என்று சிந்திக்கிறீர்களா?

பாணன் என்றால் பாடல் பாடுபவன். 
அப்படித்தானே நாம் இலக்கியத்தில் படித்திருக்கிறோம்.


இப்பாடலில் ஆங்கிலத்தைப் பரத்தை என்று ஒப்பிட்டிருப்பது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்..

என்ன நுட்பமாகத் தலைவி எம் தங்கையர் என்கிறார் பாருங்கள். பரத்தை என்று சொல்லவில்லை.

வில்லிருக்க அம்பை நோவதுபோல..

நாம் ஏன் ஆங்கிலத்தின் மீது வருத்தம் கொள்ளவேண்டும்.

தலைவி பரத்தையைத் தன் எதிரியாகப் பார்க்கவில்லை. தன் சகோதரியாகத் தானே பார்க்கிறாள்.

அதுபோல தமிழின் சகோதரிபோலத் தானே ஆங்கிலமும்.

மொழிகளுள் என்னங்க ஏற்றத்தாழ்வு..
எல்லா மொழிகளுமே தகவல் பரிமாற்றத்துக்குத் தோன்றியவை தானேங்க..

இந்தக் கொலைவெறி ப(பி)டிச்ச பாடலில் இந்த நடிகர்...

ஆங்கில வழியே தமிழைக் கொல்கிறார் என்றுதானே கூக்குரலிடுகிறீர்கள்..

ல்லாப் பாருங்கப்பா...
இந்த நடிகர் தமிழைத்தான் வளர்க்கிறார்...
 தமிழ் வழியே தான் ஆங்கிலத்தைக் கொல்கிறார்...

எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழன் அல்ல ஆங்கிலேயன்தான்...!!

சிதைக்கப்பட்ட மொழி தமிழல்ல! ஆங்கிலம் தான்

No comments: