தமிழ் சினிமா


மம்பட்டியான்

மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற ஒரு தனிமனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மலையூர் மம்பட்டியான்.

மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார். ஊர்ப் பண்ணையார் கோட்டா சீனிவாசராவ் நிலத்தில் கிடைக்கும் புதையலை அரசாங்கத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்ட, கோட்டாவின் ஆட்கள் அவரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார்கள். இதில் பொங்கியெழும் மகன் மம்பட்டியான் பிரஷாந்த், ஊர்த் திருவிழாவில் கோட்டாவையும் அவரது ஆட்கள் ஏழு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்.

பண்ணையாரால் வஞ்சிக்கப்பட்ட சிலரும் அவருடன் சேர்ந்து கொள்ள, காட்டுக்குள் தங்கியபடி, அந்த வழியாக வரும் பெரும்பணக்காரர்களைக் கொள்ளையடித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். போலீஸ் துரத்துகிறது. ஆனால் மம்பட்டியான் நிழலைக்கூட தொட முடியாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்போது புதிதாக மம்பட்டியானைப் பிடிக்க வருகிறார் போலீசார் அதிகாரி பிரகாஷ் ராஜ்.

இடையில், பணக்கார கோஷ்டியொன்று காட்டுவழி வருவதாக கேள்விப்பட்டு, அவர்களைக் கொள்ளையடிக்க மம்பட்டியான் குழு முயல்கிறது. ஆனால் வந்தது கல்யாண கோஷ்டி என்பதும், அவர்கள் மணப்பெண்ணை (மீரா ஜாஸ்மின்) மட்டும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டதையும் அறிந்து, அந்தப் பெண்ணிடமே அனைத்து நகைகளையும் கொடுத்து தன் தம்பியை துணைக்கு அனுப்பி வைக்கிறார் மம்பட்டியான். ஆனால் அடுத்த நாள் திருமணம் நடக்காததால் மம்பட்டியானை நினைத்தபடி மலையூரிலேயே தங்கிவிடுகிறாள் அந்தப் பெண். ஊருக்கு அளக்கும் படியில் ஒரு படி அவளுக்கும் தரச் சொல்கிறார் மம்பட்டியான்.

போலீஸ் துரத்தல் தொடர்கிறது. மம்பட்டியானின் ஓட்டமும் தொடர்கிறது. ஆனால் கடைசி வரை போலீசின் கையில் சிக்காத மம்பட்டியான், இறுதியில் என்னவாகிறார்... அவரை நம்பி வந்த பெண்ணின் கதி என்ன என்பது மீதிக்கதை.

ஏற்கெனவே பார்த்த கதைதான் என்றாலும், பிரஷாந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மூலம் சற்று விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் காட்சிகளில் பிரம்மாண்டம், நேர்த்தியான படமாக்கம் என நிறைய மெனக்கெட்டிருக்கிறார் தியாகராஜன்.

குறிப்பாக படத்துக்காக தேர்வு செய்த லொகேஷன்கள் அற்புதம். சீறிவிழும் அருவிகள், பச்சைப் பசேல் மலைத் தொடர்கள், காலைத் தழுவி ஓடும் ஓடைகள், இயல்பு மாறாத மலைக் கிராமங்கள் என மனதை ஈர்க்கிறது.

தற்போதைய மம்பட்டியானாக பிரஷாந்த், அப்பா நடித்த கதாபாத்திரத்தில் கொஞ்சமும் ஒட்டவில்லை. மிகவும் குண்டாக காணப்படுகிறார். முகத்தை மிகவும் கோவக்காரராக காட்டும் முயற்சியில் மிகவும் சிரமப்பட்டு அதுவராமல் பார்ப்பதற்கு என்னவோபோல் இருக்கிறது. படம் முழுக்க நடிக்கவேண்டும் என்பதற்காக அப்பா சொன்ன வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். வசனம் கதைக்கு அதிகம் தேவையில்லை என்பதால் தப்பிக்கமுடிகிறது. சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் வேகம் கொடுத்திருக்கிறார். யாதார்த்த காட்சிகள் அவருக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை.

கண்ணாத்தாளாக மீரா ஜாஸ்மின், பழைய மம்பட்டியான் நாயகி சரிதா இடத்தை எட்டிப்பிடிக்க முயன்றிருக்கிறார் அவ்வளவே! ஆனாலும் 'சின்னப் பொண்ணு சேலை...' பாடலில் சரிதாவையும் விஞ்சி சபாஷ் வாங்கிவிடுகிறார்.

மம்பட்டியானை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கொடுக்கப்பட்ட வேலையை வஞ்சகம் இல்லாமல் செய்திருக்கிறார். (அந்த செல்லம் என்ற வார்த்தையை சொல்லாமல் இவரால் இருக்கவே முடியாது போல)

சிலுக்கு வேடத்தில் முமைத் கான் நடித்திருக்கிறார். சிலுக்கின் லுக்கு இவருடைய கண்களில் மிஸ்ஸிங் என்றாலும், மற்றபடி ரொம்பவே செழிப்பாகவே இருக்கிறது இவருடைய காட்சிகள்.

ஒரிஜினல் படத்தில் கவுண்டமணி செய்த அதே சின்ன பண்ணையார் வேடம். காட்சிகளில்கூட பெரிதாக மாற்றமில்லை. ஆனாலும் வடிவேலு வரும்போதை முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள் (காட்சிகளில் பெரிதாக காமெடி இல்லாவிட்டாலும்!). குறிப்பாக கோபு பாபு என இரு நாய்களை அவர் மம்பட்டியானிடம் இழக்கும் இடத்திலும், பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் காட்சியிலும் சிரிப்புக்கு உத்தரவாதம்!

இடைவேளைக்கு பிறகு படம் ஓடோ ஓடு என்று ஓடுகிறது. தற்போது முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் மலை காடு என்று போலீஸை அங்கிட்டு இங்கிட்டும் ஓடவிட்டு பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார் இயக்குநர்.

'காட்டுவழி போறப்பெண்ணே கவலைப்படாதே' பாடல் டைட்டில் போடும்போதே போட்டு விடுகிறார்கள். மற்ற பாட்டு ஏதும் மனசில் நிற்கவில்லை. இசைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால் தமன் என்பவரை பயன்படுத்தி காசை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதனின் உண்மைக்கதை என்பதால் ஏதும் மாற்றம் செய்யமுடியாமல் அப்படியே எடுக்கப்பட்டுவிட்டது. ஆகையால் வேறு எந்த சுவாரஸ்யமும் சேர்க்க முடியாமல் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. என்ன.. கதை, வசனம், திரைக்கதை, கலை, இயக்கம் என அனைத்து வேலையும் தானே உருவாக்கி தான் இப்போதும் அனைத்து வேலையையும் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தியாகராஜன்.
நன்றி விடுப்புமௌன குரு

ஒரு கல்லூரி மாணவன் சந்திக்கும் வினோதமான மற்றும் அசாதாரணமான பிரச்சினைகளே கதை.

நான்கு காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து செய்யும் குற்றத்தில் இருந்து, அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள செய்யும் சில்மிஷ வேலைகளில் எப்படியோ வந்து சிக்கிகொள்ளும் இளைஞன், அந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கரு. இந்த கருவை வைத்துகொண்டு திகட்டாத ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்கள் 'மௌனகுரு' டீம்.

வழக்கமான தமிழ் சினிமாவில் இருக்கும் குத்துப்பாட்டு, பத்து அடிக்கு மேல் பறந்து அடிக்கும் ஹீரோயிஸம் என்றெல்லாம் இல்லாமல், விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் த்ரில்லரை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் சாந்தகுமார். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நம் மனதை எங்கும் அலைபாய விடாமல் படத்துடனே பயணிக்கவைக்கிறது திரைக்கதை.

தனது முதல் படத்தை காட்டிலும் இப்படத்தில் பல மடங்கு உயர்ந்திருக்கிறார் அருள்நிதி. ரியாக்ஷன், நடிப்பு, பாடிலேங்குவேஜ் என அத்தனையிலும் தனது கெட்டிகாரத்தனத்தை காட்டி அசத்தியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே படம் முழுவதும் மௌனமாக வரும் அருள்நிதி, இரண்டு ரூபாய்க்காக டெலிபோன் பூத்தில் சண்டைபோடுவதும், எதுவும் விசாரிக்காமல் தன்னை அடித்த போலீஸை அடித்துவிட்டு அவருடைய குழந்தையை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுவந்து விடுவதும் என ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

நம் படங்களுக்கு ஹீரோயினும், பாடல்களும் தேவையா என்பது பெரிய கேள்வி. கதையோடு எந்த சம்பந்தமுமில்லாமல் சதைக்காக ஹீரோயின். பல லட்சங்கள் ஹீரோயினுக்கு கொட்டியழுது விட்டோமே என்கிற பரிதவிப்பில் மூன்று டூயட், ஒரு குத்துப் பாட்டு. அதில் இரண்டு பாடல்கள் சுவிஸ்ஸிலோ, ஆஸ்திரேலியாவிலோ படமாக்கம் என்று அனாவசியமான பொருட்செலவு. இந்தப் படத்தில் ஹீரோயின், ஹீரோயினாகவே இருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். அதுபோலவே வில்லனும், வில்லனாக இருக்கிறார்.

ஜான் விஜய் ஒரு குட்டி எம்.ஆர்.ராதா. துரதிருஷ்டவசமாக இவர் இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படாத நல்ல நடிகர். தேவையில்லாத சதை எதுவுமே திரையில் இல்லை. லென்ஸ் வைத்துத் தேடினாலும் தர்க்க மீறல் எதுவும் கண்ணில் படவேயில்லை. குறிப்பாக இடைவேளை காட்சி, ஓர் இலக்கியம்.

ஜான் விஜய் கூடவே வருகிற அந்த மூன்று காவல்துறையினர், க்ளைமேக்ஸ் காட்சியில் அருள்நிதியுடனே வரும் அந்த மனநோயளி கேரக்டர் எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதுவும் கடைசியில் அவர் சொல்லும், 'தள்ளுவண்டியில பரோட்டா விக்கிறவன்கிட்ட எவ்வளவு வாங்குவாங்கன்னு கேளு.. சொல்லுவான்..' என்று சொல்லும் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

இனியாவுக்கு அக்காவாக நடித்திருக்கும் நடிகை எப்ப பார்த்தாலும் மதுரையை எரிக்கிற மாதிரியே பார்க்கிறாங்க. டிவி தொடரில் வில்லி கேரக்டருக்கு ரொம்பவே கரெக்டாக இருப்பாங்க.

பாதராக வருகிற அந்த கேரக்டர் தன் மகனே ஒரு திருடன் என்று தெரியும் போது வருத்தப்படுகிற காட்சிகள் நம்மை ரொம்பவே டச் பண்ணுகின்றன. க்ரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளாக வரும் உமா ரியாஸ்கான் கர்ப்பமான இன்ஸ்பெக்டராக இருந்தாலும் கடமை தவறாத இன்ஸ்பெக்டராக மின்னுகிறார்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள். பாடல்கள் சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும் தமனின் பின்னணி இசை அசத்தல். படம் முழுவதும் தனது பின்னணி இசையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

நன்றி விடுப்புNo comments: