சொந்தமண்ணில் தொலைந்த இளமைக்காலம் -பரணி


.


வாழையிலையில் அன்னமிட்டு
பருப்போடு நெய் பிசைந்து
உண்ண வழியில்லை

சுவையான உணவுக்கேங்கி
உப்பற்ற உணவைத் துப்பத் துணிவில்லை
எண்ணை இனிப்பு வகையெல்லாம்
உனக்கில்லை நாற்பதின் பின்

அழகிய நங்கையரின் 
ஆடை அணிகளைக்கூட அழகென்று
வாயாரச் சொல்ல வழியில்லை 

ரோட்டோர மரநிழலில் நண்பர்களுடன்
அன்று அடித்த அரட்டை மணிக்கணக்காய்
நிமிடத்துக்காவது இன்று முடியவில்லை

தாய்மொழியில் பேசாமல் நாகரீகத்தில்
சிலர் வேற்று மொழி பேசுகையில்
எண்ணத்தில் மட்டும் கை வலிக்க
அடிக்கும் வேகம் வரும்

அதிகாலைப் புள்ளினங்களின் சத்தத்திலும்
கோயில் மணியோசையிலும் கண் விழித்தது
கனவாக மிஞ்ச
அலாரச் சத்தத்தில் கண்விழித்தேன்

வார இறுதியில் கூட
முடியவில்லை எட்டு மணித்தூக்கம்
பிறகென்ன பிற்பகல் தூக்கம்

சும்மாவா சொன்னார்கள்
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்று
புரியவில்லை இன்னும்

கடற்கரையில் அப்பாவோடு சிப்;பிகள் பொறுக்கி
மகிழ்ந்த நாட்களும்
சுனாமியால் பிணங்களைப் பொறுக்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அழுகின்ற நாட்களும்

பேனா மை முடிய வானவில்லின் தோழமையில் 
கார்மேகத்தைக் கண்டவுடன்
மை சில துளிகள் கேட்க
குடம் குடமாய் கொட்டியது தண்ணீரை மட்டும்

கனவுகளில் மட்டுமே திரளும் மேகமாய்
இளமைக்கால இனிய நினைவலைகள்
அப்போது நினைத்தேன் - இது
எனக்கு மட்டுமான வலியில்லை என்று

பரணி                     

No comments: